வெளியிடப்பட்ட நேரம்: 10-Oct-2020 , 02:32 PM

கடைசி தொடர்பு: 10-Oct-2020 , 02:32 PM

கறுப்பி - பாகம் - 11

karuppi

சிவாவின் அறையில் ஒருவர் வேறிடம் மாறிச் செல்ல, வெற்றிடத்தை நிரப்ப வந்தான் நாகர்கோவிலைச் சேர்ந்த திருமணமாகாத பாபி.

வந்த ஒரு வாரத்திலேயே தெரிந்துவிட்டது... அவன் எப்படிப்பட்டவன் என...

மொடக்குடியன்...

தினமும் தண்ணியும்... சிகரெட்டும்... வாட்ஸ் அப் வழி அரசியல் விவாதங்களுமாய் இருந்தான். விடுமுறை தினத்தில் தவறாமல் டான்ஸ் பார் செல்வானாம்... அதுவும் தொடரத்தான் செய்தது.

பாபி இருக்கும் வரை அனுபவிப்போம் என்னும் ரகம்... சிவாவின் அறைக்குச் செட் ஆகவில்லை... ராமனுக்கு இவனை ஏன் சேர்த்தோம் என்று தோன்ற ஆரம்பிக்க மற்றவர்களிடம் பாபியைப் பற்றிக் கொட்ட ஆரம்பித்தான்.

நாட்கள் நகர... நகர... பாபியுடன் மிக நெருக்கமானான் அன்பு.

அன்புவைப் பொறுத்தவரை தண்ணி வாங்கிக் கொடுப்பவன் தலைவன்... இப்ப அவனுக்குப் பாபி தலைவன் ஆனான். இருவரும் நைட் கிளப்புக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.... இரவு வெகு நேரம் கிச்சனில் வைத்துத் தண்ணி அடித்தார்கள். அதன் பிறகு இரவெல்லாம் யாருடனாவது போனில் பேசிக் கொண்டே இருந்தான் பாபி... அவனுக்கு உறக்கம் என்பது இல்லை.

அன்பு இதற்கு முன்னர் சார்லஸூடன் நெருக்கமாக இருந்தான்... இருவரும் விடாமல் குடிப்பார்கள்... இதே டான்ஸ் கிளப் போவார்கள்... அங்கு எவளையாவது பிடித்து சந்தோஷமாக இருந்துவிட்டு வருவார்கள்... அடுத்தநாள் ஏதோ பெரிதாக சாதித்து விட்டதைப் போல் முந்தின இரவுக் கதையை மலையாளிகளிடம் அள்ளி விட்டுக் கொண்டிருப்பான்.

சார்லஸைக் குடி ஒரு அதிகாலையில் பாத்ரூம் போகும் போது அட்டாக்கில் கொண்டு சென்று விட, இளவயதில் அவனின் மரணம் எல்லாரையுமே உலுக்கிப் போட்டது. இங்கு இளவயது மரணமும் அதற்குக் காரணமான அட்டாக்கும் சர்வ சாதாரணம்தான் என்றாலும் அவனையே நம்பி வாழ்ந்த குடும்பம் என்ன செய்யும் என்ற கவலை எல்லாருக்குள்ளும்... அன்பு துவண்டு போய்க் கிடந்தான். மெல்ல மெல்ல அவன் சகஜநிலைக்கு மாறிக் கொண்டிருந்த போதுதான் பாபி என்ற குதிரை அவனுக்குக் கிடைத்தது. சார்லஸின் மரணம் கொடுத்த பயத்தில் கொஞ்ச நாள் அடங்கிக் கிடந்தவன் மீண்டும் தன் ஓட்டத்தை பாபியுடன் ஆரம்பித்தான்... ஓட்டம் முன்பை விட வேகமெடுக்க ஆரம்பித்தது.

பாபியால் எங்கள் தூக்கம் போகிறது... ஒண்ணு அவன் இருக்கணும்... இல்லேன்னா நாங்க இருக்கணும் எனச் சிலர் கொடி பிடிக்க, ராமன் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருந்த பாபியை காலி பண்ணிக்கச் சொல்லிவிட்டான். சொன்ன அடுத்த மாதமே இதில்லை என்றால் மற்றொரு அறை என பாபியும் கிளம்பிவிட்டான். இங்கு அறை மாறுதல் என்பது சுலபம்தான்... ஒரு கட்டில் வாழ்க்கைக்கு எங்கும் கட்டில் கிடைக்கும். பாத்ரூம் பிரச்சினையை மட்டும்தான் பார்க்க வேண்டும். காலையில் குளிக்கக் காத்திருப்பதோ, குளிக்கும் போது வெளியில் நின்று தட்டிக் கொண்டிருக்கும் மலையாளிகளோ இல்லாதிருந்தால் போதுமானது.

சில நாட்களாக அன்பு யாருடனோ போனில் பேசினான்... பெரும்பாலும் ஹாலில் வந்து பேசிக் கொண்டிருந்தான். யாருக்கும் கேட்காத வண்ணம் பேச ஆரம்பித்தான். இதைக் கவனித்த சிவா, ஒருநாள் மெல்லக் கேட்டான்.

முதலில் மறுத்தவன் பின்னர் சொல்ல ஆரம்பித்தான்.

“சென்னை டான்ஸ் பார்லதான் மச்சான் அவளைப் பார்த்தோம்... தமிழ்க்காரிதான்... பாபிக்கும் எனக்கும் பிரண்ட் ஆயிட்டா...” என்றவன் மொபைலில் தேடி அவள் போட்டாவை எடுத்துக் காண்பித்தான்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபதிலிருந்து இருபத்தி ரெண்டு வயதிருக்கலாம். சிவப்பாய் அழகாய்த் தெரிந்தாள்.

“சின்னப் பிள்ளையா இருக்கு... இதுவா டான்ஸ் பார்ல...” சிவா இழுத்தான்.

“ம்... இப்படிப் பிள்ளைகளைத்தான் கொண்டு வந்து ஆட விடுவானுங்க... பின்ன கிழவியையா ஆட விடுவானுங்க... எவ்வளவு பேர் காசு மாலை போடுவானுங்க தெரியுமா... ம்... அந்த வாழ்க்கையை ஒரு முறையேனும் அனுபவித்திருக்கணும்டா... நீயெல்லாம் சாமியார்டா மச்சான்...” சிரித்தான்.

“நான் சாமியாராவே இருந்துட்டுப் போறேன்... நீ அந்தப் பொண்ணைப் பற்றிச் சொல்லு...”

“பேசிப் பழக ஆரம்பித்ததும் அவ யாருக்கும் தெரியாமப் போன் நம்பர் கேட்டா... இதுவும் திரைமறைவு வேலைதான்... அவளுக்கு எதுவும் தேவைன்னா நம்மகிட்ட கேட்க்கத்தான்... பண்டமாற்று... பாபி என்னோட நம்பரைக் கொடுத்தான்... தினமும் மணிக்கணக்குல பேசுவா... இதுவரை ரெண்டு தடவை பாபியும் நானும்....”

“சரி விடு... அதை நான் கேட்கலை.... அதெதுக்கு எனக்கு... இவளுகளுக்கு பாதுகாப்பு அதிகமா இருக்குமே... அப்புறம் எப்படி இப்படிப் பேச... உங்க கூட வர...”

“டான்ஸ் பார்ல அதிக பணம் கொடுத்தா அங்கயே ஒதுங்க இடமிருக்கு... அங்க இவளுக உடம்பைக் கொடுக்க பணம் அவளோட பாஸ்க்குத்தான் போகும்... மற்றபடி பாதுகாப்பு அதிகம்தான்... வெளிய வரமுடியாது... அவளுகளைக் கொண்டாந்து அறையில் விட்டதும் பிளாட்டைப் பூட்டிட்டுப் போயிடுவானுங்க... பட் போன்ல பேசலாம்... என்ன போனுக்கு நாமதான் ரீசார்ஜ் பண்ணி விடனும்...”

