வெளியிடப்பட்ட நேரம்: 09-May-2018 , 05:39 AM

கடைசி தொடர்பு: 16-May-2018 , 05:21 AM

ஹிட்ச்சாக் ஹிட்ஸ் - 7

hitchcook7


  1. Bon Voyage 1945


ஹிட்ச்காக் அடிப்படையில் ஒரு பிரிட்டிஸ்காரர். சினிமா அபிமானத்தின் காரணமாக தான் ஹாலிவுட்டை நோக்கி சென்றிருந்தாலும் அவருக்கு தன் நாட்டின் மீதான பற்றி மிக அதிகம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்து அரசாங்கம் மக்களிடம் தங்கள் கொள்கைகளை எடுத்துச் சொல்ல சினிமாவை மற்ற ஊடகங்களை விட அதிகம் நம்பியது. அரசாங்கத்திற்காக படமெடுக்க அழைக்கையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க பல முன்னனி இயக்குனர்கள் நழுவிய சமயத்தில் ஹிட்ச்காக் தானாக முன் வந்தார். வாரத்திற்கு 10 டாலர் சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு படம் இயக்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“அப்பம் வடை தயிர்சாதம்” என்றொரு நாவலில் பாலகுமாரன் இந்தியாவில் வெள்ளையர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிரான மனநிலையை தூண்டி இந்தியர்களை அதிகம் யுத்தத்தில் பங்குபெற செய்வதற்காக ஊருக்கு ஊர் டூரிங்க்டாக்கிஸ் திறந்து அதில் யுத்தக்காட்சி தொடர்பான செய்தி படங்களை திரையிட்டதாக சொல்வார். இந்தப் படம் அதை நினைவுப்படுத்தியது. சரி படத்திற்கு வருவோம்.

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் முதல் வெற்றியாக ஃபிரான்சை கைப்பற்றியதை சொல்வார்கள். நாசி படைகள் நுழைந்து எந்த எதிர்ப்பும் வலுப்பதற்கு முன்பே கைப்பற்றப்பட்டாலும் அங்குள்ள மக்களில் பாதிக்கு மேல் எதிர்ப்பு மனநிலையுடன் ஒருங்கினைந்து தங்களால் இயன்ற அளவு இரகசியமாக ஜெர்மானியர்களாய் எதிர்த்தும் நாசி படைகளின் எதிரிகளுக்கு ஆதரவளித்தும் வந்தனர். அந்த காலகட்டத்தில் நடந்ததாய் எடுக்கப்பட்ட ஒரு குறும்படம் தான் Bon Voyage. படம் 25 நிமிடம் தான்.

வழக்கு எண் 18/9 படம் வந்து ஒரே கதையை இரு பெண்களின் கோணத்தில் சொல்லிய போது இது ஏற்கனவே விருமாண்டியில் கமல் செய்தது தான் என்றார்கள். சொல்லப்போனால் அதற்கு முன்பே சிவாஜி காலத்தில் “அந்த நாள்” திரைப்படத்தில் இந்த முறையை கையாண்டிருப்பார்கள். அனைவருக்கும் முன்பாக 1950ல் வந்த அகிரா குரோசோவாவின் “ரஷோமான்”தான் அனைத்திற்கும் ஆதி என நினைத்திருந்தேன். அதற்கு முன்பு 1945ல் ஹிட்ச்காக் தான் முதலில் கையாண்டுள்ளார் என்பதை இப்படம் மூலம் புரிந்துக் கொள்ள முடிந்தது.

போர்க்கைதியாக இருந்த ஒரு விமானப்படையை சேர்ந்த அதிகாரி ஃபிரான்சில் இருந்து இங்கிலாந்திற்கு தப்பி வந்த பின் இலண்டனில் தனது மேலதிகாரிகளிடம் தான் தப்பி வந்த கதையை கூறுகிறார். எங்கெங்கு யார்யாரெல்லாம் உதவினார்கள்?, எங்கெங்கெல்லாம் முட்டுக்கட்டை ஏற்பட்டது?, எப்படி அதை சாமர்த்தியமாக சமாளித்தேன்? என்று அவர் சொல்லி முடித்த பின் அதிகாரி அதே கதையை வேறு கோணத்தில் சொல்லுவார்.

ஒவ்வொரு சம்பவமும் போர்க்கைதியின் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உண்மையில் நடந்தது வேறொரு மாதிரியாகவும் இருக்கும். போக்கிரி படத்தில் நாசர் சொல்லுவாரே “நீயா வரலைடா, உன்னை வரவழைச்சான், மாஸ்டர் பிளான்” என்று. அப்படி இருக்கும் எதிரிகளின் திட்டம். அந்த அதிகாரி சொல்லி முடிக்கையில் இப்படி சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

“நீயா தப்பிக்கலைடா, உன்னை அவங்க தப்பிக்க விட்டாங்க”

போரின் போது உளவுத்துறை எந்த அளவு இறங்கி வேலை பார்க்கும் என்பதை சொல்வதற்கு இந்தப் படம் பெரிதும் உதவியாய் இருந்திருக்கும். இங்கிலாந்தின் மினிஸ்ட்ரி ஆஃப் இன்பர்மேஷன் தயாரித்த இந்தக் குறும்படம் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

குறும்படம் தானே? தவறாமல் பார்த்து விடுங்கள். படத்தின் இணைப்பு சப்டைட்டிலுடன் https://www.youtube.com/watch?v=gCcPsRV0YwI

-கதிர் ராத்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://kalakkaldreams.com/hitchcook-hits-6-by-kathir-rath/

Related Articles