வெளியிடப்பட்ட நேரம்: 16-Sep-2020 , 09:30 AM

கடைசி தொடர்பு: 16-Sep-2020 , 09:30 AM

கறுப்பி - பாகம் - 5

karuppi

திய உணவுக்குப் பின் சற்றே கறுப்பியின் அழுகையை மறந்துவிட்டு, ஆபீஸ் பாய் கொண்டு வந்து வைத்த காபியை உறிஞ்சியபடி அன்று முடிக்க வேண்டிய வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினான் சிவா.

ரபீக்கும் கூட ரொம்ப பிஸியாக இருந்தான்.

டிரைவர் குட்டிக்கா இருமுறை ‘என்ன ரொம்பப் பிசியோ?’ என்று கேட்டு விட்டுச் சென்றார்.

இருமுறை இகாப்பின் அழைப்புக்கு போய் பேசிவிட்டு வந்தான் சிவா.

பஸார் அறைக்குச் சென்று விட்டு வந்த லீமா, “சை.... இந்தாளு அறைக்கு இதுக்குத்தான் போறதில்லை...” எனப் போனை டேபிளில் எறிந்துவிட்டு கோபத்துடன் அமர்ந்தாள்.

“ஏய்... என்னாச்சு... எதுக்கு இப்ப டென்சன் ஆகுறே...?” என்றான் சிவா.

“பஷீர்.. ஒரு காவா... கொண்டு வா...” என்றவள் தலையை சேரின் பின்னே சாய்த்துக் கொண்டு ‘யா... அல்லா’ என்றாள். அவள் சிவாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் காபி கொண்டு வரச் சொன்னாள்.

“என்னன்னு கேட்டேன்... எதுக்கு உனக்கு இம்புட்டு டென்சன்..?”

“ம்... பஸார் ரூம் போனேன்... புராஜெக்ட் விசயமாப் பேசக் கூப்பிட்டான்...”

“ம்... என்ன திட்டினானா...? எப்பவும் கத்துறதுதானே அவன் வேலை...” என்றான் சிவா.

லீமா வேறொரு புராஜெக்டில் இருக்கிறாள்... அவளுக்கு புராஜெக்ட் மேனேஜர் ரவான் என்ற லெபனான்காரி... பஸார் எல்லாப் புராஜெக்ட் மேனேஜர்களுக்கும் மேலே... அபுதாபி பிராஞ்ச் எம்.டி... அறுபது வயதுக்கும் மேலிருக்கும்... ஒரு ரூபாய் தண்ணீர்ப் பாட்டில் கூடக் கம்பெனி செலவுதான்... நம்ம ஊர் பணத்துக்கு கோடிகளில் சம்பளம் மற்றும் வரும் லாபத்தில் ரெண்டு சதவிகிதம் வேறு... கம்பெனிக்காக மட்டுமே உழைப்பவர்... வேலை பார்ப்பவனெல்லாம் மிஷின் என நினைப்பவர்... அப்பத்தானே வரும் லாபத்தில் கிடைக்கும் பங்கு அவருக்கு அதிகமிருக்கும். அவரைப் போல் எல்லாரும் அலுவலகத்திலேயே இருபத்தி நாலு மணி நேரமும் கிடந்தாலும் சந்தோஷப்படாத ஜென்மம். ஆண்களைவிட பெண்களையே அதிகம் பிடிக்கும்.

