வெளியிடப்பட்ட நேரம்: 21-Oct-2020 , 08:34 AM

கடைசி தொடர்பு: 21-Oct-2020 , 08:34 AM

கறுப்பி - பாகம் - 15

karuppi

சூப்பர் மார்க்கெட் அருகே வரும்போது யமுனாவைப் பார்த்தான்.

அவளும் சிவாவைப் பார்த்தாள்.

இருவரும் பார்த்துக் கொண்டாலும் அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

அவள் கண்டு கொள்ளவேயில்லை… போய் பேசுவதா வேண்டாமா என யோசித்தவன் மெல்ல நகர்ந்தான்.

நாலைந்தடி எடுத்து வைத்தவன் திரும்பிப் பார்த்தான்.

அவளும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்… முகத்தில் லேசான சிரிப்பு.

சரி… அவளிடம் பேசிப் பார்க்கலாம் எனத் திரும்பி அவளிடம் வந்து “யமுனா..?” என்றான்.

“ம்… நல்லாயிருக்கீங்களா..?” என்றாள்.

“ம்… என்ன நிறைய பொருட்கள் எல்லாம் வாங்கி வச்சிருக்கே…”

“சமையலுக்கு…” என்றாள்.

“சமையல்…?”

“இப்ப இந்த ஊருக்காரன் வீட்டுல வேலை பார்க்கிறேன்…” சிரித்தாள்.

“வாவ்… மகிழ்ச்சி…” சந்தோஷப்பட்டான்.

யமுனா கொஞ்சம் உடல் பெருத்திருந்தாள்… முகத்தில் வேதனை வரிகள் இல்லாதிருந்தது. கண்ணுக்குக் கீழே வருத்தத்தில் வரையப்பட்டிருந்த கறுப்பு மறைந்திருந்தது… கொஞ்சம் கலராகவும் இருந்தாள். கையில் கழுத்தில் தங்கம் மின்னியது.

அவளின் முகம் பார்த்து கண்களை உதட்டில் நிறுத்திய போது அவள் கொடுத்த முத்தம் ஞாபகம் வந்தது…

உதடுகள் கூட உலர்ந்து போகாமல் அழகாய் இருந்தது.

“என்ன என்னைய அக்குவேரு ஆணிவேரா ஆராயுறீங்க…?” என்ற அவளின் கேள்விக்குப் பின் சுயத்துக்கு வந்தான்.

“சேச்சே… அப்பப் பார்த்த யமுனாவுக்கும் இப்பப் பார்க்கிற யமுனாவுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு… வேதனை நிறைந்த முகம், கண்ணுக்குக் கீழே இருந்த கறுப்பு… உலர்ந்து போயிருந்த உதடுகள் எல்லாம் மாறியாச்சு… கொஞ்சம் குண்டாவும் கலராவும் மாறியிருக்கே… தாலிச் செயின் கழுத்துல கிடக்கு… கையில வளையல்... ம்…. மாறியிருக்கே… உங்கிட்ட இந்த மாற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்குது…” சிரித்தான்.

“ம்…” அவளும் சிரித்தாள்.

“அவசரமாப் போகணுமா…? இல்லை கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாமா…?” மெல்லக் கேட்டான்.

“அவசரமில்லை… டிரைவர் வர அரைமணி நேரமாகலாம்… வந்தாலும் வெயிட் பண்ணுவாரு… நாம பேசலாம்…” என்றாள்.

அருகிருந்த ஹோட்டலுக்கு அவளை அழைத்துச் சென்று அவள் வேண்டாமென்று சொன்ன போதும் ஒரு மசாலா தோசை ஆர்டர் பண்ணி விட்டு தனக்கு டீ சொல்லிவிட்டு, “சொல்லு யமுனா… இப்பச் சந்தோஷமா இருக்கியா…?” என்றான்.

“ம்… இருக்கேன்…”

“எப்படி அவனுககிட்ட இருந்து இங்க மாறுனே…?”

“நீங்க போனதக்கு அப்புறம் ஒரு நாலஞ்சி மாசம் அங்க இருந்திருப்பேன்… ஒரு தடவை இப்ப வேலை பாக்குற வீட்டுக்காரனோட தொடர்ந்து ரெண்டு நாள்… அவனோட பார்ம் ஹவுஸ்ல... அப்ப அவன் வீட்டுக்கு வேலை ஆள் வேணும்… வர்றியான்னான்… சரியின்னதும்… எங்க ஓனர்க்கிட்ட பேசி, எனக்கு இருபது நாள் லீவு கொடுத்து ஊருக்குப் போகச் சொல்லி, விசா ரெடி பண்ணி கூட்டிக்கிட்டாங்க…. சமையல்தான் வேலை… அங்கயே தங்கிக்கலாம்… வருசம் ஒரு முறை ஊருக்குப் போகலாம்… நல்லாயிருக்கேன்…”

