வெளியிடப்பட்ட நேரம்: 08-Oct-2020 , 11:16 AM

கடைசி தொடர்பு: 08-Oct-2020 , 11:24 AM

கறுப்பி - பாகம் - 10

karuppi

னோ மனசுக்குள் யமுனா வந்தாள்.

இப்போது எங்கே இருப்பாள்…?

ஊருக்குப் போயிருப்பாளா…?

குடும்பம் குழந்தையின்னு சந்தோஷமா இருப்பாளா…?

இல்லை இந்தச் சாக்கடையில்தான் இன்னும் கிடக்கிறாளா…? என்ற கேள்விகள் அவனுள் எழ, கணிப்பொறியை ஆப் பண்ணி வைத்து விட்டு எழுந்தான்.

அறையின் ஏசிக்குள் பிரியாணியும் சரக்கும் கலந்த வாசனை அடித்தது.

குறட்டைச் சப்தம் மழைநாளில் அவன் ஊரில் இரவு நேரத்தில் வயல்களில் ‘கொர்ர்ர்ர்… கொர்ர்ர்ர்’ எனக் கத்தும் தொருக்கட்டையை ஞாபகப்படுத்தியது.

தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து ‘மடக்… மடக்…’கெனத் குடித்தான்.

ஏனோ தெரியவில்லை… சில வாரங்களாய் பிரியாணி சாப்பிட்ட பின் தண்ணீர் தாகமாய் இருக்கிறது. எதுவும் சேர்மானம் சரியில்லையோ என்னவோ… எவ்வளவு தண்ணீர் குடித்தும் தாகம் மட்டும் அடங்கவேயில்லை… மீண்டும் தண்ணீர் பிடித்துக் குடித்தான்.

வயிறு நிறைந்தது… ஆனால் தாகம் அடங்கவில்லை.

மெல்ல எழுந்து வெளியில் வந்தான்.

ஹாலில் அன்பும் இலியாசும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பால்கனிக்குப் போனான்… வெயில் அவனை விரட்டியடித்தது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

வராண்டா வெறிச்சோடிப் போய்க் கிடந்தது…

யாருமில்லை…

லிப்டில் கீழிறங்கி அருகிருக்கும் மாலுக்குப் போய் சுற்றிவிட்டு வரலாமா எனத் தோன்றியது.

‘இந்த வெயில்ல… அங்க போகணுமா…?’ என்ற எண்ணம் அதற்குத் தடை போட்டது.

அதிக வெக்கையாக இருந்தது. ஏசியில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதை உடம்பு ஏற்றுக் கொண்டு வெகுநாளாகி விட்டதை அவனால் உணர முடிந்தது.

வெயிலில் விளையாடிய, வயல் வேலை பார்த்த இந்த உடம்பு இங்கு வந்த பின் எப்படி மாறிவிட்டது… இப்போதெல்லாம் ஊர் வெயில் ஒத்துக் கொள்வதில்லை… ஆளை கரிக்கட்டையாய்த்தான் திருப்பி அனுப்புது என்று நினைத்துக் கொண்டவன், ஊரில் இருந்து வந்ததும் அவனின் பி.ஆர்.ஓ.வான பெரியவர் ரியாத், ‘மை சன் ஊர்ல உன்னைய பார்ப்பிக்யூல வச்சிச் சுட்டானுங்களா..?’ எனச் சிரிப்பது ஞாபகத்தில் வந்தது. அவரையும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் பஸார், விசா அடிக்காமல் வேலையை விட்டு நிப்பாட்டினான்… பாவம் நல்ல மனிதர் எனச் சொல்லிக் கொண்டான்.

மாடிப்படியில் போய் அமர்ந்தான்.

யமுனா ஞாபகத்துக்கு வந்தாள்.

பக்கத்தில் அவள் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

இதே போன்றோரு மாடிப்படியில்தானே அவளைப் பார்த்த கடைசித் தினத்தில்…

பெருமூச்சு விட்டான்.

எப்படியான வாழ்க்கைக்குள் மாட்டிக் கொண்டுவிட்டாள்.

