வெளியிடப்பட்ட நேரம்: 28-Mar-2017 , 08:16 AM

கடைசி தொடர்பு: 27-Apr-2017 , 10:13 AM

கற்பூர பொம்மையொன்று

karpura mullaiடிங் டிங் டிங்........ அம்மா......... டிங் டிங் டிங்
"கதவு திறந்துதான் இருக்கு, வாடி"

தள்ளி திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள் அகல்யா. குரல் சமையலறையில் வந்ததை முன்பே உணர்ந்ததால் நேரே அங்கு சென்றாள்.

"ஏய் சுமதி, உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன், இப்படி கதவை திறந்து வச்சுருக்காதே"ன்னு

"பகல்ல என்னடா கண்ணா பிரச்சனை"

"போம்மா, உனக்கு ஒன்னும் தெரியலை, சிட்டில பட்டப்பகல்லதான் என்னென்னமோ நடக்குது"

"எனக்கு ஒன்னும் தெரியலையா? சரி டீ சாப்பிடறியா?"

"வேண்டாம், 3 மணிக்குத்தான் குடிச்சேன்"

"இருந்தா என்ன, இப்ப மணி 5 ஆகறதே, கொஞ்சமா குடி"

"உனக்குன்னு வச்சதை நீயே முழுசா குடிம்மா"

"என்ன எனக்கு, உனக்குன்னுட்டு, இந்த வீட்ல அப்படி பேசக்கூடாது எத்தனை தடவை சொல்றது? இங்கே நமக்குன்னுதான் பேசனும்"

"இப்படித்தான் சொல்லி அண்ணன்களையும் வளர்த்த, அவங்க எப்படி இருக்காங்க பார்த்தியா?"

வாஞ்சையாய் சிரித்த சுமதி
"அவங்களை ஒன்னும் சொல்லாதடா, அவங்களுக்கு அமைஞ்சவங்க அப்படி, அவனுங்களும் கொஞ்சம் அனுசரிச்சு தானே போயாகனும்"

"என்னவோ போம்மா, நீ எப்ப தான் யாரைத்தான் விட்டு கொடுத்துருக்க?"

"சரி, நேரா இங்கே வந்துட்டியே, குட்டிப்பையன்?"

"அவனை அவங்கப்பா ஸ்கூல் விட்டதும் அவங்க அத்தை வீட்டுக்கு கூட்டி போறேன்னார். அதான், எனக்கு ஒரு வாரமா உன்னை பார்க்கனும் போலவே இருந்தது, அதான் வந்தேன்"

"என்னடா விசயம்?"

"அதை கேட்கத்தான் வந்துருக்கேன். நீ சொல்லும்மா, என்ன விசயம்?"

"என்னை கேட்டா எப்படிடா? நீ தானே வந்துருக்க? நீதான் சொல்லனும்"

அம்மாவின் மூக்கை பிடித்து ஆட்டி
"நான் ஒரு வாரமா கவனிக்கிறேன். நீ தான் ஏதோ மறைக்கற? ஒழுங்கா சொல்லு. இல்லை நான் இங்கேயே தங்கிடுவேன். எனக்கு சமைச்சு போடவச்சு பழிவாங்குவேன்"

மகளின் கன்னத்தை கிள்ளி
"நான் என்னடா மறைக்கறேன்?"

"அது தெரியலைம்மா..... எனக்கு அப்படி தோணுது. சொல்லிடும்மா பிளிஸ். தூங்க போகையில உன் ஞாபகமாவே இருக்கு"

சற்று நேரம் மகளை உற்றுப் பார்த்தாள். இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தும் ஆசை போதாமல் மூன்றாவதும் ஆணாக பிறக்க விரும்பி பெற்றேடுத்த பிள்ளை. ஆனால் அவள் அப்பாவின் விருப்பப்படி பெண்ணாகத்தான் பிறந்தாள். அது வரை பெண் குழந்தையின் மீது பெரிதாக விருப்பம் இல்லாத சுமதிக்கு தம் கணவன் மற்ற பிள்ளைகளை விட அகல்யாவை கொஞ்சும் அழகை பார்த்து பார்த்தே அதிகம் பிடிக்க துவங்கியது.

