வெளியிடப்பட்ட நேரம்: 15-Oct-2018 , 02:07 PM

கடைசி தொடர்பு: 15-Oct-2018 , 02:32 PM

கை கழுவும் தினம்

download

உலக கை கழுவும் தினம்- 2018

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 உலக கை கழுவும் தினமாக கடைப் பிடிக்கப்படுகின்றது. இந்த கொண்டாட்டம் 2008 வருடம் தொடங்கப்பட்டது.
இந்த வருட கொண்டாட்டத்திற்கு உள்ள மையக்கரு
“சுத்தமான கைகள் - ஆரோகியத்தின் நுழைவுசீட்டு”
“CLEAN HANDS- RECEIPE OF HEALTH”

முன்பு எல்லாம் வீட்டுக்கு வெளியே வாசலில் ஒரு அண்டாவும், சொம்பும் வைக்கப்பட்டு இருக்கும். வெளியே சென்று விட்டு வந்து வீட்டுக்குள் நுழையும் போது, அந்த அண்டாவில் உள்ள தண்ணீர் கொண்டு முகம் கை கால் எல்லாம் நன்றாக கழுவிவிட்டு, அப்புறம் தான் உள்ளே வருவோம். தற்போது உள்ள கட்டமைப்பில் வீட்டின் உள்ளே கடைசி மூலையில் உள்ள குளிக்கும் அறை சென்றுதான், கை கால் கழுவ முடியும்.

யாரும் நேரடியாக அந்த அறைக்குள் செல்லுவதில்லை. மாறாக ஹாலில் உள்ள இருக்கையில் கொஞ்ச நேரம் அமர்ந்து, டிவி பார்த்தோ, அல்லது, பிரிட்ஜ் திறந்து தண்ணீர் கொடுத்து, கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னரே, படுக்கை அறை கைப்பிடி திறந்து, பிரோவில் இருக்கும், வீட்டில் அணிவதற்கான ஆடைகளை எடுத்த பின்னரே குளிக்கும் அறைக்கு செல்லுகிறார்கள். இவர்கள் சோப்பு போட்டு குளித்து சுத்தமாக வந்தாலும், இது வரை இவர்கள் தொட்ட எதுவும் குளிப்பதில்லை.
இப்போது இப்படி ஒரு சூழ்நிலையில், இவர்களது கைகள் இந்த இடங்களுக்கு, நோய் பரப்பும் கிருமிகளை ஏற்கனவே இந்த இடங்களில் பரப்பி வைத்து இருக்கின்றன என்று சொன்னால் கோபப் படக்கூடும்.

நான் சுத்தமான அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்து விட்டு, ஏசி காரில் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். இப்படி எல்லாம் சொல்லுவது தவறு என்று மறுமொழி கூறக் கூடும்.

உண்மையில் இதற்கு முன் அந்த இருக்கையில், அறையில் இருந்தவரோ, உள்ளே வந்தவரோ இருமியோ, தும்மியோ இருக்கக்கூடும். அந்த கிருமிகள் காற்றில் உள்ள தூசிகளுடன் சேர்ந்து நுண்துகளாக (aerosol) மாறி அந்த அறையில் உள்ள பொருட்களின் மீது படிந்து இருக்கக்கூடும். இவருக்கே தெரியாமல், இங்கே வீட்டில் உள்ள கதவின் கைப்பிடிக்கு மாறி இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் கைகள் தன்னை அறியாமலையே இந்த நுண் கிருமிகள் பரப்ப துணை போகின்றன. அடிக்கடி கை கழுவுவது இங்கு அவசியம் ஆகின்றது.

எந்த எந்த கிருமிகள் எல்லாம் நுழைய வாய்ப்பு உள்ளது என்று பார்க்கும்போது, நமதுஉடம்பின் கழிவுபொருட்களே முக்கிய காரணம் ஆகிறது. ஒரு கிராம் மலத்தில் ஒரு ட்ரில்லியன் கிருமிகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சரியாக கழுவப்படாத கைகளின் மூலம் இவை மற்றவர்களுக்கு பரவக்கூடிய சாத்தியம் உண்டு.

சல்மோனெல்லா, ஈ-கொலி, நோர்வ வைரஸ், ரோட்டா வைரஸ் போன்ற கிருமிகள் முதலிடம் வைகிக்கின்றன. நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவுவதின் மூலம், வயிற்றுப்போக்கு 30% , நிமோனியா போன்ற சுவாச நோய் தொற்று ௨௦ % குறைக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சாப்பிடும் முன்னும்,பின்னும், மலங்கழித்த பின்னும், விளையாடிய பிறகும், நன்றாக சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.கைகழுவும் முறை:
* காலையில் படுக்கையில் எழுந்தவுடன், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
* மலம் கழித்தபின், சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
* எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட, பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
* வாகனம் ஒட்டி வந்தபின் கைகளை கழுவுவது நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களின் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே, கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை, அவர்கள் சீராக கடைபிடிக்கும்படி, செய்ய வேண்டும்.

* சோப்புகள் போட்டு கழுவ வேண்டும்

*கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

1. முதலில் தண்ணீரால் கைகளை நனைத்து, சிறிதளவு சோப்பு உள்ளங்கையில் படர விட்டு, இரு கைகளாலும் அழுத்தி தேய்க்க வேண்டும்.

2. இடது கையின் மேற் புரத்தில் வலது கையை வைத்து, விரல்களுக்கு இடையே விட்டு நன்றாக மேற்புறத்தை அழுத்தித் தேய்க்கவும்.

3. தற்போது வலது கையின் மேல் இடது கையை வைத்து, விரல்களை கோர்த்துக் கொண்டு அழுத்தித் தேய்க்கவும்.

4. இரு கையின் விரல்களை ஹூக் மாதிரி மாட்டிக் கொண்டு தேய்க்க வேண்டும்.

5.இடது கையின் பெரு விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் உள்ள பகுதியில் வலது கையின் பெரு விரல் வைத்து தேய்க்க வேண்டும்.

6.வலது கையின் பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவே இடது கையின் பெரு விரல் வைத்து தேய்க்க வேண்டும்.

7. மொத்தமாக மேலிருந்து கீழே இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் தேய்த்து கைகளை நீரால் கழுவி விட வேண்டும்.

கைகளை அவசர அவசரமாக, 2-3 வினாடிகளில் கழுவக்கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு, எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே நோய்கள் நெருங்காமல் தடுக்கலாம்.

-மருத்துவர் மா.இராதா M.B.,B.S., M.D., D.M

Related Articles