வெளியிடப்பட்ட நேரம்: 09-Nov-2018 , 08:39 AM

கடைசி தொடர்பு: 09-Nov-2018 , 08:40 AM

சர்வதேச கின்னஸ் சாதனை தினம்

images (18)

ஐம்பது, அறுபது வருஷங்களுக்கு முன்னால் மிகப் பெரிய சாதனை படைத்துவிட்டால், அதை 'உலகச் சாதனை' என்றே பாராட்டி இருப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் 'உலகச் சாதனை'க்குப் பதிலாகப் பலரும், 'நான் கின்னஸ் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்' என்றே சொல்கிறார்கள். அந்த அளவுக்கு உலகச் சாதனை என்றவுடன், நம் நினைவுக்கு வருவது 'கின்னஸ் சாதனை'தான்.

இந்த உலகச் சாதனைப் புத்தகம் வெளியான கதை கொஞ்சம் வித்தியாசமானது.

சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver). இங்கிலாந்துக்காரர். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில், அவர்களின் காவல் பணியில் சேர்ந்து (1910) இந்தியாவில் பணியாற்றியவர். 1921-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திரும்பியவர், ஒரு இன்ஜினீயரிங் கம்பெனியில் வேலைபார்த்தார். பிறகு, கனடா அரசு அவருக்கு வேலை கொடுத்தது. அந்த நாட்டு துறைமுகங்களை மேற்பார்வை செய்யும் வேலை. கனடாவில் இருந்தபோது, ஏழு மாத காலம் நியூ பிரன்ஸ்விக் நகரத்தில் இருக்கும் செயின்ட் ஜான் துறைமுகத்தின் மறுகட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். துறைமுகத்தில் ஒரு பெரிய தீ விபத்து. அந்தப் பணியை விடவேண்டியதானது. பிறகு, வேறு ஒரு நிறுவனத்தில் வேலை, அரசுப்பணி என போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை. 1946-ம் ஆண்டு, `ஆர்தர் கின்னஸ், சன் அண்ட் கோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார். அது, ஒரு பியர் தயாரிக்கும் தொழிற்சாலை.

ஒருநாள் அயர்லாந்தில் நடக்கும் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். அது, நம் ஊர் விருந்து மாதிரி அல்ல. ஆங்கிலத்தில் `ஷூட்டிங் பார்ட்டி' (Shooting Party) என்று சொல்வார்கள். ஒரு ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ மக்கள், கூட்டமாகக் கூடுவார்கள். துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும். எல்லோரும் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். எது சிக்குகிறதோ அதைச் சுட்டுத் தள்ளுவார்கள். அன்றைக்கு ஸ்லேனி ஆற்றங்கரையில் ஷூட்டிங் பார்ட்டி. அங்கே ஒரு விவாதம். ஐரோப்பாவில் இருக்கும் பறவைகளில் வேகமானது எது... ‘கோல்டன் குளோவரா?’ (ஒருவகை ஆட்காட்டிக் குருவி) `கிரௌஸா?’ (சதுப்பு நிலத்தில் வாழும் ஒருவகைக் கோழி). விவாதத்தில் முடிவே கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது, இரு பறவைகளில் எது வேகமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எந்தக் குறிப்புகளும் இல்லை. அது தொடர்பான ஒரு புத்தகம் கூட இல்லை.

