வெளியிடப்பட்ட நேரம்: 29-May-2019 , 08:03 AM

கடைசி தொடர்பு: 29-May-2019 , 08:14 AM

தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமார் - முதல் பேட்டி

FB_IMG_1559095889524

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிட்டது. திமுக  சார்பில் திரு.தனுஷ் எம்.குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நேற்று  செங்கோட்டை பகுதியில் மக்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் சற்று நேரம் ஒதுக்கி பேட்டி கண்டோம். எம்.பியாக வெற்றி பெற்ற பின் அவருடைய முதல் பேட்டி...

முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?

இந்த வெற்றி தனிப்பட்ட முறையில் தனுஷ் எம். குமரோட வெற்றி அல்ல. திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கான வெற்றி. சாதாரண மக்கள் மீது திணிக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான வெற்றி. எங்கள் தலைவர் ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து தென்காசி தொகுதியை ஒதுக்கினார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வெற்றி பெற்று இருக்கிறோம். நான் மட்டுமல்ல எங்கள் கழக உடன்பிறப்புகளும், கூட்டணி கட்சி தோழமைகளும் இந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மிகவும் சந்தோசமா இருக்கிறோம்.

இந்த சந்தோசத்தை விட தென்காசி மக்களுக்கான எனது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் நாளில் தான் உண்மையான சந்தோசத்தை உணர முடியுமென்று நம்புகிறேன்.

பாராளுமன்றத்தில் தென்காசி மக்களுக்கான முதல் குரல் உங்களுடையது என்னவாக இருக்கும்?

இதற்கு ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது. முதல் குரலாக இதுதான் இருக்க வேண்டுமென்ற எந்த யோசனையும் இல்லை. எங்கள் தொகுதி மக்களுக்கான உரிமையை, அடிப்படை வசதிகளை பெற்றுத் தரக்கூடிய அம்சங்களையும் உள்ளடக்கிய பேச்சு முதன்மை குரலாக இருக்கும்.

தென்னிந்தியா தவிர்த்து வடக்கே மட்டுந்தான் ஆளப்போகும் பாஜக வெற்றி கண்டு இருக்கிறது. இங்கு இருக்கும் பாஜக/அதிமுக தலைவர்கள் தமிழகத்திற்கு ஒன்றும் கிடைக்காது என்ற அளவில் பேட்டியளிக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள். ?

தமிழகத்தின் உரிமை நசுக்கும் எந்த திட்டத்திற்கும் ஆதரவு அளிக்கமாட்டோம். இங்க இவர்கள் சொல்வது போல் எல்லாம் நடக்காது. திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் போராடும் திறன் கொண்டது. அத்தகைய காலகட்டத்தில் நான் பேசுவது தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு மட்டுமே இருக்காது. ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் என் குரல் இந்திய பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும்.

இங்கே இன்னொன்றும் பதிவு செய்ய விரும்புகிறேன். வடக்கே நடக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலையும் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுமென வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம்.

பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பது மட்டுந்தான் உங்கள் நோக்கமா?

அப்படி ஒன்றும் நான் சொல்லவே இல்லையே. இந்திய தேச பாதுகப்பு மற்றும் ஒவ்வொரு குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கொண்டு வரும் எல்லா முயற்சிக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். கடந்தகாலத்தில் பார்த்திருப்போம். நீட், காவிரி பிரச்சனைகளில் இதே மத்திய அரசு தமிழர்கள் விரோத மனப்பான்மையை கடைபிடித்தது. தொடர்ந்து வரும் ஐந்தாண்டு காலத்திலும் இதே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஆளும் கட்சி நடந்துக் கொள்ளும் பட்சத்தில் எங்கள் எதிர்ப்பு குரல் பலமாக இருக்குமென உறுதியாக சொல்கிறேன்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்து இருக்கிறது. இதை பற்றி உங்கள் கருத்து?

தோழமை கட்சி என்ற காரணத்தால் எல்லா யூக கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. காங்கிரஸ் தலைவர் ராகுல் சொன்னதையே பதிலாக வைத்துக் கொள்ளுங்கள். மக்களின் தீர்ப்பிற்கு வண்ணம் பூச விரும்பவில்லை.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்த்து ஜெயிக்க முடியுமென்ற நம்பிக்கை இருந்ததா?

