வெளியிடப்பட்ட நேரம்: 02-Mar-2017 , 06:12 AM

கடைசி தொடர்பு: 02-Mar-2017 , 06:12 AM

அக்னிச் சுடர்கள் - புத்தக விமர்சனம்

akni-sudar

தஞ்சையில் கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் போது தோழர் சிராஜ் என்னிடம் இந்த நூல் பற்றி பேசினார். மிக அற்புதமாக வந்துள்ளது. பயனுள்ளதாகவும் இருக்கும் என சொன்னார். இதற்குப் பிறகு மாதங்கள் நான்கு ஓடிய நிலையில் நூலின் பிரதியையும் எனக்கு அனுப்பினார். படித்தேன். சிராஜ் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்.


இந்தத் தலைமுறை குறிப்பாக அதுவும் இளம்வயதினர் இந்நூலை வாசிப்பது அவசியம். அதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டேப் போகலாம். ஆனாலும் என் சிந்தனையில் முதலில் தோன்றியது கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு எனும் முதுமொழி தான். எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்பது இப்புத்தகம் படித்தவுடன் ஏற்பட்டது.


இந்திய அறிவியல் வரலாறு மற்றும் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள், வித்திட்டவர்கள் எனும் இந்த ஆளுமைகளைப் பற்றிய சிறு சிறு தகவல்கள். ஆனால் அவை சொல்லும் சேதி அற்புதமானது.


நாற்பது விஞ்ஞானிகளைப் பற்றிய சுவையான, தேவையான தகவல்களை அவர்களின் வெற்றிக்குக் காரணிகளாக அமைந்த பின்னணிகள், தங்களின் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை, புதிய தரவுகளை பதிவாக்கிட மக்களின் தேவைக்காக மாற்றி அமைத்ததில் செய்த பங்களிப்பு என்று 256 பக்கங்களில்  நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தமிழகம் தந்துள்ள சிறப்பு மிக்க விஞ்ஞானிகளில் ஒருவரான த.வி.வெங்கடேஸ்வரன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது நல்ல துவக்கம்.


பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் தலைமை இடமாகத் திகழ்ந்துள்ளது நமது தேசம். பொதுவாக இந்தியாவின் சுதந்திரத்தைப் படித்தவர்கள் விஞ்ஞானத்திற்கான அடித்தளம் மற்றும் சரித்திரத்தைப் பெரிதும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். அந்த இடைவெளியை இந்தப் புத்தகம் சிறிது குறைத்துள்ளது. அறிவியல் சரித்திரத்தைப் பற்றிய களஞ்சியங்களில் இதுவும் ஒன்று.


அட்ரசீம் கம்சட்ஜி துவங்கி பக்கத்துக்குப் பக்கம் புதுத் தகவல்களின் பட்டியல் விரிகின்றது. நயன் சிங் ராவத் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் எல்லைகளை வரையறுக்க வைக்க ஆகப் பெரும் சவாலான பணியினை எப்படிச் செய்தார் என்று படிக்கும் போது மனம் நெகிழ்கின்றது. ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக அந்நாட்களில் எவ்வளவு குறைவான சம்பளத்தில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிச் செய்த பணி மெய்சிலிர்க்க வைக்கின்றது.


வங்கம் இந்தியாவின் சிறப்பு மிக்க ஆளுமைகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். அறிவியல் துறையிலும் ஜெகதீஸ் சந்திர போஸ், பி.சி.ரே எனப் பெயர்கள் விரியும். குறிப்பாக இவர்கள் இருவரைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளாமல் போனால் எதிர்காலம் நம்மை கேலியாகப் பார்க்கும்.


மருத்துவத் துறையில், இந்தியாவில் நிறுவனங்கள் துவக்கப்பட்டதே ஒரு நீண்ட நெடிய வரலாறு. அந்த வரலாற்றுக்கு வித்திட்டவர் பி.சி.ரே என்றால் மிகையாகாது. அன்று அவர் முயற்சி  எடுத்து உருவாக்கிய நிறுவனம் இன்றும் எப்படி நம் நாட்டு மக்களுக்கு உதவுகின்றது என்பதை நினைக்கும் போது நெகிழ்ச்சியாக உள்ளது.


டி.டி.கோசாம்பி எனும் பெயரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்கு வரலாற்று ஆய்வு எழுத்தாளர் எனும் பிம்பம் மட்டும் தான் தெரிய வரும். இந்நூலில் அவரின் வேறொரு முகத்தை, பரிமாணத்தை, அறிவியலுக்காக அவர் அளித்துள்ள பங்களிப்பை உள்வாங்க முடிகின்றது.