அதுவும் பெண்களிடம் பேசும் போது தோளில் கை போட்டுக் கொண்டும் கட்டிப் பிடித்துக் கொண்டும்தான் பேசுவார்... தனியாக என்றால் அருகில் சேரை இழுத்துப் போட்டு தொடையில் கைவைத்துத்தான் பேசுவார். எதாவது ஒரு பிறந்தநாள் பார்ட்டி, அலுவலக ஆண்டு விழா என்றால் இவருக்குக் கொண்டாட்டம்தான்... பெண்களின் தோளில் கை போட்டு... அணைத்து... முத்தம் கொடுத்து... சிம்புவின் லீலைகளை எல்லார் முன்னாலும் அரங்கேற்றுவார். அந்தப் பெண்களும் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் பேசாமல் நிற்பார்கள். முகம் சுளித்தால் கூட தன் வேலைக்கு எதுவும் ஆகிவிடுமோ என முகத்தில் செயற்கையாய் புன்னகை பூப்பார்கள்... அது செயற்கை என்பதை அந்தக் கிழம் அறியாமலா இருக்கும்... அதுக்குத் தேவை பெண் ஸ்பரிசம் அவ்வளவே.

ரவான் மூன்று பிள்ளைகளின் தாய்.... நம்ம ஊர்ப் பெண்கள் என்றால் ஒரு பிள்ளை பெற்றதும் உடம்பு பெருத்து... வித்தியாசமாய் மாறி விடுவார்கள்... காரணம் இனி என்ன இருக்கு என்ற நினைப்பு... உடம்பைக் கவனிக்க நினைக்காத மனநிலை... எல்லாம் சேர்ந்து இருபது வயசுக்காரியை நாப்பது வயசுக்காரி போலக்காட்டும்... ஆனால் ரவானைப் பார்ப்பவர்கள் அவள் மூன்று பிள்ளைக்குத் தாய் என்பதை நம்பவே மாட்டார்கள்... உடுக்கு இடை என்பார்களே... அப்படித்தான் இருக்கிறது அவளுக்கு... வயிறு இருக்கா... இல்லையான்னு தேடணும்... முன்னழகு.... சரி விடுங்க... மூன்று குழந்தையின் தாய் அவள் என்பது சிவாவுக்கு ஆரம்பத்தில் தெரியாது.

லீமாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது “ஏய் ஏன் ரவான் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கா?” என்றான்.

“என்னது... ரவான் கல்யாணம் பண்ணலையா... ஆளைப் பாத்துச் சொல்றியாக்கும்... முன்னாடி பெரிசா இருக்கவும் மயங்கிட்டே போல... எனக்கும்தான் இருக்கு... எங்கிட்ட மட்டும் மயங்காம... எத்தன புள்ளையின்னு கேட்டே... அவளுக்கு மூணு புள்ளைங்க இருக்கு.... அமெரிக்காவுல அவ புருஷன் கூட இருக்குக... அப்பப்ப லீவுல பொயிட்டு வருவாளே... உண்மையிலேயே தெரியாதா உனக்கு...” என்றாள்.

சிவாவுக்கு ஆச்சர்யம்... மூணு பிள்ளைகளின் அம்மாவா.... இப்ப ரஜினி படத்துல நடிக்கிற கதாநாயகிகளை விட வயசு குறைவாத் தெரியிறாளே... என வியந்தான்.

“எங்கூர்ல அறுபத்தஞ்சிக்கு வயசுக்கு மேல இருக்க நடிகர் ஒருத்தர் இப்பவும் கதாநாயகந்தான்.... அவருக்கு சின்ன வயசுக் கதாநாயகிகளைத்தான் ஜோடியாப் போடணும்ப்பார்... அவரு மட்டும் ரவானைப் பார்த்தாருன்னா கதாநாயகி ஆக்கிடுவாரு... என்னால நம்பவே முடியல... ஆமா உண்மையிலேயே அவள் மூணு புள்ளைக்கு அம்மாவா...” என்றான்.

“ஆமா லூசு... அது சரி... அறுபத்தஞ்சி வயசுல கதாநாயகனா... அட கிறுக்குகளா.... இன்னுமா ரசிக்கிறீங்க... அவளை அந்தாளு போடட்டும்... நமக்கு யாரோ அஜீத்து... அஜீத்துன்னு சொல்லுவியே... நரைமுடியோட போட்டாவெல்லாம் போட்டியே... அந்தாளைக் கேட்டுச் சொல்லு... என்னைப் போடுறானான்னு” என்று இரட்டை அர்த்தத்தில் பேசிச் சிரித்து கண்ணடித்தாள்.