“சந்தோஷமா இருக்கு… அவன் எப்படிப்பட்டவனா இருந்தாலும் நல்லவனா இருந்திருக்கான்… நீ எத்தனை கஷ்டப்பட்டிருப்பே… நீ எப்படியிருக்கே… நல்லாயிருக்கியா… இல்லையான்னு கூடத் தெரிஞ்சிக்க முடியாம இருந்தேன்… இன்னைக்குப் பார்ப்பேன்னு கனவுல கூட நினைக்கலை…”

அவளுக்குத் தோசை வந்தது… சிவாவுக்கு இஞ்சி டீ வந்தது.

“நீங்க கொஞ்சம் சாப்பிடுங்க…” என்றாள்.

“நீ சாப்பிடு… எனக்குப் பசியில்லை… இந்த நேரத்தில் சாப்பிடவும் மாட்டேன்…” என்றான்.

தோசையைப் பிய்த்து வாய்க்குள் வைத்துக் கொண்டாள்.

“ஆமா ஊர்ல உங்க வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா…?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க… ஆமா உன் பையன்…?”

“நல்லாயிருக்கான்…”

“உங்க பொண்டாட்டிக்கு சேலை வாங்கிக் கொடுத்தீங்களா…?”

“அதான் எப்பவும் வாங்கிக் கொடுக்கிறோமே…?”

“இல்ல அவங்களுக்கு வாங்கி வச்சிருந்த சேலையை எனக்குக் கொடுத்தீங்க… அதுக்குப் பதிலா…”

“ம்… அதே மாதிரி வாங்கிக் கொடுத்துட்டேன்…”

“எனக்கு அந்தச் சேலை ரொம்பப் பிடித்திருந்தது… நல்ல செலக்சன்…” ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

“அப்படியெல்லாம் இல்லை… கடையில இருக்குறதுல எது நம்மளைக் கவருதோ அதை எடுத்துருவேன்…” சிரித்தான்.

தோசைத் தட்டை அவன் பக்கம் தள்ளி “கொஞ்சம் எடுங்க” என்றாள்.

கொஞ்சம் பிய்த்து வாயில் வைத்துக் கொண்டு “போதுமா…?” என்றான்.

“ம்…” நாக்கை வாய்க்குள் உருட்டினாள்.

“வேலையில இப்ப பிரச்சினை இல்லையில்ல…”

“இல்லைதான்… ஆனாலும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது.”

“என்ன வேலை அதிகமா…”

“அப்படியெல்லாம் இல்லை…”

“அப்புறம் சில வீடியோக்களில் பார்க்கிற மாதிரி அடிச்சிக் கொடுமை…”

“அய்யோ… அப்படியெல்லாம் இல்லை…”

“பின்னே…”

“முன்னாடி பார்த்த வேலையையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்…”

“என்ன சொல்றே..?”

“ம்… அப்பப்ப எனக்கு வேலை கொடுத்தவன் வச்சிப்பான்…”

“ஓ… அதுக்குத்தான் வேலைக்கு கூட்டிப் போனானாக்கும்… நான் வேற நல்லவன்னு சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்துட்டேன்.”

“என் உடம்பு மேல ஆசைப்பட்டுத்தான் வீட்டு வேலைக்கு கூட்டிப் போனான்… அங்க இன்னும் ரெண்டு ஆள் இருக்காங்க… வேலை பார்க்கணும்… அவனுக்கு ஒரு விவசாய தோட்டம் இருக்கு… அங்க போகும் போது நானும் போகணும்… அங்க அவன் கூட இருக்கணும்…”

சிவா பேசவில்லை.

அவளே மெல்லத் தொடர்ந்தாள்.

“பணம் நல்லாக் கொடுப்பார்… இந்த நகையெல்லாம் அவர் வாங்கிக் கொடுத்ததுதான்… அவர் மனைவிகளுக்குத் தெரியாது. ஒரே ஒரு பிரச்சினைதான்…”

“என்ன…?”

“அவரோட மகன்களும் சில நேரத்தில்…”

சிவா தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

“ஏய்… முன்னாடி பார்த்ததுக்கு இது ஓகேதான்… ஒரு குடும்பத்துக்குள்ளதானே… நீங்க ஏன் வருத்தப்படுறீங்க… நான் இப்ப நல்லாத்தானே இருக்கேன்…” சிரித்தாள் கண் கலங்கியிருந்தது.