ஹோமிபாபா என்ற மகத்தான விஞ்ஞானி நம் நாட்டில் பிறக்காமல் போயிருந்தால்… இன்று “மங்கள்யான்“ போன்ற சாதனைகள் நிகழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான். அவர் உருவாக்கிய அணு ஆராய்ச்சி நிலையம் அதன் மூலம் இந்தியாவிற்கு உலக அறிவியல், விஞ்ஞான தளத்தில் கிடைத்திருக்கும் நற்பெயர் என எண்ணத் துவங்கும்போது, மகத்தான அவ்விஞ்ஞானியின் உழைப்பு, அர்ப்பணிப்பு கண்முன் விரிகின்றது. அவரைப் பற்றி எழுதும் இந்நேரத்தில் தான் பத்திரிகைகளில் அவர் வாழ்ந்த இல்லம் (மும்பை) ரூ.372 கோடிக்கு விற்கப்பட்ட செய்தி வந்திருந்தது. எவ்வளவு பெரிய பொக்கிஷம்!


நம் நாடு இன்று வான்வெளி ஆய்வில் ஒரு பெரும் பங்காற்றுவதற்கு அவரும் ஒரு அடித்தளம். இவரைப் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிய வேண்டாமா?


பி.கே.சேத்தி எனும் மகத்தானவரைப் பற்றியும் அவரோடு இணைந்து பணியாற்றிய குழுவைப் பற்றியும்  நாம் தெரிந்து கொள்ளாமல் போனால்….


பல்வேறு விபத்துக்களால் உடல் உறுப்புகளை குறிப்பாக கால்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அவர் தான் கால். சேத்தியின் தொடர் முயற்சி இல்லாமல் போயிருந்தால் என்னவாகும் நிலை? உறுப்பை இழந்தவர்களுக்கு அவரின் கண்டுபிடிப்புதான் வாழ்வொளியே!


கமலா சொஷானி, அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அவரின் வாழ்வு, முன்னேற்றம் சாதனை அனைவரும் படிக்க வேண்டியது.


தன்னை ஆராய்ச்சி மாணவராக இணைத்துக் கொள்வதற்கு தயங்கிய/ஏற்க மறுத்த ஒரு ஆகப் பெரும் விஞ்ஞானியைப் ( யாரவர்..புத்தகம் படிக்கவும்) பணிய வைக்க அவர் நடத்திய சத்தியாக்கிரகம்….ஆஹா போராளி அவர்.


பறவைகள் என்றாலே அனைவருக்கும் தெரிந்தவர் சலீம் அலி. ஆனால் அவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?  ஒவ்வொரு பறவையைப் பற்றிய ஆய்வுக்காக செலவு செய்த மணிநேரங்கள் எவ்வளவு? இன்று அந்த இனம் பற்றிய ஓர் புதிய புரிதலை உருவாக்கியவர் பற்றி தெரிந்து கொள்ள….


டி.ஆர்.சேஷாத்ரி, விக்ரம் சாராபாய், சுப்ரமணியன் சந்திர சேகர், எம்.கே.வைனு பாப்பு எனும் விஞ்ஞானிகள் பற்றி படிக்கப் படிக்க நம் நாட்டின் மீதான பற்றும், உணர்வும் அதிகமாகின்றது.


அடித்தட்டு மக்களில் ஒருவராகப் பிறந்த மேக்நாத் சஹா போன்றோரின் வரலாறு இன்றைய வளரும் தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு.


பொதுவாக அரசியல், அது சார்ந்தவர்களைப் பற்றிய சரித்திரம் வலுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகப் பெரும்பான்மைச் சமூகம் அதையே படிக்கின்றது. அது தவறில்லை. அதுவும் தேவை தான். அதே சமயம், மனித சமூகத்தின் ஒவ்வொரு படி நிலை வளர்ச்சிக்கும் ஆதாரமாய் இருக்கும் அறிவியலைப் பற்றி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், அதனை உருவாக்கியவர்கள் பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்கின்றோம். இன்றுள்ள உலக வழக்கில் அறிவியல் மற்றும் அதன் சார்ந்த விஷயங்களைக் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு இந்நூல் பெரிதும் உதவி செய்யும்.


விஞ்ஞானிகள், அவர் தம் வாழ்க்கை அனுபவங்கள் இன்று திரைப்படங்களாக வரத் துவங்கியுள்ளன. அது ஒன்றிரண்டு தான் வரும். இச்சமூகம் முழுமையாக ரசித்திட, உள்வாங்கிக் கொள்ள இது போன்ற நூல்களால் தான் முடியும்.


ஆங்கிலத்தில் அரவிந்த் குப்தா எழுதிய இந்நூலை விழியன் மிக நேர்த்தியாக,எளிமையாக மொழிபெயர்த்துள்ளார். சொல்லப் போனால், இது மொழியாக்கம் செய்யப் பட்ட நூலைப் போலவே இல்லை. அந்தளவுக்கு படிக்கும்போது ஒன்றிணைப்பு ஏற்படுகின்றது.


அக்கினி சுடர்கள்     மூலம் : அரவிந்த் குப்தா  தமிழில்:  விழியன்                                     வெளியீடு : பாரதி புத்தகாலயம்   விலை : ரூ.160/-


-என். சிவகுரு

Related Articles