வெளியிடப்பட்ட நேரம்: 14-May-2019 , 11:39 PM

கடைசி தொடர்பு: 14-May-2019 , 11:40 PM

சிரிக்கும் வகுப்பறை - புத்தக விமர்சனம்

images (3)

நூல் : சிரிக்கும் வகுப்பறை

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 120
விலை : ₹ 110

"ஒரு கரப்பான் பூச்சியாகப் பிறந்திருந்தால் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் இஷ்டம் போல சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று திவாகருக்கு தோன்றியது" இதுதான் நாவலின் முதல் வரி.... உண்மையைச் சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு பள்ளி செல்லும் பருவத்தில் இதே மாதிரி எண்ணம் தோன்றியிருக்கிறது? பெரும்பாலான கைகள் உயர்வதை இங்கிருந்தே கணிக்க இயலுகிறது.

என்னவொரு சிறிய மாற்றமாக கரப்பான்பூச்சி என்பதற்கு பதிலாக நாயாகவோ, பூனையாகவோ மாறி விடக் கூடாதா என்று எண்ணியிருப்போம். அவ்வளவு ஏன் தேர்விற்கு முந்தைய இரவு, தேர்வு முடிவு நாளைக்கு முந்தைய நாள் இரவுகளெல்லாம் முடியாமல் நீண்டு விட்டால் எவ்வளவு நலமாய் இருக்குமென்றெல்லாம் சிந்தித்திருப்போமல்லவா? படிப்பு நம்மையெல்லாம் அன்றும் இன்றுமென என்றுமே இப்படித்தான் சிதை மூட்டிய தீயில் வாடும் சருகாய் கருகி வதங்க வைக்கிறது போலும்....

சரி.... கதைக்கு வருவோம்...

மக்கு, முட்டாள், உதவாக்கரை, ...... இன்னும் பாட புத்தக படிப்பு மட்டும் ஏறாத நிறைய கேள்விகள் கேட்டு துளைக்கும், குறும்புத்தனம் சற்றே கூடுதலான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்னென்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ அது அத்தனைக்கும் மிகப் பொருத்தமானவன் தான் நம் நாவலின் நாயகன் "திவாகர்". ஏழாம் வகுப்பு படிப்பதற்குள்ளாகவே மொத்தம் ஒன்பது பள்ளிகளுக்கு அவனை மாற்றி விட்டார்கள். அவனைப் படிக்க வைக்கத் தங்களால் முடியவில்லை என எல்லா ஆசிரியர்களும் ஒரேபோல குற்றம் சொன்னார்கள்.

இறுதியில், வேறு வழியின்றி திவாகரின் தந்தை அவனை சயனகிரி என்னும் இடத்திலுள்ள " அக்ரமா" என்னும் தண்டனைப் பள்ளியில் சேர்த்து விடுகிறார்.

என்னது, தண்டனைப் பள்ளியா???
ஆம்.... நாடு முழுவதுமுள்ள - ஆசிரியர்களுக்கு அடங்காத 50 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விதவிதமான, வித்தியாச வித்தியாசமான தண்டனைகளை வழங்கி பரிசோதித்து பார்க்கும் கொடூர எண்ணமுடைய ராபர்ட் லொங்கோ என்பவனால் நடத்தப்படும் பள்ளியே "அக்ரமா". இங்கு பயிலும் மாணவர்கள் 5 வருடங்கள் இங்கேயே தங்கிப் பயில வேண்டும். பயில வேண்டும் என்பதை விட அவர்கள் வழங்கும் விதவிதமான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். 5 ஆண்டுகள் வரை பெற்றோருடன் எவ்வித தொடர்பும் இருக்காது. உடல் மெலிந்து, உள்ளம் வாடி சில நேரங்களில் அங்கேயே இறக்கவும் நேரிடலாம்.

இத்தகைய ஒரு பள்ளியில் மாட்டிக் கொண்ட திவாகர், என்ன ஆனான்? அங்கிருந்து தப்பித்தானா? அங்கிருந்த மற்ற சிறுவர்கள் என்ன ஆனார்கள்? லொங்கோவின் பல்வேறு வகையான தண்டனைகளிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள்? என்பதே மீதிக்கதை. (அதையும் சொல்லிவிட்டால், புத்தகத்தை வாங்கி படிக்க மாட்டீர்கள் என்பதால் மீதியை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்😝)

நாவலில் திவா மற்றும் அவனது நண்பர்களான திப்பு, ரூபன், டின்னு ஆகியோர் புரியும் சாகசங்கள் நம்மைக் கவரக் கூடியவை.

புத்த துறவி நிர்மயாவிடம் திவாகர் இவ்வாறு கேட்கிறான், " படிக்காத மாணவனை என்ன செய்வீர்கள் "? என்று.

அதற்கு நிர்மயா, " படிக்காத மாணவன் என்று எவருமில்லை. என்ன படிக்க வேண்டுமென்பதில் ஆளுக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து அவனைப் படிக்க வைப்பேன்" என்கிறார்.
நிர்மயாவாய் வாழ மனம் உறுதி பூணுகிறது.

திவாகரின் வாயிலாக இன்றைய கல்விச் சூழலின் அவலங்களையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
"ஒரு ஆசிரியருக்குக் கூட புத்தகம் மனப்பாடமாக தெரிவதில்லை. பின்பு, மாணவர்கள் மட்டும் ஏன் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்?"

நிர்மயாவின் வாயிலாய் உண்மையான கல்வி எப்படி இருக்க வேண்டுமெனவும் உணர்த்திச் செல்கிறார்.
"பாடப் புத்தகங்கள் படிப்பது மட்டும் கல்வியில்லை. விவசாயம், கட்டுமானப் பணிகள், தச்சு, நெசவு போன்ற பல்வேறு தொழில்கள் என ஒரு மனிதன் தன் வாழ்விற்குத் தேவையான அத்தனையும் தானே கற்றுக் கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர வேண்டும். வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்."

"பள்ளிக்கூடம் என்பது ஒரு போதும் சிறைச்சாலையாக மாறிவிடக்கூடாது. உங்கள் வீடு தான் உங்களின் முதல் பள்ளி. இது இரண்டாவது பள்ளி. மூன்றாவது பள்ளி இந்த உலகம்"

கையில் எடுத்தால் முழுதாய் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.

இறுதியாய், புத்தகத்திற்கு ஏன் இந்த தலைப்பு? பொருத்தமான தலைப்பு தானா?? நூலை வாசியுங்கள். உங்களுக்கே புரியும்.....

-திவாகர். ஜெ

Related Articles