“உன்னோட வேதனை குறைஞ்சிருக்கு… ஆனா இன்னமும் அதே தொடர்வது வேதனைதான்… இந்த ஊருக்காரனுங்க வீட்டுல டிரைவரா இருக்க ஒருத்தன் அங்க இருக்க பொண்ணுங்க பற்றிச் சொல்வான்… அடப்போடா சும்மா பந்தாவுக்காகச் சொல்றேன்னு திட்டிட்டு விட்டுருவேன்… ஆனா நீ சொல்றதை வச்சிப் பார்த்தா அதுவும் உண்மைதானோன்னு தோணுது…”

அவள் சாப்பிட்டு எழ, டீ ஒன்று வாங்கிக் கொடுத்தான்.

“எல்லாருக்குமே இந்த உடம்பு மேலதான் கண்ணிருக்கு… நீங்க மட்டும்தான் என்னை அறைஞ்சீங்க… அதை எப்பவும் மறக்க மாட்டேன்…” கன்னத்தைத் தடவிக் கொண்டாள்.

“எனக்குன்னு ஒருத்தி ஊர்ல இருக்கா… அப்புறம் எதுக்கு இன்னொரு உடம்பு மேல ஆசை… இன்னைக்கு கூட ஆபீசுல ஒருத்தன் என்னோட பிரண்டைப் பற்றிக் கேட்கும் போது தப்பாப் பேசினான்… அவன் எந்த ஊராயிருந்தா என்னன்னு வச்சிச் செஞ்சிட்டேன்… பொண்ணுங்கள்னாலே அதுக்கு மட்டும்தான்னு நினைக்கிறவங்களை என்ன சொல்றது…”

பில்லுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“வெள்ளிக்கிழமை வர்றேன்… எனக்கு உங்க செலக்சன்ல சேலை வாங்கித் தாரீங்களா…” மெல்லக் கேட்டாள்.

“அதுக்கென்ன வா… வாங்கலாம்… ஆனா நான் ஒண்ணும் சேலை எடுக்கிறதுல கில்லாடி கிடையாது…” சிரித்தான்.

“உங்க செலக்சன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு… அதுக்கப்புறம் நானும் அதே மாதிரி எடுத்துப் பார்த்தேன்… சரியா வரலை…”

“ஓகே… எடுக்கலாம்…”

“அப்ப வெள்ளிக்கிழமை போன் பண்ணிட்டு வர்றேன்…” என போன் நம்பரைக் கொடுத்தாள்.

தன் மொபைலில் ஏற்றிக் கொண்டே, “இப்ப போனெல்லாம் செக் பண்றதில்லையோ…” எனக் கேட்டான்.

“அதெல்லாம் இல்லை…” சிரித்தாள்.

மீண்டும் அவள் உதடு பார்த்தான்…

மாடிப்படியில் வைத்து அவள் கொடுத்த முத்தம் மீண்டும் ஞாபகத்தில் வந்தது.

கண்களை தரை சாய்த்தான்.

“சரி வர்றேன்… இனி வாட்ஸ் அப்ல தொந்தரவு பண்ணுவேன்…”

“அட அது வேறயா…?”

“ம்… பேஸ்புக்ல யமுனா சந்திரன்னு இருப்பேன்… பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுங்க…”

“அடேங்கப்பா… என்ன முன்னேற்றம்…? மாடிப்படியில கண்ணக் கசக்கிக்கிட்டு இருந்த யமுனாவா… மகிழ்ச்சியா இருக்கு…”

“ம்… அப்பவே உதட்டு முத்தம் கொடுத்தவதான் நான்…”  சிரித்தாள்.

“சரி… சரி… நீ கெளம்பு…” என்று சிரித்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை… அவள் கைபிடித்துக் குலுக்கி “பை… பார்த்துப் போ” எனச் சொல்லி நடக்கலானான்.

அவளும் “பை” என்றபடி அவனுக்கு எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தாள். அப்போது டிரைவர் அவளுக்குப் போன் பண்ணினான்.

*****


ம்பத் கடுப்பாய் வெளியில் வந்தான்...

"என்ன மச்சி...? என்னாச்சு...?" கருண் வினவ, "இவளைப் பாத்தா எனக்கு ஒண்ணுமே தோணலை... டிரஸ்ஸைக் கூட கழட்ட மாட்டாளாம்... முதல்ல அந்தச் சூழலுக்குப் பொருந்த இருவரும் ஒத்துழைக்கணும்தானே…. ரெண்டு பேருக்கும் அந்த எண்ணம் இருக்கணும்... காசுக்காக அவ செய்யணுமின்னு நினைக்கிறா... எனக்கு மூடு வர வேணாமா... எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டு... ம்... ம்...ன்னா.... ஒண்ணுமே இல்லாத கல்லப் பாத்துக்கிட்டு மூடு வர வைக்க முடியுமா... அப்புறம் எப்படி மத்ததெல்லாம்...?" சோபாவில் குத்தினான்.