அகல்யாவும் சாதாரணம் இல்லை. சிறு குழந்தையாய் இருக்கும் போதில் இருந்தே அம்மாவிற்கு பொட்டு வைத்து, பவுடர் அடித்து விட்டு ஏதோ இவள் தாய், அவள் மகள் போல பார்த்துக் கொள்வாள். அண்ணன்கள் தனியாய் விளையாட சென்று விட எப்போதும் அம்மாவின் முந்தானையை பிடித்த வண்ணமே திரிவாள். சமையலறையில் அவளுக்கு எட்டும் வண்ணம் ஒரு ஸ்டூல் போட்டிருக்கும். அதில் ஏறி அம்மா சமைக்கும் பொழுது சப்பாத்தி மாவை உருட்டி விளையாடுவாள்.

https://i.ytimg.com/vi/J8kayxD7o4w/hqdefault.jpg

அகல்யாவிற்கு 5 வயதாக இருக்கும் பொழுது அவள் அப்பா விபத்து ஒன்றில் காலமானார். அரசுப் பணி என்றாலும் மாத சம்பளம் தான் ஒரே வருமானம். அலைந்து திரிந்து அதே அலுவலகத்தில் சுமதிக்கு வேலை கிடைத்ததே பெரும்பாடு. வெறும் பள்ளிப்படிப்பு என்பதால் அதிக சம்பளம் கிடைக்கவில்லை. இத்தனை வருடங்களுக்கு பின் அமர்ந்து தொலைதூரக் கல்வியில் பட்டம் படித்தாள். பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் சென்று வந்து படிக்கவும் வேண்டும். பெண்ணாயிற்றே, மற்றவர்களுக்காக என்று செய்யும் பொழுது கஷ்டம் தெரியாமல் போகும் இனமாயிற்றே. செய்தாள். அக்கால கட்டத்தில் அகல்யா தான் பெரிதும் உறுதுணையாக் இருப்பாள்.

அகல்யாவின் அண்ணன்களும் நன்கு படித்தார்கள். நல்ல வேலைக்கு சென்றார்கள். ஆனால் வெளி மாநிலத்தில், வெளியூரில். ஒருவன் காதல் திருமணம். மற்றவன் அம்மா பார்த்து செய்து வைத்த திருமணம். மருமகள்கள் வந்த புதிதிலேயே தனிக்குடித்தனம் என போய்விட்டதால் பெரிதாய் குழப்பம் இல்லை. அதே தெருவில் மாமா குடும்பம் இருப்பதனால்தான் பிள்ளைகள் இருவரும் தைரியமாய் வெளியில் சென்றனர். அதுவும் இல்லாமல் நல்ல வேலையை விட வேண்டாம் என்று சுமதிதான் அனுப்பி வைத்தாள்.

அடுத்து அகல்யாவிற்கு வரன் பார்க்கும் பொழுது அவள் சொன்ன நிபந்தனை வீட்டோட மாப்பிள்ளை. சுமதியே ஒத்துக் கொள்ளவில்லை. உன் அண்ணன்கள் இப்படியே இருந்து விடப் போவதில்லை. மாற்றல் வாங்கிக் கொண்டு வருவார்கள். நீ உன் வாழ்க்கையை பார் என்று சொல்லியும் சமாதானமாகாமல் உள்ளூர் மாப்பிள்ளையாக, பக்கத்து ஏரியாவில் தொழில் புரிபவனாக அமையவும் ஒருவாறு ஒத்துக் கொண்டாள். தற்போது அவள் ஒரு பள்ளியில் ஆசிரியை. ஒரு பையன். நடந்தே செல்லும் தூரம் தான். அம்மா வீட்டிற்கும் சரி, கணவன் வீட்டிற்கும் சரி.

இவளைப் போய் ஆண்பிள்ளையாக பிறக்க வேண்டுமென எதிர்பார்த்தோமே, இவள் மட்டும் இல்லை என்றால் என யோசித்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டாள். பதிலுக்கு அம்மா நெற்றியில் முத்தமிட்டு
"சொல்லும்மா" என்றாள்.

"திங்கள்கிழமை பேங்க்க்கு போனேன்டா"

"ம்"

"அங்கே பாஸ்கரை பார்த்தேன்"

"யாரும்மா அவர்?"

