வெளியிடப்பட்ட நேரம்: 11-Sep-2020 , 07:50 AM

கடைசி தொடர்பு: 11-Sep-2020 , 07:50 AM

எல்லையில் புதிய திருப்பம் - இந்தியாவுக்கு வெற்றி

finger4

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள உயரமான சிகரங்களை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

லடாக் எல்லையில் சீனா 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள நிலையில் அதற்கு ஈடாக இந்தியாவும் 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் மிக உயரமான சிகரங்களை சீனாவிடமிருந்து மீட்டு மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதி இப்போது இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

இப்பகுதியில் இருந்து படைகளை பின்வாங்க சீனா மறுத்து வந்தது. பிரிகேடியர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

தொலைத் தொடர்பு இணைப்பை தயார்நிலையில் வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டபோதும், படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை.

இந்திய சீன எல்லை பிரச்சனைப் பற்றி ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது...

இந்தியா-சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியும் ஒன்று. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள இந்த ஏரிப்பகுதியில் இந்திய-சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரிப்பகுதியை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் இரு நாடுகளும் பல்வேறு ராணுவ நிலைகளை அமைத்துள்ளது. பாங்காங் ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன.

இதற்கிடையில், பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4 (விரல் 4) நிலை அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் சீன படையினர் கடந்த ஏப்ரல்-மே மாதங்களின் போது அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள மலைத்தொடரில் தனது நிலைகளை அமைத்துள்ளனர்.

அந்த இடத்தை விட்டு சீன படைகள் வெளியேற வேண்டும் என இந்தியா
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிங்கர் 4 பகுதியில் உள்ள மலைத்தொடரில் தொடர்ந்து தனது நிலைகளை அமைத்து வந்தனர்.

இந்நிலையில், பிங்கர் 4 பகுதியில் சீன படையினர் ஆக்கிரமித்துள்ள மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தியா கைப்பற்றியுள்ள மலைத்தொடர் சீன ராணுவ
நிலைகளுக்கு மிக அருகிலும் மிக உயரமாகவும் உள்ளது.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டதாகவும், தற்போது பிங்கர் 4 பகுதியின் மிகவும் உயரமான மலைத்தொடர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ள பகுதியில் இருந்து சீன ராணுவத்தின் நிலைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் தெளிவாக காணமுடியும். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பிங்கர் 4 பகுதியில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவிகரமாக இருக்கும்.

இதற்கிடையில், கடந்த நில நாட்களுக்கு முன்பு பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள முக்கிய நிலைகளை கைப்பற்ற சீனா முயற்சித்தபோது அதை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் இரு நாடுகளும் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சித்து வருவதால் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Articles