வெளியிடப்பட்ட நேரம்: 31-Aug-2020 , 07:39 AM

கடைசி தொடர்பு: 31-Aug-2020 , 08:12 AM

அவன் ஒரு சுழல் - பாகம் -23

cover

பார்த்திபன் என்று தங்க நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மெரூன் நிற டைரி என் கண்களில் பட்டது.

ஆர்வமாய் அதை கையிலெடுத்தேன். ஒரு பெண்ணின் புகைப்படம் லேசாய் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது.

டைரியை திறக்க போன போது, ஹார்ன் சத்தம் கேட்டது. டைரியை மேசை மீது வைத்துவிட்டு ஃபைலை தூக்கிக் கொண்டு ஓடினேன்.

அதற்குள் டைனிங் டேபிள் பக்கத்தில் ஒருவன் குவளையில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தான்.

அடிக்கடி வந்து பழக்கப்பட்ட நண்பன் போல. தண்ணீரை குடித்துவிட்டு சோபாவிற்கு அருகில் வந்தான். "நீங்க தானே தமிழ். ஃபைல் எடுத்துட்டு வந்துட்டீங்களா?"

"ம்ம்" ஃபைலை நீட்டினேன்.

"பார்த்தி மீட்டிங்க்ல இருக்கான். அதனால தான் நான் வந்தேன். பை தி வே ஐம் அருண். நைஸ் டூ மீட் யூ" கைகளை நீட்டினான்.

என்ன இவன் தேவையில்லாம பேசிட்டு இருக்கான்.

"ம்...ம்... பார்த்திபன் இதை ரொம்ப அவசரம் னு சொன்னாங்க. "

"ம்...ம்... எஸ். அதுக்காக வீட்டுக்கு வந்துட்டு என்னை உங்களுக்கு அறிமுக படுத்தாம போறாதா? நானும் பார்த்தியும் ஸ்கூல்ல படிக்கும் போதுல இருந்தே ப்ரண்ட்ஸ். சேம் காலேஜ்ல படிச்சோம். சேம் கம்பெனில தான் ஒர்க் பண்றோம்."

"ஓ… சரி." இவன் போக மாட்டான் போல இருக்கே. பார்த்தியோட டைரில இவன் என்ன எழுதிருக்கான்? அந்த பொண்ணு போட்டோ யாரோடதுன்னு பார்க்கலாம்னா இவன் கிளம்ப மாட்டேங்கிறானே....

"என்னங்க நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீங்க அமைதியா இருக்கீங்க. "

"உங்களுக்கு நேரம் ஆகலையா? "

"என்னை விரட்டுறதுலயே குறியா இருக்கீங்க. சரி கிளம்புறேன்."

அவன் பார்வையே சரியில்லை. அவன் ஆளும் மண்டையும். ஒரு வழியா போய் விட்டான்.

அவசரமாக மாடிக்கு சென்றேன். டையரியை எடுத்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டேன்.

அந்த புகைப்படம் இருந்த பக்கத்தை முதலில் திறக்க நினைத்தேன். பிறகு, மனதை மாற்றிக் கொண்டேன்.

முதல் பக்கத்தில இருந்து ஆரம்பிப்போம்.

டையரியின் முதல் பக்கம்..

எதுவுமே எழுதப்படாமல் வெற்றிடமாய் இருந்தது.

தொடர்ந்து நான்கைந்து பக்கங்கள் எதுவுமே எழுதப்படவில்லை.

டையரில கூட இவன தெரிஞ்சுக்க முடியலையே. பெருத்த ஏமாற்றம்.

அப்படியே டையரியின் காகிதங்களை மொத்தமாய் என் விரல்களுக்குள் பிடித்து ஒவ்வொரு காகிதமாய் விடுவித்தேன். சட்டென்று ஒரு பக்கத்தில் நின்றது.

ஒரு அழகான பெண்ணின் புகைப்படம். நீல நிற புடவை அணிந்து, பூச்சூடி, சின்னதாய் கழுத்தில் ஒரு சங்கிலி, கைகள் இரண்டிலும் இரண்டிரண்டு தங்க வளையல் அணிந்திருந்தாள். வலது கையால் இடது கையின் முழங்கைக்கு கீழ் பிடித்தபடி நின்றிருந்தாள்.

அதிர்ச்சியான விசயம் என்னவென்றால் அந்த புகைப்படம் சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனாவால் பெரிதாய் பெருக்கல் குறி போட்டு வெட்டப்பட்டிருந்தது.

ஏன் இது இப்படி வெட்டப்பட்டிருக்கிறது? என்று தெரியவில்லை. புகைப்படம் இருந்த பக்கத்தில் மேனகா, வயது 25, அம்பேத்கர் நகர், அம்பத்தூர் என்று எழுதப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து நின்ற பக்கங்கள் எல்லாவற்றிலும் ஒவ்வொரு பெண்ணின் படம். எல்லாமே சிவப்பு குறியால் வெட்டப்பட்டிருந்தது.

என்ன இதெல்லாம்?... யாரு இந்த பொண்ணுங்க?.... எதுக்காக இவங்க போட்டோலாம் இப்படி ரெட் மார்க்ல க்ராஸ் போட்டு வச்சிருக்கு?....

வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தேன். அதில் ஒரு பெண்ணின் முகத்தை எங்கேயோ பார்த்தது போல இருந்தது.

இந்த பொண்ண நான் எங்கயோ பார்த்திருக்கேன். எங்க பார்த்தேன். அவளது பெயரை பார்த்தேன். சஞ்சனா என்று எழுதப்பட்டிருந்தது. பெயரை கூட கேட்ட மாதிரி இருக்கே. அந்த படத்தை மட்டும் மாற்றி வைத்தேன்.

அடுத்து நான் பார்த்த புகைப்படம் எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. அந்த படத்தில் இருந்த பெண்…

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-22-by-butterfly&i=10600

Related Articles