“கருமம்... கருமம்...” எனத் தலையில் அடித்துக் கொண்டான்.

பழைய நினைவிலிருந்து மீண்டு பஸாருக்குள் சென்றான். அவருக்கு... சாரி... அவனுக்கு என்ன மரியாதை... ‘ர்’ விகுதியில் இருந்து ‘ன்’னுக்கு மாறிக் கொண்டான்.

அந்தாளு ரவானைத் தேடி வந்து தோளில் கை போட்டபடி பேசிக் கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அவனின் விரல்கள் அவள் மார்பின் மீது பட்டும்படாமலும் கோலம் போடுவதையும் பார்த்திருக்கிறான். சில வேளைகளில் இடுப்பை இழுத்து அணைத்தபடி செல்வதையும் காண முடியும். அப்போதும் அந்தாளின் கை தொப்புளுக்கு கீழேதான் பிடித்திருக்கும். பல நேரங்களில் அவனுக்கான மதிய உணவை அவளேதான் கிச்சனில் தயார் செய்வாள்... பெரும்பாலும் கீரைகள்... பழங்கள் என்பதாய்தான் இருக்கும். அவனின் அறைக்கதவைச் சாத்திவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள் என்றார்கள் மணிக்கணக்கில் நகரும்... உள்ளே என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதனால்தான் அவளால் தன்னிடத்துக்குப் போட்டியாய் வர இருந்தவளை அழுதே வரவிடாமல் பண்ண முடிந்தது. பெண்களின் அழுகை ஒரு சாம்ராஜ்யத்தையே சாய்க்கும் போது பஸாரெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை தானே.

பாவம் அந்தப் பிலிப்பைனிப் பெண்கள்தான்.... மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தாளின் கைக்குள் சிறைப்பட்டு வெளிவரத்  துடிக்கும் ஆட்டுக் குட்டிகளாக நிற்பார்கள். அவர்களிடம் ஒரு படி மேலே போய் அணைப்பதுடன் பின்பக்கமும் அடிக்கடி தடவுவான். இவனைப் போன்ற மனிதர்கள்தான் இங்கு அதிகம்... இப்படித்தானே தன் நண்பர்களும் நடந்து கொண்டார்கள் என்ற நினைப்பு நேற்றைய நிகழ்வின் பின்னே நகர, இழுத்து நிறுத்தி மொத்தமாய் வெளியே வந்து லீமாவைப் பார்த்தான்.

காவாவைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியிருந்தாள்... தலையைச் சேரின் பின்னே சாய்த்திருந்தாள். அவளின் மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

“லீமா... ஏய்....” கூப்பிட்டான் சிவா.

“ம்...”

“மொதல்ல தலையைத் தூக்கு... பாக்குறவன் கண்ணெல்லாம் உன் மேல மேயுது...”

“என்ன மார்பைப் பாக்குறானுங்களா.... நீயும்தானே பார்த்திருப்பே... ரசிக்கட்டும் விடு... இருக்கதைப் பார்க்குறானுங்க... எடுத்துக்கணும்ன்னு எவனும் நினைக்கலையில்ல... கேட்டாலும் கொடுக்க மாட்டேன்...” விரக்தியாய்ச் சிரித்தாள்.

