வெளியிடப்பட்ட நேரம்: 14-Sep-2020 , 01:20 PM

கடைசி தொடர்பு: 14-Sep-2020 , 01:20 PM

கறுப்பி - பாகம் - 4

karuppi

ய்... ச்சிவ்வா” என்ற குரலால் யமுனாவின் நினைப்பில் இருந்து வெளியே வந்தான் சிவா.

“என்ன ச்சிவ்வா... காலையிலயே என்ன அப்படியொரு யோசனை நான் வந்தது கூட தெரியாமல்...?" என்றபடி பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தாள் லீமா.

லீமா அகமத் லெபனான்காரி… எப்பவும் முன்னழகு குலுங்க நடப்பதில் விருப்பம் உள்ளவள்… சிவாவை ச்சிவ்வா என்றுதான் அழைப்பாள்.

"ஏய் ஒண்ணுமில்ல... சும்மாதான்..." என்றபடி கம்ப்யூட்டரை நோக்கினான்.

அவள் மீதிருந்து வரும் சுகந்தமான ஊது இன்று சற்று அதிகமான வாசத்தை அறை எங்கும் நிரப்பியிருந்தது.

"என்ன ஐயாவுக்கு கண்ணு ரத்தமா இருக்கு... நைட் புல்லா மேட்டரா..?" கண்ணடித்தாள்.

"ஏய்... ஆளப்பாரு... தூக்கமில்ல அதான்..."

"ஏய் அவன் பொய் சொல்றான் லீமா...." கத்தினான் ரபீக், அவனுக்கு லீமாவுடன் எப்படியும் பேச வேண்டும். அவள் ச்சிவ்வா… ச்சிவ்வான்னு கொஞ்சிப் பேசுவதில் அவனுக்கு மிகப்பெரிய வருத்தம் எப்போதும் உண்டு.

"என்ன ச்சிவ்வா... ஒரு நாள் கூட எனக்கு கம்பெனி தரமாட்டேங்கிறே...?" என்றபடி எழுந்து அவனிடம் வந்தாள்.

ரபீக் மலையாளத்தில் “என்னை எல்லாம் அவளுக்குக் கண்ணு தெரியலை பாருடா… லேசாக் கண்ணக் காட்டுன்னா அவ கால்ல விழுந்து கிடக்க மாட்டேன்… நீ வேஸ்ட்டுன்னு தெரிஞ்சிதான் உங்கிட்ட குழையிறா… கம்பெனி கேட்குறா பாரு...” என்றான்.

“சும்மா இருடா…” என ரபீக்கை அதட்டிவிட்டு. “ஆத்தா தாயே... அங்காள பரமேஸ்வரி காலையில வம்பிழுக்க உனக்கு நாந்தான் கிடைச்சேனா... இந்தா ரபீக் இருக்கான் அவனை போயி நோண்டு…"

"யாரு ரபீக்கா… அவனெல்லாம் எனக்கு பக்கத்துலயே நிக்க முடியாது…. ஏன் நீ கூட கம்பெனி கொடுக்க முடியாது... அப்படித் தைரியமா காரியத்துல இறங்குனேன்னு வச்சிக்க மவனே கண்ணு மட்டுமில்ல... எல்லாமே சிவக்கும்... அப்புறம் ஸ்ட்ரைட்டா ஹாஸ்பிடல்தான்…" எனச் சிரித்து அவன் தலையில் தட்டிவிட்டு மீண்டும் தனது இடத்துக்குப் போனாள்.

சிவா சிரிக்க, “உண்மைதான் மச்சி… இதுக்கெல்லாம் தீனி போட நம்மால முடியாதுடா…” என்றான் ரபீக் மெல்ல.

“அவன் என்ன சொல்றான்…?” என சிவாவிடம் கேட்டாள்.

“இல்ல உம்மேல கைவச்சா உன்னோட புருசன் துப்பாக்கியோட வருவான்னு சொல்றான்.

“லெபனான்ல இருந்து வரணுமில்ல… அதுக்குள்ள நீ எஸ்கேப் ஆயிடலாம்…” எனச் சிரித்தாள்.

லீமாவின் பேச்சுத்தான் அப்படி... மற்றபடி அவள் ரொம்ப நல்லவள்... சிவாவைத் தவிர மற்றவர்களிடம் ஒரு எல்லைக்கு மேல் வச்சிக்க மாட்டாள்.

