வெளியிடப்பட்ட நேரம்: 18-Jul-2019 , 06:57 PM

கடைசி தொடர்பு: 18-Jul-2019 , 06:57 PM

400 கோடி சொத்து முடக்கம்

bsp

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புகொண்ட நொய்டாவில் உள்ள 7 ஏக்கர் நிலத்தினை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

டெல்லியில் உள்ள வருமான வரித்துறையின் பினாமி சொத்துகள் தடுப்பு பிரிவினர் நொய்டா பகுதியில் உள்ள 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளனர். இது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவி விசித்தர் லதாவின் பினாமி சொத்தாகும்.

1988 பினாமி சொத்துகள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவராக ஆனந்த் குமாரை கடந்த ஜூனில் தான் மாயாவதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாமி தடுப்பு சட்டத்தின்படி முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், சொத்தின் மதிப்பில் 25% அபராதமாகவும் விதிக்கப்படலாம்.

கடந்த 2007ல் மாயாவதி உத்தரப்பிரதேச முதல்வராக பதவியில் இருந்த காலகட்டத்தில் ஆனந்த்குமார் சுமார் 49 நிறுவனங்களை தொடங்கியதாகவும், 2014 இறுதிவாக்கில் அவரது சொத்து மதிப்பு 1,316 கோடியாக அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னதாக ஆனந்த்குமாரின் வங்கிக் கணக்கில் 1.43 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாக வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து அது குறித்தும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles