வெளியிடப்பட்ட நேரம்: 23-Oct-2020 , 07:52 AM

கடைசி தொடர்பு: 23-Oct-2020 , 07:52 AM

கறுப்பி - பாகம் - 16

karuppi

நாளைக்கு பீச்சுக்குப் போலாமா..?” வியாழன் இரவு இராமன் கேட்டான்.

எல்லாரும் போகலாம் என்று சொல்ல, காலையில் பதினோரு மணி வரைக்கும் தூங்கக் கூடாது. சீக்கிரம் எந்திரிச்சி பிரியாணி செஞ்சி வச்சிட்டுப் போகலாம். எத்தனை மணிக்கு வந்தாலும் சாப்பிட்டுப் படுக்க வசதியாக இருக்கும் என முடிவு செய்தார்கள்.

அதேபோல் சமையல் முடித்துக் கிளம்பும் போது பாபிக்குப் பின் அறைக்கு வந்த ராகவன், “பேசாம சாப்பாட்டையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டா அங்கிட்டுத்தானே பார்க்குல உக்காந்து சாப்பிட்டுட்டு ஈவினிங் வரலாம்…” என்றார்.

பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சாப்பாடு பாத்திரங்களில் அடைபட்டு கார் டிக்கியில் ஏற்றப்பட்டது. பெப்ஸி, கோக்கில் சரக்கு கலக்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டது. நொறுக்குத் தீனியும் வாங்கி வைக்கப்பட்டது.

பீச்சை ஒட்டிய பார்க்கிங்கில் காரை நிறுத்தி, பெர்முடாஸ் போட்டுக் கொண்டு கடலுக்குப் போனார்கள்.

கூட்டம் அதிகமிருந்தது.

இந்தச் சூட்டில் பீச் மணலின் குளிர்ச்சியில் சில வெள்ளைக்காரர்கள் உடல் காட்டிப் படுத்திருந்தார்கள்.

இலங்கையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தண்ணீருக்குள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்… ஒரே ஆராவாரமாய்.

ராமனும் அன்புவும் இதற்கு மேல் செல்லக் கூடாது எனக் கட்டியிருந்த ரோப்பைத் தாண்டி நீச்சலில் போனார்கள்.

ராகவன், சுதாகர் மற்றும் சில நண்பர்கள் ஒரு அளவுக்கு மேல் போகாமல் நின்று கொண்டார்கள்.

சிவா அலை அடிக்கும் இடத்தில் படுத்துக் கொண்டான். அலையில் நகரும் தண்ணீர் அவன் மீது மணலை வாரி இறைத்தது.

சிவாவுக்கு எப்பவும் சிறிய சங்கைத் தேடி எடுப்பது ரொம்பப் பிடிக்கும்.

ஊரில் காளை மாட்டுக்கு கொம்புக் கயறில், கழுத்துக் கயறில் சின்னச் சின்னதாய் சங்குகள் வைத்து… பாசி வைத்து… சிறிய மணிகள் வைத்துக் கட்டியது அவன் நினைவுக்குள் வந்துவிடும்…

தண்ணீரில் இருந்து எழுந்து அதை ஒட்டி சங்கு தேடி நடக்க ஆரம்பித்தான்.

நடிகையைப் போல் ஒருத்தி அவனைத் தாண்டிப் போனாள்.

சின்னதாய் ஒரு ஜட்டியும் பிராவும் மட்டுமே அவள் உடலில்… அசரடிக்கும் உயரம்… அழகான சிவப்பு… அவள் உடம்பு கலருக்கு போட்டிருக்கும் ஜட்டி, பிராவின் கலர் அவ்வளவு பாந்தமாய் இருந்த்து.

‘இந்தக் கலர் எனக்கு நல்லாயிருக்குமா…?’ எனக் கேட்கும் லீமா மனசுக்குள் வந்தாள். இந்த வாரம் அவள் வரவேண்டும். ஒரு வாரம் விடுப்பை நீட்டிப்புப் பெற்றிருக்கிறேன்… வரும் போது உனக்கு என்ன வேண்டும்…’ என்று கேட்டு மெஜேஸ் அனுப்பியிருந்தாள்.

எகிப்து நண்பன் அஷ்ரப் அகமதுவிடம் நைல் நதி குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்பான். இப்போது அஷ்ரப் வீடு கட்டுவதற்காக நைல்லை ஒட்டி, இருபது நிமிடப் பயணத்தில்… இப்போதுதான் விரிவுபடுத்தப்படும் பகுதியில் இடம் வாங்கியிருப்பதாகக் காட்டினான். சென்ற முறை அஷ்ரப் ஊருக்குப் போனபோது பிரமீட்டில் இருந்து கல் எடுத்து வரச் சொல்லியிருந்தான். அது அவனது பெட்டியில் பத்திரமாய் இருக்கிறது. லெபனானில் அப்படி என்ன வித்தியாசமாய்க் கிடைக்குமோ அதை வாங்கி வரச் சொல்ல வேண்டும் என நினைத்தது வைத்திருந்தான்... சாக்லெட் தவிர அப்படி எதுவும் விசேசமாய் இருப்பதாக அவனுக்குப் படவில்லை.

