வெளியிடப்பட்ட நேரம்: 06-Oct-2021 , 12:49 PM

கடைசி தொடர்பு: 06-Oct-2021 , 12:49 PM

பிரியங்கா காந்தி மீது வழக்கு

priyanka

பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில், காங். பொதுச்செயலர் பிரியங்கா உட்பட 11 பேர் மீது, தடுப்பு காவல் சட்டப் பிரிவுகளின் கீழ், எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். நடவடிக்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்கா உள்ளிட்டோர் சீதாபுர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர்.

எந்த வழக்கும் பதிவு செய்யாமல் தொடர்ந்து காவலில் வைத்துள்ளது குறித்து, பிரியங்கா சமூக வலை தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். காங். மூத்த தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவல் சட்டப் பிரிவுகளின் கீழ் பிரியங்கா மூத்த தலைவர்கள் திபேந்திர ஹூடா, அஜய் குமார் லல்லு உட்பட 11 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

''பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தமாட்டோம் என அவர்கள் உறுதி அளித்தால் இந்த சட்டப் பிரிவுகள் நீக்கப்படும்'' என, துணை கலெக்டர் பியாரே லால் மவுரியா கூறியுள்ளார். முன்னதாக, பிரியங்காவை இன்று காலைக்குள் விடுவிக்காவிட்டால் லக்கிம்பூருக்கு பேரணி நடத்தப்போவதாக காங். பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருந்தார்.

பிரியங்காவை சந்திக்க வந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Related Articles