அதன் பிறகு ஹ்யூக்-குக்கு இதுபோல எத்தனையோ சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அதிக நேரம் தூங்கியவர் யார்? நீண்ட நேரம் பாடியவர் யார்?... இப்படி பல கேள்விகள். தன்னைப்போல பதில் கிடைக்காமல் பலரும் இது போன்ற கேள்விகளோடு தவிப்பார்கள் என்பதும் அவருக்குப் புரிந்தது. இது தொடர்பாக ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்கு விற்பனையாகுமே, புகழ் பெறுமே என்கிற எண்ணமும் தோன்றியது. அதற்கு உதவினார் ஒருவர், ஹியூக்கின் கின்னஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். 'கிறிஸ்டோபர் சாட்டாவே' என்பது அவர் பெயர். கிறிஸ்டோபர், தன்னுடைய நண்பர்களான நோரிஸ் மற்றும் ரோஸ் மெக்வ்ரிட்டர் இருவரையும் அறிமுகப்படுத்தினார். அவர்கள், லண்டனில் நிகழ்வுகளைக் கண்டுபிடித்து தொகுக்கும் ஒரு ஏஜென்ஸி நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். இவர்களின் கூட்டு முயற்சியால் 1955-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி, 198 பக்கங்கள் கொண்ட முதல் ‘கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ புத்தகம் வெளியானது.

1998-க்குப் பிறகு புத்தகத்தின் தலைப்பில் 'உலகச் சாதனை' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'கின்னஸ் சாதனைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியாகி வருகிறது.

இது ஆண்டுதோறும் வெளியாகும் தொகுப்பு நூல். உலகில் நிகழ்த்தப்படும் இயற்கை சாதனைகள், மனிதச் சாதனைகள் இரண்டும் இதில் தொகுக்கப்படுகின்றன. இயற்கைச் சாதனைகளை எல்லோரும் அறிந்துகொள்ள விரும்பினாலும், அது அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

அதேநேரம் மனிதச் சாதனைகள் என்ற பெயரில், வேடிக்கையான, விநோதமான, ஒரு செயலைச் செய்வதால் குறிப்பிட்ட எந்தப் பயனும் கிடைக்காவிட்டாலும்கூடப் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கின்னஸ் புத்தகத்தில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்ற பலருடைய ஆசைதான், இதற்கு அடிப்படைக் காரணம்.

பணயம் வைக்கலாமா?

இன்றைக்கு உலகச் சாதனைகளைப் பட்டியலிடும் மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக, கின்னஸ் சாதனை அமைப்பு வளர்ந்திருக்கிறது. புத்தகமாக மட்டுமல்லாமல் டி.வி. தொடராகவும், அருங்காட்சியகமாகவும் பல்வேறு வடிவங்களுக்கு அது பரவலாகியுள்ளது.

இந்தப் புத்தகத்தில் சாதனைகளைச் சேர்ப்பதற்கு எனத் தனி விதிமுறைகள் இருக்கின்றன. அதிகாரப்பூர்வக் கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில்தான் புதிய சாதனையை நிகழ்த்தவோ, ஏற்கெனவே உள்ள சாதனையை முறியடிக்கவோ முடியும்.

இன்றைக்குச் சிலர் 'புதிய கின்னஸ் சாதனை செய்யப் போகிறேன் பேர்வழி' என்று தங்கள் உடல்நலனையும், ஏன் உயிரையும்கூடப் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறார்கள்.

அதேநேரம் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு, சமூக நெறிமுறைகளுக்கு மாறானதாக இருப்பதால் சில சாதனைகள் அகற்றப்பட்டும் உள்ளன. அதனால் கின்னஸ் சாதனை புரிய வேண்டுமென நினைப்பவர்கள், இதையும் சேர்த்து யோசிக்க வேண்டும்.

கின்னஸ் புத்தகம் நிகழ்த்திய சாதனைகள்

கின்னஸ் புத்தகமே பல உலகச் சாதனைகளைப் படைத்துள்ளது. உலகில் விற்கப்படும் (காப்புரிமை பெற்ற) புத்தகங்களில், எல்லாக் காலத்திலும் அதிகம் விற்கும் புத்தகமாக இருந்துவருகிறது.

இந்தச் சாதனை, கின்னஸ் புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நூலகங்களில் அதிகம் திருடப்படும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

ஆங்கிலம் தவிர, 30 உலக மொழிகளில் கின்னஸ் புத்தகம் வெளியாகிறது.

இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது.

- காயத்ரி

Related Articles