வெளியிடப்பட்ட நேரம்: 21-Sep-2020 , 08:17 AM

கடைசி தொடர்பு: 21-Sep-2020 , 08:17 AM

கறுப்பி - பாகம் - 6

karuppi

ஜாலியாகப் பேசும் பெண்ணாக இருந்தாலும் தன் மீது ஒருவன் எல்லை மீறுகிறான் என்கிற போது லீமாவும் பெண்தான் என்பதை அவளின் கண்ணீர் உணர்த்தியது.

“ஏய் லீமா... என்ன இது... நீ போல்டான்னா ஆளு இல்லையா... லீவ் இட்... எல்லாம் கடந்து போகும்... இந்த பாலை மண்ணுல பெரும்பாலான ஆண்கள், பொண்ணுங்க எல்லாரையும் போகப் பொருளாத்தான் பாக்குறாங்க... பாத்தவளையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கிறாங்க... இங்க இருக்க மனிதர்களுக்கு எத்தனை பொண்டாட்டி இருந்தாலும் வீக் எண்ட்ல பிலிப்பைனிகளை காரில் ஏத்திக்கிட்டுப் போறதைப் பார்த்ததில்லையா... இந்தாளுக்கு இது ஒரு வீக்னஸ்... என்ன செய்யிறது... ஆம்பளைங்களை கண்டுக்கவே மாட்டான்.... ஆறு மணிக்கு நான் போறேன்னு இகாப்புக்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுனான்... நீ அஞ்சு மணிக்குப் போனாலும் கண்டுக்கமாட்டான்... ஏன்னா உங்கிட்ட அவன் எதிர்பார்க்கிறது இருக்குல்ல... கொஞ்ச நாள் ஓட்டு... கோபப்படாதே...”

“ரவான்தான் எல்லாத்தையும் தொட விடுறான்னா... நானும் அப்படியிருப்பேன்னு... சை... மனுசனா அவன்...” பொங்கினாள்.

“இங்க எவளும் அந்தாளை எதிர்த்துக் கேட்டதில்லை... அவன் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்தானே... அந்த எண்ணம் கூட அவனுக்கு இல்லை...”

“அவங்க வீட்டுப் பெண்கள் எல்லாம் கற்போட, களங்கமில்லாம இருக்கணும்... நாமதான் இங்க கிடைக்கிற சம்பளத்துக்காக இவனுக செய்யிறதை எல்லாம் பொறுத்துக்கணும்... ஆணாதிக்கம்...”

“அதான்... ஆரம்பத்துல ஒருத்தி மேல கை வச்சிருப்பான் பாரு... அப்ப அவ செமையாக் கொடுத்திருந்தா... அடுத்தவ மேல கை வைக்க நினைச்சிருக்கவே மாட்டான்... ஆனா அவ ஏத்துக்கிட்டா போல... அதான் எல்லாப் பொண்ணுங்களுமே அப்படித்தான்னு கை வைக்கிறான். ஏன் இப்பக் கூட இந்த ஆபீசுல இதுவரைக்கும் யாரும் எதுத்துக் கேட்கலை... ஒண்ணு பார்க்கிற வேலைக்கு கூடுதல் சம்பளம்... அடுத்தது எப்ப ஆபீசுக்கு வந்தாலும் ஏன் லேட்டுன்னு கேக்குறதில்லை... மூணாவதுதான் ரொம்ப முக்கியம் தனக்கான எதுவா இருந்தாலும் அதை சாதிச்சிக்கிற முடியுது... அப்புறம் எவ என்ன சொல்லப் போற... நமக்கு காரியம் ஆகுதுல்ல... அப்பத் தடவுறதுல என்ன வந்திடப் போகுதுன்னு மனநிலை... நீ விட்டுட்டு வேலையைப் பாரு...”