"அவர் உன் தாத்தா வீட்டுக்கு எதிர் வீடு"

"ஓ சரி"

"அவருக்கு அப்பவே என் மேல ஒரு ஈடுபாடு உண்டு"

"காதலா?"

"ம், எனக்கும் கூட அவரை பிடிக்கும். என் வயசு பெண்கள் எல்லோருக்கும் அவரை அப்ப பிடிக்கும்"

"நீயும் அவரை காதலிச்சியாம்மா?"

"இல்லைடா, அப்படின்னா என்னன்னு தெரியறதுக்கு முந்தியே உங்கப்பா வந்துட்டார். என்னை பிடிச்சு போய் பெண் கேட்டு"

"அவர் எதுவும் வந்து பேசலையா தாத்தா கிட்ட?"

"இல்லைடா, அவருக்கு 3 தங்கை இருந்தா"

"ம், அப்புறம்?"

"அவ்ளோதான், என் கல்யாணத்துக்கு முந்தி அவரை பார்த்தது, 32 வருசத்துக்கு அப்புறம் இப்பதான் பார்த்தேன்"

"ம்"

மகளை பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, வேறு பக்கமாக பார்வையை திருப்பி
"அவர் இப்பவரை கல்யாணமே பண்ணிக்கலையான்டா"

"எதனாலம்மா?"

"கேட்டா என்னை கை காட்றார், அவர் மனசு என்னை கடந்து வரலையாம்"

"அவருக்கு இப்ப என்ன வயசு இருக்கும்?"

"என்னை விட 3 வயசுக்கு மூத்தவர், 52 இருக்கும்"

"ம்"

"பேங்க் ல பார்த்துட்டு போறப்ப நம்பர் வாங்கிட்டு, அவரோடதை குடுத்துட்டு போனார்"

"அடுத்து கூப்டு பேசினியா?"

"அவரே கூப்டார். பேசுனார், உனக்கு தெரியுமா? சின்னவன் பேசும் போது திட்டுவனே, நானே ரொம்ப நேரம் அப்போ போன் பேசுனேன்"

"இரு அண்ணன்கிட்ட சொல்றேன், என்ன சொன்னார் போன்ல?"

"என்னை கூப்பிடறார்டா?"

"எங்கே?"

"அவர் வீட்டுக்கு, "இந்த வயசுக்கு மேல என்ன எதிர்பார்க்க போறேன், எனக்கும் உனக்கும் தேவை ஒரு துணை, ஏன் நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்க கூடாது"ன்னு கேட்டார்"

"நீ என்ன சொன்ன?"

"நான் என்ன சொல்வேன்? முடியாதுன்னுதான் சொன்னேன்"

"ஏன்?"

"ஏன்?னா அவர் தனிக்கட்டை, கேட்க யாரும் இல்லை. எனக்கு நீங்களாம் இருக்கிங்களே, உங்களை விட்டுட்டு நான் எப்படி போவேன்"

"நான் ஏம்மா உன்னை தடுக்க போறேன்?"

"நீ இல்லைம்மா, உன் அண்ணாக்களை யோசிச்சு பாரு, அவங்களை கூட விடு. உன் அண்ணிங்க என்ன சொல்வாங்க? சம்பந்தி வீட்டார் என்ன நினைப்பாங்க? மாப்பிள்ளை முகத்துல நான் முழிக்க வேணாமா?"

"நீ இருக்கியே.......... தெய்வமே, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் எங்களை பத்தியே யோசிப்ப? உனக்கு ஒரு துணை வேணாமா?"

"எனக்குத்தான் நீங்க இருக்கீங்களேடா"

"மண்டைல கொட்டுவேன், நீ சும்மா இரு"

சுமதியின் போனை எடுத்து, அதில் பாஸ்கரின் எண்ணை பிடித்து அழைத்தாள் அகல்யா

"ஹலோ"

"அங்கிள், நான் அகல்யா, சுமதி டாட்டர்"

"சொல்லும்மா"

"உங்களை சந்திக்கனுமே"

"சந்திக்கலாமே"

"இந்த சண்டே உங்க வீட்டுக்கு காஃபி சாப்பிட நானும் அம்மாவும் வரோம், அட்ரஸ் சொல்லிடுங்க அம்மாகிட்ட அப்புறமா"

"தாராளமா வாடா கண்ணா"

"சரி அங்கிள் வச்சுட்றேன்"

அகல்யாவை முறைத்துக் கொண்டிருந்த சுமதி, அவள் ஒரு மாதிரி ஆவதை பார்க்கவும்
"ஏய் என்னாச்சும்மா?"

