வெளியிடப்பட்ட நேரம்: 13-Apr-2018 , 07:17 AM

கடைசி தொடர்பு: 13-Apr-2018 , 07:18 AM

ஜாலியன் வாலாபாக் படுகொலையும் சுதந்திரமும்

images (4)

நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பல ஆயிரகணக்கானோர் போராட்டக் களத்தில் இறங்கியது மட்டுமில்லாமல் பல ஆயிரகணக்கானோர் உயிரையும் கொடுத்துள்ளனர். அதிலும் ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது படுகொலை ஆகும்.
ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பது வட இந்தியாவின் அமிர்த்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் நடைப்பெற்றது. ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வு ஆகும்.

இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் சுடப்பட்டன. அரசு மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் உயிர் இழந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கான பின்னனியை பற்றி பார்ப்போம்.

பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவின. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவங்கியது.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர்.

அதற்காக சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், முன் அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் உதவியது.

மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாக பரவியது. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும் பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.

ஏப்ரல் 13 அன்று தான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அமிர்த்தசரசில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

அமிர்த்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நான்கு புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு.
இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான்.

திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும்.

அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயம்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது.
பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்தார். டையர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார்.
இப்படி பல்லாயிரக் கணக்கானோர் உயிரை கொடுத்துப் பெற்றுத் தந்ததுதான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம்.

-விஜயஷாலினி

Related Articles