“என்னாலயெல்லாம் ஒரு எல்லைக்கு மேல பொறுமையா இருக்க முடியாது. சம்பளம் கிடைக்குதுங்கிறதுக்காக நம்ம உடம்புல அவன் என்ன வேணுமின்னாலும் பண்ணட்டும்னு இருந்தா அதுவும் விபச்சாரம்தானே...”

“ஆமா... அதேதான்... இங்க பல பெண்களை வேலைக்குன்னு கூட்டிக்கிட்டு வந்து விபச்சாரம் செய்ய வச்சி பலர் சம்பாதிச்சிக்கிட்டு இருக்கானுங்க... குறிப்பா இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனுங்க... நாங்கூட உங்கிட்ட யமுனா கதை சொல்லியிருக்கேனே... யமுனா மட்டுமில்ல அவ மாதிரி பல பெண்கள்... அது வேற கதை... அதுல முக்கியம் வறுமை... அதைப் பயன்படுத்தி அந்தப் பெண்களை அதில் இறக்கிடுறாங்க.... ஆனா நம்ம ஆபீஸ் மாதிரி இடங்கள்ல பணம்... இன்னும் பணம் வேணும்... அதிகாரம் வேணும்... அதுக்காக தொட்டுக்கட்டும் தப்பில்லை என்ற மனநிலை... அங்கே அந்தப் பெண்கள் கண்ணீரோடு உடம்பைக் கொடுக்கிறார்கள்... தினம் தினம் மனசுக்குள்ளும் வெளியிலும் அழுது சாகிறார்கள்... இங்கே உள்ள பெண்கள் சந்தோஷமாத் தொட விடுறாங்க... இதெல்லாம் எல்லா இடத்திலும் எல்லா நாட்டிலும் இருக்கு தெரியுமா...?”

“இருந்துட்டுப் போகட்டும்... அதெப்படி ஒரு பெண் ஏத்துப்பாளா... மாட்டாளானு கூட யோசிக்காம... இப்படி...” மூக்கை உறிஞ்சி கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டாள்.

மூக்குச் சிவந்து மாலை நேரத்து அடிவானம் போல் ஆனது.

“அவதான் தொட விட்டுடுறால்ல... அதை மற்றவர்கள் பார்க்கிறார்கள்தானே... அவ காரியம் சாதிக்கும் போது எதனால் அவளால் சாதிக்க முடிந்தது என்பதைப் புரிந்து கொண்டு மற்றவர்களும் அந்தத் தொடுதலை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.”

“என்னால் முடியாது... நான் ரவான் இல்லை...”

“நீ ரவான் இல்லைதான்... பட் ஆரம்பத்துல தோள்ல கை போட விட்டியல்ல... அப்ப ஏன் நீ ரவான் இல்லைன்னு சொல்லலை...”

“ச்சிவ்வா... அப்ப நீ அதை நான் ஏத்துக்கிட்ட மாதிரி இதையும் ஏத்துக்கணுங்கிறியா..?” கோபமாய் பார்த்தாள்.

“ஏத்துக்கணும்ன்னு சொல்லலை... பொறுமையா இரு... நல்ல வேலை கிடைத்ததும் போடான்னு சொல்லிட்டுப் போயிடலாம்...”

“என் தோள்ல கை போட்டப்ப அல்லா மீது ஆணையா என்னோட அப்பா மாதிரித்தான் நினைச்சேன்... ஆபீஸ்ல எல்லார் முன்னாலயும் ஒரு ஆண் பெண்ணோட தோள்ல கை போட்டுக் கூட்டிட்டுப் போறான்னா அவன் மனசுல அழுக்கு இல்லைன்னு நினைச்சேன். பட்... இவனோட மனசெல்லாம் அழுக்கு... இவனோட எண்ணம் வேறயா இருக்கும் போது அதை ஏன் ஏத்துக்கணும்...”

“புரிஞ்சிக்கிட்டேதானே... இனி ஒதுங்கியிரு...”

