வெளியிடப்பட்ட நேரம்: 25-Aug-2020 , 07:58 AM

கடைசி தொடர்பு: 25-Aug-2020 , 07:58 AM

அஸ்வத்தாமன் - பாகம் - 1

images

மகாபாரதத்தில் வெல்ல முடியாத வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் மரணமில்லாத வீரர்கள் யாருமே கிடையாது ஒருவரைத்தவிர... அவர்தான் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமன் (துரோணரைப்பற்றி அடுத்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்).

பரசுராமரின் சீடனும், பரத்வாஜ முனிவரின் புதல்வனுமான துரோணருக்கும் கொளதம மகரிஷியின் பேத்தியும், முனிவர் ஷரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் புத்திர பாக்கியம் இல்லை. சிவனை நோக்கி கடும் தவம் புரிகிறார் துரோணர். அவருடைய தவத்தால் மகிழ்ந்து அவர் முன் தோன்றும் ஈசன் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்க "அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வனாக நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்கிறார்.

அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை சாகா வரம் பெற்ற மனிதனாக துவாபர யுகத்தில் தனது ருத்ர அவதாரத்தை எடுக்கிறார் எல்லாம் வல்ல ஈசன். குதிரையைப் போல் கனைக்கும் திறன் பெற்றதால் "அஸ்வத்தாமன்" என்று பெயர் சூட்டப்படுகிறார். மிகவும் ஏழ்மையில் வாழ்ந்த துரோணரை அஸ்திணாபுரத்தின் இளவரசர்களுக்கு குருவாக நியமிக்கிறார் பீஷ்மர்.

பாண்டவர், கொளரவர்களோடு அஸ்வத்தாமனும் அரிய வித்தைகளை துரோணரிடம் இருந்து கற்றுக் கொள்கிறார். அது மட்டுமின்றி தன் தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் வேதங்களையும், தன் தாய் மாமன் கிருபாச்சாரியாரிடம் போரின் வியூக நுணுக்கங்களையும், ஷத்ரிய குலத்தின் சிம்ம சொப்பனம் பரசுராமரிடம் மொத்த ஆயுத அறிவையும் கற்றுக் கொள்கிறார்.

ஈசனுக்கு நெற்றிக்கண் போல இவர் நெற்றியில் ஒரு ரத்திணக்கல் உண்டு, அது இருக்கும் வரை தேவர், கந்தர்வர், மனிதர், அரக்கர், ரிஷிகள், யட்சர்கள், மிருகங்கள் என எந்த உயிரினமோ அல்லது எந்த திவ்ய அஸ்திரமோ அஸ்வத்தாமனை கொல்ல முடியாது.

தன் தந்தை குரு துரோணர் அர்ஜீணன் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதை அவரால் தாங்க முடியவில்லை, அவரை பாண்டவர்கள் ஏளனம் செய்யும் போதெல்லாம் துரியோதணன் அவருக்கு துணை நின்றான். அதுவே துரியோதணனுக்கு அவரை நெருக்கமான நண்பனாக மாற்றியது.

பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது தன் சிறு வயது நண்பன் பகவான் கிருஷ்ணனை பார்க்கச் செல்கிறார் அஸ்வத்தாமன், அவரை வரவேற்ற கிருஷ்ணன் "என்ன வேண்டும் கேள் நண்பனே?" என்று கேட்க "தங்களுடைய சுதர்சணச் சக்கரத்தை எனக்கு தானமாக தர வேண்டும்" என்று கேட்கிறார். சிரித்தவாரே "எடுத்துக்கொள்" என கிருஷ்ணர் சொல்ல, ஆவல் கொண்டு அதை எடுக்கிறார் அஸ்வத்தாமன் ஆனால் அவரால் அதை அசைக்க கூட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் அதை நகர்த்தக்கூட முடியவில்லை, அஸ்வத்தாமனின் முயற்சியைக் கண்ட பகவான் "எதற்காக உனக்கு இது தேவை நண்பனே?" என்று கேட்க "இன்னும் சிறிது காலத்தில் பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் போர் நடக்கும், அதில் நான் துரியோதணனை காக்க வேண்டும், பகவானாகிய நீங்கள் பாண்டவர்களுக்கு துணை நிற்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும், நீங்கள் இருக்கும் வரை அவர்களை வெல்லமுடியாது என்பதும் எனக்கு தெரியும். ஆகவே கிருஷ்ணா உம்மை வதைக்கவே உமது சுதர்சணம் எனக்கு வேண்டும்" என்று சொல்ல, மெய்சிலிர்த்து போகிறார் பகவான் பரந்தாமன்.

"உன் நட்பின் இலக்கணம் கண்டு நான் வியக்கிறேன் அஸ்வத்தாமா, சுதர்சனம் கொண்டு என்னை கொல்ல இயலாது. ஆனால் போரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் அழித்து உன் நண்பனைக் காப்பாற்ற என்னுடைய அஸ்திரமான நாராயண அஸ்திரத்தை உனக்கு வரமாகத் தருகிறேன்" என்று வரமளிக்கிறார் பரந்தாமன்.

தன் தந்தை துரோணாச்சாரியார் மூலம் ஈடு இணையற்ற அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தின் மந்திரத்தை கற்றுக் கொள்கிறார்.

அதுமட்டுமின்றி தன் தவ வலிமையால் அதர்வண வேத மந்திரங்களை உருவேற்றி காளி தேவிக்கு சமர்பணம் செய்து அந்த வேதத்தின் வித்தகனாக விளங்கினார். அஸ்வத்தாமனின் பக்தியால் அவர் முன் பிரசன்னம் செய்யும் அன்னை காளிதேவி மூவுலகையும் அழிக்கும் பாசுபதாஸ்திரத்தை வரமாக அளிக்கிறாள்.(பாசுபதாஸ்த்திரம் - எல்லாம் வல்ல பரமேஸ்வரனின் திரிசூலத்தின் சக்திக்கு சமமானது. மிகுந்த அழிவை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். ராமாயணத்தில் இராவணனின் மைந்தன் மேகனாதன், மகாபாரதத்தில் அர்ஜீணன், அஸ்வத்தாமன் ஆகிய மூவர் மட்டுமே இந்த ஆயுதத்தின் ஞானம் பெற்றவராவர்) மற்ற அஸ்திரங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது, தன்னை விட பலம் அதிகம் கொண்ட எதிரியின் மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். தர்மத்தின் பக்கம் நிற்பவனால் மட்டுமே இதை விடுவிக்க இயலும்).

பிரம்மாஸ்த்திரம் கற்றவன் மனிதரில் சிறந்தவன், நாராயண அஸ்திரம் தெரிந்தவன், தேவர்களுக்கு சமமானவன், பாசுபதம் கற்றவன் தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவனாவான். மாவீரன் அஸ்வத்தாமன் துவாபர யுகத்தில் இந்த மூன்றையும் கற்ற ஒரே வீரராவார்.

- "கரிஸ்மா" சுதாகர்

Related Articles