வெளியிடப்பட்ட நேரம்: 27-Jan-2017 , 07:06 PM

கடைசி தொடர்பு: 27-Jan-2017 , 07:06 PM

பிரபல தொழிலதிபர்-கார்த்திக் சரவணன்

celebirity interview

இருள் சூழ்ந்த அறையில் அந்த சப்தம் மட்டும் சப்தமாக கேட்டது.


“ஸ்டார்ட் கேமரா”


“ரோலிங்”


“ஆக்சன்”


பட்டென்று அந்த அறை முழுவதும் வெளிச்சத்தால் நிரம்பியது. மிகப்பெரிய சோபா ஒன்றில் மிகப் பெரியதாய் அமர்ந்திருந்தார் வெங்கடேஷ்.


வெங்கடேஷ் – இவர் முகநூலில் மிகவும் பிரபலம். வெங்கடேஷ் சுப்பிரமணியன் என்ற பெயரில் இயங்கி வருபவர். க்யூ டிவி நிறுவனத்தில் பகுதி நேரமாகப் பணியாற்றுகிறார். அசாத்தியமான பேச்சுத் திறமையும் எழுத்துத் திறமையும் உடையவர். இவரது பேட்டிகள் ரசிக்கும்படியாகவும் முகநூல் நிலைத்தகவல்கள் பலரால் விரும்பப்படுபவையாகவும் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.


“வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான வெற்றிநடை வித் வெங்கடேஷ். ஒவ்வொரு வாரமும் நாம் படிப்பில், தொழிலில், வேலையில் முன்னேறிய மற்றும் சாதனை படைத்த மனிதர்களைப் பேட்டி காண்கிறோம். அந்த வகையில் இந்த வாரம் நாம் காணப்போவது ஏ.பி.ஸி. நிறுவனத்தின் சிஇஓ என்றறியப்படும் சீஃப் எக்சிக்யூடிவ் ஆபிசர் திரு.ராஜேந்திரன் அவர்களை. வணக்கம் ராஜேந்திரன் சார்”


வெங்கடேஷ்க்கு எதிரிலிருந்த சோபாவில் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த ராஜேந்திரன் கொஞ்சமாய் சிரித்து “வணக்கம்” என்றார்.


ராஜேந்திரன். சாதாரண மேனேஜராக இருந்து முதலாளியின் நன்மதிப்பைப் பெற்றவர். அடுத்தடுத்து பதவி உயர்வுகளை வாங்கி தற்போது நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். தலைமையில் இருப்பதால் அவருக்கு பல சிக்கல்கள், வேண்டுதல்கள், தொந்தரவுகள், உதவி கோருதல்கள் இன்ன பிற. மக்கள் மொய்ப்பார்களேயென்று பயந்து சிரிக்காமல் எப்போதும் இறுகிய முகத்துடனே இருப்பவர். ஆப்ளிகேஷன்களுக்குப் பயந்து இறுக்கிய அவரது முகம், தற்போது நிரந்தரமாக இறுகிப்போனது. அவர் சிரித்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது.


“ராஜேந்திரன் சார், நீங்க ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மிகப்பெரிய பதவியில் இருக்கிறீர்கள். எப்படி சாத்தியமானது?” வெங்கடேஷ் கேட்க, தொண்டையைச் செருமினார் ராஜேந்திரன்.


“ஆரம்பம் முதலே நான் ரொம்ப சின்சியர், எல்லா வேலையும் அப்டுடேட்டா இருக்கணும்னு விரும்பறவன். அடுத்த நாளைக்கு செய்ய வேண்டிய வேலைகளை முன்கூட்டியே ப்ளான் பண்ணிட்டு தான் வீட்டுக்கே போவேன். அடுத்த வாரம், அடுத்த மாசம் என்ன நடக்கணும்னு இன்னிக்கே முடிவு பண்ணிருவேன்”


“ஓகே சார், இருபது வருடங்களுக்கு முன்னால் நீங்கள் இந்த நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பொறுப்பேற்றபோது போட்டி நிறுவனங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால் இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பல நிறுவனங்கள் உங்களுக்குப் போட்டியாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் மீறி எப்படி அதிக லாபம் ஈட்டுகிறீர்கள்?”


“கஸ்டமர்கள் கடவுள் மாதிரி. ஒருத்தர் உள்ள வந்துட்டார்னா அவரை நாங்க வெளிய விடுறதில்ல. பதினைஞ்சு வருஷம் முன்னாடி எங்க கம்பெனி டீலர்ஷிப் எடுத்தவர் இன்னும் எங்க டீலர் தான். நாங்க கஸ்டமரை கேர் பண்றோம். போட்டி கம்பெனியெல்லாம் பாத்தீங்கன்னா ரெண்டு வருஷத்துக்கு மேல யாரும் டீலர்ஷிப் வச்சுக்கிறதில்லை”


“ஓகே சார், விற்பனையில் தொடர்ந்து முதலிடத்திலேயே உங்கள் நிறுவனம் இருப்பது எப்படி?”