“சை... இந்த ஆண்கள்...” பல்லைக் கடித்தாள்.

“ஏய்...”

“உன்னையில்லை... பஸார் மாதிரி ஆண்கள்...”

“ம்.... எல்லா இடத்திலும் இதுதான்... எங்க வீட்டுக்குப் பக்கத்துல குடிசை போட்டு சில குடும்பங்கள் இருக்கு... அதில் ஒருத்தி... அவளுக்கு மூணு பொம்பளப்புள்ள... மூத்த புள்ளய பதினாலு வயசுல ஒரு நொண்டிக்கு கட்டிக் கொடுத்துட்டா... அந்தப்புள்ள வாழாமத்தான் வந்திருக்கு... ரெண்டாவது வயசுக்கு வந்திருச்சு... இவ வீட்டுக்குப் புருஷன்னு ஒருத்தன் வருவான்... ஆனா அந்தப் புள்ளைகளுக்கு அவன் அப்பனில்லை... அவளும் அவனும் எப்பவும் தண்ணியடிச்சிட்டு ஆட்டம்... அதுவும் காமக் களியாட்டம் போடுறதுதான் வேலை... வீட்டுக்குள்ள மட்டுமில்லை... ராத்திரி நேரத்துல வெளியில கூட அம்மணமாத்தான் கிடப்பாங்க... ஒரு நாள் நான் ஒரு வேலையா அந்தக் குடிசைகளுக்குள்ள ஒரு வீட்டு ஆளைக் கூப்பிடப் போனப்ப... அவ வீட்டுக் கதவு தொறந்து கிடக்கு.... ஒட்டுத் துணியில்லாம அம்மணமாப் படுத்திருக்கா... புள்ளங்க எல்லாம் வெளியில... வெயில்ல உக்காந்திருக்குக... அதுல கல்யாணமாகி வந்ததும் இருக்கு... வயசுக்கு வந்ததும் இருக்கு...”

“அட மூதேவி... அப்படி செக்ஸ் கேக்குதா அவளுக்கு...”

“இன்னும் இருக்கு... ஒரு நாள் அவன் பகல்ல வீட்டுக்கு வந்தான்... ரெண்டாவது புள்ள எங்க வீட்டுல சுத்தம் பண்ணிக்கிட்டு இருந்துச்சு... என்னோட மனைவி என்னடி உங்காத்தா வீட்டுலயா இருக்கா... இந்த நேரத்துல அவன் போறான்னு கேட்டா... அதுக்கு அந்தப்புள்ள என்ன சொன்னுச்சு தெரியுமா...? அக்கா இருக்குன்னு சொன்னுச்சு... எனக்குத் தூக்கி வாரிப் போட்டிருச்சு... அக்காவா..? அவனுக்குப் பொறக்கலைன்னாலும் அவகூட உறவு வச்ச பின்னால அதுக அவனோட பிள்ளை இல்லையான்னு என் மனைவிக்கிட்ட கேட்டேன். அதெல்லாம் இந்த மிருகங்களுக்கு என்ன தெரியப் போகுதுன்னா... இதுல இன்னொரு கூத்து என்னன்னா...”

கதை கேட்கும் ஆவலில் ரபீக்கும் வந்தான்.

“அய்யே கேட்கவே கேவலமா இருக்கு... இதை எதுக்கு இப்ப சொல்றே... வேண்டாம் விடு....”

“இரு முடிச்சிடுறேன்... ஆத்தாளும் மகளும் அவன் கூட ஒரே நேரத்துல... அந்தச் சின்னப்புள்ள எல்லாத்தையும் சொல்லுது...”

“அது சின்னப்புள்ளையா... வயசுக்கு வந்திருச்சுன்னு சொன்னே...”

“ஆமா... பத்துப் பன்னெண்டு வயசிருக்கும்... நிகழ்வுகளைப் பார்த்துக்கிட்டே வளருது... அப்ப அது மனசுல என்ன தோணும்...”