“வேணான்டா... பாவம் சின்னப்புள்ளையா இருக்கு... அதோட வலியையும் வேதனையையும் நீங்க சாதகமாக்கி காரியத்தை சாதிச்சிருக்கீங்க... அதையே தொடரப் பாக்காதே... அந்தப் பாவமும் சேர்ந்து உன்னைத் தாக்கும்... ஏதோ பாவம் செஞ்சதாலதான் குடும்பத்தை விட்டு பிள்ளைகளை விட்டு இங்க வந்து கிடக்கிறோம்... ஊரிலே சொந்த வீடு அரண்மனை மாதிரி இருந்தாலும் இங்க ஒரு கட்டில்தான் வாழ்க்கையின்னு ஆயிப் போயிருக்கு... இதெல்லாம் தொலச்சிட்டுப் போகணும்டா... சின்னப்புள்ள பாவமெல்லாம் சுமக்காதே... உன்னையத் தாக்குதோ இல்லையோ உன்னோட பிள்ளைங்க நல்லாயிருக்கணும்... அதுக்குத்தானே இங்க கஷ்டப்படுறோம்....”

“அடேய்... நீ என்னென்னமோ பேச ஆரம்பிச்சிட்டே... அப்படியெல்லாம் இல்லடா... சும்மா....“

“சும்மான்னா... இருக்கும் வரை ஜாலியா..?”

“ஊருல உனக்கு குடும்பம் இருக்கு... இங்க குடி குடியின்னு திரியிறதே தேவையில்லாதது... இதுல இவ வேற... அழிஞ்சிருவே பாத்துக்க... அவளைக் கல்யாணம் பண்ணிப்பேன்னா தாராளமாப் பேசு...”

“அதெப்படிடா மச்சான்... எனக்குப் பொண்டாட்டி புள்ளை இல்லையா... இங்க இருக்க வரைக்கும் வச்சிக்கலாமே...”

“உனக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கா... ஏன் அவளுக்கு வாழ்க்கையில்லையா... நைட் கிளப்புல பொண்ணுங்க படுற பாட்டை நானும் ஒரிரு தடவை நண்பர்களுடன் போகும் போது பார்த்திருக்கிறேன்... விட்டுடு... பாவம்... அவளோட பாவத்தைச் சுமக்காதே... அவ்வளவுதான் சொல்லுவேன்... அதுக்கு மேல உன் இஷ்டம்...”

“ம்... இனிப் பேசலைடா...” என்றபடி எழுந்தவன் போன் அடிக்க எடுத்துப் பேசியபடி பால்கனிக்குச் சென்றான்.

சிவா தலையிலடித்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.

மீண்டும் மலாமாவின் அழகின் பின்னே நாய்க்குட்டியாய் பயணித்தான்.

ஆம் இவள் பேரழகி... பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலியைப் போல் அழகி... கடல்புறாவில் வரும் மஞ்சள் அழகியைப் போல் அழகி... பக்கத்து வீட்டு சுபாவைப் போல் அழகி... அழகி படத்தில் வரும் நந்திதாதாஸைப் போல் அழகி... கல்லூரியில் படித்த புவனாவைப் போல் அழகி... இன்னும் இன்னுமாய்......

அவளை அருகே பார்க்கும் போதுதானே அழகின் நளினமும் அழகின் அழகும் தெரிகிறது... கருப்பர்கள் என தீண்டாமல் ஒதுங்கிச் செல்லும் போது தெரிவதில்லை இவ்வழகிகளின் அழகு என்பதை உணர்ந்த நாள் அது...

அத்தனை பேரழகு அவளிடம்... சம்பத் சொன்ன மாதிரி அழகான ஆப்பிள்கள்தான் அவளின் மார்புகள்... கோவில் புடைப்புச் சிற்பங்களில் செதுக்கியிருப்பதைப் போல் நிமிர்ந்த மார்புகள்... லீமா ஒருமுறை சொல்லியிருக்கிறாள் நிமிர்ந்த மார்பை விட சரிந்த மார்பே அழகு என்று ஆனால் நிமிர்ந்த கோபுரக் கலசமாய் அவனை உள் வாங்கியது மலாமாவின் மார்புகள். அங்கிருந்து கண்களை அகற்றப் பெரும்பாடு பட்டான் சிவா. சம்பத்தைப் போல் நாமுமா... சேச்சே... இவள் ஒரு பெண்... எங்கோ பிறந்த சகோதரி... அவளின் அங்கங்களை இப்படித் தின்பதுபோல் பார்க்கலாமா... குடித்தவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என தனக்குள் சொல்லிக் கொண்டு ரசித்தது போதுமென கண்களைத் தரையில் வீழ்த்தி, தன்னைச் ஜெயித்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் மீண்டும் அவளைப் பார்த்தான்...

