வெளியிடப்பட்ட நேரம்: 23-Sep-2020 , 08:38 AM

கடைசி தொடர்பு: 23-Sep-2020 , 08:40 AM

கறுப்பி - பாகம் - 7

karuppi

ந்தக் காபி ஷாப்பில் அதிக கூட்டமில்லை.

இது போன்ற கடைகளில் ஒரு காபிக்கு இருபது முப்பது திர்ஹாம்... சில கடைகளில் ஐம்பது திர்ஹாம் கொடுத்தும் வாங்கிக் கொண்டு அலுவலகம் வருபவர்களைப் பார்த்திருக்கிறான்... அதுவும் அவன் அலுவலக லெபனானிகள் காலையில் இந்தக் காபியுடன்தான் வருவார்கள். சிவா மலையாளி அல்லது பெங்காலி கடைகளில் எப்போதேனும் கரக் சாய் சாப்பிடுவதுடன் சரி. இது போன்ற இடங்களுக்குத் தனித்துப் போவதில்லை... பெரும்பாலும் லீமாவின் அழைப்பின் பேரில்தான் இப்படியான காபிகளைக் குடித்திருக்கிறான்.

சூடாக காபியைக் குடித்தோமா போனோமா என்றிருக்க வேண்டும் அவனுக்கு... அதை விடுத்து கொஞ்சூண்டு காபியை வைத்துக் கொண்டு அரைமணி நேரம் உட்கார்ந்து பேசியபடி ஆறிப்போய் குடிப்பதில் அவனுக்கு எப்போதும் விருப்பமிருப்பதில்லை.

கடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரபிகளும் அரபிப் பசங்களும் பொண்ணுகளும் இருந்தார்கள். இண்டர்நெட் இலவசம் என்பதால் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இருபது ரூபாய் காபிக்கு ரெண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தாலும் அவன் ஒன்றும் சொல்லப் போவதில்லை. நம்மூரிலும் இது போன்ற கடைகள் வர ஆரம்பித்திருக்கின்றன... பெருமைக்கு எருமை மேய்க்கும் சிலர் அங்கு உட்கார்ந்து கடலை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான். இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னன்னா... ஏதோ சந்திரலோகத்துக்கே போனது போல் வெளியில் போவோரை ஒரு லுக் விடுவார்கள் பாருங்கள்... ஹா... ஹா... இந்தா இங்க காபியை வாங்கிக்கிட்டு அவனவன் பாட்டுக்கு லேப்டாப்பையோ மொபைலையோ அல்லது அருகிலிருக்கும் பெண்ணையோ நோண்டிக்கிட்டு இருக்கிறார்கள். எவனும் கண்டுக்கிறதில்லை... யாரும் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.

சிவாவும் லீமாவும் ஒரு ஓரமாக அமர்ந்தார்கள்.

“என்ன சாப்பிடுறே ச்சிவ்வா...?” என்றபடி சிவாவோடு செல்பி எடுத்து போனில் தன் கணவனுக்கு வாட்ஸ்அப் பண்ணினாள்.

“நீயே ஏதாச்சும் சொல்லு” என்றான்.

“ரெண்டு காப்பிச்சினோ...” என ஆர்டர் செய்துவிட்டு தன் மகனோட போட்டோவை சிவாவிடம் காட்டி, “செமையா சேட்டை பண்றானாம்...” என்றவள், ரெண்டு பேரும் செமை எஞ்சாய் போலன்னு அவள் கணவன் அனுப்பிய மெஜேஸைப் பார்த்துச் சிரித்து அவனிடமும் காட்டினாள்.

“ம்... இப்ப பசங்கள்லாம் அப்படித்தான்... அவர் எப்பவும் இப்படித்தானே கேட்பார்...” எனச் சிரித்தவன், “நீ என்ன வண்டியா ஓட்டுறே... என்ன ஸ்பீடு... ஆத்தி... இனி உன்னோட வரவே கூடாது...” என்றான்.

“நீ ஆயிரம் வாட்டி சொல்லிட்டே... இதெல்லாம் ஒரு ஸ்பீடா... ஒரு வீக்கென்ட் உங்கூட லாங்க் ட்ரைவ் போலாம்ன்னு பார்த்தா... நீ வரமாட்டேன்னு எஸ்கேப் ஆயிடுறே... மவனே என்னைக் காச்சும் மாட்டுவே... அன்னைக்கு இருக்குடி...”