“ஆமா இதை யாருமே தட்டிக் கேட்கலையா..?”

“அவ ஒரு கேடுகெட்டவ.... தண்ணியடிச்சிட்டு வந்து சர்வ சாதாரணமா எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு தெருவுல நிப்பா... ஒரு பைத்தியம் கூட உடம்புல இருக்க கிழிஞ்ச துணி விலகாம... தன்னோட உடம்பை மறைக்கப் பார்க்கும்... ஆனா இவ.... எல்லாரும் பாத்துக்கண்ணு மொட்டக்கட்டையா நிப்பா... ஒருத்தர் சத்தம் போட்டாரு... அவருக்கிட்ட போட்டிருந்த நைட்டியைத் தூக்கி, என்ன மயிரைப் புடுங்கணுமா வந்து புடுங்குன்னு சொன்னா... அப்புறம் யாரும் கண்டுக்கிறதில்லை...”

“ம்... அப்ப உனக்கு ஊருக்குப் போனா அடிக்கடி தர்ம தரிசனந்தான்...” ரபீக் சிரித்தான்.

“ஆமா... ரொம்ப முக்கியம்...” என்ற சிவா, லீமாவிடம் பேச்சைத் தொடர்ந்தான்.

“கொஞ்ச நாள்ல ரெண்டாவது புள்ளையையும் தன்னோட படுக்கச் சொல்லுன்னு வீதியில நின்னு கத்திக்கிட்டு இருந்தான்... அப்ப அவ என்னோட படுத்தே... மூத்தவளோட படுத்தே... இப்ப இவளும் வேணுமான்னு கத்துனா... அன்னைக்கு ராத்திரியே ரெண்டு பேரும் சிரிக்கிட்டு தெருவுல போனாங்க... ராத்திரி ஆட்டம் முடிச்சாச்சு... மறுநாள் காலையில சின்னவளைக் குளிக்கச் சொல்லி, பூவெல்லாம் வாங்கியாந்து வச்சி தயார் பண்ணிட்டா... அவனோட படுக்க வைக்க, பன்னெண்டு வயசுப்புள்ள... அழுதுக்கிட்டு என் மனைவிக்கிட்ட வந்து சொன்னுச்சு... உடனே இவ உன்னோட ஆயா வீட்டுக்குப் போயிடுடி... அப்பத்தான் அவ உன்னைய தொந்தரவு பண்ணமாட்டான்னு சொல்லிக் கொடுத்தா... அதுவும் ஆத்தாவுக்குத் தெரியாம ஓடிருச்சு... ஆனா காலம் எப்படியும் ஒருநாள் அந்தப் பிஞ்சையும் அவனுக்கு இரை ஆக்கும்... ஏன்னா அவங்க வாழ்க்கை அப்படித்தான்...”

“ரொம்பக் கொடுமை ச்சிவ்வா... ஆமா அதை எதுக்கு இப்பச் சொன்னே...”

“இல்ல... எல்லா நாட்டுலயுமே பெண்கள் செக்ஸ்க்காக மட்டும்தான்... தன்னோட ஆசை நிறைவேறினால் போதும்... அதுக்கு ஐந்து வயசா இருந்தா என்ன அம்பது வயசா இருந்தா என்ன... நம்மளோட பசியை... சாரி... வெறியைத் தீத்துக்கணும்... அவ்வளவுதான். அதுதான் நம்ம ஆபீசிலும் நடக்குது. இந்தக் கிழவன் ரவானையும் தடவுவான்... அம்பது வயசுக்காரி ராணியாவையும் தடவுவான்... அவனோட ஆசை தீர்ந்தாப் போதும்...”

“என்னைய விட்டுட்டே...” சிரித்தாள்...

“ஆளைப்பாரு... விட்டுட்டு வேலையைப் பாரு...”

