வெளியிடப்பட்ட நேரம்: 14-Jun-2020 , 05:57 AM

கடைசி தொடர்பு: 14-Jun-2020 , 05:59 AM

அமீரக-கத்தார் வாசகர் வட்டம் - புத்தக அறிமுக கூட்டம்

Screenshot_20200614-055619

சகோதர் நந்தா அவர்களின் முன்னெடுப்பில் அமீரக பறம்பு வாசகர் வட்டம் மற்றும் கத்தார் கீழடி வாசகர் வட்டம் சார்பாக இன்று நடைபெற்ற காணொளி கலந்துரையாடல் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சசி அண்ணன் மற்றும் எனது புத்தகம் பற்றிய அறிமுகப் பார்வை இருந்தாலும் திரு. களப்பிரன் அவர்களின் தஞ்சையில் மூடிக்கிடக்கும் ஆவணங்கள் என்ற தலைப்பிலான 'மோடி' ஆவணங்கள் குறித்த பேச்சு மிகவும் சிறப்பு. நேரம் கருதி அவர் முடித்துக் கொள்ள வேண்டி இருந்தாலும் அதன் பின்னான கேள்வி நேரத்தில் நிறையக் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்வு தொடங்கிய உடன் சசி அண்ணனின் 'மெல்லச் சிறகசைத்து' என்னும் பயண நூலைக் குறித்து துபையில் இருக்கும் திருமுருகன் மிக அருமையாகப் பேசினார். புத்தக ஆசிரியர் பயணம் செய்தது, அங்கு பார்த்தவை, கேட்டவை, ரசித்தவை என எல்லாவற்றையும் விரிவாகப் பேசினார். எழுத்தாளர் அறிமுகமும் கூட விரிவாகத்தான் இருந்தது.

இதற்கு ஏற்புரை வழங்கிய சசி அண்ணனின் பேச்சு எப்பவும் போல் அருமை... எழுத்தாளர் அறிமுகம் என்பது இவ்வளவு தேவையில்லை என்றும் நான் அறிமுகத்தை விரும்புவதில்லை என்றும் சொன்னார். பயணங்களின் போது குறிப்பெடுத்துக் கொள்வதில்லை தம்பி நித்யாவைப் போல் பார்த்தவை, கேட்டவை எல்லாம் ஒரு வாரம் கழித்து உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் போது அப்படியே மனக்கண்ணில் வரும் என்றும் சொன்னார். சிறப்பான பேச்சாக அவரின் பேச்சு இருந்தது.

அடுத்ததாக எதிர்சேவை குறித்து தங்கை சுடர்விழி பேசினார். ஒவ்வொரு கதையையும் அவர் சொன்ன விதமும் அதைப் புரிந்து கொண்டு விதமும் உண்மையில் சிறப்பு. விமர்சனமாகக் கூட இதையெல்லாம் அவர் எழுதலையே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஒவ்வொரு கதையையும் அது சொல்லிச் செல்வதென்ன... நம்மிடம் விட்டுச் செல்வதென்ன என அலசி ஆராய்ந்து பேசினார். மொத்தமாய் விரிவான பார்வை... விளக்கமான பார்வையும் கூட.

ஏற்புரை குமார் என்றதுமே நமக்கு நாக்கு வறண்டிருச்சு... நினைவின் ஆணிவேர் குறித்து எழுத்தாளர் வாமு கோமு சொன்னதை சொல்லிடலாம்... வீராப்பு கதை ரியாத் தமிழ்ச் சங்க சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது... அதுல வர்ற வீரய்யா இருக்காரே அப்படின்னு ஏதாவது பேசிடலாமுன்னு முடிவு பண்ணி வச்சிருந்தா, போற போக்குல சுடர்விழி அதையும் சொல்லியாச்சு. அப்புறம் என்ன முதல் பேச்சுத்தானே எனக்கு கோர்வையா பேச வராதுய்யான்னு சொல்லிட்டு கொஞ்சமாய் பேசிவிட்டு முடித்துக் கொண்டேன்... இருப்பினும் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

நிகழ்வில் கலந்து கொண்ட கலக்கல் ட்ரீம்ஸ் தசரதனைப் பேசச் சொன்னோம்... அவர் பேசியது உண்மையில் மகிழ்வாக இருந்தது. அவர் புத்தகத்தால் நஷ்டமடைந்தேனா லாபம் அடைந்தேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது... அது தேவையுமில்லை... பிரபு சொல்லி கதைகளை வாங்கிப் படித்தபோது பிடித்திருந்தது. ஒரு புதிய எழுத்தாளனை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதாலேயே புத்தகமாக்கினேன் என்றார். கொரோனா இல்லை என்றால் இந்நேரம் அடுத்த புத்தகம் கொண்டு வந்திருப்பேன். கொரோனாவால் தள்ளிப் போனாலும் அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு முன்னர் கொண்டு வருவேன் என்றார். உண்மையில் அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி சகோதரா.

அடுத்து களபிரன் களமிறங்கினார்... தஞ்சைக்குள் எல்லாரையும் இழுத்துப் போனார்... எத்தனை விபரங்கள்... எவ்வளவு விளக்கங்கள்... எப்படி இப்படி மடை திறந்த வெள்ளம் போல் இரண்டு மணி நேரங்கள் ஒரு மனிதனால் பேச முடிகிறது. அதுவும் எல்லாமே தகவல்களும் தரவுகளுமாய்... நகைச்சுவை என்பது கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு பேச்சால் பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியும் என்பதை இன்று உணர முடிந்தது.