“எப்படித்தான் எப்பவும் இப்படிப் பேசுறியோ... எங்கூருப் பொண்ணுங்க... பிரான்னு சொல்லவே வெட்கப்பட்ட காலமெல்லாம் இருக்கு... இப்ப கொஞ்சம் பேசுதுங்க... ஆனா இன்னும் இப்படி ஓப்பனா எல்லா இடத்துலயும் பேசிப் பாக்கலை... எங்கூருப் பக்கம் இப்படி ஓபனாப் பேசினா... அந்தப் பொண்ணுக்கு அரிப்பெடுத்தவ... வேசின்னு புதுசு புதுசா பேரு வச்சிருவானுங்க... இங்க அதெல்லாம் இல்லை.... இந்தாப் பாரு நீ எங்கிட்ட எல்லாமே பேசுறே... நான் யாரு... இந்தியாவின் கடைக்கோடியில இருக்கிற தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கேன்... நீ லெபனான்ல இருந்து வந்திருக்கிறே... நமக்குள்ள என்ன பந்தம்...? இந்தக் கம்பெனி... இந்த அருகாமை... அவ்வளவுதானே.... என்னைப் பற்றி உனக்கென்ன தெரியும்... நாலஞ்சி வருசமா அருகருகே இருக்கோம்... அவ்வளவுதான்... அதெப்படி உன்னால எங்கிட்ட மட்டும் எல்லா விஷயத்தையும் பேச முடியுது... முப்பத்தாறு சைஸ்ல பிரா வாங்கிட்டு வாடான்னு ஊருக்குப் போயிருக்கப்ப வாட்ஸ் அப்ல மெஜேஸ் பண்ணுறே... இந்தக் கலர் நல்லா இருக்கான்னு உன்னோட உள்ளாடையை எங்கிட்ட காட்டுறே.... உன் கணவனுக்கிட்டச் சொல்ல யோசிக்கிறதைக் கூட எங்கிட்ட சொல்லுறே... இந்த நம்பகத்தன்மை என் மீது உனக்கு எப்படி வந்தது..? எனக்கு நீ மிகப்பெரிய ஆச்சர்யம் லீமா...” மனதில் உள்ளதைக் கொட்டினான்.

“ஏய் ச்சிவ்வா.... நீ என்னோட பிரண்ட்... உன்னைய எனக்குத் தெரியும்டா... என்னோட சைஸ் இதுதான்னு உனக்குத் தெரிஞ்சாலும் இதுவரை யார்க்கிட்டயாச்சும் அவ சைஸ் இதுடான்னு கமெண்ட் பண்ணியிருப்பியா... சொல்லியிருப்பியா... சொல்லு... மேட்டர் அது இதுன்னு உன்னைய நான் கேலி பண்ணினாலும் நீ சிரிச்சிக்கிட்டு போடி லூசுன்னு சொல்லிட்டுப் போயிடுவே... இதே இந்தா அங்கிட்டு இருக்கானே... உன்னோட பிரண்ட்டு... அவனுக்கிட்ட சொல்லியிருந்தா.... எல்லாருக்கும் சொல்லியிருப்பான்... ஏன் என்னையவே மேட்டர் பண்ணிட்டேன்னு கதை கட்டி விட்டிருப்பான்... யார் யார் எப்படின்னு எனக்குத் தெரியும்... ச்சிவ்வா...”

“சரி இப்ப எதுக்கு டென்சனா வந்தே... அதைச் சொல்லு...”

“அதெதுக்கு விடு...”

“அப்பச் சொல்லமாட்டே....”

“உங்கிட்ட சொல்லாமயா... இப்ப வேண்டாமே....”

“சும்மா சொல்லு... அந்தாளு பொண்ணுங்கன்னா என்ன பண்ணுவான்னு எனக்குத் தெரியும்...”

“எப்பவும் தோள்ல கை போடுவான்... கட்டிப் பிடிப்பான்... பொறுத்துப்பேன்... இன்னைக்கு என்னை ரவான்னுன்னு நினைச்சிட்டான்...”

“என்ன பண்ணினான்..?”

“உள்ள போனதும் இழுத்து அணைச்சிக்கிட்டான்... பொறுத்துக்கிட்டேன்... பேசிக்கிட்டு இருக்கும் போதே என்னோட மார்புல.... ச்சை... இந்தப் பொழப்பு எனக்கெதுக்கு.... ரிசைன் பண்ணிட்டுப் போயிடலாம்ன்னு தோணுது...”