“ஆத்தாடி... உங்கூட லாங்க் டிரைவ் வந்தா குடல் குந்தாணி எல்லாத்தையும் பாலைவனத்துல பிச்சி வீசிடுவே... ஆளை விடு தாயி நான் வரலை” கும்பிட்டான்.

லீமா சிரித்தாள்.

“நீ சொன்னது எனக்கு இன்னமும் மனசுக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கு ச்சிவ்வா... இங்க எப்படி... அதுவும் ஒரு சின்னக் கடைக்குள்ள... எப்படி இதெல்லாம்... இந்த நாட்டுலதான் நடக்குதா...? சட்டம் திட்டமெல்லாம் என்னாச்சு..? என்னால நம்பவே முடியலை...”

“எனக்கும்தான் முதல்ல ரொம்ப ஷாக்கா இருந்துச்சு... பட் நடக்குது... அதுவும் அந்த ஏரியாவுல நிறைய... சட்ட திட்டம்... ம்... அரசுக்குத் தெரியாம... சாதாரண உட்கா ஷாப் மாதிரி...”

“மறைமுகமா நடந்தாலும் அவங்க வயித்துப் பாட்டுக்காக இதையெல்லாமா செய்வாங்க...”

“வேற வழி... சிலர் இதுக்கு ஒத்துக்கிட்டுத்தான் வர்றாங்க... பலர் தெரியாம வந்து விழுந்துடுறாங்க... எங்க ஊருப் பொண்ணுங்க வீட்டு வேலைக்குன்னு வந்து பாலியல் தொழில்ல மாட்டிக்கிற மாதிரி... என்ன செய்ய... உலகம் முழுவதும் வறுமையும்... பசியும்... இருக்கத்தானே செய்யுது...”

“நீ இன்னைக்கு ரொம்ப அப்செட்டா இருந்தே... இப்பப் பரவாயில்லை... கொஞ்சம் மாறியிருக்கே... பட் எப்பவும் உள்ள ச்சிவ்வா மிஸ்ஸிங்க்....”

“ம்... நேற்றைய நிகழ்வுக்குப் பின்னால... அதுவும் அந்தக் கறுப்பியோட அழுகை கொடுத்த தாக்கத்துக்குப் பின்னால... என்னால நார்மலா இருக்க முடியலை லீமா... அவள் சொன்ன வார்த்தைகள் இன்னமும் என் பின்னே துரத்திக்கிட்டே இருக்கு... இப்பவும் நான் தனிச்சிருந்தா இந்த நாட்டுல எங்கிட்ட அழுத யமுனா... மலாமான்னு நினைப்பு ஓடிக்கிட்டே இருக்கு. அவங்க மட்டுமில்லை... அவங்களை மாதிரி எத்தனையோ பேர்... அழுதுக்கிட்டு இருக்காங்க... என்ன செய்ய... அவங்களோட வாழ்க்கையின் பக்கங்கள் வெறுமையாய் இல்லை... வலி நிறைந்தே இருக்கிறது...”

“ம்... எல்லா இடத்திலும் ஆண்களால் பெண்களுக்கு ஆபத்துத்தான்... வேலை செய்யிற இடம்ன்னு இல்லை... சமூக வலைத்தளங்கள்ல கூட எத்தனை விதமான பாலியல் அச்சுறுத்தல்கள்... என்னோட பிரண்ட் ஒருத்தி... பாலஸ்தீனி... பேஸ்புக் பிரண்டாகி ஆரம்பத்துல சாட்ல வந்து அவகூட பிரண்ட்டா பேசியிருக்கான்... பெரிய கம்பெனியில இன்சினியர்ன்னு சொல்லியிருக்கான். நாளாக நாளாக தினமும் பேச ஆரம்பிச்சிருக்கான். அப்புறம் போட்டோ கொடுன்னு சொல்லியிருக்கான்... இவளும் அனுப்பியிருக்கா... ஒரு நாள் உன்னோட அந்தரங்க போட்டோ வேணும்ன்னு கேட்டிருக்கான்.”

“செருப்பால அடிக்காத வாசி... எல்லா இடத்துலயும் இவனுங்க இருக்கானுங்க...”

“அவன் இந்தியந்தான்... உருது பேசுற முஸ்லீம்ன்னு சொல்லியிருக்கிறான்... அப்படின்னா என்ன...”