தஞ்சையில் மராட்டியர்கள் வருகையில் ஆரம்பித்து வெள்ளையர்கள், டச்சுக்காரர்கள் எனப் பயணித்து நூற்றம்பது ஆண்டுகள், பதிமூன்று மராட்டிய மன்னர்கள் என்பதையெல்லாம் சொல்லி மங்களவிலாசம், கல்யாண மஹால் பற்றி எல்லாம் விரிவாகப் பேசினார்.

மோடி ஆவணங்கள் மொத்தம் 1760 மூட்டைகளாக கட்டப்பட்டன என்றும் அதில் 400 மூட்டைகளை A என்றும் 400 மூட்டைகளை B என்றும் மீதமிருந்த 960 மூட்டைகளை C என்றும் பிரித்ததாகவும் A,B-யை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென சென்னை ஆவணக்காப்பகத்தில் வைத்துக் கொண்டு C-யை அழித்துவிட முடிவு செய்த போது தஞ்சை மக்கள் அழிப்பதை எங்களுக்குக் கொடுங்கள் என்று வாங்கி சரஸ்வதி மஹாலில் வைத்துக் கொண்டதாகச் சொன்னார். இந்த C-யில் இருந்து 250க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதில் கிடைத்த தகவல்களே இவையெல்லாம் எனவும் வேண்டாமெனச் சொன்னதிலேயே இவ்வளவு கிடைத்திருக்கிறதென்றால் வேண்டுமென வைத்திருக்கும் 800 ஆவணங்களை ஆய்வு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்றார்.

சரஸ்வதி மஹால் உலகில் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டாவது பழமையான நூலகம் என்றார். முதலாவது நூலகம் வாடிகன் நூலகம் என்றும் சொன்னார். சரஸ்வதி மஹாலை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அதாவது 1978-ல் இந்திராகாந்தி மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் எனச் சொன்னபோது பராமரிப்புச் செலவுகளை மத்திய அரசும் ஆட்களை வேலைக்கு வைத்தல் மற்ற பணிகளை மாநில அரசும் செய்யும் என ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாகச் சொன்னார்.

இன்னும் நிறையப் பேசினார்... பெண்களை விலைக்கு விற்பது... பனிரெண்டு வயசுப் பிள்ளைகளை விலைக்கு வாங்கி அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ளுதல் என்பதையெல்லாம் ஆதார ஆவணத்தில் இருந்து வாசித்தே காட்டினார். அப்போது இருந்த சாதீய ஏற்றத்தாழ்வுகள், படிப்பு, பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்தது என எல்லாமே பேசினார்.

யானைகளை எப்படிப் பேணிக்காக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கஜசாஸ்திரம் என்னும் நூல் சரஸ்வதி மஹாலில் இருப்பதாய் சொன்னார். சரஸ்வதி மஹாலில் 25000 ஓலைச்சுவடிகளும் 24000 காகிதச் சுவடிகளும் இருந்ததாய்ச் சொன்னார்.

மொத்தத்தில் மிக விரிவான பார்வை... கேள்வி கேட்டவர்களுக்கு எல்லாம் விரிவாகப் பதில் சொன்னார். கேள்வி கேட்டவர்களும் மூன்று, ஐந்து என மொத்தம் மொத்தமாய்க் கேள்வி கேட்டார்கள்.

மூவாயிரம் பேர் நடந்தே காசிக்குச் சென்றதாக அவர் சொன்னதை வைத்து பால்கரசு மூவாயிரம் பேரும் ஒரே நேரத்தில் போனார்களா என்று கேட்டார். அவரும் அதற்கு விளக்கம் கொடுத்தார்.

அவர் சொன்ன ஆவணம் இணையத்தில் கிடைக்கிறது எனவும் படிக்க வேண்டிய நூல் அது எனவும் நெருடா சொன்னார். அசோக் அண்ணன் அவருடன் நிறைய விஷயங்கள் பேசினார்.

எனது பேராசான் தன் வீட்டில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தங்கை மணிமேகலை மூலமாக காரைக்குடியில் இருந்து எதிர்சேவை குறித்த முழுப் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரையும் பேச வைத்துவிட வேண்டும் என நினைத்திருக்கும் போது அது முடியாமல் போக, இறுதியில் மணிமேகலை பேசினார். எப்பவும் சொல்வது போல் குமார் எங்க வீட்டுப் பிள்ளை எனச் சொல்லாமல் சொல்லிச் சென்றார். எப்படியோ நம் வீட்டில் இருந்து ஒருவர் பேசியாச்சு... ஐயா எதிர்சேவை குறித்த பேச்சைக் கேட்டாச்சு... இது போதுமே இன்னும் எழுத....

நன்றியுரை கூறிய நண்பர் அபிராமன் அழகாகப் பேசினார். ஜீவநதி கதை தன் வாழ்வில் நிகழ்ந்ததைச் சொன்னது போல் இருந்தது என்றார்.மகிழ்ச்சி நண்பா.

மிகவும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்ததில் மகிழ்ச்சி.

நல்ல நிகழ்வு சகோ என்னோட வாழ்த்துகளையும் நன்றியையும் பிரபுக்கும் நந்தாவுக்கும் சொல்லிவிடுங்கள் என்று தசரதன் குறுஞ்செய்தி அனுப்பினார்.

கல்லூரிக் காலம் முதல் இன்று வரை அதே நட்போடு பயணிக்கும், என் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட என் நண்பர் டொமினிக்கிற்கும் நன்றி.

விழாவை முன்னெடுத்த நந்தா அண்ணாவுக்கு நன்றி.

கலந்து கொண்ட நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

Related Articles