வெளியிடப்பட்ட நேரம்: 05-Sep-2020 , 08:14 AM

கடைசி தொடர்பு: 05-Sep-2020 , 10:35 AM

அவன் ஒரு சுழல் - பாகம் - 25

cover

அவன் வருவதற்குள் டைரியை பத்திரபடுத்த வேண்டும். மீண்டும் மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தேன்.

சாதுவான பூனைக்குட்டி போல தானே பார்த்திபனும், சிரித்தபடி அங்கும் இங்கும் வட்டமிடுகிறான். அவனுக்குள் அசுர குணம் இருக்குமா?

அசுர குணம்! அப்படின்னா அந்த கனவு… எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது.

டைரியை எடுத்தேன். தனியாக எடுத்து வைத்திருந்த பெண்ணின் புகைப்படம் பறந்து என் காலில் விழுந்தது. கையிலெடுத்து பார்த்தேன்.

சிரித்துக் கொண்டிருந்த அந்த பெண் பச்சை நிற குர்தா அணிந்திருந்தாள். அவள் கூந்தலை விரித்துவிட்ட படி மாடர்னாக தெரிந்தாள். அவள் என்னையே பார்ப்பது போல இருந்தது.

"சஞ்சனா" மறுபடியும் அந்த பெயரை சொல்லிக் பார்த்தேன். நிச்சயம் இவளை சந்தித்திருக்கிறேன். அடடா என்ன அழகென்று நானே வியந்திருக்கிறேன். ஆனால் எப்பொழுது, எங்கே ஞாபகமே வரவில்லை.

மாடியிலிருந்து இறங்கி சோபாவில் வந்து அமர்ந்தேன். நியூஸ் பேப்பரை பார்த்ததும் ஞாபகம் வந்தது.

ஆறு மாதமோ, ஒரு வருடத்திற்கு முன்போ, ஏதோ செய்தித்தாளில் தான் இவளை பார்த்தேன்.

அம்பத்தூரில் இருந்து அன்னனூர் வழியாக ஆவடி செல்லும் பாதையிலிருக்கும் காட்டு பகுதியில், இளம்பெண்ணின் சடலம். இப்படித்தான் அந்த செய்தி தலைப்பு இருந்தது. அந்த செய்தியின் ஒவ்வொரு வரியும் எனக்கு அப்படியே மனப்பாடமாய் பதிந்திருந்தது.

அந்த பெண்ணின் முகம் அவ்வளவு அழகு. அவளின் புன்னகை முகம் பார்த்தே அந்த செய்தியை படித்தேன். தலைப்பை பார்த்து பகீரென்றானது எனக்கு.

நான் ஏதோ சாதனைப் பெண் என்று அவளின் முகம் பார்த்து செய்தியை வாசிக்க போனால், எனக்கு நம்ப முடியாத அதிர்ச்சியை தந்திருந்தது. அவளின் காதலனே அவளை பலவந்தப்படுத்தி, கொன்றிருக்கிறான்.

அடுத்த நாள் வந்த பத்திரிகையில் அவளது அலங்கோலமான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்கள். அந்த முகம் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவு உருகுலைக்கப் பட்டிருந்தது. இந்த மாதிரி ஒரு முகத்தை இப்படி செய்ய எப்படி அவனுக்கு மனம் வந்தது?!

அந்த செய்தி எனக்கு இப்போதும் கண்ணீரை வரவழைத்தது. அவளது புகைப்படம் பார்த்து அழுது கொண்டிருக்கிறேன்.

ஒரு வேளை அவளின் அந்த காதலன், பார்த்திபனாய் இருந்தால்…

நினைக்கும் போதே என் உடல் முழுக்க வியர்வையில் நனைந்து போனது. இப்போது என்ன செய்வது? வீட்டை விட்டு கிளம்பிவிடுவோமா? அவனுக்கு தான் என் அட்ரஸ் தெரியுமே!

அப்படி என்றால் ஊருக்கு போய் விடலாம்.! அவன் அங்கேயும் தேடி வந்துட்டா? அங்கேயும் வீட்ல தனியா தானே இருப்போம்.

இல்ல, உடனடியா வீட்டை விட்டு போனா சந்தேகம் வந்திடும். அவன் கூடவே இருந்தா தான் அவனோட ப்ளான் தெரிஞ்சுக்கலாம்.!

உடனடியாக எனது அறைக்குள் சென்று, என் பையில், துணிகளுக்கு இடையில் டையரியை மறைத்து வைத்தேன்.

எதுவும் தெரியாதது போல சோபாவில் அமர்ந்து கொண்டேன்.

பார்த்திபன் உள்ளே நுழைந்தான். அவன் ரொம்ப உற்சாகமாய் இருந்தான்.

"ஹே.. தமிழ்! இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன். மீட்டிங்க சக்ஸஸ். கண்டிப்பா ப்ரோமோசன் கிடைச்சிடும்."

நான் அமைதியாகவே இருந்தேன்.

"தமிழ். ஆர் யூ ஓகே?. என்னாச்சு? உடம்பு சரியில்லையா? ." அவன் அக்கரையாய் கேட்கிறானா? இல்லை நடிக்கிறானா?

அவன் தான் கொலைகாரன் என்று முடிவு செய்த பிறகும் எப்படி இவன் முகம் பார்த்ததும் என் மனம் குழம்புகிறது. இவனால் எப்படி அந்த கொலையை செய்திருக்க முடியும். ஒரு வேளை நான் தான் தவறாக புரிந்து கொண்டேனா?

பாவம் பூனைன்னு நினைச்சு எடுத்து வளர்த்தோம், அது அப்படி செய்யும் போது இந்த பாவமான முகம் ஏன் அப்படி செய்திருக்க கூடாது? அந்த நினைப்பு அவன் மேல் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.

"கொலகார பூனை."

"என்ன சொன்னீங்க தமிழ்?." அவன் முகம் சட்டென்று அதிர்ச்சியானது.

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://t.co/xfm9k5ln0w

Related Articles