இப்போது தனது பார்வையில் தவறு வந்து விடாத வண்ணம் பார்த்தான்... ஒரு குழந்தையைப் பார்ப்பது போல்... கோவில் சிற்பத்தைப் பார்ப்பது போல்... வீதி உலா வரும் அம்மனைப் பார்ப்பது போல்... சற்றே மென்மையாய்ப் பார்த்தான.

அவனின் பார்வையின் கோணம் மாறியிருந்தது. இதுதான் சிவாவின் சிறப்புக்களில் ஒன்று எனலாம்... சூழலுக்குள் தன்னைப் பொறுத்தி மாற வேண்டிய நேரத்தில் மாறிவிடுவதில் அவன் கில்லாடி. சிறு வயது முதலே எம்மகன் எந்த சூழலிலும் தன்னை மாற்றிக் கொள்வான் என அவனின் அம்மா அடிக்கடி சொல்வாள்.
அந்த உடலுக்கு எது பொருத்தமோ... குறிப்பாக அந்த வேலைக்குப் பொருத்தமான உடை உடுத்தியிருந்தாள்... ஆம் மார்பகத்தின் மேல் பகுதியும் தொடையும் தெரியும்படியான உடைதான் என்றாலும் பொருத்தமாய்... வேலை நிமித்தம் செய்ய வேண்டியதைச் செய்துதானே ஆகவேண்டும்... இவளின் வருமானத்தை நம்பி ஒரு குடும்பம் காத்திருக்கும்தானே ஊரில்... அவர்களின் வாழ்க்கைக்காகத்தானே எல்லாத்தையும் செய்ய வேண்டியிருக்கு... ஆசைக்காக செய்வதில்லையே... பணத்துக்கான அவதிதானே இது...

இது போல் இங்கே எத்தனை பெண்கள்... ஹோட்டலில் நடனமாட எனக் கூட்டி வந்து சிறைக் கைதிகளைப் போல நடத்தப்பட்ட பெண்களை தங்கள் கட்டிடத்தின் அருகில் பார்த்திருக்கிறான்... நண்பர்களுக்காக அவர்களுடன் டான்ஸ் பாருக்குச் சென்றபோது, ஊத்திக் கொடுத்த மலையாளிப் பெண்ணின் உடலில் அவர்கள் கை வைத்த போது நெளிந்து சிரித்து நகர்ந்தவளின் கண்கள் சொன்ன வலியை அவன் மட்டுமே பார்த்திருக்கிறான்... மாலை வேளைகளில் சூப்பர் மார்க்கெட் அருகில் நின்று அழைக்கும் சீன, கருப்பினப் பெண்களைப் பார்த்திருக்கிறான்...

ஒவ்வொருவரும் வாழ்வின் நிமித்தம் தங்களையே களமாக்கி கண்ணீர் வடிக்கிறார்கள்... தமிழ், ஆந்திரா எனப் பெண்கள் வழி தெரியாமல் இங்கு வந்து எவனோ ஒருவனின் கட்டுப்பாட்டில் தொழில் செய்து வாழ்வதையும் பார்த்திருக்கிறான்... ஊரில் கணவனோ, பெற்றவர்களோ இவள் அனுப்பும் பணத்தில் ஆனந்த வாழ்வு வாழலாம்... எப்படி வருகிறது அந்தப் பணம்... எத்தனை வேதனை... எத்தனை வலி... யாருக்கும் தெரிவதில்லை... குறிப்பாக அந்தப் பணம் சுமந்து செல்லும் அந்தப் பெண்ணின் கண்ணீர் கூட யாருக்கும் தெரியாமல் காய்ந்துதானே போகிறது.

நிறைய யோசித்த சிவா, நிறைவாய்.... மலாமாவைத் தன்னுள் கவிதையாக்கி எழுதிக் கொண்டிருந்தான்.

"என்ன சிவா... நீயும் அவ அழகில் மயங்கிட்டே போல..." எனச் சிரித்த முத்துவின் குரலால் அந்த பத்துக்குப் பத்து அறைக்குள் மீண்டும் திரும்பினான் சிவா.

-பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-10-by-parivai-se-kumar&i=10757

 

-பரிவை சே.குமார்

Related Articles