"அவர் என்னை வாடா கண்ணான்னு சொன்னார்மா?"

"சரிடா, அதுக்கென்ன?"

"அப்பா மாதிரியே இருந்தது"

"ஹேய், நானும் உன்னை அப்படித்தான்டா கூப்டுவேன்"

"ம், ஆனா நீ அம்மா, அவர் அப்பா"

"சரி சரி, நீ யாரை கேட்டு சண்டே பிளான் போட்ட?"

"நான் என்னம்மா சண்டே உன்னை வீட்டை காலி பண்ணிட்டு அங்கே போயா இருக்க சொன்னேன், போய் பார்க்கலாம்மா, எனக்கு அவரை பார்க்கனும் போல இருக்கு"

"மாப்பிள்ளைகிட்ட என்ன சொல்வ?"

"அவர் சனிக்கிழமையே ஃப்ரெண்ட்ஸ் கூட ஊருக்கு போறார். நானும் தம்பியும் வரோம். அங்கே போலாம்"

"போகனுமாடா?"

"என் செல்ல அம்மா இல்லை, போலாம்மா"

அகல்யாவின் விருப்பப்படியே ஞாயிறு அன்று தன் பையனை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்து, பின் அங்கு இருந்து மூவரும் காரில் பாஸ்கர் வீட்டிற்கு சென்றார்கள்.

"அம்மா, வீடு தெரியுமா?"

"தெரியாதுடா, கேட்டுக்கலாம், போ"

அந்த தெருவை அடைந்ததும் எந்த வீடு என்று குழப்பமாய் இருந்தது. துணி இஸ்திரி செய்பவர் கடை தென்பட்டதும் அவர் கடையருகே சென்று பெயர் சொல்லி எந்த வீடு என்று கேட்கவும், ஒரு வீட்டை கைகாட்டி
"அந்த வீடுதான், இப்ப தான் ஆஸ்பத்ரிக்கு கூட்டி போனாங்க" என்றார்.

"யாரை? என்னாச்சு?"

"நீங்க கேட்டிங்களேம்மா, பாஸ்கர், அவருக்குத்தான் மாரடைப்பு"

"மாரடைப்பா?" பதறியது சுமதி

அகல்யா "எந்த ஹாஸ்பிடல்னு தெரியுமா?"

"கங்கா ஹாஸ்பிடல் ஆம்ப்லன்ஸ் தான் வந்தது. அங்கே போய் பாருங்க. பாவம் யாரும் இல்லை மனுசனுக்கு"

மருத்துவமனையை சென்று அடைவதற்குள் சுமதியின் கண்கள் நிரம்பியிருந்தன. அகல்யாவும் ஆறுதல் சொல்லவில்லை.

"எதனால? அதும் நாம் போற அன்னைக்கு?"

"ம், ரொம்ப வருசம் கழிச்சு காதலி வீட்டுக்கு வரப்போறாங்கற சந்தோஷத்துல இரத்த அழுத்தம் அதிகமாகி இருக்கும்"

"அப்ப என்னால தானா?"

"உன்னால ஒன்னும் இல்லைம்மா, நீ சும்மா இரு"

மருத்துவமனைக்கு சென்று விசாரித்து விட்டு, ஒரு வழியாக அவர் இருக்கும் அறையை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்த மருத்துவரை பார்த்து விவரங்களை விசாரித்தார்கள். அவர்

"பயப்படற அளவு ஒன்னும் இல்லை, நம்ம ஹாஸ்பிடல்ல தான் அவர் ரெகுலரா செக் அப்புக்கு வருவார். என் நம்பரை ஸ்பீட் டயல்ல வச்சுருந்தார் போல, நெஞ்சு வலி வரவும் உடனே கூப்பிட்டார், நான் உடனே ஆம்ப்லன்ஸ்ல போய் கூட்டி வந்துட்டேன். எனக்கு அவர் தூரத்து சொந்தமும் கூட, நீங்க?"

