வெளியிடப்பட்ட நேரம்: 08-Aug-2020 , 08:29 AM

கடைசி தொடர்பு: 08-Aug-2020 , 08:29 AM

பெரிய விமான விபத்துகள் - காரணமும் காலமும்

plane crash

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.


விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக் கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய பயணிகள் அனைவரும் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கனமழை காரணமாக ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பை கொண்டது.


விமான ஓடுதளம் உயரமான மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதை டேபிள் டாப் ரன்வே இவ்வாறு அழைப்பார்கள். கேரளாவில் உள்ள ஒரே டேபிள்டாப் ரன்வே கோழிக்கோடு விமான நிலையம் ஆகும்.


இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் ஆகும். ஆனால் பொதுவாக 3 ஆயிரத்து 150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்தால் அதில் விமானத்தை தரையிறக்குவது சற்று கடிமான ஒன்றாகும்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள் குறித்த தகவலை காண்போம்:-


எத்தியோப்பிய விமான விபத்து - ஜனவரி 2010:-


2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி லெபனான் நாட்டின் கடற்கரை நகரமான பெய்ரூட்டில் இருந்து எத்தியோப்பிய நாட்டின் அடிஸ் அபபா நகருக்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் 409 புறப்பட்டது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் 89 பேர் பயணம் செய்தனர்.


பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் 409 புறப்பட்ட 5 நிமிடத்தில் 2 கிலோமீட்டர் தூர சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தீப்பற்றியது.


இதனால் விமானத்தை தரையிறக்க விமானி முற்பட்டார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்து விமானம் மத்திய தரைக்கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 89 பேரும் உயிரிழந்தனர்.


ஏர் ஏசியா விமான விபத்து - டிசம்பர் 2014:-


2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுரப்யா நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் தனது பயணத்தை தொடங்கியது.


அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர்.


விமானம் ஜாவா கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் உயிரிழந்தனர்.


விமானத்தின் இறக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவும், விமானத்தை இயக்கிய 2 விமானிகளுக்கு இடையே தகவல் தொடர்பு பரிமாற்றம் நடைபெறாததும் இந்த விபத்துக்கு காரணம் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


மலேசிய விமான விபத்து - மார்ச் 2014:


2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் நகரம் நோக்கி மலேசியன் ஏர்லைன்ஸ் 370 (எம்.எச் 370) புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என மொத்தம் 239 பேர் பயணம் செய்தனர்.


விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் தென்சீன கடல் பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது ரேடார், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை

இழந்தது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும்பணிகள் முடுக்கி விடப்பட்டன.


ஆனால் தற்போதுவரை மாயமான எம்.எச், 370 விமானம் எங்கு சென்றது, விபத்தை சந்தித்ததாக, கடலில் விழுந்ததா? என்ற உண்மையை கண்டுபிடிக்க முடியவில்லை.


விமானம் மாயமாகி சில மாதங்கள் கழித்து எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.


இதனால், மாயமான எம்.எச். 370 மலேசிய விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் விமான விபத்து -  டிசம்பர் 2016 :


2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் பிகே-661 விமானம் 48 பயணிகளுடன் அந்நாட்டின் சித்ரல் நகரில் இருந்து இஸ்லாமாபாத் நகருக்கு புறப்பட்டது.
கைபர் பக்துவா மாகணப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் இடது பக்க எஞ்சினில் திடீரென கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 48 பேரும் உயிரிழந்தனர்.


நேபாள விமான விபத்து-  மார்ச் 2018:


2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி வங்காளதேச நாட்டின் தனியார் விமானமான யுஎஸ்-பங்ளா ஏர்லைன்ஸ் விமானம் 211 டாக்காவில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உள்பட 71 பேர் பயணம் செய்தனர்.


காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த கால்பந்து விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்து தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். விமானியின் கவனக்குறைவால் இந்த விபத்து நடைபெற்றதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


மும்பை விமான விபத்து - ஜூன் 2018:


2018 ஆம் ஆண்டு ஜுன் 28 ஆம் தேதி மும்பை-ஜுஹா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தனர்.


விமானம் மும்பையின் ஹடாக்பூர் பகுதியில் தாழ்வாக பறந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர்.


சுவிஸ்சர்லாந்து விமான விபத்து - ஆகஸ்ட் 2018:


2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனியாருக்கு சொந்தமான இரண்டாம் உலகப்போரில் மிகவும் பிரபலமான ஜங்கர் ஜெயூ52 ஹேச்பி-ஹாட் ரக

விமானம் சுவிஸ்சர்லாந்தின் மலைத்தொடரில் பயணம் மேற்கொண்டது.

அந்த விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.


விமானம் பிஸ் செங்னாஸ் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்தனர்.


இந்தோனேசியா விமான விபத்து - அக்டோபர் 2018:


2018 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி இந்தோனேசியாவின் லயன் ஏர் ஜேடி 610 விமானம் அந்நாட்டின் ஜகார்தா நகரில் இருந்து பங்கல் பினங் நகருக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 189 பேர் பயணம் செய்தனர்.


விமானம் புறப்பட்டு 13 நிமிடத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விமானியின் கவனக்குறைவு, தொழில்நுட்ப கோளாறு மற்றும் பராமரிப்பின்மை இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எத்தியோப்பியன் விமான விபத்து - மார்ச் 2019:


2019 மார்ச் 10 ஆம் தேதி எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா போலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கென்யாவின் நைரோபி நகருக்கு

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் 302 விமானம் புறப்பட்டது.


அந்த விமானத்தில் பணிக்குழுவினர் உள்பட மொத்தம் 157 பேர் பயணம் செய்தனர்.


விமானம் ஓடுதளத்தை விட்டு புறப்பட்டு 6வது நிமிடத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்தனர்.


இந்த விபத்துக்கான காரணம் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


உக்ரைன் விமான விபத்து - ஜனவரி 2020 (ஏவுகணை தாக்குதல்):


2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி ஈரான் நாட்டின் தெஹ்ரன் நகரில் இருந்து 176 பயணிகளுடன் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான உக்ரைன் இண்டர்நேஷ்னல் ஏர்லைன்ஸ் 752 விமானம் உக்ரைனின் கிவ் நகர் நோக்கி புறப்பட்டது.
ஓடுதளத்தை விட்டு புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்த சில நிமிடங்களில் விமானத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை தாக்குதலில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர்.


இஸ்லாமிக் ரிவோல்டரி காட்ஸ்ஸ் க்ராம் என்ற ஈரானின் புரட்சிப்படை தளபதியான காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணை தாக்குதலால்

கொல்லப்பட்ட நிகழ்வு நடைபெற்ற சில நாட்களில் உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டது.


பாகிஸ்தான் விமான விபத்து - மே 2020:


பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தான் இண்டர்நேஷ்னல் ஏர்லைன்ஸ் 8303 விமான புறப்பட்டது. விமானத்தில் ஊழியர்கள் உள்பட 99 பேர் பயணித்தனர்.


விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விமான நிலையத்திற்கு அருகே இருந்த குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 97 பேர், குடியிருப்பு பகுதியில் இருந்த 1 நபர் என மொத்தம் 98 பேர் உயிரிழந்தனர்.


விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்க முயற்சிசெய்தபோது ஏற்பட்ட விமானியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த விபத்துக்கான காரணம் குறித்த முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கேரளா விமான விபத்து - ஜூலை 2020:


வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் இதுவரை (ஆகஸ்ட் 8 அதிகாலை நிலவரப்படி) 17 பேர் உயிரிழந்தனர். டேபிள் டாப் ரக ஓடுதளம் என்பதும், தரையிறக்கத்தின் போது கனமழை பெய்ததும் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Related Articles