“முடியலை ச்சிவ்வா... மனசு வலிக்கிது... எவ்வளவு கேசுவலாத் தொட்டான் தெரியுமா... என்னோட மார்புல முதல் தடவை வேற ஆம்பளை கை வைக்கிறது... மனசு வலிக்குது சிவா...”

“ஏய் விடு... அதையே நினைச்சா வலிதான் மிஞ்சும்...”

“ம்...”

லீமாவின் அழுகை ஏறத்தாழ அவனுள் இம்சித்துக் கொண்டிருக்கும் அவளின்... அந்தக் கறுப்பியின்... மலாமாவின் அழுகையை ஒத்திருந்தது.

“சரி... நேத்து நடந்த கதையைக் கேட்டியன்னா உன்னோட கோபம் ஒட்டு மொத்த ஆண்கள் மேலயும் திரும்பும்... உன்னை மாதிரித்தான் அவளும்... அந்தக் கறுப்பி வெடித்து அழுதாள்.... நான் வெட்கித் தலைகுனிந்து நின்றேன் என முன் தினத்து நிகழ்வுகளைச் சொல்ல ஆரம்பித்தான்.

லீமா கேட்டுக் கொண்டிருந்தாள்...

அவளின் முக உணர்ச்சிகள் மாறி மாறிப் பயணித்தன... இறுதியாக “இவ்வளவு கேவலமாகவா நடந்து கொண்டார்கள்... இந்த மாதிரி நண்பர்கள் உனக்குத் தேவையா ச்சிவ்வா... அவங்களை விட்டு வெளியில் வா... ச்சிவ்வா...” என்றாள்.

“நல்லவனுங்களாத்தான் இருக்கானுங்க... பக்கத்துல போயி... அதுவும் போதையில அவனுக எப்படியிருக்கிறானுங்கன்னு பாத்தாத்தான் தெரியுது... சரி போ... வாஷ்ரூம் போய் முகமெல்லாம் கழுவிட்டு வா... உன்னோட அழுது வடிஞ்ச முகத்தைப் பார்க்கப் பிடிக்கலை... ஓடு... முதல்ல...” விரட்டினான்.

“சரி கழுவிட்டு வர்றேன்... நாம ரெண்டு பேரும் காபி ஷாப் போலாம்... அப்படியே சூப்பர் மார்க்கெட் போயி கொஞ்சம் பொருள் வாங்கிட்டு. உன்னைய உன்னோட இடத்துல விட்டுட்டு நான் வீட்டுக்குப் போறேன்... எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்...” என்றபடி எழுந்தவள். “ஆமா கறுப்பின்னு சொன்னே அவ பேரென்னன்னு சொல்லலை...” என்றாள்.

“மலாமா...” என்ற சிவா “கறுப்பின்னு சொல்றதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு... இங்கு நிறம்தான் மிகப்பெரிய பிரச்சனைகளின் காரணி” என்றான்.

அறையெங்கும் நிரம்பியிருந்த ஊதுவின் வாசம் மனசுக்கு இதமாய் இருந்தது.

இது போன்ற விலை உயர்ந்த ஊதுவின் புகையைத்தான் அரபிப் பெண்கள் அணியும் உடைகளுக்குப் போடுவார்களாம்... அதுவும் புர்க்காவை ஹாங்கரில் மாட்டித் தொங்கவிட்டு அதன் அடியில் இந்த ஊதை வைத்து விடுவார்களாம்... புகை அந்த உடைக்கு உள்ளேயே பரவி, உடை எங்கும் அருமையான வாசனையைக் கொடுக்குமாம்… என இங்கு வந்த புதிதில் கேள்விப்பட்ட சிவா, அது உண்மைதானா என்பதை அறிய இணையத்தில் எல்லாம் தேடினான்... சரியான விடை கிடைக்கவில்லை... லீமாவிடம் கேட்கத் தயக்கம்... வேறு யாரிடம் கேட்பது...? அப்படியே விசாரித்தாலும் ஏன்... எதற்கு என ஆயிரம் கேள்விகள் கேட்பார்களே… அதைத் தெரிந்து நீ என்ன பண்ணப் போறே… ஏதாவது உள்ளூர்ப் பெண்ணோட கூட்டு இருக்கோ… எனக் கேட்கக் கூடும் என்ற எண்ணத்திலேயே தவிர்த்து வந்தான்.