"ஓகே... கொஞ்சம் பொறுமையா இரு..." என்றவன் மலாமாவிடம் "நீ மச்சியைக் கொஞ்சம் கவனியேன் ப்ளீஸ்" எனச் சொல்ல, "கடவுளைத் திட்டியவன்... இவனுடன் நானா... நோ..." என மறுத்தாள்.

"பெரிய அழகி மயிரு... இவ வேண்டாம் வேற இடம் போலாம்..." ஆரம்பித்தான் சம்பத்.

"இரு மச்சி... எனக்கு இவ செட் ஆயிட்டா... கெடுத்துடாதே..." என்ற கருண், மலாமாவின் குட்டிப் பாவாடையைத் தூக்கி தொடையத் தடவினான். அவள் ஒன்றும் சொல்லாது அமர்ந்திருந்தாள். தன்னை நெருக்கி அமரச் சொன்னான்... அவளும் நெருக்கமாய் அமர்ந்தாள். "பாத்தியா மச்சி..." சம்பத்தைப் பார்த்துக் கண்ணடிக்க,

"அதென்ன மச்சி... நீங்கள்லாம் தடவுனா சும்மா இருக்காளுங்க... நான் தொட்டா மட்டும் குதிக்கிறாளுக..." என்ற சம்பத் அவளை இழுத்து அணைத்தான்...

திமிறினாள்... உதடுகளைக் கவ்வினான்... நெஞ்சில் குத்தி... விலகி எழுந்தாள்.

"என்னது... போலீசுக்கு போன் பண்ணவா... டீசெண்டா நடக்கத் தெரியாதா... உங்க வீட்டுல அக்கா, தங்கச்சி, அம்மால்லாம் இல்லையா... உன்னோட பொண்டாட்டிக்கிட்ட இப்படித்தான் நடந்துப்பியா..." கத்தினாள் உயரமானவள்.

ராகவ் அவளைச் சமாதானப்படுத்த, இதெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாது இருந்த இருவருக்கும் நடுவில் போய் அமர்ந்து அவர்கள் மீது கை போட்டுக் கொண்டாள் மலாமா... சிவாவின் கன்னத்தில் முத்தமும் கொடுத்தாள்... அந்த உதடுகளின் ஸ்பரிசத்தில் காமம் இல்லை... கைகளில் இருந்த அதே குழந்தைத் தனமே இருந்தது. கலங்கிய கண்ணைப் பார்த்து அவனுக்கு வலித்தது. ஏன் இப்படி... பெண் என்பவள் போகப் பொருள் மட்டும்தானா... அவளுக்கு மனம் என்பது ஒன்றுமில்லையா...? யோசித்தான்... பிடிபடவில்லை... ஏனோ வலித்தது... அவளின் முத்த எச்சில் காயாமல் அவளின் காயத்தை அவனுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதாய்ப்பட்டது.

"என்ன மச்சி நீ... இப்பத்தான் தயார் பண்ணினேன்... காரியத்தைக் கெடுத்துட்டே..." கருண் வருத்தப்பட்டான்.

"சாரி மச்சி..."

"ஓகே விடு..." என்றபோது மீண்டும் மலாமா கருண் அருகில் வந்து அமர்ந்தாள். அவள் முகம் தூக்கி, "சாரி" என்றான் கருண்.

"இட்ஸ் ஓகே... விடு... தினமும் இப்படித்தானே... இதுதானே எங்க பிழைப்பு… தெரிஞ்சி... இதெல்லாம் செய்யிறோம்ன்னு ஒத்துக்கிட்டுத்தானே வேலைக்கு வந்தோம்... உனக்கு என்ன பண்ணனும் சொல்லு... பட் உறவுக்கு ஒத்துக்க மாட்டேன்... மத்தது எது வேணுமின்னாலும்... நாங்க இதெல்லாம் செய்யிறதுக்கு உங்ககிட்ட வாங்குற பணமெல்லாம் எங்களுக்கு இல்லை... அதில் பாதி ஓனருக்கு கொடுக்கணும்... தெரியுமா... வலியும் வேதனையும் மட்டுமே எங்களுக்கு மிச்சம்..." வேதனையோடு சிரித்தாள். வந்தவனுங்க பாதியில போயிட்டா முதலாளிக்கு என்ன சொல்வது என்ற கவலை அவள் முகத்தில்.

கருண் உறவு கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக நின்றான்.

-பரிவை சே. குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-14-by-parivai-se-kumar&i=10768

Related Articles