வெளியிடப்பட்ட நேரம்: 02-Sep-2020 , 07:45 AM

கடைசி தொடர்பு: 02-Sep-2020 , 07:45 AM

ராஜீவ்குமார் இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்பு

unnamed

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின், புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருந்த முன்னாள் நிதித்துறை செயலாளரான ராஜிவ்குமார், நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் ஒருவராக இருந்த, அசோக் லவாசாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையில், இணக்கமில்லாத போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், அவர்l இரு வாரங்களுக்கு முன், தன் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவருக்குப் பதிலாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமாரை, புதிய தேர்தல் ஆணையராக நியனம் செய்து, மத்திய சட்ட அமைச்சகம், கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து அவர், நேற்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய அரசின், நிதித்துறை செயலராக இருந்து, கடந்த பிப்ரவரியில் தான் ஓய்வு பெற்றார். இவர் 1984ம் ஆண்டு பேட்ஜ் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின், பொதுநிறுவனங்களின் தேர்வுகள் வாரியத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டு, அப்பணியில் இருந்து வந்த நிலையில், தற்போது, இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு வந்துள்ளார். ஏற்கனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுசீல் சந்திரா இருவருடன் சேர்ந்து, இவர் செயல்படஉள்ளார்.

ராஜிவ்குமார், நிதித்துறை செயலராக இருந்த போது தான், வங்கிகள் இணைப்பு நடந்தேறியது. குறிப்பாக, தேனா மற்றும் விஜயா வங்கிகளை, பரோடா வங்கியுடன் இணைத்ததில், இவர் பெரும் பங்காற்றினார். மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு வெகு தீர்க்கமான முடிவுகளை எடுக்க கூடியவர் என்று பெயரெடுத்துள்ள ராஜிவ்குமார், பிரதமர் அலுவலகத்தின் நம்பிக்கையைப் பெற்ற அதிகாரி என்றும், தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

* பிறப்பு: 1960ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி

* ஐஏஎஸ்: 1984ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் பிரிவு

* படிப்பு: பி.எஸ்சி, எல்.எல்.பி, பிஜிடிஎம், எம்.ஏ பப்ளிக் பாலிசி

* பதவிகள்: சமூக நலத்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை, மனிதவள மேம்பாடு, நிதித்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

* குறிப்பிடத்தக்க பதவிகள்: 2015 - 17 காலக்கட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறையின் நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். செலவீனத் துறையின் கூடுதல் செயலாளராக இருந்துள்ளார்.

* பணிக்காலம்: 36 ஆண்டுகளாக இந்திய அரசுப் பணியில் இருந்திருக்கிறார். ஜார்க்கண்ட்/ பீகார் மாநிலங்களில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் கீழ் பணியாற்றியுள்ளார்.

* ஓய்வு: கடந்த பிப்ரவரி 2020ல் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த போது ஓய்வு பெற்றார்.

* ஓய்விற்கு பின் மீண்டும் பணி: ஏப்ரல் 2020 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரை பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வுக்குழு தலைவராக இருந்தார்.

* பொழுதுபோக்கு: நீண்ட தூரம் நடைபயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கிளாசிக்கல் மற்றும் பக்தி இசையை விரும்பி கேட்பார்.

Related Articles