வெளியிடப்பட்ட நேரம்: 26-May-2018 , 01:43 PM

கடைசி தொடர்பு: 26-May-2018 , 03:25 PM

வெட்டியது போதும் உறங்குங்கள் குரு

guru pmk

பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடந்த வன்னியர்கள் காடுவெட்டி குருவின் இறப்பில் தனது சுய சாதிப்பற்றை நிரூபிக்கின்றனர். குறிப்பாக அ.தி.மு.க வில் இருப்பவர்கள் நேரடியாகவே தன்னை வன்னியராக அடையாளபடுத்திக் கொள்வார்கள். ஆனால் தி.மு.க வினர் மேலோட்டமாக அல்லது மறைத்தே செயல்படுவார்கள். அந்த மறைமுகத்துக்கான காரணம் பெரியார் தொண்டர்களாக இருந்த அண்ணா,கருணாநிதியிடமிருந்து கற்றுக் கொண்டதாக நினைக்கிறேன். தற்போது அந்த மிச்ச சொச்சங்களும் முக்காடிட்டும் துருத்தி நிற்கும் கொண்டையாகத் தெரிகிறது.


தீவிரமான திராவிட சிந்தனையாளர்களாக காட்டிக்கொண்டவர்கள் பொறுப்பு வாங்கியவர்கள் என அனைவரின் வருத்தமும் சாதி வெறியாக வெளிப்படுவதை பார்க்க முடிகிறது. தான் வாழ்ந்த காலம் வரைக்குமே அப்பட்டமாக சாதி வெறி பேசியே அரசியல் செய்த தலைவரை புனிதராக கட்டமைத்து பேசுவது அயோக்கியத்தனம். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் துயரத்தை விடவும் குருவின் மரணம் வலியைத் தருகிறதாம். மக்கள் போராட்டத்தை இதை விடவும் யாராலும் கொச்சைபடுத்த முடியாது. நேற்றுவரை தூத்துக்குடி பிரச்சினைக்கு வடித்தது நீலீக்கண்ணீரா? 

பொதுவாக இரங்கல் தெரிவிப்பது என்பதில் நமக்கு சிக்கலும் இல்லை அல்லது நீங்கள் சார்ந்திருக்கிற கட்சிக்கும் எந்த சிக்கலும் இல்லை. மாறாக சாதிய சாயங்களோடும் வெறி கொண்ட எழுத்துகளோடும் இரங்கல் தெரிவிப்பதென்பது தி.மு.க பொதுவான கட்சிதான் ஆகையால் தைரியமாக செயல்படலாம் என நினைக்கும் தலித்துகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கலுக்கும் அவரை பின்தொடர்கிறேன் என கட்சியில் இருப்பவர்கள் பொறுப்பு வாங்கியவர்கள் இரங்கலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தி.மு.க சமூக நீதியை காற்றில் பறக்கவிட்டு வெகுநாள் ஆகிறது.

மோளம் அடிக்கிற சாதி பயலுவோ எனவும்,மாட்டுக்கறி திங்கிற நாலாஞ் சாதி பயலுவோ என குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே எதிர்த்து சாதிவெறியோடு அரசியல் செய்த காடுவெட்டி குரு பாட்டாளிகளின் தோழனாகவும் புனிதராகவும் தெரிவது வியப்பளிக்கிறது.

இயற்கையான மரணத்தைக் கூட பொறுத்துக் கொள்ள மனப்பக்குவமில்லாத தொண்டர்கள் பேருந்துகளை உடைப்பதும், சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை மிரட்டுவதும், தங்களின் எதிரிகளாக அவர்களாகவே வரிந்து கட்டிக் கொண்ட வி.சி.கட்சியின் கொடிகளை சேதப்படுத்துவதென வன்முறையை கையாள்கிறார்கள். இவர்களா பாட்டாளிகள்? இவர்களா நாளை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறார்கள். குறிப்பாக வட மாவட்டங்களில் இத்தனை வீரத்தோடு இருப்பதாக காட்டிக்கொள்பவர்கள் தூத்துக்குடியில் காவல்துறையிடம் காட்டலாமே? மக்களிடம் நற்பெயராவது ஏற்படும்.

இந்த நடுநாட்டில் என்னை மிஞ்ச ஒரு எழுத்தாளன் உண்டா? எனவும் என்னுடையது மக்களுக்கான இலக்கியம் எனவும் மார்தட்டும் கண்மணி குணசேகரன் எந்த மக்களுக்கான இலக்கியத்தை எழுதினார் எனவும் சொல்லியிருக்கலாம். ஒரு எழுத்தாளன் சமூகத்தின் பிரதிபலிப்பு, மாற்று சிந்தனையாளன். இப்படியாகத்தான் அவன் இருக்க வேண்டுமெனவும் நினைக்கிறேன். மாறாக தான் சார்ந்த சாதியின் தலைவனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது உங்களையும் உங்கள் எழுத்தையுமே அருவருப்பாக பார்க்கத் தோன்றுகிறது. இன்று முதல் நீங்கள் தலித் இலக்கியவாதி போல் வன்னிய இலக்கியவாதி என அன்போடு அழைக்கப்படுவீர்கள்.

சாதி  சங்கங்களையெல்லாம் ஒன்றிணைத்து "தமிழ் தேசியம்" அமைக்க நினைக்கும் அரைவேக்காட்டு அரசியல் புரிதல் உள்ளவர்களிடமும் சாதிய அடையாளங்களை இனங்கண்டு தமிழர், தமிழர் என கூச்சலிடுபவர்களிடமும் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

துளியளவு கூட ஆழ்ந்த இரங்கல் சொல்ல மனமில்லாத....#சேங்கணத்தான்

Related Articles