வெளியிடப்பட்ட நேரம்: 19-May-2019 , 06:16 AM

கடைசி தொடர்பு: 19-May-2019 , 06:17 AM

கடைசி கட்ட தேர்தல்

election

லோக்சபா தேர்தலுக்கான கடைசி மற்றும் ஏழாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

நாட்டின் 17வது லோக்சபாவுக்கான தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. லோக்சபாவில் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என மார்ச், 10ல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்., 11 முதல் இதுவரை ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடந்துள்ளது. கடைசி கட்ட ஓட்டுப் பதிவு எட்டு மாநிலங் களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று நடக்க உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, நாடு முழுவதும் நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13, மேற்கு வங்கத்தில் ஒன்பது, பீஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா எட்டு, ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு, ஜார்க்கண்டில் மூன்று, சண்டிகரில் ஒரு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில், 3.71 லட்சம் வித்தியாசத்தில் மோடி வென்றார். அவருக்கு, 5.51 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட, டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் 2.09 லட்சம் ஓட்டுகள் பெற்றார். காங்., சார்பில் போட்டியிட்ட அஜய் ராய்க்கு 75 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. தற்போது பிரதமர் மோடியை எதிர்த்து காங்., சார்பில் அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் சமாஜ்வாதியின் சார்பில் ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, உ.பி., - பா.ஜ தலைவர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இங்குள்ள 13 தொகுதிகளில் 167 பேர் களத்தில் உள்ளனர். வாரணாசியில் அதிகபட்சமாக 26 பேர் போட்டியிடுகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் மத்திய அமைச்சர்கள் காந்திலால் புரியா, அருண் யாதவ் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும் பீஹாரில் உள்ள எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில் நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர். பாட்னா சாஹிப் தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக அமைந்துள்ளது. மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இங்கு போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பி.,யான நடிகர் சத்ருகன் சின்ஹா பா.ஜ.,வில் இருந்து விலகி தற்போது காங்., சார்பில் இங்கு போட்டியிடுகிறார். அதற்கு அருகில் உள்ள பாடலிபுத்ரா தொகுதி ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்துக்கு கவுரவப் பிரச்னையாக கருதப்படுகிறது.

இங்கு, இரண்டு முறை, கட்சியில் இருந்து விலகி, மற்றொரு கட்சியின் சார்பில்
போட்டியிட்டவர்களிடம், லாலு குடும்பம் தோல்வி அடைந்தது.கடந்த, 2009ல் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்ட ரஞ்சன் யாதவிடம், லாலு தோல்வி அடைந்தார்.அவருடைய மகள், மிர்சா பார்தி, பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, ராம் கிரிபால் யாதவிடம், 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார்.ராம் கிரிபால், மத்திய அமைச்சரானார். தற்போது இந்தத் தொகுதியில், மிர்சா பாரதி - கிரிபால் யாதவ் மீண்டும் போட்டியிடுகின்றனர்.மத்திய அமைச்சர், அஸ்வினி குமார் சவுபே, பக்சார் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்று, மத்திய அமைச்சரான, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின், உபேந்திர குஷ்வாகா, தற்போது, கராகட் தொகுதியில் போட்டியிடுகிறார்.பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய அவர், ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் இடம்பெற்றுள்ளார்.காங்., மூத்த தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான, மீரா குமார், சாசாரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்டில் உள்ள, மூன்று தொகுதிகளில், 42 பேர் போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், சிபு சோரன், தும்கா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இருந்து, எட்டு முறை அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றுடன், ஏழாவது கட்டத் தேர்தல் முடிவடைகிறது. வரும், 23ல், ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

இந்த லோக்சபா தேர்தலில், ஏழு கட்டங்களிலும் தேர்தலை சந்திக்கும், மூன்று மாநிலங்களில் ஒன்றான, மேற்கு வங்கத்தில் உள்ள, ஒன்பது தொகுதிகளில் இன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. இதுவரை நடந்த ஆறு கட்டங்களிலும், ஒரு சில இடங்களில், கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில், ஏழாவது கட்ட பிரசாரத்தின்போது, கோல்கட்டாவில் நடந்த, பா.ஜ., பிரசார கூட்டத்தில் வன்முறை வெடித்தது. அதனால், தேர்தல் பிரசாரம், ஒரு நாள் முன்னதாகவே நிறுத்தப்பட்டது.அதனால், இங்குள்ள, ஒன்பது தொகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த, ஒன்பது தொகுதிகளில், 111 பேர் போட்டியிடுகின்றனர்.மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜியின் உறவினரான, அபிஷேக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் தொகுதியில், மீண்டும் போட்டியிடுகிறார்.அந்தக் கட்சியின் சார்பில், பிரபல வங்க மொழி நடிகை, மிமி சக்ரவர்த்தி, ஜாதவ்புர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Related Articles