வெளியிடப்பட்ட நேரம்: 02-May-2018 , 05:32 AM

கடைசி தொடர்பு: 16-May-2018 , 05:18 AM

ஹிட்ச்சாக் ஹிட்ஸ் - 2

39-Steps

02.The 39 steps (1935)


ஹிட்ச்காக் இங்கிலாந்து நாட்டுக்காரர். இலண்டன்வாசி. ஆங்கிலப்படம் எடுத்து வெற்றி பெற்றாலும் ஹாலிவுட்டுக்கு இணையாகுமா? ஹாலிவுட்டுக்கு செல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்கு முன்பு தன்னை நிருபித்தாக வேண்டும். The lodger படத்திற்கு பின் பல படங்கள் எடுத்து வெற்றியும் பெற்றாலும் வசூல்ரீதியில் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தால் தான் ஹாலிவுட்டிற்கு செல்கையில் கௌரவமாக நினைத்தாரோ என்னவோ, ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் த்ரில்லர் கம் எண்டர்டெய்ன் படம் எடுத்தார். அந்த படம் தான் The 39 steps.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக சொல்லப்படும் விஷயம் படத்தில் கதைக்கு தேவைப்படாமல் ஒரு காட்சி கூட இருக்கக் கூடாது. ஒரு நல்ல த்ரில்லர் படமென்றால் தேவையில்லாமல் ஒரு கதாபாத்திரம் கூட உள்ளே வரக் கூடாது. அதை தெளிவாக மனதில் கொண்டு இழைக்கப்பட்ட திரைக்கதையை இப்படம் கொண்டுள்ளது. இதற்கு மேல் படிக்காமல் சென்று Youtubeல் இந்த படத்தினை பார்ப்பவர்கள் புத்திசாலிகள். ஏனெனில் இப்படத்தை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் பார்ப்பதை போன்றொரு சுவாரசியமான அனுபவம் கிடைப்பது அபூர்வம். சுஜாதாவின் வசந்த் கதாபாத்திரத்தை மனதில் வைத்து எழுதினால் இது போன்றொரு படத்தை தமிழில் எடுக்கலாம்.

படத்தின் இணைப்பு

https://www.youtube.com/watch?v=X2Ihm05u8Pk

படத்தின் துவக்கத்தில் ஒரு இசை நிகழ்ச்சி, அதில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. பின் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப் படுத்துகிறார்கள். அவர் பெயரே “மெமெரி”தான். அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்திருப்பார். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொருவராக கேட்கிறார்கள். எந்திரன் சிட்டி போல பதில் சொல்லி அசத்துகிறார். இடையில் ஒருவர் இரண்டு நகரங்களுக்கு இடைப்பட்ட தொலைவை கேட்கிறார். அவை கனடா நாட்டை சேர்ந்ததால் கேள்வி கேட்பவர் கனடா நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்பது நமக்கு தெரிய வைக்கப்படுகிறது. அவர் தான் நாயகன். சற்று நேரத்தில் கலவரம் ஏற்படுகிறது. துப்பாக்கி வெடிக்கிறது. மக்கள் பதறி ஓடுகிறார்கள். வெளியேறுகையில் நாயகனுடன் ஒரு பெண்ணும் இணைந்து கொள்கிறாள். அவன் வீட்டிற்கு அழைத்து போக சொல்கிறாள். இளம்பெண் வந்தால் வேண்டாம் என்று யார் சொல்வார்?

வீட்டிற்கு வந்த பின் தான் அவள் ஒரு உளவாளி என்றும் அவளை கொலை செய்ய இருவர் தொடர்வதையும் சொல்லி விட்டு, தானறிந்த இரகசியத்தின் பெயர் மட்டும் சொல்கிறாள். அதுதான் 39 ஸ்டெப்ஸ். தனது எதிரிக்கு சுண்டு விரல் பாதி தான் இருக்கும் என்று சொன்னவள் மீதத்தை காலையில் சொல்கிறேன் என்று உறங்க செல்கிறாள். நடு ராத்திரியில் கையில் ஒரு மேப்பை தந்து விட்டு இறக்கிறாள். வீட்டிற்கு வெளியே கொலைகாரர்கள்? வீட்டினுள் முன்பின் தெரியாத பெண்ணின் பிணம்? இங்கு துவங்கும் படத்தின் வேகமும் சுவாரசியமும் இறுதி வரை குறையவில்லை.

