வெளியிடப்பட்ட நேரம்: 13-May-2019 , 08:25 AM

கடைசி தொடர்பு: 13-May-2019 , 08:25 AM

கொள்ளை போகும் குடிநீர்

images (2)

சென்னையை அடுத்த வண்டலூர் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து தினமும் 1000 லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதால் வண்டலூர், மண்ணிவாக்கம், ஆதனூர் ஆகிய பகுதி வீடுகளில் உள்ள ஆழ்துளைக்குழாய் கிணறுகள் நீர் இல்லாமல் வறண்டு உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளான பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, வண்டலூர், ஓட்டேரி, மண்ணிவாக்கம், ஆதனூர், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாலாறு குடிநீர் திட்டத்தின்கீழ் பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வந்த குடிநீர், ஆலந்தூர் - பல்லாவரம், தாம்பரம் - சிட்லபாக்கம் குடிநீர் திட்டம் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி 30 ஆண்டுகளாக முழுக்க கிணறுகள், ஆழ்துளைக் குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் எவ்விதத் திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் மூலம் இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படவில்லை. தற்போது அனைத்து ஏரிகளும் வறண்டு போயுள்ள நிலையில், அவற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைக் கிடங்குகளாக காட்சியளிக்கின்றன.
வண்டலூர் ஏரி, தண்ணீர் இல்லாமல் வறண்டு காய்ந்து கிடக்கிறது. அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவது வண்டலூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இது குறித்து வண்டலூர் நகர் நலச் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: வண்டலூர் பெரிய ஏரி முற்றிலும் வறண்ட நிலையில் வீடுகளில் உள்ள ஆழ்துளைக் குழாய் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து 300 அடிக்கும் கீழ் சென்று விட்டது. பெரும்பாலானவை வறண்டு விட்டன.
வண்டலூர் விவசாயக் கிணறுகளில் முறைகேடாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வது தான் ஆழ்துளைக் கிணறுகள் வறட்சிக்குக் காரணம் என்பதை உணர்ந்த நாங்கள், முறைகேடாக லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தோம்.
ஓட்டேரி காவல் ஆய்வாளர் முறைகேடாக தண்ணீர் எடுத்த லாரிகளைக் கைப்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆனால், அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் காவல்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள முடிய வில்லை. கைப்பற்றப்பட்ட லாரிகளை விடுவித்ததுடன் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர் என்றனர்.
எம்எல்ஏ விளக்கம்: இது குறித்து தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் கேட்டபோது, "எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நான் தலையிட்டதாகக் கூறப்படுவது தவறு. நானோ, எனது உறவினர்களோ லாரிகளில் தண்ணீர் விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. என் பெயரை தவறாக பயன்படுத்திய நபர்கள் மீது புகார் கொடுக்கத் தயாராக உள்ளேன்' என்றார் அவர்.
வண்டலூர், மண்ணிவாக்கம் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த நகர் நலச் சங்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, "வண்டலூர் விவசாயக் கிணறுகளில் இருந்து லாரிகளில் ஆயிரக்கணக்கான லோடு தண்ணீர் எடுத்துச் செல்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்' என்றனர்.

Related Articles