வெளியிடப்பட்ட நேரம்: 02-Sep-2020 , 08:09 AM

கடைசி தொடர்பு: 02-Sep-2020 , 08:09 AM

அவன் ஒரு சுழல் - பாகம் - 24

cover

அவள் கடைசியாக பார்த்த புகைப்படம் தன்னுடையது. மற்ற புகைப்படங்களை போலல்லாமல் இது எதார்தமாய் எடுக்கப்பட்ட கேன்டிட் ஷாட். அந்த படத்தை அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆனால் அந்த மஞ்சள் நிற, சிம்பிள் ஜரிகை புடவையும் நகைகளும் அவள் பள்ளி தோழியின் கல்யாணத்திற்காக சென்றிருந்த போது அணிந்திருந்தது.

அவளால் உறுதியாய் சொல்ல முடியும். ஒரு வருடத்திற்கு முன் விடுமுறையில் அவள் ஊருக்கு சென்றிருந்த போது தன் திருமணத்திற்கு தோழி அழைத்திருந்தாள்.

அவள் திருமணத்திற்கு என்று தயாராக வரவில்லை. அதனால் அம்மாவின் புடவையும், நகைகளையும் அணிந்துக் கொண்டு கல்யாணத்திற்கு சென்றிருந்தாள்.

இந்த படம் இவனுக்கு எப்படி கிடைத்திருக்கும்?. யோசித்து கொண்டிருக்கும் போது தான் கவனித்தேன். என் பெயர், விலாசம் எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு என் புகைப்படத்தில் சிவப்பு குறியீடு இல்லை.

வரிசையாக எல்லா புகைப்படத்தையும் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. எல்லாமே அழகான படித்த பெண்களின் புகைப்படம்..

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இவர்கள்? எதற்காக புகைப்படங்கள் இங்கிருக்கிறது? பார்த்திபனின் ரகசியம் என்ன? யாரிந்த பார்த்திபன்.?

டையரியை வைத்துவிட்டு, குழப்பமாய் மாமரத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ம்..ம்..ம்..ம்.. பார்த்திபனின் வயதொத்த மாமரம். அதிலிருந்த மரப்பொந்தில் ஒரு மைனா வெகு நேரமாக கத்திக் கொண்டிருந்தது. அது மரத்திற்கு கீழே தான் எதையோ பார்த்து பயப்படுகிறது.

பால்கனி கம்பிகளுக்கு அருகில் நடந்து சென்றேன். அங்கே என் செல்லப்பூனை நின்று கொண்டிருந்தது.

ஒரு மைனா, அதனோடு கொத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தது..

அவ்விரு மைனாக்களும் குஞ்சு பொரிக்க காத்திருக்கும் ஜோடிகள் போல. பூனையை பார்த்ததும் பயந்து விரட்ட முயற்சி செய்கிறது போல.

என் மனம் மைனாக்கள் மீதோ பூனையின் மீதோ இல்லை. முழுக்க முழுக்க டையரியில் இருந்த புகைப்படங்களின் யோசனையில் இருந்தது.

பூனையையும் மைனாவையுமே வெறுமையாய் பார்த்துக் கொண்டு நின்றேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மைனாவின் கழுத்து பட்டுவின் வாய்க்குள் இருந்தது. ஒரே பாய்ச்சல், அவ்வளவு தான், அந்த மைனா குரல் இழந்து சிறகுகள் படபடத்துக் கொண்டிருந்தது.

ஏதோ நினைவிலிருந்த என்னை அது உலுக்கியது. அந்த நொடியில் இரத்தம் உறைந்து மூச்சே நின்று போனது எனக்கு.

"பட்டு அத விடு. அப்படி பண்ணாத," பக்கத்தில் இருந்த ஒரு புத்தகத்தை தூக்கி அதன் மீது எறிந்தேன். பூனைக்குட்டி மைனாவை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டது.

உடனடியாக மாடி இறங்கி, மாமரத்தை நோக்கி ஓடினேன். அங்கே மைனா சிறகு தாழ்ந்து கால்கள் பலமிழந்து கிடந்தது. கையில் எடுக்கவும் அது தன் கடைசி மூச்சை விட்டிருந்தது.

இதுவரை வீட்டிற்குள் சேட்டைகள் செய்யாத பூனை அது. இப்படி நடந்து கொள்ளும் என்று இதுவரை நான் நினைத்ததே இல்லை. இந்த சாதுவான பூனையா இப்படி செய்தது. புலி இனத்தை சேர்ந்த பூனையின் குணம் வேட்டையாடுவது தானே!

இயற்கையை நொந்து கொள்ளவதை விட அதை ஏற்றுக் கொள்வதே சிறந்தது. அண்ணாந்து இன்னொரு மைனாவை பார்க்க எனக்கு தைரியமில்லை. அதன் அழுகுரல் என்னை இன்னும் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கியது. கொலைகாரன் நான் வளர்த்த பூனை.

எதுவும் செய்ய இயலா இயலாமையில், நான் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பாவியாய் தெரியும் பார்த்திபனும் பட்டுவின் குணம் கொண்டவனாய் இருந்தால்....???

என் மூளைக்குள் மின்னலடித்து.

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-23-by-butterfly&i=10603

Related Articles