வீட்டை விட்டு வெளியேறினால் கொலைகாரர்கள் பிடித்து கொன்று விடுவார்கள். உள்ளேயே இருந்தால் போலீஸ் வந்து விடும். தனக்கு இரகசியம் ஏதும் முழுதாய் தெரியாது என்றாலும் யாரும் நம்ப போவதில்லை. என்ன செய்யலாம்? எப்படியாவது தப்பித்து ஊரை விட்டு ஓட வேண்டும். எங்கு போவது? வெளி நாட்டில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவள் தந்த மேப்பின் இருக்கும் ஊருக்கு செல்வோம் என்று முடிவெடுத்து கிளம்புகிறான்.

இரயிலில் போலீஸ் வருகையில் தப்பிக்க அழகான இளம்பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து காதலன்/கணவன் போல் நடிக்க முயல்கிறான். நீங்கள் யூகித்தது சரிதான். அவள் தான் கதா நாயகி. ஆனால் முத்தத்தை மட்டும் இரசித்து விட்டு காவலர்களிடம் மாட்டி விடுகிறாள். இந்த காட்சிகளெல்லாம் எங்கே எப்படி என்றெல்லாம் சொல்லி விட்டால் பார்க்கையில் சுவாரசியம் போய்விடும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் தன் ஹாஸ்யத்தை விட்டு தராமல் ஓடிக் கொண்டே இருக்கும் நாயகன் மிகவும் ஈர்ப்புக்குறியவன்.எங்கெங்கோ ஓடி திரும்பவும் நாயகனும் நாயகியும் ஒரு கை விலங்கில் ஒன்றாக மாட்டிக் கொண்டு அலையும் நிலை வருகிறது. அப்போது நாயகனின் நக்கலை பார்க்கனுமே? மாட்டிக் கொண்ட பின்னும் கூட கொன்று விடுவார்கள் என்று கொஞ்சம் கூட பதற மாட்டார். வில்லன் அறிமுகமே அட்டகாசமாக இருக்கும். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நாம் வேண்டுமானால் யூகிக்கிலாம். அப்போது படம் பார்ப்பவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என சிந்தித்து பார்க்கிறேன்.

ஒரு சமயத்தில் காவலர்களிடம் இருந்து தப்பி ஓடுகையில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் சிறப்பு பேச்சாளராக ஆள்மாறாட்டம் செய்து பேசுகையில் பார்க்கனுமே? ஒருபக்கம் கீழே தன்னை கொலைகாரன் என நினைக்கும் நாயகி, இருபுறமும் வில்லனின் ஆட்கள், வெளியே காவலர்கள், இதற்கிடையில் தன் பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் வாக்காள பெருமக்கள், வக்கீல் வண்டு முருகனைப் போல் தன் சொந்த பிரச்சனையை கலந்து பேசி கைதட்டல் வாங்குமிடம் பயங்கர சிரிப்பை வரவழைக்கும். அது முடிந்து கைதாகி போகும் போது கூட மக்களிடம் கைகாட்டி கரகோஷங்களுடன் செல்வார்.

படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. ஒரு சாமானியனுக்கு இவ்வளவு அறிவா என்றெல்லாம் யோசிக்க முடியாது. கேப் இருந்தால் தானே யோசிக்க முடியும். அதற்குள் படம் முடிந்து விடும். அவ்வளவு வேகம். சிறிய படம் தான். ஒன்னறை மணி நேரம். நோலன் படத்தில் தான் இப்படி முதல் காட்சிக்கும் இறுதி காட்சிக்கும் தொடர்பு இருக்கும். இதிலும் அப்படி தான். நாயகன் அடிக்கும் விசிலுக்கும் கதைக்கும் கூட சம்பந்தம் இருக்கும். எத்தனை பேர் அதை முதலிலேயே கண்டு பிடிக்கிறீர்கள் என்று பார்க்கலாம்.

நாயகனை துரத்தும் கூட்டம் எது? அதென்ன 39 ஸ்டெப்ஸ், என்ன இரகசியத்திற்காக அந்த பெண் கொலை செய்யப் பட்டாள்? ஓடிக் கொண்டே இருக்கும் நாயகன் இறுதியில் என்னவாகிறான்? அனைத்திற்கும் மிகமிக சுவாரசியமாக பதில் சொல்கிறது. திரைக்கதை. அடுத்தடுத்த காட்சிகளில் சுவாரசியம் கூடிக் கொண்டே செல்கிறதே ஒழிய குறைவதில்லை. தவற விடக் கூடாத படம் இது.

-கதிர் ராத்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:  https://kalakkaldreams.com/hitchcook-hits-1-by-kathir-rath/

Related Articles