வெளியிடப்பட்ட நேரம்: 01-Sep-2020 , 08:04 AM

கடைசி தொடர்பு: 01-Sep-2020 , 08:04 AM

பிரணாப் முகர்ஜி உடல் இன்று அடக்கம்

images (1)

உடல் நலக்குறைவால் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.

உடல் நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) நேற்று காலமானார். பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கள் தெரிவித்துள்ளனர். பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி 7 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். எந்த பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, தன், 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொது வாழ்க்கையில், பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பல்வேறு துறைகளுக்கான மத்திய அமைச்சராக இருந்துள்ள அவர், 2012 - 2017ல் நாட்டின், 13வது ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

நாட்டின் மிகவும் உயரிய விருதான, பாரத் ரத்னா பெற்றுள்ள அவர், உடல் நலக் குறைவால், டில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில், கடந்த மாதம், 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது அவருக்கு, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே, 'எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது; உடன் பழகியவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்' என, சமூக வலைதளத்தில் அவர் செய்தி வெளியிட்டு இருந்தார். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் பாதிப்பும், சிறுநீரகக் கோளாறும் ஏற்பட்டன. கடந்த சில நாட்களாக, கோமா நிலையில் இருந்த அவர், நேற்று மாலை உயிரிழந்தார்.

டெல்லியில் இன்று அரசு மரியாதையுடன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள லோதி மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை உத்தியோகபூர்வ பிரமுகர்கள் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்துவார்கள். அதன் பிறகு 45 நிமிடங்கள் மற்ற பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

அதை தொடர்ந்து 10 ராஜாஜி பார்க்கில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேர நேரம் இருக்கும். கோவிட்-19 நெறிமுறைகள் காரணமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் வழக்கான துப்பாக்கி வண்டிக்கு பதிலாக ஹியர்ஸ் வண்டியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles