வெளியிடப்பட்ட நேரம்: 14-Oct-2018 , 09:25 AM

கடைசி தொடர்பு: 14-Oct-2018 , 09:25 AM

கத்தோலிக்க வரலாறு

images (16)

       ஒரு மீட்பரை எதிர்பார்த்திருக்கும் யூதர்கள் மத்தியில், யூதராய் தோன்றுகிறார் இயேசு. இவர் பிறப்பு கி.மு 6 முதல் 4க்குள் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இளம் போதகராய், யூத மத குருக்களை வெளிப்படையாக கண்டிக்கிறார். அவரின் போதனைகள் மனிதம் சார்ந்ததாக இருக்கின்றன அமைப்பு சார்ந்ததாக இல்லை.

மோயீசனின் பத்து கட்டளைகளை சுருக்கி, “எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசி; தன்னைத்தானே நேசிப்பது போல பிறறையும் நேசி” என்கிறார். ஒருவருக்கொருவர் அன்பு செய்வது, பகைவரை மன்னிப்பது, கடவுளின் அளவில்லா இரக்கம், பாவத்திற்கு மன்னிப்பு இவையே இயேசுவின் முக்கிய போதனைகளாயிருந்தது. வெறும் போதனைகள் மட்டுமில்லாமல் சில அற்புதங்களையும் இயேசு செய்கிறார். இவர் இறைமகன் என பலரும் சொல்ல இந்த அற்புதங்கள் உதவுகின்றன.

இயேசு 12 சாதாரண மனிதர்களை (அதிகம் மீனவர்கள்) தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து தன் செய்தியை பரப்ப அவர்களை தயார் செய்கிறார். இவர்களில் ஒருவரான தோமையார்(தாமஸ்) சென்னை வந்து, இங்கே கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளார். சாந்தோம் தேவாலையத்தில் இவரது கல்லறை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இயேசு தன் சீடர் இராயப்பரை(பீட்டர்) சீடர்களின் தலைவராக நியமிக்கிறார். “நீ இராயப்பர். உன் மீது என் திருச்சபையை கட்டுவேன்…விண்ணரசின் திறவுகோல்களை உன் கையில் கொடுப்பேன்” என்கிறார் இயேசு. பீட்டரைத் தொடர்ந்து வருபவர்கள் போப் எனப்படும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள். யூத மதக் குருக்கள் இயேசுவை தெய்வ நிந்தனை(Plasphemy) செய்பவன் எனச் சொல்லி அவரை சிலுவையில் அறைந்து கொல்லும்படி உராமை(Rome) அரசை வலியுறுத்தி அதில் வெற்றி பெறுகின்றனர். சிலுவையில் அகால மரணமைடைந்த இயேசு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்து சீடர்களுக்குத் தோன்றுகிறார். நாற்பதாவது நாள் ‘உலகெங்கும் போய் என் நற்செய்தியை அறிவியுங்கள்’ எனச் சொல்லிவிட்டு வானகம் செல்கிறார். இவை அனைத்தும் மத்தேயு, லூக், மாற்கு மற்றும் ஜான் எழுதிய நற்செய்திகள் எனப்படும் Gospelகளிலிருந்து பெறப்படும் விவரங்கள். இதற்குப்பின் அவரின் சீடர்கள் ஊர் ஊராகத்திரிந்து பல யூதர்களிடமும் யூதரல்லாதவர்களிடமும் இயேசுவின் போதனைகளை பரப்புகிறார்கள். பொது வழிபாடு என எதுவும் இல்லை எனினும், ஆதி கிறித்தவர்கள் தங்கள் சொத்துக்களைக் கூட பொதுவில் வைத்து ஒன்றாய் வாழ்ந்ததாக ‘அப்போஸ்தலர் பணி’ எனும் விவிலிய புத்தகம் சொல்கிறது.

கிறித்துவ மதம், முழுவதுமாய் உருப்பெறாத இந்த நாட்களில் பல பிரிவினைகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்துவந்தன. கி. பி 50ல் ஒரு சங்கமமைத்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கால கட்டத்தில் புனித பால் கவனிக்கத்தக்கவராகிறார். பால் கிறித்தவர்களை கொன்றுபோடச் செல்லும் படைத் தளபதி. வழியில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைக்கிறது. கடவுளின் குரல் கேட்கிறது. அதுமுதல் கிறித்துவை நம்பலானார். கத்தோலிக்க கிறித்துவக் கோட்பாடுகள் பலவும் புனித பால் வறையறுத்தார். இவர் அன்றைய கிறித்துவ மக்களுக்கு எழுதிய கடிதங்கள் பைபிளில் அடக்கம். கி. பி 50 வாக்கில்தான் நற்செய்திகள் எழுதப்பட்டன என கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயேசு இறப்புக்கு 25 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பின். கி.பி 69ல் நீரோவின் உரோமை அரசு கிறித்துவர்களை கொடுமைப் படுத்தி கொல்ல ஆரம்பிக்கிறது. பீட்டர் சிலுவையில் தலைகீழாக அறையப்படுகிறார். புனித லினஸ் பொறுப்பேற்கிறார். Quo Vadis என்கிற ஆங்கிலப் படத்தில் இந்தக் காலத்தை அழகாகச் சொல்லியிருப்பார்கள். பயந்து வாழும் கிறித்துவர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ள மீன் குறியீட்டை பயன்படுத்தினர். இன்றும் அமெரிக்க கார்களில் இந்த அடையாளம் பார்க்கலாம். அதிகம் கிறீத்தவர்கள் இறக்க, இறக்க கிறித்தவம் அழியாமல் தழைக்கவே செய்தது.

கி.பி 110 ஆன்டியொக்கின் பிஷப் இக்னேஷியச் முதன்முறை ‘கத்தோலிக்க திருச்சபை’ எனும் பெயரை பயன்படுத்துகிறார், பெயர் நிலைக்கிறது. வரலாறு பல போராட்டங்களுடன் தொடர்கிறது. பலமுறை பல அரசர்களால் கிறித்துவர்கள் கொடுமை படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். யூத பழக்கங்கள் பல கைவிடப்பட்டன மற்ற மதங்களிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் பழக்கங்கள் பெறப்பட்டன. கி.பி 150ல் பைபிள் தொகுப்பாக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சபை வளர்ந்தது. உரோமை பேரரசர் கான்ஸ்டாண்டைன் கிறீத்தவர்களுக்கெதிரான துன்புறுத்தலை நிறுத்தினார், ஒருவகை மத நல்லிணக்கத்தை நிறுவ முயற்சித்தார். நிசியாவில் ஒரு குழு கூடி கடவுள் மகன்(இயேசு) பரிசுத்த ஆவி எனும் மூன்றும் ஒன்றான கடவுள் கொள்கையை உருவாக்கினர். தமத்திரித்துவம் (The Holy Trinity) என இது அழைக்கப்படுகிறது. ‘ஆரிய கிறீத்துவர்களின்’ (அந்தக் காலத்தில் இருந்த ஒரு கிறித்துவக் குழு) கடவுள் ஒருவரே, இயேசு அவரின் தூதரே எனும் கொள்கை மறுக்கப்பட்டது. கான்ஸ்டாண்டின் கிறித்துவத்தை அங்கீகரிக்கிறார். அவருக்குப் பின் தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு கிறீத்துவத்தை அரச மதமாக அறிவிக்கிறார். கத்தோலிக்கம் உரோமை அரசின் ஆட்சி மதமாகிறது ‘ரோமன் கத்தோலிக்கம்'(RC) எனப் பெயர் வருகின்றது.பைபிள் பழைய, புதி ஏற்பாடாக வரையறுக்கப்படுகிறது. மற்ற புத்தகங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஆர்த்தடாக்ஸ் கிறித்துவமும் கத்தோலிக்க கிறித்துவமும் கி.பி 476 வாக்கில் பிரிகின்றன. கி.பி 638ல் இஸ்லாமிய படைகள் கிறித்துவத்தை குறிவைத்து தாக்குகின்றன. பல நாடுகள் இஸ்லாமிய படையின் கீழ் வருகின்றன. 1095ல் போப் அர்பன் சிலுவைப் போரை அறிவிக்கிறார் கிறித்துவரல்லாத, சில கிறித்துவ, அரசாங்கங்கள் சிலுவைப்போராளிகளால் வீழ்த்தப்படுகின்றன. புனிதத் தலம் (Holy Land) ஆன எருசலேமை இஸ்லாமியர்களிடமிருந்து கைப்பற்றுவதே சிலுவைப் போரின் முக்கிய நோக்கம். இன்றும் ஆறா வடுவாய் சிலுவைப் போர்கள் கிறித்துவத்தின் வரலாற்றில் நிலைக்கின்றன.

1517ல் மார்டின் லூத்தர்(அமெரிக்கர் அல்ல) கத்தோலிக்க திருச்சபை காணிக்கைக்கு/காசுக்கு ஆன்மீக பரிகாரங்களை(Indulgance) வழங்குவதை எதிர்க்கிறார். 1582 போப் கிரகொரி தற்கால காலண்டரை அறிவிக்கிறார். ஒரு கால கட்டத்தில் திருச்சபை பல அரசாங்கங்களை தன் கைக்குள் வைத்திருக்கும் மாபெரும் அரசியல் சக்தியாக விளங்கியது. கலை, இலக்கிய, அறிவியல் படைப்புக்கள் எல்லாமே திருச்சபையின் அனுமதியுடனேயே வெளியிடப்பட்டன. மைக்கல் ஆஞ்சலோ, டா வின்சி, கலிலியோ போன்றவர்கள் திருச்சபையின் கண்காணிப்பில், நிற்பந்தத்தில் படைப்புக்களை உருவாக்க நேர்ந்தது. இரண்டாவது சிலுவைப்போரும், ஸ்பானிஷ் இன்குயிசிஷன் போன்ற கறுப்பு நிகழ்வுகளும் நடந்தேறின. இந்தியா, இந்தோனேசியா துவங்கி ஆசிய நாடுகளிலும் கிறித்துவம் பெரிதாய் பரவ ஆரம்பித்தது.

இடையே 1500களில் இங்கிலாந்து அரசர் தன் திருமணத்தை ரத்து செய்ய போப்பை கோரினார். அது மறுக்கப்படவே தன்னை ரோமன் கத்தோலிக்கத்திலிருந்து விலக்கிக்கொண்டு இங்கிலாந்து திருச்சபை (Church of England) என ஒன்றை ஆரம்பித்தார்.

மார்ட்டின் லூத்தரின் கத்தோலிக்க எதிர்ப்பும் சேர்ந்து ப்ராட்டஸ்டாண்ட்(Protestant) திருச்சபைகள் வளர ஆரம்பித்தன. ம்ம்ம் வரலாறு சோர்வளிக்கிறதா? ஒரு வேடிக்கையான நிகழ்வு. மார்டின் லூத்தர் ஒரு கத்தோலிக்க பாதிரியாரிடம் சென்றார். “நூறு ரூபாய் காணிக்கையாய் தந்தால் என் மாமாவின் ஆவி சொர்க்கம் போய்விடுமா?” என்றார். பாதிரியாரும் “ஆமாம்” என்றார். மார்டின் லூத்தரும் காசை பாதிரியாரிடம் தந்தார். கொஞ்ச நேரம் கழித்துவந்து “ஃபாதர் என் மாமா ஆவிதான் சொர்க்கம் போயிருக்குமே அந்தக் காசை திருப்பிக் கொடுங்கள் என்றார்”. நல்லதும் கெட்டதுமாய் வளர்ந்து வந்தது திருச்சபை. 1962 முதல் 1965 வரை இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூடி இன்று திருச்சபை எப்படி உள்ளதோ அதை வரையறுத்தது. பல கலாச்சாரங்களோடு திருச்சபை இணங்கியது. திருச்சபை கதவை அகலத் திறந்தது. லத்தீன் மட்டுமல்லாமல் மக்கள் தத்தம் மொழியில் வழிபாடுகளில் பங்கெடுக்க முடிந்தது. இரண்டாம் வத்திக்கான் கவுன்சிலின் முக்கிய நோக்கமே “திருச்சபையின் சன்னல்களைத் திறந்துவிட்டு நம்மால் மக்களைப் பார்க்கவும் மக்களால் நம்மை பார்க்கவும் வழி வகுப்பது” என்பதுதான். 20 நூற்றாண்டு கண்ட பல சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல திருத்தங்களை திருச்சபை செய்தது. இன்றும் பல மாறுதல்களைத் தொடர்ந்து செய்துகொண்டு பயணிக்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. இதைவிட குறுகலாக கத்தோலிக்க கிறித்துவத்தின் வரலாற்றை சொல்ல முடியாது என நினைக்கிறேன்.

- ப்ரான்ஸிஸ்

Related Articles