ஆந்திரா தரும் நெருக்கடி – பாஜக கவிழுமா?

0
61

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியிருக்கிறது தெலுங்கு தேசம், அசோக் கணபதி ராஜூ, ஒய்.எஸ்.சௌத்ரி ஆகிய இரண்டு அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படாத விவகாரத்தை மையப்படுத்தி சந்திரபாபு நாயுடு இந்த முடிவை எடுத்துள்ளார். தெலுங்கு தேசத்திற்கு முந்திக்கொண்டு ஒன்பது எம்.பிக்களை மட்டுமே கைவசம் வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி பெரும்பாண்மை பலம் கொண்டுள்ள என்.டி.ஏ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.. ஒய்.வி.சுப்பா ரெட்டி கொண்டுவந்துள்ள தீர்மானம் விரைவில் நாடாளுமன்ற விவாதத்திற்கு வர இருக்கிறது.

282 எம்.பிக்கள் பலத்தோடு ஆட்சிக்கு வந்த பாஜக, தொடர்சியாக சந்தித்த இடைத்தேர்தல் தோல்விகளால் 272 இடங்களுக்கு வீழ்ந்து தனிக்கிட்சியாக பெரும்பாண்மை இழந்துள்ள சூழலில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது. தெலுங்கு தேசத்தை தவிர்த்தே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 307 எம்.பிக்கள் இருப்பதால் அரசு எளிதாக வென்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, கூடுதல் தேவைக்கு பாராளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான அ.இ.அதிமுக வின் பரிபூரண ஆதரவும் இருக்கிறது என்பது கூடுதல் பலம்

தோற்றுப்போகும் என்று தெரிந்தே தீர்மானம் கொண்டுவரப்படுவது பல அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறிகளை காட்டுவதாகவே அமைகிறது

1. ஆந்திர உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதை காரணம் காட்டி பாஜகவை எதிர்க்க வேண்டும் என்கிற அரசியல் சூழல் அங்கே வந்துள்ளது கவனிக்கத்தக்கது. கொள்கையளவில் பெரும் முரண்பாடுகள் அற்ற சந்திரபாபு நாயுடுவும் கூட பாஜக எதிர்த்தே ஆக வேண்டிய அரசியல் நிர்பந்தம் அந்த மாநிலத்தில் நிலவுவது தெளிவாகிறது

2. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் கடும் பாஜக எதிர்ப்பு நிலை, ஆந்திராவிலும் நிலவ தொடங்கியுள்ளதன் மூலம் தென்னக மாநிலங்களில் பாஜக எதிர்ப்பே பிரதான அரசியல் என்கிற நிலையும், பாஜகவோடு கூட்டணி முயற்சி தற்கொலை முயற்சி என்கிற எதார்த்தமும் வந்திருப்பது போல சூழல் உருவாகியுள்ளது / உருவாக்கப்பட்டுள்ளது

3. பத்தாண்டுகளுக்கு பிறகு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் டிடிபியும் ஓரணியில் திரளும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன, பாஜக எதிர்ப்பு என்கிற தளத்தில் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் டிடிபியும் இணைந்துள்ளன (தேர்தல் கூட்டணி அல்ல) ஆக மொத்தத்தில் தென்னகம் முழுக்க பாஜக Vs பாஜக எதிர்ப்பு அணி என்கிற அளவில் அரசியல் மாறி நிற்கிறது

4. தற்போதைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தேசிய அளவில் பாஜக Vs பாஜக எதிர்ப்பு சக்திகள் என்கிற அணிகளை அடையாளம் காண ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது

இதற்கு நேரெதிர் விளைவுகளையும் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தக்கூடும், தென்னக மாநில கட்சிகள் வடமாநிலங்களுக்கு ஆதரவாக பாஜக இருப்பதால்.. பாஜக எதிர்க்கின்றன என்கிற தோற்றத்தை உருவாக்கி.. தெற்கு Vs வடக்கு என்ற அரசியலின் மூலம் வடக்கின் வாக்குகளை வாங்கி மீண்டும் அரசமைக்கும் முயற்சிகளில் இறங்கக்கூடும்

அந்த முயற்சிகளுக்கு இடையூறாக லாலு, மம்தா, மாயாவதி, அகிலேஷ், சரத்பவார் என்று வடக்கு பிராந்தியங்களின் வலுவான தலைவர்களின் ஒருங்கிணைவு அமையக்கூடும். மம்தா மூலம் மேற்கு வங்கமும், லாலு மூலம் பீகாரும், சமாஜ்வாடி + பி.எஸ்.பி கூட்டணி அமையும் பட்சத்தில் உ.பியில் பாதியும், மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் பாதி தொகுதிகளையாவது காங்கிரஸ் செல்வாக்கால் கைப்பற்ற முடியுமானால் பாஜக வின் முயற்சி வெருங்கனவாய் போகக்கூடிய வாய்ப்புள்ளது. மூன்றாவது அணியா அல்லது இரண்டே அணிகளா என்கிற விவாதமே எழுந்திருக்க கூடாது, அப்படி எழுந்த இடத்திலேயே காங். சற்று கோட்டை விட்டது என்று அர்த்தம்.. சக்தி வாய்ந்த பிராந்திய கட்சிகளின் அணியில் காங்.கும் இடம்பெற்றால் மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம். அரசியல் மாற்றங்களை விரிவான தளத்தில் வைத்துப்பார்க்கையில் அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலின் மையப்பிரச்சனையாக ஊழலை தாண்டிய சிக்கல்கள் முன்வைக்கப்படும், மதவாதம், மாநில உரிமைகள், பாஜக எதிர்ப்பு என்கிற புள்ளிகளே மையப்பிரச்சனையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்

#nonconfidencemotion #politics #election2019

-சூர்யா

2074total visits,1visits today