வெளியிடப்பட்ட நேரம்: 15-May-2019 , 06:28 PM

கடைசி தொடர்பு: 15-May-2019 , 06:28 PM

அதிமுகவின் முதல் முதல்வர் நினைவு தினம்

FB_IMG_1557923573687

முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி மறைவு!
***************************************

புதுச்சேரி மக்களால் எஸ்.ஆர். என்றழைக்கப்படும் மாண்புமிகு.முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி! புதுச்சேரி மாநில அரசியலில் அவர் ஒரு சகாப்தம். நேர்மையானவர்கள் கூட முதல்வராகலாம் என நிரூபித்த நல்மனிதர். 5 தலைமுறைகளுக்கு மேல், தனக்கென தனி ஒட்டு வங்கியை கைவசம் வைத்திருந்த வசீகர அரசியல் தலைவர்!

எனக்குத் தெரிந்த வரை கறுப்புக் கண்ணாடிக்கு அழகூட்டிய ஹீரோ இவர்தான்! வெளிப்படை, நேர்மை, தெளிவு, துணிவு இவரது அரசியல் தேரின் புரவிகளாய் திகழ்ந்தன. புதுச்சேரியில் தூண்டுச் சீட்டில் அரசு வேலைக்குப் பரிந்துரைத்த நட்சத்திர அரசியல்வாதியும் எஸ்.ராமசாமிதான்!

காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி சட்டமன்றத்துக்குள் கம்பீரமாக கால் வைத்தார். சிறந்த அரசியல் அறிவும், ஆங்கில ஞானமும் கொண்ட வழக்கறிஞராகத் திகழ்ந்தார். ஆரம்பத்தில் அவர். தி.மு.க.வில் இருந்து வந்தார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது அந்த கட்சியில் அவர் இணைந்தார். அப்போது புதுவை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக திகழ்ந்தார். 1974-ம் ஆண்டு புதுவை சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அப்போது எஸ்.ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார்.

தமிழ்நாட்டில் 1977-ல் தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனார். ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே புதுவையில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அதற்கு எஸ். ராமசாமி முக்கிய காரணமாக இருந்தார்.
அவர் முதல்- அமைச்சராக பதவி ஏற்று 22-வது நாளில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. ஆனால், பட்ஜெட் முன்கூட்டியே கசிந்து விட்டது. மேலும் அ.தி.மு.க.வில் பல எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவி விட்டனர்.

இதனால் முதல்- அமைச்சராக பதவி ஏற்ற 22-வது நாளிலேயே ராமசாமி ஆட்சியை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது அவர் 6.3.1974 முதல் 28.3.1974 வரை முதல-அமைச்சர் பதவி வகித்தார்.

அடுத்து 1977-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எஸ்.ராமசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார். அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மாறியதால் 15 மாதத்தில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அப்போது அவர் 2.7.1977 முதல் 12.11.1978 வரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்தார்.

பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் மக்கள் முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியிலும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளுக்கு பிறகு கட்சியில் இருந்து விலகி விட்டார்.

சில காலம் அரசியல் பணியில் இருந்து விலகி இருந்த அவர், பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அவருக்கு ''சிறப்பு அழைப்பாளர்'' அந்தஸ்த்தைத் தந்து கவுரவப்படுத்தியது. காரைக்கால் தெற்கு தொகுதியில் இருந்து 4 முறை அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.ராமசாமி இதுவரை அரசியலில் இழந்தது ஏராளம்! எள் முனையளவு கூட ஊழல் புகாரில் சிக்காத அதிசய அரசியல்வாதி அவர்! தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞருக்குப் படித்திருந்த அவர், சிறந்த அரசியல் ஞானம் உள்ளவர். சட்டசபையில் சிறப்பாக வாதாடும் திறமை பெற்றவர். தமிழ்நாட்டிலும், அகில இந்திய அளவிலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தார். மறைந்த தமிழக முதல்வர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தந்தை பெரியாரின் பேரன்பைப் பெற்றவர்.

பொது வாழ்க்கையில் பனித்துளியின் தூய்மையை பின்பற்றிய பண்பாளர். காலத்தின் சரித்திர பக்கங்களில் பலரது வாழ்க்கை வெற்றிடமாகவே கிடந்திருக்கின்றன. கண்ணியவான் எஸ்.ராமசாமி அவர்களின் வாழ்க்கை இந்த தலைமுறைக்கும் பொருந்தக் கூடிய பொக்கிஷமாகவே வார்க்கப்பட்டிருக்கிறது.

-செந்தில்குமார் தீனதயாளன்

Related Articles