அகல்யா "நாங்க அவர் பிரண்ட்ஸ்"

"ஓ, சரி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பார்க்கனும்னா அரைமணி நேரமாவது ஆகும். மயக்கத்துல இருக்கார். கொஞ்ச நேரத்துல எழுந்துருவார்"

வரவேற்பறையில் மற்ற காத்திருப்பாளர்களுடன் அமர்ந்தார்கள். சுமதி ஒரு மாதிரி தவிப்புடன் தெரிந்தாள்.

"அம்மா காபி சாப்பிடறியா? வாங்கிட்டு வரவா?"

"வேணான்டா, நீ வேணா வீட்டுக்கு கிளம்பு"

"விளையாடறியா? என்னை ஏன் போக சொல்ற?"

"உனக்காக சொல்லலைடா, குட்டிப்பையன் பாரு, பே ன்னு உட்கார்ந்துருக்கான்"

"அவன் ஏதோ அவனுக்கு ஊசி போடப்போறோம்னு பயம். இல்லைடா தங்கம், ஒன்னும் இல்லைடா, நாம கொஞ்ச நேரத்துல் வீட்டுக்கு போலாம்"

"நீ வேணா கூட்டிட்டு போம்ம. நான் பார்த்துட்டு வரேன்"

"அம்மா, எல்லார் முன்னுக்க என்கிட்ட கொட்டு வாங்காத. நான் அவரை பார்க்காம போக மாட்டேன்"

"ம், யாருக்கு யார் அம்மான்னே தெரியலை"

அகல்யாவின் மகன் அர்ஜீன் சற்று நேரம் போக, தயக்கம் விலகி, தாயின் மடியில் இருந்து இறங்கினான். 3 வயது முடியப் போகிறது. சமர்த்து என்றும் சொல்லலாம், விஷமம் என்றும் சொல்லலாம். எந்த நேரத்தில் என்ன செய்வான் என்றே சொல்ல முடியாது. இறங்கியவன் மெதுவாக அங்கும் இங்கும் நடக்க துவங்கினான். சற்று நேரத்தில் வேகத்தைக் கூட்டி ஓடத் துவங்கினான். அகல்யா கண்டித்தாள். கேட்காமல் ஓடினான்.

அவர்களை சற்றுத் தள்ளி ஒரு தம்பதியினர் பெண் குழந்தையுடன் அமர்ந்திருந்தனர். அர்ஜீன் அவர்கள் பக்கமாக ஓடி வரும் பொழுது அக்குழந்தையின் தாய் பிடித்துக் கொண்டாள்.

"ஹேய், நில்லு, உன் பேர் என்ன?"

"அர்ஜீன்"

"கேட்கலை"

"அர்ஜீன்ன்ன்" கத்தி சொன்னான்.

"ஓகே ஓகே, அம்மு, அர்ஜீன் அண்ணாக்கு பிஸ்கட் கொடும்மா"

அப்பெண் குழந்தை நீட்டியது
"எனக்கு வேண்டாம்"

"பரவாயில்லை வாங்கிக்கோ"

அர்ஜீன் திரும்பி அகல்யாவை பார்த்தான். அகல்யா "வாங்கிக்கோ" என்றாள். அவன் வாங்கி சாப்பிட்டுவிட்டு, சற்று நேரத்தில் அப்பெண் குழந்தையுடன் விளையாட துவங்கி விட்டான்.

அகல்யா "எத்தனை வயசா இருந்தாலும் எல்லாம் ஒன்னுதான்"

சுமதி "என்னம்மா சொல்ற?"

"அர்ஜீனை பார்த்தியா? அவனுக்கு பிஸ்கட் பிடிக்கும். அவனுக்கு பிடிச்சது கிடைக்கும் போது கூட நான் ஏதாவது சொல்வனோன்னு முதல்ல வேண்டாம்னான். உன்னை மாதிரியே, நான் ஒத்துகிட்டதும் சந்தோசமா சாப்பிட்டு விளையாண்டுகிட்டு இருக்கான்"

"என்னை மாதிரியா?"