அவளை அதிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை.

அடுத்தவன் பொண்டாட்டிதானே என்பதாலா…?

அந்த வேலையை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதாலா…?

யாரோ ஒருத்திக்காக நாம் ஏன் போலீஸ் ஸ்டேசனுக்கு அலைய வேண்டும் என்பதாலா…?

யோசனைகள் அவனுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன.

ஊட்டிக்காரியும் சுதாகரும் இந்நேரம் என்ன செய்வார்கள்…?
மனதை மாற்ற முயன்று மீண்டும் யமுனாவிடமே தோற்றான்.

மீண்டும் யமுனா அந்தச் சிகப்பு நைட்டியில்…

படியில் இருந்து எழுந்தான்.

அவள் இழுத்து அணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தாள்.

அவளிடமிருந்து விலகி, வேகவேகமாக படியிறங்கி வெளியே போனான்.

அருகிலிருந்த சிறிய சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ஒரு லைம் மிண்ட் ஜூஸ் மற்றும் சினிக்கர் சாக்லெட்டை எடுத்து காசு கொடுத்து விட்டு குடித்துக் கொண்டே நடந்து பார்க்கை அடைந்தான்.

அந்த நேரத்தில் அங்கே சில குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்.

மொபைலில் மணி பார்த்தான் 4.45 ஆயிருந்தது.

ம்… மணி ஆச்சு… இனி கூட்டம் வரும் என்று நினைத்தபடி ஒரு சேரில் அமர்ந்து வேள்பாரியை வாசிக்க ஆரம்பித்தான்.

அவனக்கு இருபுறமும் யமுனாவும் மலாமாவும் வந்து அமர்ந்தார்கள்.

அவர்களின் மூச்சுக்காற்று அவனைச் சுட ஆரம்பிக்க, அவனுக்குத் மெல்லத் தலை வலி ஆரம்பித்தது.

அந்தக் கருப்பியை மற்றவர்கள் காமத்துடன் பார்க்க, சிவா ரசனையாய் அதே சமயம் அன்பொழுகப் பார்த்தான். அவனின் பார்வையில் காமம் இல்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள் என்பதை அவளின் மெல்லிய புன்னகை சொன்னது.

‘என்ன..?’ என்பது போல் தலையாட்டினாள்...

“ப்ச்...” எனத் தோள் குலுக்கி சிரித்துக் கொண்டான்.... அவளும் சிரித்தாள்.

யார் சொன்னது கருப்பு அழகல்ல என்று... கருப்பும் ஒரு அழகுதானே... மற்ற நிறங்களை விட கருப்புத்தான் பேரழகு... நம்ம ஊர் கோவில்களில் இருக்கும் கற்சிலைகளுக்குத் தினமும் எண்ணெய் தேய்த்துத் தேய்த்து அதன் அழகு கூடியிருக்குமே... அதுவும் அபிஷேகத்துக்குப் பின்னும் அலங்காரத்துக்கு முன்னும் அந்தச் சிலைகளைக் காண கண் கோடி வேண்டும்... ஆஹா... என்ன அற்புதம்... அதை ரசித்தவனுக்குத்தான் தெரியும் கருப்பின் பேரழகு.

அது அப்படியே நம்மை வசீகரித்துக் கொள்ளும் அழகு அல்லவா... மெய் மறந்து நிற்க வைக்குமே... எத்தனை வசீகரத்தை அந்தக் கல்லில் செதுக்கியிருக்கிறான் நம் சிற்பி... கண்... மூக்கு... உதடு... கன்னம் என அத்தனையும் நளினத்தோடு... வெட்கம்... நாணம்... சிரிப்பு... கோபம் என எல்லாவற்றையும் மிகத் துல்லியமாய் செதுக்கியிருப்பதில் தெரிகிறது அவனின் திறமை... நம் கோவில்களில் நீங்கள் இப்படி ஒன்றல்ல பல சிலைகளைப் பார்த்திருப்பீர்கள்... ரசித்திருப்பீர்கள்... இல்லையா... அப்படி ஒரு அழகு அவள்... கருப்புத் தேவதை... கறுப்பி...

