வெளியிடப்பட்ட நேரம்: 08-Sep-2020 , 10:52 AM

கடைசி தொடர்பு: 08-Sep-2020 , 10:52 AM

அவன் ஒரு சுழல் பாகம் - 26

cover

அடக்க முடியாத கோபத்தில் சொல்லி விட்டேன், "கொலைகார பூனை"

பார்த்திபனின் மகிழ்வான முகம் மாறி கோபமானது…

"என்ன சொன்ன இப்போ?"

"ஒண்ணுமில்ல."

"இப்போ என்ன சொன்னேனு சொல்லுறியா இல்லையா?" ஆத்திரத்தில் கத்தினான்.

"இல்ல நம்ம வீட்ல இருக்கே குட்டி பூனை பட்டு அது மைனாவ கொன்னுடுச்சு." கைகால்கள் விறைக்க நடு நடுங்கியபடி சொன்னேன்.

அவன் வேக வேகமாக மாடிப்படி ஏறினான். சோபாவிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. உள்ளுக்குள் பயத்தை தவிர எதுவும் இல்லை.

மாடியில் பொருட்கள் எல்லாம் தூக்கியெறியும் சத்தம். மேலே போய் பார்ப்போமா வேண்டாமா… பயமாக இருக்கிறது…!!!

கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு மாடி ஏறினேன். சினிமாவில் பேய் பங்களாவில் மாடியேறும் ஹீரோ ஹீரோயின்களுக்கென்று இசைக்கும் பின்னணி இசை இப்போது என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

படிகளிலிருந்தே எட்டிப் பார்த்தேன். அறைக்கு வெளியே சில பைல்களும் துணிகளும் சிதறிக் கிடந்தது.

நிச்சயம் டையரியை தான் தேடுகிறான். என்னை கொல்ல நிச்சயம் நாள் பார்த்திருப்பான். நாள் கிழமை பார்த்ததெல்லாம் மறந்து இன்றே என் உயிரெடுக்க போகிறான்…

இப்படியே இறங்கி தப்பித்து ஓடிவிடுவோம்.

'ஓடிடு தமிழ்… ஓடு..... ஓடு..!" என் மனசாட்சி உள்ளுக்குள் என்னை பாதுகாக்கத் துடித்தது.

எனக்கு தான் கால்கள் அசையவே இல்லை. அங்கேயே பசையால் ஒட்டப்பட்டது போல என் கால்களை நகர்த்த முடியவில்லை.

அதீத பயம் வரும் போது, அவ்வளவு தான் இதற்கு மேல் எதுவுமில்லை என்ற வாழ்வா சாவா போராட்டத்தில், ஒரு நொடி நமக்குள் அசாத்திய தைரியம் ஒன்று வரும்.

இதே ஒரு நொடி தைரியம் தான் என்னை மாடியிலிருந்து குதிக்கச் சொன்னது.

இப்போது பார்த்திபனை நேரடியாக எதிர்க்கச் சொல்கிறது.

அவனிருந்த அறைக்கு சொன்றேன். அந்த அலமாரி மொத்தமும் காலியாக இருந்தது. அதிலிருந்த அனைத்தும் தரையின் மீது கொட்டிக் கிடந்தது.

என்னை பார்த்ததும் பலத்த சத்தத்தில் சிரித்தான்.

"உண்மையெல்லாம் தெரிஞ்சுகிட்ட போல.."

இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தால், திடீர் தைரியம் மறைந்து ஓடி தப்பித்திருப்பேன். சிங்கத்தின் குகைக்குள்ளே மாட்டிவிட்டதாய் மனம் என்னை நொந்தது. எதுவும் பேச முடியாமல் அங்கேயே அமைதியாக நின்றேன்.

"டையரில எல்லாரையும் பார்த்தியா? ரொம்ப அழகான பொண்ணுங்க இல்ல. எல்லாரும் ரொம்ப நல்லவங்க உன்னை போல… "

"................."

" இப்போ யாரும் உயிரோடு இல்ல. பாவம்… என்னோட அடுத்த பலி யாரு தெரியுமா?"

"................."

"ஹா ஹா ஹா ஹா உனக்கே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் மறுபடியும் சொல்றது தானே வில்லன் ஸ்டைல். அடுத்து நீ தான். "

"................."

ஒற்றைப் பாய்ச்சலில் என் பின்னங்கழுத்தை இறுக்கி விட்டான்.

" என்னை விட்டுடு ப்ளீஸ். இதுக்கு தான் என்னை காப்பாத்தினியா? அன்னைக்கு என்ன அப்படியே விட்ருந்தா செத்துருப்பேன்ல."

"ஐயோ அப்படிலாம் உன்ன ஈசியா சாக விட முடியுமா? நீ என்னை லவ் பண்ணும். உருகி உருகி லவ் பண்ணணும். அப்புறம் தான் நான் உன்ன கொல்லணும். நான் உன்ன கொல்லும் போது அப்படியே நாம இவ்ளோ தூரம் காதலிச்ச ஒருத்தனே கொல்லுறானே கண்ணுல ஒரு ஏமாற்றம், பயம், கவலை, நீ யோசிச்ச கனவெல்லாம் அப்படியே பொய்யா போகும் போது வருமே ஒரு விரக்தி…. அதெல்லாம் பார்க்கும் போது எனக்குள்ள அப்படியே சிலிர்க்கும் பாரு. சொன்னா புரியாது. அனுபவிச்சா தான் புரியும். "

இப்படி ஒரு ரசனையா? இவன் என்ன சைக்கோவா? இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? என் மனம் தவித்துக் கொண்டிருந்தது.

பேசிக் கொண்டே என் கை கால்களை கட்டிப் போட்டான்.

" சும்மா சொல்ல கூடாது. இவ்ளோ நாள் பண்ணின கொலையிலயே சஞ்சனா தான் செம பொண்ணு. அவளுக்கு என் மேல எவ்ளோ லவ் தெரியமா? கொல்ல பேறேன்னு சொன்னதும் சிரிச்சா… முதல் கீறல் அவ முகத்தில விழ ஆரம்பிச்சதுல இருந்து கடைசியா அவ கழுத்தை அறுக்கிற வர சிரிச்சிக்கிட்டே இருந்தா அவ்ளோ லவ். "

" ஆனா நீ இருக்கியே ராங்கி பிடிச்சவ. இரண்டு தடவை லவ் ப்ரொபோஸ் பண்றேன். பெரிய இவ மாதிரி சீன் போடுற. "என் வாய் ஊமையாகி போனதா? இல்லை அவன் கொன்றால் கொன்று போகட்டுமென்று கல்லாகி போனதா… அவனின் இத்தனை பேச்சிற்கும் அமைதியாக இருந்தேன்.

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பாகத்தை வாசிக்க  இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-25-by-butterfly&i=10637

Related Articles