சில வருடங்களுக்கு முன் கிளையண்ட் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை… சிவா கம்பெனியில் இருந்து அவனும் ரபீக்கும் இன்னும் இரண்டு பாகிஸ்தானியரும் போய் வேலை பார்த்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு வருடப் பணி அது… இது அங்கிருப்பவர்கள் செய்ய வேண்டிய பணி… அரபிப் பெண்கள் இருவர் அதற்கான பணியில் இருந்தார்கள். அவர்கள் வருவார்கள்… போவார்கள்… அவர்களின் வேலையைத்தான் இவர்கள் பார்த்தார்கள். அவர்கள் இருந்த தளத்தில் ஏராளமான அரபிப் பெண்கள்… அவர்களைப் பொறுத்தவரை அலுவலக வேலை என்பது எப்போதும் அரட்டை… விதவிதமான சாப்பாடு… அடிக்கடி காவா… காவா கூட செக்ஸோட சம்பந்தப்பட்டதுதான் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான்... அது எவ்வளவு தூரம் உண்மை என்பது அவனுக்குத் தெரியாது.

பெண்கள் அதிகம் இருக்கும் தளம் என்பதால் அந்தத் தளம் முழுவதுமே பல கலவையான ஊது வாசனை இருந்து கொண்டே இருக்கும்.

அப்படித்தான் ஒரு மதியவேளை… சிவாவும் ரபீக்கும் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு வலது புற, மலையாளி ஆபீஸ் பாஸ் இருக்கும் கிச்சனுக்குப் போக, பாகிஸ்தானி இடது புற, பெங்காலி இருக்கும் கிச்சனுக்குப் போனான். அப்போது அவர்கள் அருகில் இருக்கும் பெண் யாருக்கோ போன் செய்தபடி வராண்டாவில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்திருக்கிறாள்… அவள் பார்ப்பதற்கு ஹன்சிகா மோத்வானி போல கொழுக் மொழுக்கென்று இருப்பாள்… முன்னழகும் பின்னழகும் பார்ப்பவரை ஈர்க்கும்… பாகிஸ்தானி முன்னும் பின்னுமாய் போட்டோக்கள் எடுத்துத் தள்ள, அவளின் பார்வையில் அது பட்டுவிட, அவனைப் பிடித்து… கம்பெனிக்குத் தெரிவித்து… வேலையை விட்டே தூக்கி விட்டார்கள்…

அந்தப் பெண்ணின் அண்ணன் காவல்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறானாம்… அவள் நினைத்திருந்தால் அவனை உள்ளே தூக்கிப் போட்டிருக்கலாம்… ஏனோ போனை உடைத்து, அவனை வேலையை விட்டுத் தூக்கியதுடன் நிறுத்திக் கொண்டாள்.

அவனிடம் ஏன்டா இப்படிப் பண்ணினே எனச் சிவா கேட்டபோது மனைவிக்கு அதேபோல் புர்க்கா வாங்கத்தான் போட்டோ எடுத்தேன்… வேற தப்பான எண்ணமில்லை என்று சொல்லியிருக்கிறான். எதற்காக எடுத்தானோ அது இறைவனுக்கே வெளிச்சம்… அன்று நிகழ்ந்தவைகளை மனதில் கொண்டு யாரிடமும் கேட்காமல்... ஊது சம்பந்தமான உண்மைகளை மட்டும் எப்படியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இருந்தான் சிவா.

-பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-5-by-parivai-se-kumar&i=10733

Related Articles