ஆம்... அவள் கருத்த பிரபஞ்ச அழகிக்தான்.... கறுப்பி என ஒதுக்கி வைக்க முடியாத பிரகாசம் அவள் உடலில்... மிஞ்சிமிஞ்சிப் போனால் இருபதுக்குள் இருப்பாள்... தொன்னூறுகளின் சிம்ரன் உடற்கட்டு அவளுக்கு... அதே உடுக்கு இடை... ‘தொடுத்தொடு எனவே வானவில் என்னைத் தூரத்தில் அழைக்கிற நேரம்..’ பாடல் சிவாவின் மனசுக்குள் மின்னலாய் வந்து போனது… எத்தனை முறை பார்த்திருப்பான்... சிம்ரனுக்காக... அந்த மின்னல் இடை வெட்டுக்காக... சமீபத்தில் ஒரு படத்தில் வில்லியாய் வந்த சிம்ரனின் உடுக்கு இடையைத் தேடி அலுத்துப் போனவந்தான் சிவா.

அவளின் வசீகரமான முகத்தில் வெள்ளை விழிகள்... இத்தனை வெண்மையாய் கண்ணைப் பார்த்தால் நம் கண் வெட்கித் தணியுமோ... இல்லையில்லை... அதன் அழகைப் பருகி தனக்குள் வெளிச்சம் ஏற்படுத்திக் கொள்ளும்... அந்த விழிகள் பார்ப்பதற்கே பரவசமாய்... புர்க்காவால் முகம் மறைத்த பெண்களின் கண்கள் மட்டுமே வெளியில் தெரியும்... அந்தக் கண்களைப் பார்ப்பது சூரியனைப் பார்ப்பது போல்... அவ்வளவு கூர்மையாய்... வெள்ளை வெளேரென நம்மை ஈர்க்கும்... பலமுறை லீமாவின் கண்ணைச் சந்திக்க முடியாமல் தவிர்த்திருக்கிறான்... இவ்வளவுக்கும் அவள் முகம் மறைத்து மட்டுமல்ல... புர்காவும் போடுவதில்லை... அப்படியிருந்தும் அவளது கண்ணின் வெண்மையும்... கூர்மையும்... ஆயுதமாய்த் தாக்கும்... அப்படியான ஒரு கண் அவளுக்கு...

வெண்மையில் வைக்கப்படும் கரும்புள்ளியும் கருப்பு வட்டத்தில் வைத்த வெண்புள்ளியும் எப்படி தனித்துத் தெரியுமே.... அதே போல் கருப்பின் அருகே வெண்மை தனித்த அழகோடு... கருத்து நிற்கும் மழை மேகத்தின் மீது மின்னல் வெட்டுவதாய்... விரிந்த கருங் கூந்தலில் வெள்ளை ரோஜாவை வைத்தது போல.... இருளான இடத்தில் தனித்துத் தெரியும் விளக்கொளி போல... அத்தனை அழகாய்... விரிந்த வெள்ளை விழிகள்.... அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

எல்லாருக்கும் நேர்த்தியான அழகிய மூக்கு அமைவதில்லை... இவளுக்கோ மதுரை மீனாட்சியின் மூக்கு... திருக்கல்யாணத்தின் போது மணப்பெண்ணாய் அமர்ந்திருக்கும் அம்மன் அவளின் சிலையை கூர்ந்து கவனித்தால் வெட்கம் சூடிய நாணத்தோடு இருக்குமே அந்த நீள அழகிய மூக்கு... அதேபோல் அத்தனை லட்சணமாய்... பொருத்தமான அழகோடு.... வசீகரித்தது.