கடந்து போனவள் கிளறிய நினைவில் இருந்து மீண்டவன், முஸ்லீம் நாட்டில் இங்கு உடைக் கட்டுப்பாடு இல்லாதது ஆச்சர்யமே…. உள்ளூர் பெண்கள் எல்லாம் புர்க்கா போட்டு தன் உடலை மறைத்துக் கொள்ள, பிலிப்பைனிகள் கையகல உடைதான் எப்போதும்… இந்தியப் பெண்கள் போடும் உடைகள்… கலாச்சார காவலெல்லாம் ஊரில்தான்.. இங்கு இப்படி உடை உடுத்தி சுற்றித் திரிவதால்தான் ஊருக்குப் போக இவர்களுக்கு மனம் வருவதில்லை.

நயன்தாராக்கள் திரையில் போட்டு வரும் உடைகளுக்கு மகளிர் மன்றங்கள் எகிறிக் குதிக்கின்றன… இங்கே தினம் தினம் அப்படியான உடைகளில்தான் வலம் வருகிறார்கள். பிராவின் பட்டை ஜாக்கெட்டுக்கு வெளியே தெரிந்தால் என்ன போட்டிருக்கே… நல்லாப் போடு என எடுத்து மறைத்து விடுவார்கள் ஊரில்… ஆனால் இங்கே அது கண்டிப்பாகத் தெரிய வேண்டும் என்பதாலேயே அந்த இடத்தில் கிழித்து வைத்தது போல் போட்டு வருவார்கள். போட்டிருக்கும் ஜீன்ஸ் டிசைன் என முன்பக்கம் ஆங்காங்கே கிழித்து விடப்பட்டிருக்கும்… இப்போதெல்லாம் தொடைக்கு மேல் போய் விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் ஜட்டி தெரியப் போட்டால் ஆச்சர்யமில்லை.

சிகரெட் பிடிப்பதில் லெபனானிகளுக்கும் பிலிப்பைனிகளுக்கும் இணையாக இந்தியப் பெண்களும்தான் இருக்கிறார்கள்.

பஸ்ஸ்டாப்பில் லிப்டூலிப் கிஸ் அடிக்கும் பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் மலையாளிகள்.

மறைந்திருந்து போதை வஸ்துவை உள்ளிழுக்கும் பள்ளிச் சிறுவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

சிகரெட் பிடிக்கும் மாணவனுடன் நடந்து வரும் மலையாளிப் பெண்ணும் சிகரெட் குடிக்கிறாள்.

சாராயப் பாட்டில்களை ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அள்ளிப் போகிறார்கள் விடுமுறை நாட்களில்.

குளிக்க வந்துட்டு எதுக்கு ரொம்பச் சமுதாய அக்கறை… சிரித்துக் கொண்டான் சிவா.

அப்போதுதான் யமுனா சேலை எடுக்க வருகிறேன் என்று சொன்னது ஞாபகத்தில் வந்தது.

எழுந்து போய் போனை எடுத்து மாலையில் வா… நான் வெளியில் இருக்கிறேன் என வாட்ஸ் அப் பண்ணி விட்டு திரும்பியவனை “குளிக்க வந்தியா… மண்ணுல திரிய வந்தியா… உள்ள இறங்கி வா…” என்ற ராமனின் குரல் மீண்டும் தண்ணிக்குள் இறங்க வைத்தது.

அப்போது ஒரு லெபனான் பெண்ணும் நாலைந்து ஆண்களும் வந்தார்கள். அவள் டூ பீஸ் உடையில்தான் இருந்தாள். சற்றுமுன் அவனைக் கடந்து சென்றவளைப் போல உயரம்… தண்ணிக்குள் இறங்கியதும் ஆட்டம் போட ஆரம்பித்தாள்.

ஒவ்வொருவனின் தோள் மீதும் ஏறி நின்று தண்ணிக்குள் குதிக்க ஆரம்பித்தாள். அவள் ஏறி நிற்கும் போது எல்லாருடைய கண்ணும் அவள் மீதுதான்… ஒரு படத்தில் ரம்பாவைப் பார்த்து பார்த்திபன், விவேக்கிடம் ரம்பா சார்… எனச் சொல்வது போல் அழகால் ஈர்த்தாள்… காலில் வடியும் தண்ணீர் மேலே அடைப்பில்லாத கோவிலில் இருக்கும் அம்மன் சிலையில் மழை நீர் வழிவதைப் போல் இருந்தது.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த காவலுக்கு நிற்கும் செக்யூரிட்டி சப்தம் போட ஆரம்பித்தான். அதைச் சட்டை செய்யாமல் மீண்டும் மீண்டும் செய்ய ஆரம்பிக்க, அவன் தண்ணிக்குள் இறங்கி வந்து இனி இப்படிப் பண்ணினால் போலீசைக் கூப்பிடுவேன் என்று எச்சரித்தான்.