தனிப்பட்ட முறையில் டாக்டர் அவர்களை மதிக்கிறேன். அவரை எதிர்த்து நின்று ஜெயிக்க முடியாது என்பதெல்லாம் இல்லை. இங்கே மக்களுக்கான பிரச்சனைகள் தீரவில்லை. விவசாயிகளின் பிரச்சனைகள் தீரவில்லை. நாங்கள் அதை தான் முன்னெடுத்தோம். மக்களுக்கான பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் ஒவ்வொரு ஊரிலும் பேசினோம். எதிர்ப்பு அரசியல் மீது நம்பிக்கை இல்லை. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தான் தேவை என்பதால் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு, மக்களின் பிரச்சனைகளை பேசினோம். தீர்வுகள் சொன்னோம். மக்கள் எங்களை நம்பினார்கள். வாக்களித்தார்கள்.

வெற்றிக்கான வியூகத்தை எவ்வாறு வகுத்தீர்கள்?

பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இடத்தில் எதார்த்தங்கள் பேசினால் போதுமென்று நினைத்தோம். எங்கள் கட்சி நிர்வாகிகளும், கழக உறுப்பினர்களும் அதற்கு உறுதுணையாக நின்றார்கள். ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் அந்த ஊரின் பொதுவான பிரச்சனைகளை பேசி தீர்வு சொல்ல சொல்லுவார்கள். அது எதார்த்தமல்ல. பிரச்சனைகளின் வீரியம், அதை நிவர்த்தி செய்யக்கூடிய சாத்தியங்கள் எதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனோ, அல்லது துறை சார்ந்த வல்லுனர்களுடனோ ஆலோசிக்காமல் வாக்குறுதிகள் அளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லா ஊரிலும் சொல்லும் பிரச்சனைகளை கேட்டு மனதில் வைத்திருக்கிறேன். எதை எல்லாம் வெகு சீக்கிரமாக செய்ய முடியுமோ முதலில் அதை செய்வோம். தென்காசியை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை நான் இங்கே பிறந்து வளர்ந்து வந்த காரணத்தால் தொகுதிக்கு என்ன தேவை இருக்கு? எது அத்தியாவசியமானது என்ற கேள்விகளை என்னால் சுலபமாக உள்வாங்க முடிந்தது. போலியான வாக்குறுதிகள் எதையும் மக்களுக்கு உறுதிபடுத்தவில்லை.

வெற்றிக்கு பிறகு மக்களுடனான வரவேற்பு எப்படி இருக்கிறது?

தேர்தல் பரப்புரைக்கு வந்த கூட்டத்தை விட மக்கள் அதிகமாக கூடுகிறார்கள். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறோம். மக்கள் சந்திப்பில் மாலை/சால்வைகளை தவிர்த்து மாணவ/மாணவியர்களுக்கான நோட்டு புத்தகங்கள், புத்தக பைகள், எழுதுகோல்கள் கொடுக்குமாறு தாழ்மையான வேண்டுகோளை வைத்திருந்தோம். இதுவரையில் 1500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள், 200க்கும் மேற்பட்ட புத்தக பைகள், கணக்கற்ற எழுதுகோல்கள் குவிந்துள்ளன. இதை வைத்து நீங்களே மக்களின் வரவேற்பை யூகித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் நன்றி சொல்ல செல்கிறோம். தென்காசி, சங்கை, வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் போன்ற இடங்களிலும் கட்சி உடன்பிறப்புகள், தோழமை கட்சிகள், பொதுமக்களும் இதே நடைமுறையை பயன்படுத்தி மாணவ/மாணவியர்களுகாக உதவும் வகையில் பொருட்களாக கொடுத்து உதவினால் அவர்களுக்கு என் சிரம் தாழந்த மகிழ்ச்சியும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வேன்.

தொடர்ந்து மக்களை அடிக்கடி பார்ப்பீர்களா? ஓட்டு வேட்டைக்கு பிறகு எம்.பிகளை பார்க்க முடியவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறதே?

இங்கே தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. எம்.பி என்பதால் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்க முடியாது. மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். இயற்கை வளங்கள் பாதிக்காத, பொதுமக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவதில் மக்களின் பங்களிப்பும் அவசியம். பொதுச்சேவை என்பது கூட்டு முயற்சி. அதனால் மக்களுடன் கலந்தாலோசித்து அவர்கள் பிரச்சனைகளை தீர்க்க என்றும் தொடர்பில் இருப்பேன். தேர்தல் பரப்புரையில் சொல்லிருந்த மாதிரி விரைவில் மக்கள் என்னை நேரடியாக சந்திக்கவும், குறைகளை சொல்லவும் முதற்கட்டமாக இராஜபாளையம் பகுதியில் அலுவலகம் ஒன்று திறக்கப்படும். நானும் மக்களை எப்போதும் சந்திக்கலாம். மக்களும் என்னை எப்போதும் சந்திக்கலாம்.

இவ்வாறு கூறினார்.

 

 

Related Articles