எப்படியோ சிவாவுடன் ரொம்ப நெருக்கமாகி விட்டாள்… அவனிடம் மட்டும் அவளின் வாழ்க்கை, பிள்ளைகள், செக்ஸ் என எல்லாம் பேசுவாள் சில நேரங்களில் ‘ஏய் ச்சிவ்வா இங்க வா…’ என தான் வாங்கி வைத்திருக்கும் புதிய உள்ளாடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் காட்டி, “இந்தக் கலர் நல்லாயிருக்கா… புதுக்கலரா இருந்தது… அதான் எடுத்தேன்…” என்பாள்.

“உள்ளதானே போடப்போறே… இதுல எந்தக் கலரா இருந்தா என்ன… இதுல நல்லாயிருக்கான்னு ஒரு கேள்வி… அதுவும் ஆபீஸ்ல வந்து உக்காந்துக்கிட்டு… எடுத்துக் காட்டிக்கிட்டு…” எனச் சிரிப்பான்.

ஒரு சில நாட்களில் அவனை வம்படியாக கூட்டிக் கொண்டு போய் லெபனான் சாப்பாடு வாங்கிக் கொடுப்பாள்.

சிவா மனைவி போனில் பேசும் போது இங்க கொடு எனக் கேட்டு வாங்கி, “சொன்னாக் கேட்கவே மாட்டேங்கிறான்… என் பின்னாலயே திரியுறான்… இனி அவன் உனக்கில்லை… எனக்குத்தான்” எனச் சிரிப்பாள். எதிர்முனை “அங்கிட்டே வச்சிக்க… எனக்கு ஒரு தொல்லை குறைஞ்சது…” எனச் சொன்னதும் “ஏய் ச்சிவ்வா… உன்னோட ஒய்ப் ஓகே சொல்லிட்டா… இன்னையில இருந்து நீ என்னோட ஆளு” எனச் சொல்லிச் சிரிப்பாள்.

எல்லாமே ஆழ்ந்த நட்பின் அடையாளமாய்த்தான் இருக்குமே ஒழிய அதில் விரசமோ, காமமோ துளி கூட இருப்பதில்லை… அவளின் ஆத்மார்த்தமான அன்புதான் சிவாக்கு ரொம்பப் பிடித்துப் போனது எனலாம்.

சிவா கூட சில சமயம் “வீட்டுக்காரர் இங்க இல்லை… அப்புறம் என்ன அம்மணி தளர்ந்து போய் வாறீங்க” எனக் கிண்டலடிப்பான்.

“ஏய் லூசு… உடம்பைக் குறைச்சேனா… என்னோட பிரா லூசா இருக்கு… உங்கண்ணு ஏன் அங்க போகுது… கண்ணுல குத்த” எனச் சிரிப்பாள்.

அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ரபீக், எப்படா அவள் வாஷ்ரூம் போவாள் எனக் காத்திருப்பான்.

அவள் போனதும் சிவாவிடம் ஓடிவந்து “உடம்பைக் குறைச்சிட்டேன்னு சொல்றா… முன்னாலயும் பின்னாலயும் குறையலையேடா… கூடிக்கிட்டே போகுதேடா…” என்பான்.

“நீ மூடிக்கிட்டுப் போப்பா... அதையெல்லாம் சரியா அளவெடுத்து வச்சிக்க... வேலையில மட்டும் கோட்டை விட்டுடு...”

“அடேய்... அவதானேடா சொன்னா குறைச்சிட்டேன்னு...”

“இப்ப வந்துருவா... வந்ததும் அவகிட்டயே இதைக் கேளு... நல்லாப் பதில் சொல்லுவா...”

“ம்க்கும் நான் கேட்டதும் அவ பதில் சொல்லிட்டாளும்... நீயே கேளு... நீ என்ன கேட்டாலும் கோவிச்சுக்காம பதில் சொல்லுவா...”

