வெளியிடப்பட்ட நேரம்: 11-Sep-2020 , 08:53 AM

கடைசி தொடர்பு: 11-Sep-2020 , 08:53 AM

மாணவர் விக்னேஷ் உடல் அடக்கம்

student vignesh

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவர் விக்னேஷின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(19). 2017-18-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற இவர், ஏற்கெனவே 2 முறை நீட் தேர்வை எழுதி, குறைந்த மதிப்பெண்களையே பெற்றவர்.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. செந்துறை போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, விக்னேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், “ஏற்கெனவே 2 முறை நீட் தேர்வெழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால், தற்பொழுது எழுதவுள்ள தேர்விலும் மதிப்பெண் குறைவாக பெற்றுவிடுவோமா என்ற அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்” என விக்னேஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், நீட் தேர்வு மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக செந்துறை போலீஸார், நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாணவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பை தொடர்ந்து மாணவரின் உடலை பெற்றுக்கொண்டனர். மாணவர்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சொந்த ஊரில் மாணவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மாணவரின் குடும்பத்திற்கு திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி மாணவரின் தந்தையை சந்தித்து 5லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கியதுடன் ஆறுதலும் கூறினார்.

பாமக சார்பில் 10லட்சம் ரூபாய் மாணவரின் குடும்பத்திற்கு தரப்படுமென அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Articles