“அவனுங்க வீட்ல உருது மொழி பேசுவானுங்க... மத்தவங்க அவங்க மாநில மொழி பேசுவாங்க... உருது பேசுறவன்தான் நல்லவன்னு காட்டிக்கச் சொல்லியிருப்பான்... ப்ராடு ராஸ்கல்... எங்க ஊர்ல எங்களுக்குள்ள எந்தப் பிரிவினையும் இல்லை... நாங்க ஒரு தாய் மக்கள்தான்... சில விஷமிகள் இது மாதிரிக் கிளம்பி எல்லாருடைய பேரையும் கெடுக்குதுங்க...”

“இரு சொல்றதைக் கேளு... எங்கூட கார்ல வந்தியன்னா ஆண்கள் பெண்கள்கிட்ட பேசக் கூடாததையெல்லாம் பேசுவேன்... நான் ரசனையானவன்... வா தோழி ஒரு ரவுண்ட் போகலாம்ன்னு சொன்னானாம்...”

“ஹா...ஹா... ஒரு ரவுண்ட்... என்ன ரவுண்ட்டாம்...”

“வேற என்ன எல்லாம் இங்கதானே இருக்கு... ரசனையானவன்னு சொல்லியிருக்கான்... அப்பவே புரிஞ்சிக்க வேண்டாம்... ரசிச்சிச் செய்வான் போல...” என்றபடி அவளின் அந்தரங்கப் பகுதியைக் கைகாட்டினாள்.

“அவனுக்கு கல்யாணமாயிருச்சாமா...?”

“ம்... பொண்டாட்டி இங்கதான் இருக்காளாம்...”

“அடத் தேவடியாப்பய மவனே... பொண்டாட்டி இருக்கும் போது... அதுவும் இங்க இருக்கும் போது இவனுக்கு மற்ற பொண்ணுங்களைத் தேடுது... புடிச்சி இழுத்து வச்சி அறுத்து விடணும்... களவாணிப் பயல...”

“அறுத்தால்லாம் சரி வராது ச்சிவ்வா... இந்த மாதிரி ஆளுங்களை அம்மணமா பாலைவன மணல்ல... மதிய வெயில்ல மல்லாக்கப் படுக்க வைக்கணும்... அவனோட உறுப்பு காஞ்சு கருவாடாகணும்...”

“ஆமா... அதான் சரி... நேற்றைய நிகழ்வுக்கு காரணமானவனுக்கும் பொண்டாட்டி இங்கதான் இருக்கா... தினமும் அவ கூட இருக்கத்தான் போறான்... அப்புறம் இன்னொருத்தியையும் தேடுது பாரு... இதே அவன் பொண்டாட்டி தேடியிருந்தா... வேசியின்னு சொல்லி அடிச்சிருப்பான்...”
“என்ன ச்சிவ்வா நீ... ஒரே இடம் போரடிக்காதா... வித்தியாச வித்தியாசமா அனுபவிக்க வேண்டாமா...” என லீமா சொன்னபோது காப்பிச்சினோ வந்தது.

எடுத்து ஒரு வாய் குடித்து விட்டு “ஆமா... உன் தோழியோட பிரச்சினை எப்ப நடந்துச்சு... நீ சொல்லவே இல்லை...”

“நேற்றுத்தான்... அவனை வச்சிச் செஞ்சோம்... ஆளு அக்கவுண்டை டீ ஆக்டிவேட் பண்ணிட்டு ஓடிட்டான்... காலையிலயே உங்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன்... நீயும் மூட் அவுட்டா இருந்தியா... அப்புறம் வேலை அது இதுன்னு மறந்துட்டேன்... ஆமா எப்ப வெகேசன்ல போறே... நான் ஜூலையில போகலான்னு பார்க்கிறேன்...”

“ம்... நானுந்தான்... அப்பத்தான் போகணும்... லீவு கேட்டாத்தான் வேலையிருக்கு... அது இதுன்னு இழுப்பானுங்க... எப்பவும் போல சண்டை போட்டுத்தான் லீவு வாங்கணும்...”

“ஆமா... எனக்கு இந்த முறை ஒரு மாதம் முழுமையா வேணும்... குழந்தைங்களோட நேரம் செலவழிக்கணும்... சின்னவளுக்கு ரொம்ப ஏக்கம்... ஒரு மாதம் கொடுக்கலைன்னா ரிசைன் பண்ணிட்டுப் போயிருவேன்...”

“ரிசைன் பண்ணுறியா...?” அதிர்ச்சியாய்க் கேட்டான்.

