வெளியிடப்பட்ட நேரம்: 15-Jun-2020 , 08:21 AM

கடைசி தொடர்பு: 15-Jun-2020 , 08:21 AM

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்

FB_IMG_1592188945429

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்..

முதல் மரியாதை படம். சிவாஜி, இளையராஜா, பாரதிராஜா ஆகிய மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு அமைதியாக வருடிக்கொடுத்த நேரத்தில் அந்த மூவேந்தர்களுக்கு இணையாக நின்று விளையாடிய இன்னொரு மேஜிக் மலேசியா வாசுதேவனின் குரல்..

பூங்ங்..காற்று திரும்புமா, என் பாட்டை விரும்புமா? என்று கேட்ட அந்த குரலில்தான் எத்தனை வகையான ஏக்கத்தில் கலவைகள்? உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கறேன்.. நல்லவேஷம்தான் வெளுத்து வாங்கறேன்.. இரண்டாவது வரி எவ்வளவு நூறு சதவீத உண்மை.. பின்னணி பாடகன் என்ற ரோலில் அற்புதமாய் வெளுத்து வாங்கியவர்தானே மலேசியா?

நடிகர் திலகத்திற்கு டிஎம்எஸ்க்கு அடுத்தபடி எத்தனை கனக்கச்சிதமாய் பொருந்தியது மலேசியாவின் குரல். படிக்காதவனில், ஒரு கூட்டுக்கிளியாக பாட்டை மறக்க முடியுமா?

சாதனை படத்தில், நளினி ஆட, டைரக்டராய் நடிகர் திலகம் பாட, இங்கே நான் கண்டேன் கதை நாயகி.. என்றென்றும் வாழும் அனார்கலி, என டேக்ஆப் ஆகும் மலேசியாவின் குரல்..அப்படியே மேலேயே டிராவல் செய்து, காலங்கள் தோறும் வாழ வைப்பேன் பெண்ணல்லாம் பெண்ணல்ல உன்னை போலே.. என சீறி,,, நீ தானம்மா நான் தொழும் நாயகி என்று உருகும் பாருங்கள்.. மலேசியா வாசுதேவன் என்பவன் எப்படிப்பட்ட அசாத்திய திறமை கொண்ட கலைஞன் என்பது அங்கேதான் புரியும்..

மலேசியா வாசுதேவனின் ஆரம்பகாலம் மிகவும் சுவாரஸ்யமானது. குடும்பத்தில் அம்மாவைத்தவிர அப்பனும் எட்டு பிள்ளைகளும் அருமையாக பாடுவார்கள். பாட்டோடு நடிக்கும் ஆசையில் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த வாசுதேவனை தமிழகம் கைவிடவேயில்லை

மேடை நாடகங்கள், விளம்பரபடங்கள், ஆவண படங் கள் என நடிப்பும் குரலும் கலந்து எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது. இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷ் அவரின் உதவியாளர் இளையராஜா போன்றோரிடம் நட்பும் உண்டானது.

இந்த நிலையில்தான் கே.பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான வி.குமார் இசையில் 1972ஆண்டு டெல்லி டூ மெட்ராஸ் என்றொரு படம்.
ஸ்ரீவித்யா முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமான படம். அவர் மட்டும்தான் மங்களகரமாக வந்துபோவார்.

மற்றபடி ஜெய்சங்கர் நடித்த அந்த படமே கவர்ச்சி திடல்போல காட்சியளிக்கும் ஆளாளுக்கு வந்து காபரே சேவை புரிந்துவிட்டுத்தான் போவார்கள். காரணம், படத்தின் டைரக்டர் ஜேம்ஸ்பாண்ட் பட பிரியர். அதனால்தான் அநியாயத்துக்கு குலுக்கு குலுக்குவென குலுக்கும் ஒரு பெண்மேல் டைட்டில் முழுக்க ஓடவிட்டிருப்பார்..அந்த டைட்டிலில்தான் பின்னணி பட்டியலில் மலேசியா வாசுதேவ் என்று பெயர் வரும்.