கருப்பினப் பெண்களின் உதடுகள் பெரும்பாலும் தடித்த அழகோடுதான் இருக்கும் ஆனால் இவளுக்கோ அதிகம் தடிப்பில்லாமல் நேர்த்தியான உதடுகள்... இரட்டை ஆரஞ்சுச் சுளைகளை வைத்தது போல்... கல்லூரியில் அவனுடன் படித்த... ஒரு தலையாய்க் காதலித்த புவனாவின் உதடுகளை ஞாபகத்தில் நிறுத்தியது. அவள் உதடு லிப்ஸ்டிக் போடாமலே சிவந்த அழகிய உதடு... அது ஆயிரம் கதை பேசியிருக்கிறது அவனுக்குள்... ம்... அதெதுக்கு இப்போது... அவளின் உதடுகள் செர்ரிப் பழம்... இவளின் உதடுகள் அழகிய கருப்பு ஆரஞ்சு எனச் சொல்லிக் கொண்டான்.

அந்தக் கருப்பு முகத்துக்கு அழகு செய்யும் விதமாய் தூக்கி அடிக்காத கலரில் லிப்ஸ்டிக்கும்... லேசான மேக்கப்புமாய்... சதைப் பிடிப்பு அதிகமற்ற நேர்த்தியான அழகைப் பெற்றிருந்த முகம்... ஒரு பொட்டு மட்டும் வைத்திருந்தாள் என்றால் அந்தப் பிரம்மன் கூட சொக்கிப் போய் இவள் அழகை கடன் கேட்டிருப்பான் தான் படைக்க இருக்கும் அடுத்த பிரபஞ்ச அழகிக்காக... பொட்டில்லாத முகம் எப்போதும் தனித்தே தெரிவதுண்டு. மனசுக்குள் லீமாவுக்கு பல முறை கலர் கலராய் ஸ்டிக்கர் பொட்டு வைத்து அழகு பார்த்திருக்கிறான்.

சேச்சிகள் அழகுதான்.. அதுவும் அந்த கேரளச் சேலையில் ஆஹா... அழகோ அழகு... ஆனாலும் இவளின் முன்னே சேச்சிகள் கூட ஒரு மாற்றுக் குறைவுதான்... இவள் கடைந்தெடுத்த வைரம் பாய்ந்த மரத்தில் செய்த வேலைப்பாடுகள் நிறைந்த செட்டிநாட்டுக் கதவைப் போல் அவ்வளவு நேர்த்தி... அவ்வளவு அழகு...

சேச்சிகள் நினைவில் வந்த போதுதான் வரும்போது தங்களைக் கடந்து சென்ற ஒரு சேச்சியைப் பார்த்ததும் சம்பத் எனக்கு இவ வேணும்... எவ்வளவு பணம்ன்னு கேளுன்னு கத்தியதும் அவள் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றாள்... இவன் கேட்டது அவளுக்குப் புரிந்ததோ என்னமோ... எப்படி இவனால் இப்படியெல்லாம் கேட்க முடிகிறது... யாரோ ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவள் வேண்டும் என்று சொல்லும் மனம் எந்த மாதிரியானது... என்ன மனிதன் இவன்... போதை இந்தளவுக்கு வேலை செய்யுமா...? தனது தங்கை போனால் இப்படிக் கேட்கச் சொல்லுமா..? போதைக்கு உறவு முறைகள் மட்டும் தெரிந்திருப்பது எப்படி... எவளோ ஒருத்திதானே என்ற எண்ணம்தானே காரணம்...

இவனுக்கு காம போதை... இது வித்தியாசமான போதை... மனம் முழுவதும் பெண் வேண்டும்... அதுவும் இப்போது அனுபவிக்கப் பெண் வேண்டும்... அவள் எவளாக இருந்தால் என்ன என்ற நினைப்பு... ஊரில் பத்தும் இருபதும் கொடுத்து குறத்திகளிடம் போய்விட்டு வரும் வேலைக்கார முத்தையாவுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்... ஒன்றுமில்லை... என்று நினைத்தவன் மீண்டும் மலாமாவின் அழகின் பின்னே நாய்க்குட்டியாய் பயணித்தான்.

-பரிவை சே.குமார்

முந்தைய பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-9-by-parivai-se-kumar&i=10755

Related Articles