“ஏன் அதிர்ச்சி ஆகுறே... அப்படியெல்லாம் போகமாட்டேன்... பட் தோணுன்னா போயிருவேன்... ஆனா உன்னோட பிரண்ட்ஷிப்பை எப்பவும் விட மாட்டேன்... இந்தியாவுக்கே உன்னைப் பார்க்க வருவேன்... இங்க நான் எல்லாம் பேசுற ஒரே ஆளு நீதான்... ஆமா உனக்கு ஏன் அந்த எண்ணமெல்லாம் வரலை...”

“எந்த எண்ணம்...?”

“அதான்... ஹாய் தோழி... போட்டோ அனுப்புங்க... ரசனையாப் பேசுவேன்.... அது...” சிரித்தாள்.

“ம்.. உங்கூட பழகுறவனுக்கு அதெல்லாம் வருங்கிறே...நெவர்...”

“ஏய் எருமை… நான் அழகியில்லையா…?” சிவாவைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டாள்.

அந்தப் பார்வை… அதன் வீரியம்… அவனுள் மலாமாவின் கண்களைத் திரையிட்டது.

து குறித்த உண்மையை அறியும் ஆவலில் இருந்தான் சிவா.

அந்த நாளும் வந்தது.

அலுவலகத்தில் கொஞ்சம் வேலை குறைவான ஒரு தினத்தில் டிரைவராக இருக்கும், அவனுடன் பாசமாகப் பழகும் மலப்புரம் முகமது குட்டியிடம், “குட்டிக்கா அரபிப் பொண்ணுங்க டிரஸுக்கு ஊது போடுவாங்களாமே உண்மையா..?” எனக் கேட்டான்.

“ஆமாம்” என்றவர் “ ஆமா… நீ எதுக்கு அதைக் கேக்குறே..? யாருக்கு வாங்கணும்...?” எனத் திருப்பிக் கேட்டார்.

“சும்மாதான்... துவைத்து... அயர்ன் பண்ணின புர்க்காவை ஹாங்கர்ல தொங்கவிட்டு அதன் அடியில தீக்கங்குகள் நிரப்பிய கிண்ணத்தில் சாம்பிராணி போன்ற ஊதை இட்டு வைப்பார்களாமே... அது உடை எங்கும் பரவுவதால்தான் அவர்கள் நம்மைக் கடக்கும் போது அவ்வளவு வாசனையாமே...” என்றான் மெல்ல.

“ஏய்… அது… அப்படியல்ல...” என்றவர் “அந்த ஊதுக்கு அவங்க ஸ்மோக்குன்னு சொல்லுவாங்க... புர்க்கா அணிந்த பின்னால தீக்கங்கு நிரம்பிய கிண்ணத்தில் ஊதை இட்டு ரெண்டு காலுக்கு இடையில் வைத்து கொஞ்ச நேரம் நிற்பார்கள் அது அப்படியே பரவி உடையிலும் உடலிலும் வாசனையை நிரப்பி விடும்... அதுதான் அவர்கள் நம்மைக் கடக்கும் போது அவ்வளவு வாசனை” என்றார்.

“ம்.. என்ன வாசனை… லீமா கூட அதைத்தானே யூஸ் பண்ணுது…” என்றான்.

“ஆமா அரபிப் பெண்ணுங்க எல்லாம் அப்படித்தான்… அந்த ஊதுவின் விலை ஆயிரக் கணக்கில் ஏன் கோடிகளிலும் உண்டு’ என்றார்.

ஊதுவின் விலை ஆயிரம் திர்ஹாமுக்கு மேலிருக்கும். அதனால்தான் அவர்கள் நம்மைக் கடந்து செல்லும் போது அழகிய வாசனை நம்மை சுற்றிக் கொள்கிறது என்பதை பலர் சொல்ல அவனும் கேட்டிருக்கிறான் என்றாலும் கோடி என்றதும் சிரித்தான்.

“ஏய் சிவா... அது சத்தியம்... இரு உனக்கு காட்டுறேன் என மொபைலில் ஒரு வீடியோவை ஓட விட்டார்... சிறிய பாட்டில் போல் இருந்த ஒன்றை வைத்து அதன் விலை ஒன்பது கோடி எனவும் பனிரெண்டு மணி நேரம் வாசனை நிற்கும் எனவும் சொல்லிக் கொண்டிருந்தான் ஒருவன்... அவன் சொன்ன விலை சிவாவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

“என்ன குட்டிக்கா... ஒன்பது கோடியா...?” என ஆச்சர்யமாகக் கேட்டான்.

-பரிவை சே. குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-5-by-parivai-se-kumar-2&i=10744

Related Articles