“ஏய் ரிலாக்ஸ்... அவனோட புத்திதான் தெரியும்ல்ல... இத்தனை நாளும் சகிச்சிக்கலையா... விட்டுட்டு வேலையைப் பாரு... இங்க வேலை பார்க்க வர்ற பொண்ணுங்களுக்கு எல்லாம் இதே மாதிரி பிரச்சினைகள்தான் அதிகம்... வெளியில சொன்னா வேலை போயிடுங்கிற பயம்...”

“ச்சிவ்வா... தோள்ல கை போடுறது... அணைச்சிக்கிறது எல்லாம் பொறுத்துப்பேன்... அவனெப்படி என் மார்பை... நானும் ரெண்டு குழந்தைகளின் தாய் தெரியுமில்ல...”

“அவனுக்கு அதெல்லாம் தேவையில்லை... ரோசானை என்ன பண்ணுறான்... எப்பவும் அவளை இழுத்துப் பின்னாடித்தான் தடவுறான்... அவளுக்குந்தான் குழந்தை இருக்கு... நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் பொறுத்துக்க...”

“என்ன ச்சிவ்வா நீ... அவன் இன்னைக்கு என் மார்புல கை வக்கிறான்... நாளைக்கு வா ஹோட்டல் போகலாம்ப்பான்... இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்... கணவன் பிள்ளைகளை விட்டுட்டு இங்க வந்து கிடக்கிற நான் படுற வலியும் வேதனையும்... ஏன் நீயும் அதைத்தானே அனுபவிக்கிறே... உனக்குத் தெரியும்ல்ல அந்த வேதனை... இல்லற சுகம் துறந்து இங்க படுற பாடு... அது ஆணா இருந்தா என்ன... பொண்ணா இருந்தா என்ன... நம்மள நம்பி ஒரு உயிர் ஊர்ல இதே நிலையிலதானே இருக்குன்னு நாம தவிப்பை அடக்கிக்கலையா... இந்த ஊர்ல தடுக்கி விழுந்த நம்ம ஆசையைத் தீத்துக்கலாம்... ஆனா அது ஊர்ல நமக்காக வாழ்ற ஜீவனைப் பாதிக்காதா... என்னோட கணவருக்கு மூணு பொண்டாட்டிதான்.... தெரிஞ்சிதான் கட்டிக்கிட்டோம்... ஆனா அவரு எங்க மூணு பேருக்கும் துரோகம் பண்ணலையே... என்னையக் கட்டும் போது இனி வேற பொண்ணக் கட்ட மாட்டேன்னு சொன்னார்... அப்படித்தான் இருக்கார்.... என்னோட கணவன் மட்டுமே பார்க்க வேண்டிய, தொட வேண்டியதையெல்லாம் இவன் யார் தொட... சம்பளம் பாக்குற வேலைக்குத்தான் கொடுக்குறான்... என்னோட மார்பைத் தடவ இல்லை...” முதல் முறை லீமாவின் கண்ணீரைப் பார்த்தான் சிவா.

******


நாலு மணி எப்படா ஆகுமெனக் காத்திருந்த சம்பத், ‘மணியாச்சி வா போகலாம்’ என அணத்த ஆரம்பிக்க, அறையிலிருந்து கிளம்பி கடை நோக்கிப் பேசியபடி நடந்தார்கள்.

சத்தமாய் பேசியபடி இவர்கள் நடந்து செல்வதைச் சிலர் வித்தியாசமாய் பார்த்தபடி சென்றார்கள்.

அந்தக் கடை வாசலில் ஒரு கறுப்பினப் பெண் அமர்ந்திருந்தாள்.

ஆறு பேர் வருவதைப் பார்த்ததும் அவள் முகம் பிரகாசமானது.