கவர்ச்சிக்களமான டெல்லி டூ மெட்ராஷ் படத்தில் போதாக்குறைக்கு நாகேஷ்வேறு டீக்கடை காரராய் வந்து பால் விற்கும் பெண்ணிடம், இரட்டை அர்த்தத்தில்தான் பேசுவார்.. மூன்றுபடி பாலை கறந்து எடுத்துவந்திருக்கிறேன் என்று பால்காரியாய் வரும் அம்முகுட்டி புஷ்பமாலா சொன்னால், அவரின் உடம்பை உற்றுப்பார்த்துவிட்டு ஒன்றரை படி.. ஒன்றரை படி.. சேர்த்து மூணுபடியா என்பார்

ஆக, நாகேஷும் அம்முகுட்டி புஷ்பமாலாவும் டூயட் பாடினால் எப்படி இருக்கும்..அதுவும் இரட்டை அர்த்தம்தான். பாலு விக்குற பத்மா உன் பாலு ரொம்ப சுத்தமா? என்று நாகேஷ்க்கு பாடியது நம்ம மலேசியா வாசுதேவன்தான்.. பாடகர் ஏஎல் ராகவன் பாடியது மாதிரியே இருக்கும்.. தனித்தன்மை இருக்காது.

சிவாஜியின் பாரதவிலாஸ், கமலின் குமாஸ்தாவின் மகள் என ஆங்காங்கே பாடினாலும். 1977ல்தான் மலேசியா வாசுதேவனுக்கு அருமையான திருப்பம் கிடைத்தது.

இளையராஜா இசையில் வெளியான அவர் எனக்கே சொந்தம் படத்தில் சுராங்கனி, சுராங்கனி என்றாரு பாடல். மலேசியா வாசுதேவன் பாடிய அந்த படத்தில் பாடல்தான் அந்த ஆண்டின் இளசுகளின் தேசிய கீதம். சுராங்கனி பாடல் பாடப்படாத மேடைக்கச்சேரிகளே கிடையாது. அதுவும் கட்டாயம் ரிபீட் அடிப்பார்கள்.

அதேபோல 16 வயதினிலே படத்தில் செவ்வந்தி பூப்பறித்த சின்னக்காவும், ஆட்டுக்குட்டி முட்டை யிட்டும் மலேசியாவுக்கு டாப் கியரை போட்டுக் கொடுத்துவிட்டன.

தொடர்ந்து பாரதிராஜா-இளையராஜா காம்பினேஷ னில் ம.வே. புகுந்து விளையாடினார். கிழக்கே போகும் ரயிலில், கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ,… சிகப்பு ரோஜாக்களில் இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததோ, புதிய வார்ப்புகளில் வான் மேகங்களே… நிறம் மாறாத பூக்களில் ஆயிரம் மலர்களே மலருங்கள் என ஒவ்வொரு பாடலும் எவர் கிரீன் லிஸ்ட்டில் போய் உட்கார்ந்துகொண்டன.

தர்மயுத்தம் படத்தில் ஆகாய கங்கை பாடலும், ஒரு தங்க ரதத்தின் பாடலும் ரஜினி படங்களிலும் மலேசியாவுக்கு நிரந்தரமாய் சீட்டை போட்டுவைத்து விட்டன.

அதற்கேற்ற மாதிரி முரட்டுக்காளையின் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலும், அடுத்தவாரிசு படத்தில் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பாடலும் தரை மாஸ் என்று சொல்லும் வகையில் ரஜினிக்கே மைல்கற்களாக மாறிப்போய் விட்டன.

இன்றைக்கும் கல்யாணவீட்டு மேடைக்கச்சேரிகளில் பெரும்பான்மை பிடிப்பது மலேசியா வாசுதேவனின் பாடல்களாகவே இருக்கும் என்பதுதான் ஆச்சர்யம்.

புதுக்கவிதையின் வா வா, வசந்தமே
கோழிகூவுது படத்தின் பூவே இளைய பூவே..
மிஸ்டர் பாரத்தின்..என்னம்மா கண்ணு சௌக்யமா
கரகாட்டகாரனின் ஊருவிட்டு ஊருவந்து.
எஜமானின் எஜமான் காலடி மண்ணெடுத்து என பெரிய பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்.

எம்ஜிஆர் சிவாஜிக்கு இடையில் ஜெமினி எப்படி தனித்தன்மையோடு வலம் வந்தாரோ, அதே மாதிரி எஸ்பிபி, ஜேசுதாஸ் இடையில் மலேசியா தனியாக ஒரு ரூட்பிடித்து அமோகமாக வலம் வந்தார்..

பாடகரா மட்டுமல்ல, முதல் வசந்தம் உட்பட நடிகராக வும் எத்தனை படங்களில் அசத்தல்..அதிலும், ஒரு கைதியின் டைரி படத்தில் அந்த அரசியல்வாதி சூரியபிரகாசமாய் வந்த வில்லாதி வில்லத்தமான ரோல்..வாவ் ரகமே..

மலேசியா வாசுதேவனின் 76வது பிறந்த தினம் இன்று

-ஏழுமலை வெங்கடேசன்

Related Articles