"ஆமா, உனக்கு பாஸ்கர் அங்கிளை பிடிக்கலையா? உனக்கு பிடிக்காமையா வேண்டாம்னு சொன்ன? நாங்க என்ன சொல்லுவோம்னுதானே தயங்கற?"

"நீங்கன்னா நீங்க மட்டும் இல்லம்மா, இந்த சமூகம்.."

"அம்மா....... நிறுத்து. நேத்து வரைக்கும் நிலைமை வேற, இன்னைக்கு என்ன நடந்திருக்குன்னு பார்த்த இல்லை? சமயத்துக்கு அங்கிள் கைல போன் இல்லைன்னா என்னாகி இருக்கும்? யோசிக்க முடியுமா உன்னால?"

சுமதி எதுவும் பேசவில்லை.

"அம்மா, நான் எதையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய சொல்லலை. அவர் வாழ்க்கையை விட்டு நீயோ, உன் வாழ்க்கையை விட்டு அவரோ இனி விலக வேண்டிய அவசியம் இல்லை. இப்ப அவருக்கு உடம்பு சரியில்லை. நீ கூட இருந்து பார்த்துக்கோ. வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் அப்பப்ப போய் பார்த்துட்டு வா. அவரையும் நம்ம வீட்டுக்கு கூப்பிடு. உன் கையால சமைச்சு போடு. ரெண்டு பேரும் அப்பப்ப வெளியே போய்ட்டு வாங்க, பார்க், பீச்ன்னு போனாலும் சரி. கோவில், குளம்னு போனாலும் சரி. அப்புறம் உங்களுக்கு தோணுச்சுன்னா ஒரே வீட்டுல இருங்க. நீ அங்கே போனாலும் சரி, அவர் இங்கே வந்தாலும் சரி. மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு அப்ப யோசிச்சுக்கலாம்"

"இல்லைடா, என்ன இருந்தாலும்.."

"அம்மா ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கோ, உன் காலத்துல இருந்த மாதிரி பெண்களுக்கு நட்பு, காதல், காமமெல்லாம் ஒருத்தர்கிட்ட இருந்துதான் கிடைக்கனும்னு இருந்ததுலாம் எப்பவோ உடைஞ்சுருச்சு. இங்கே இப்ப ஒவ்வொன்னுக்கும் தனித்தனி ஆட்கள் இருக்க காலம் வந்தாச்சு. உன்னை நான் அவரை காதலிக்க சொல்லலை. நான் சொல்லி இல்லை யார் சொல்லியும் காதல் வராது. நான் அவரோட நட்பா இருக்க சொல்றேன். கொஞ்சம் இறங்கி வா தெய்வமே. அங்கிள் பாவம் இல்லை?"

"ஹேய், நீ என்ன அவருக்காக ரொம்ப பேசற?"

"நான் பேசறது உனக்காகத்தான், ஆனா உனக்காகன்னு பேசுனா நீ ஒத்துக்க மாட்ட. அதான் அவருக்காகன்னு பேசறேன். என் செல்லம்ல, சும்மா அவருக்காக தினசரி கொஞ்ச நேரம் ஒதுக்கும்மா. போதும். பிளிஸ்"

அகல்யாவின் மூக்கை பிடித்துக் கிள்ளி
"சரி, இப்ப நான் என்ன செய்யனும்?"

"நீ எதுவும் செய்ய வேணாம். முதல்ல உன் மனசுல இது தப்புங்கறதை தூக்கி எறி, மத்தது தானா நடக்கும்"

நர்ஸ் வந்து அழைக்கவும், அர்ஜீனை சுமதி தான் தூக்கினாள்.

"வாடா குட்டி.. போலாம்"

"எங்கே பாட்டி போறோம்"

"ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை. அவரை பார்க்க போறோம்"

"யார் பாட்டி?"

"ம், அவரா? அவர் தாத்தாடா குட்டி. வா காட்றேன்"

முகம் மலர, சுமதியின் கைகளை பிடித்துக் கொண்டு, பாஸ்கர் இருந்த அறையை நோக்கி சென்றாள் அகல்யா...


கதைக்கரு: ரம்யா முரளி


கதை ஆக்கம்: கதிர் ராத்
Related Articles