ராகவ்வையும் கணேஷையும் அவள் அந்த ஏரியாவில் அடிக்கடி பார்த்திருப்பதாலும், சிறிதளவு பழக்கம் இருப்பதாலும் ‘ஹாய்’ எனக் கை குலுக்கினாள்… சம்பத்தும் அவள் கையைப் பற்றி ‘ஹாய் சுவீட்டி’ என்றான்.

ராகவ் அவளை லேசாக அணைத்துக் கொண்டான்… இங்கு பொதுவெளி என்ற அச்சம் தேவையில்லை... கட்டிப் பிடித்தலும் முத்தம் கொடுத்தலும் யாருக்கும் விகாரமாய்த் தெரிவதில்லை…. அவளும் அந்த அணைப்புக்கு இடம் கொடுத்தாள். நம் ஊரில் தங்கையை அணைத்தால் கூட தவறாகத்தான் பார்ப்பார்கள்… இங்கு அப்படியெல்லாம் இல்லை என்பது கூட நல்ல விஷயம்தானே.

உள்ளே அழைத்துச் சென்றவள், "ஆறு பேருக்கும் உட்காவா..?" எனக் கேட்டபடி சோபாவைக் காட்டி அமரச் சொன்னாள்.

"இல்லை நாலு பேருக்குத்தான்... ரெண்டு ரெடி பண்ணு போதும்… நாங்க ரெண்டு ரெண்டு பேரா ஷேர் பண்ணிக்கிறோம்..." என ராகவ் சொன்னது 'ஒகே' எனக் கண்ணடித்து விட்டு அதற்கான வேலைகளில் இறங்கியவளிடம் கருண் “உன் பேரென்ன..?” என்றான்.

“பேரா..? அது எதுக்கு...” எனச் சிரித்தவள் “மலாமா...” என்றாள்.

அவன் வேண்டுமென்றே மங்கம்மாவா என்று கேட்க, 'வாட் மங்கும்மா... மலாமா... ம...லா...மா...." என்று அழுத்திச் சொன்னாள்.

சிவா அறையை நோட்டமிட்டான்...

அந்த அறை பத்துக்குப் பத்துதான் இருக்கும் அதற்குள் ஏழெட்டுப் பேர் அமர்வதற்கான சோபா போடப்பட்டிருந்தது. ஒரு பக்கமாக சிறியதொரு தடுப்பு அதற்குள்தான் உட்கா தயார் செய்வதற்கான சாதனங்கள் இருந்தன. அந்த அறைக்கு வாசல் தவிர, வேறெந்தத் திறப்பும் இல்லை... திரைச்சீலை இட்டுச் சுவர் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தது. வாயிலும் கூட திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது. மெல்லிய அரபி இசையை இரு பெரும் ஸ்பீக்கர்கள் அறை எங்கும் அதிராமல் விதைத்துக் கொண்டிருந்தன... கொஞ்சம் மங்கலான வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்குகள்... அறையை அதீத குளிரில் வைத்திருக்கும் ஏசி.

இரண்டு இடங்களில் சிறிய கிண்ணம் ஒன்றில் கிடந்த நெருப்புத் துண்டுகளின் மீது போடப்பட்ட அரபி ஊது லேசாகப் புகைந்து அறை எங்கும் மணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மணம் என்றால் ரம்மியமான மணம்… நம்ம ஊர் ஆட்கள் சென்ட் என ஒரு வஸ்துவை அடித்து அருகிலிருப்பவனுக்கெல்லாம் தலைவலி வர வைப்பார்களே… அப்படியில்லாமல் இந்த அரபி ஊது அழகான, ரம்மியமான மணத்தைக் கொடுத்து நாசி வழி இதயத்துக்குள்ளும் இறக்கிக் கொண்டிருந்தது.

-பரிவை சே. குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-4-by-parivai-se-kumar&i=10721

Related Articles