வெளியிடப்பட்ட நேரம்: 20-Jun-2019 , 05:24 PM

கடைசி தொடர்பு: 20-Jun-2019 , 05:24 PM

காங்கிரஸில் புதிய தலைவர்

images (3)

புதிய தலைவரை தேர்வு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது காங்., கட்சி. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தான் கட்சியினரின் முதல் தேர்வாக இருக்கிறார்.

ஒரு வேளை தலைமை பொறுப்பை ஏற்க அவர் மறுத்து விட்டால், அதன் பிறகு மூத்த தலித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே போன்ற யாரையாவது தேர்வு செய்யலாம் என கட்சியினர் கருதுகின்றனர். மற்றொரு தலித் தலைவரான முகுல் வாஷ்னிக் பெயரும் தலைமை பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கட்சி தலைவர் பதவியை இனியும் தொடரப் போவதில்லை என்ற முடிவில் ராகுல் பிடிவாதமாக இருக்கிறார். காங்., செயற்குழு கூட்டத்தில் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் முடிவில் உறுதியாக இருந்து வருகிறார் ராகுல். அத்துடன் கட்சிக்கு ஆலோசனை வழங்குவதோ அல்லது கட்சியின் செயல் தலைவர் போன்ற பதவிகளையோ அல்லது முழு நேர தலைவர் பதவி பொறுப்பையோ ஏற்க ராகுல் விரும்பவில்லை. புதிய தலைவரை தேர்வு செய்வதை சில காலம் தாமதித்தால், அதற்குள் ராகுலை சமாதானப்படுத்தி விடலாம் என சோனியாவும், மற்ற மூத்த காங்., தலைவர்களும் நினைத்தனர்.

ராகுலின் மனநிலை மாறுவதாக தெரியவில்லை. இதனால் வேறு வழியின்றி கட்சியின் பொறுப்புக்களை ஏற்று நடத்தவும், ராகுலின் மனம் மாறும் வரை சில காலம் கட்சி தலைவர் பொறுப்பை வகிக்கவும் சோனியா உள்ளிட்டோர் சிலரின் பெயர்களை பரிசீலித்து வருகின்றனர். சோனியாவே மீண்டும் தலைவராக இருக்கலாம் என சிலர் கருதினாலும், அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால் ஆகியோரின் பெயர்களும் கட்சி தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படுகிறது.

முதல்வர் பதவி: ராஜினாமா செய்வாரா கெலட் ? ஜூன் 19 ம் தேதியன்று ராகுலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட்.

அப்போது ராகுலும், கெலட்டும் தனியாக சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். கெலட், ராகுலுக்கு மிக நெருக்கமானவர். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கெலட், நாடு மற்றும் மக்களின் நலனுக்காக கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்துமாறு ராகுலிடம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

கெலட் தான் கட்சியின் புதிய தலைவர் என காங்., தலைவர்கள் சிலர் உறுதியாக கூறி வருகின்றனர். இந்த தகவலை கெலட் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஒரு வேளை அவர் காங்., தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும்.

அப்படி நடக்கும் பட்சத்தில் துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட்டிற்கு ராஜஸ்தான் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும். ராஜஸ்தான் மாநில காங்., தலைவராக இருக்கும் சச்சின் பைலட், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது முதல்வராக விரும்பினார். லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் காங்., தோல்வி அடைந்ததை அடுத்து அதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கெலட்டிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. 68 வயதாகும் கெலட், காங்.,கிற்கு மிகுந்த விஸ்வாசி. இவர் காங்., கட்சியின் பொதுச் செயலாளராகவும், பொறுப்பாளராகவும் இருந்தவர். இதற்கு முன் இருமுறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார். கட்சியின் தேசிய தலைவர் என்ற புதிய பொறுப்பையும் அவர் திறம்பட கவனிப்பார் என கட்சியினர் சிலர் கூறி வருகின்றனர்.

Related Articles