“கஸ்டமர்ஸ் பொருள் வாங்கறதெல்லாம் இப்போ ஹோட்டல்ல சாப்பிடுற மாதிரி ஆயிடுச்சு. ஒரு நாள் ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டா அடுத்த நாள் பக்கத்து ஹோட்டலுக்குப் போறாங்க. எங்களைப் பொருத்தவரைக்கும் தரம்,  வெரைட்டி. ஒருத்தர் ஒரு தடவை எங்க கம்பெனி ப்ராடக்ட் வாங்கினார்னா அடுத்த தடவை வேற கம்பெனி ப்ராடக்ட் வாங்க மாட்டார். அந்த அளவுக்கு தரம்”


“மிக நன்று சார், இப்போ நீங்களே சொன்னீங்க சார், அடுத்த வாரம் மாசம் செய்ய வேண்டியதை இப்பவே தீர்மானிச்சிருவீங்கன்னு. உங்க நிறுவனத்தோட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?”


“இப்போ ஆயிரம் கோடி பிசினஸ் இருக்கிற எங்க கம்பெனி இன்னும் ரெண்டு வருஷத்துல ரெண்டாயிரம் கோடியா வளரப்போகுது. அதுக்கான எல்லா வேலைகளும் நடந்துக்கிட்டு இருக்கு”


“அருமை அருமை சார், இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?”


“மிகப் பெரிய டார்கெட் வச்சிக்கோங்க. அந்த பெரிய டார்கெட்டை பத்தோ இருபதோ சின்னச்சின்ன டார்கெட்டா பிரிச்சு ஒவ்வொண்ணா நோக்கி முன்னேறுங்க. முக்கியமான விஷயம், அந்த டார்கெட்டை அச்சீவ் பண்றதுக்குண்டான சரியான டைம்பிரேம் செட் பண்ணிக்கோங்க. உடற்பயிற்சி, யோகா ஏதாவது செய்யுங்க. போதைக்கு அடிமையாகாதீங்க. வெற்றியை நோக்கி சரியான பாதைல தான் போறோமான்னு அப்பப்போ செக் பண்ணிக்கோங்க. வெற்றி நிச்சயம்”


அருமையான பேட்டி என்று கூறி நிகழ்ச்சியை முடித்தார் வெங்கடேஷ். க்யூ டிவியின் எக்சிக்யூடிவ் புரொடியூசர் நாராயணன் ஓடி வந்து, “சார், கேட்ட நேரத்தை விட பத்து நிமிஷம் ஜாஸ்தியா ஆயிடுச்சு. உங்க ப்ரீஷியஸ் டைமை நாங்க வேஸ்ட் பண்ணிட்டோம். சாரி” என்றார்.


“நோ, இட்ஸ் ஓகே”


“சார், நான் உங்க கூட கார் வரை வரேன்” என்று அவரை அழைத்துச் செல்ல முற்பட்டார் நாராயணன்.


தனது கைபேசியையே பார்த்து கொண்டிருந்தார் ராஜேந்திரன். “வெங்கடேஷ், இங்க வாங்களேன்” என்றார். “சார், சொல்லுங்க” என்று பவ்யமாக ஓடி வந்தார் வெங்கடேஷ்.


இப்போது ராஜேந்திரன் முகத்தில் லேசான சிரிப்பு. அது அசட்டுச் சிரிப்பு. “சொல்லுங்க சார், என்ன பண்ணனும்?”


“ஒண்ணுமில்ல, நான் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்னா அம்பது லைக் வரும். போட்டோ போட்டேன்னா நூறு லைக் வரும். நீங்க ஒரு பேஸ்புக் பிரபலம். ஸ்டேட்டஸ்னா ஐநூறு லைக், போட்டோன்னா ஆயிரம் லைக் வாங்கறீங்க”


இவர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரியாமலேயே திருதிருவென விழித்துக்கொண்டு ராஜேந்திரனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் வெங்கடேஷ்.


“ஒண்ணுமில்ல, உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கணும், உங்களை டேக் பண்ணி அந்த போட்டோவை பேஸ்புக்ல போடணும். எனக்கும் ஆயிரம் லைக் வருமே” என்றார் ராஜேந்திரன்.


-கார்த்திக் சரவணன்

Related Articles