“எம்மேல நம்பிக்கை வச்சிருக்கா... நான் இந்த மாதிரி சில்லித்தனமால்லாம் கேட்க மாட்டேன்னு அவளுக்குத் தெரியும்... இல்லேன்னா இவ்வளவு பிரீயா... ஒரு பொண்ணு... அதுவும் அரபிப் பொண்ணு வேற... இதையெல்லாம் சொல்ல வருவாளா... அவ ஜாலிக்காகச் சொல்லிட்டுப் போறா... அதைத் தூக்கிட்டு அலையாம... விட்டுட்டு வேலையைப் பாரு...” என்பான் சூடாக.

ரபீக் அப்போது போனாலும் கொஞ்ச நேரத்தில் வேறொரு காரணத்தை எடுத்துக் கொண்டு வருவான்.

அவர்களின் அரட்டை எல்லாம் மற்றவர்கள் இல்லாத போதுதான்… எல்லாரும் வந்து விட்டால் அவர்கள் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

சிவா ஹெட்செட்டை மாட்டி யூடிப்பில் அவனுக்குப் பிடித்த முருகனின் கந்தர் சஷ்டி கவசத்தை ஓடவிட்டபடி வேலையில் கவனமாகி விடுவான்... சூலமங்களம் சகோதரிகள்… மகாநதி ஷோபனா… என எல்லாருடைய குரலிலும் கேட்ட கந்தர் சஷ்டியை சமீபமாய் அவனின் மகளொத்த சூரியகாயத்திரியின் வசீகரக் குரலில் கேட்க ஆரம்பித்திருக்கிறான்… அந்தக் குரல் ஒரு பித்து நிலையை அவனுள் விதைப்பதுடன் பழனி முருகனின் முன் அவனை நிறுத்தி வைத்திருப்பது போல் அவனுக்குள் தோன்றும்.

அலுவலகத்தின் பரபரப்பான சூழலில்…

லீமா யார் யாருக்கோ புராஜெக்ட் விசயமாகப் போன் பேசுவாள்...

ரபீக் கிளையண்டிடம் எது குறித்தோ விவாதிக்க ஆரம்பித்திருப்பான்…

அன்றும் அரட்டையின் வேகம் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்ததும் மெல்லக் குறைய, அவரவர் வேலையில் ஐக்கியமானார்கள்.

எல்லாப் பக்கமும் போனில் யாருடனோ கத்திக் கொண்டிருந்தார்கள்.

அரபிகளுக்கு மெதுவாகப் பேசத் தெரிவதில்லை… அரபிப் பெண்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாது… லீமா யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள்… அவள் பேசுவது சிவாவுக்குக் கூட கேட்கவில்லை… பக்கத்து அறையில் பேசும் இகாப்பின் குரல் அருகில் கேட்டது. அடிக்கடி அவன் ‘எல்லா’ என்றான். அரபிகள் கோபமோ சந்தோசமோ எல்லாத்துக்கும் ஒரே குரல்தான்… நமக்குத்தான் அவன் சண்டை போடுறான்னு தோணும்… ஆனா அவன் சந்தோஷமாத்தான் பேசிக்கிட்டு இருப்பான். அப்படித்தான் பிலிப்பைனி, மலையாளம், தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளின் கலவை அந்த அலுவலகத்தில் நிறைந்து வழிய ஆரம்பிக்கும்.

சிவாவின் மனசுக்குள் கறுப்பியின் அழுகை மீண்டும் எழ, அவளைப் போய் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

*******


“பொறு ஈவினிங் பார்க்கலாம்...” என்றான் கணேஷ் தலையைத் தடவியபடி.

"சரி சம்பத்... அதான் இம்புட்டுச் சொல்றோமுல்ல... வா... வந்து சாப்பிடு... சாப்பிட்டு கீழ போவோம்..." என்றபடி ராகவ் பிரியாணியைத் தட்டில் வைத்தான்.

"எனக்கு இன்னொரு பெக் வேணும்… ஊத்து..." என்றபடி அருகில் இருந்த கிளாஸை ராகவிடம் தள்ளியபடி அமர்ந்தான் சம்பத்.

"போதும்... ரொம்ப அதிகமாயிருச்சு... வேணாம்..."

"வேணும்... என்னடா பொம்பளையவும் கூட்டியார மாட்டேங்கிறீங்க... சரக்கையும் தர மாட்டேங்கிறீங்க... என்ன மயித்துக்குடா இங்க வந்தேன்… மச்சி கிளம்பு... நாம போலாம்... இவனுக வேலைக்கு ஆக மாட்டானுங்க... "

"எதுக்கு கத்துறே... உனக்கு பெக்குத்தானே வேணும்.... இரு நான் ஊத்தித் தர்றேன்..." என்றபடி ராகவ் அந்தக் கிளாஸில் கொஞ்சமாய் ஊற்றினான்.

"ஊத்து... புல்லா ஊத்து...." அடம் பிடித்தான் சம்பத்.

"என்ன மச்சி இது... சின்னப் பிள்ளையாட்டம்... உட்கா சாப்பிட போகணுமா வேணாமா...?"

"போகணும்... போகணும்... போகணும் மச்சி..." டேபிளில் குத்தினான். பிரியாணி சிதற, தண்ணீர்ப் பாட்டில் சாய்ந்து 'கவக்.. கவக்'கென தண்ணீர் வெளியேற, சிவா வேகமாக பாட்டிலை நிமிர்த்தி வைத்துவிட்டு அங்கு கிடந்த துண்டை எடுத்து டேபிளில் ஓடிக்கிடந்த தண்ணியின் மீது போட்டான்.

சிவாவைப் பார்த்து சிரித்தவன் “இந்தா... இவரும் அவரும் தண்ணி குடிக்க மாட்டாங்க... உத்தம புத்திரர்கள்... டேய் சுதா எப்படி எங்களுக்கு நிகராத் தண்ணியடிச்சான்னு மச்சிக்கிட்ட கேளு... பொட்டச்சியே ராவா ஊத்துறா... நீயெல்லாம் இன்னும் திருந்தலை... சரி இங்க வா...” என சிவாவை அழைத்தவன் “பட்... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா மச்சி” என அணைத்து முத்தமிட்டான்.

"சரி அவனை விட்டுட்டுப் பேசாம சாப்பிடு... எதுக்கு இப்படியெல்லாம் நடந்துக்கிறே...” என்றபடி சிவாவை விலக்கி, சம்பத்தை அணைத்துக் கொண்ட கருணை இழுத்து "நீயும்... ஐ லவ் யூ மச்சி..." எனக் குழைந்து அவன் தலையிலும் முத்தமிட்டு விட்டு பிரியாணியுடன் சண்டை போட ஆரம்பித்தான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்த சிவாவுக்குத் தான் தனியார் கணிப்பொறி மையத்தில் படித்துவிட்டு அங்கு ஆசிரியராய் பணிபுரிந்த போது நடந்த கூத்துத்தான் ஞாபகத்துக்கு வந்தது. மொத்தம் எட்டுப் பேர் ஒரே அறையில் தங்கியிருக்க, தினமும் தண்ணி, சினிமான்னு வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு எல்லாருமாய் கணிப்பொறி மையத்திலேயே தண்ணியடித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, சிவாவும் பாண்டித்துரையும் வாங்கி வந்த சாப்பாட்டை, போதை மிகுந்திருந்த மற்றவர்கள் சாப்பிட்ட விதத்தை, அதுவும் தனக்கு வகுப்பெடுத்த வாத்தியார் நாகராஜ் தோசையைத்தான் சாப்பிடுறேன் என பார்சல் கட்டிய பேப்பரைப் பிய்த்து வாயில் வைத்தது... மச்சி நீ சாப்பிடேன் என அதே பேப்பரை ராமசாமிக்கு ஊட்டியது என ஞாபகத்தில் வர சத்தமாய் சிரித்து விட்டான்.

“மச்சி... சிரிக்கிறான் பாரு மச்சி... அவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான் பாரு மச்சி...” என்று எழுந்த சம்பத்தை “உன்னைப் பார்த்து அவன் சிரிக்கலை... முத்து மொபைல்ல ஏதோ படம் காட்டியிருக்கான்... அதான் சிரிக்கிறான்...” எனச் சமாளித்து எழ விடாமல் அமர வைத்துச் சாப்பிட வைத்தார்கள்.

பசிக்காக அவன் சாப்பிடவில்லை... மனதில் நினைத்தது நிறைவேற வேண்டும் என்பதன் காரணமாகவே பிரியாணியை அள்ளி வீசினான்.

அவனின் காமப்பசி தீனி வேண்டுமெனத் தீர்மானமாய் நின்றது.

-பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-3-by-parivai-se-kumar&i=10683

Related Articles