அவள் அடங்கிவிட, எல்லாரும் அவரவர் ஆட்டத்தைத் தொடர, பாவம் பாகிஸ்தானிகள் சிலர் ஏக்கமாய் தண்ணீருக்குள் நின்று கொண்டிருந்தார்கள். லீமா சொன்னதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவர்களைப் பார்த்தான்… கை அங்குதான் இருந்தது.

குளித்து முடித்து பார்க்கில் போய் உட்கார்ந்து அரட்டையை ஆரம்பித்தார்கள்… கலந்து வைத்திருந்த தண்ணி உள்ளே இறங்க, விவாதம் காரசாரமானது.

மாட்டையும் கன்னுக்குட்டியையும் கூட்டியாந்து வச்சிருக்கான் பாபி எனச் சிரித்தபடி ஆரம்பித்தான் அன்பு.

“எவனோ எவளையோ கூட்டியாந்து வச்சிக்கிட்டுப் போறான்… அவனால முடியுது கூட்டியாந்திருக்கான். நல்லா வச்சிருக்கானுல்ல… அப்புறம் என்ன…” கோபமானான் சிவா.

“எதுக்கு இப்ப கோபப்படுறே மச்சான்…?” என்றான் சுதாகர்.

“பின்ன என்ன… பாபி நம்ம கூட ரெண்டு மூணு மாசங்கூட இருக்கலை… அவனோட போக்கு சரிவராதுன்னு போகச் சொல்லியாச்சு… இருக்க வரைக்கும் இவனுக்குத்தான் வாங்கிப் போட்டான்… இன்னைக்கு இவன் அவனைக் கேலி பண்ணுறான்.”

“அப்ப என்னை வாங்கித் தின்னியின்னு சொல்றியா..?” உள்ளே போன சரக்கு வேலை செய்தது.

“நீ திங்கலையா… ஒரு பொண்ணோட ரெண்டு பேரும் போகலையா…” கடுப்பானான் சிவா.

“என்ன இப்ப நீ என்னைய கேவலப்படுத்தணும்னு நினைக்கிறியா…?”

“இதுல கேவலம் என்ன இருக்கு… நடந்ததைச் சொன்னேன்… அவனை ஏன் கேலி பண்றேன்னு கேட்டேன்… சுதாகர் போறது எல்லாருக்கும் தெரியும்தானே… இங்க எல்லாருக்கும் எல்லாமும் இருக்கத்தான் செய்யுது… நாம உத்தமமா இருந்துட்டு அப்புறம் பேசணும்… நாம செய்யிறாதும் அதானே..”

“அப்ப என்னை பொம்பளப் பொறுக்கிங்கிறியா…” இடை புகுந்தான் சுதாகர்.

“ஏய் விடுங்கப்பா… வேற பேச்சுப் பேசுங்க…” பிரச்சினையை வளர விடாமல் இடை புகுந்தார் ராகவன்.

“எப்புடிண்ணே… இப்புடிப் பேசுவான்… பாபியைச் சொன்னா இவனுக்கென்ன…”

“இப்ப என்னாங்கிறே… அவனை ஏன்டா சொல்றே… என்னையச் சொல்லுன்னு சொல்றியா…?”

“பாரு ராமா… தேவையில்லாம பேசுறான்… நமக்குள்ள நல்லாயில்லை…”

“சிவா… உனக்கு என்ன பிரச்சினை… எவனோ எப்படியோ போறானே விட்டுட்டுப் போ…”

“அதை அவனுக்கும் சொல்லுங்க… அடுத்தவன் கூட்டியாந்து வச்சிருக்கதைக் கேவலமாப் பேசுறான்… இவன் டான்ஸ் ஆடுற சின்னப்புள்ளயோட நம்பரை வாங்கியாந்து வச்சிக்கிட்டு பேசுறதும், அதுகிட்ட போயிட்டு வர்றதும்… என்ன பொய் சொல்லி வச்சிருக்கானோ… யாருக்குத் தெரியும்….”

“இது வேற நடக்குதா… ஒண்ணுமே நமக்குத் தெரிய மாட்டேங்குது…” சிரித்தான் ராமன்.

“ஏன் உங்க சிவா கூடத்தான்… அன்னைக்கு எவ கூடவோ பேசிக்கிட்டு நின்னான்…”

“எங்க…?”

“சபா சூப்பர் மார்கெட்டுக்கிட்ட… கையைப் பிடிச்சி குலுங்கலை…”

“அவ எனக்குத் தெரிஞ்ச பொண்ணு… தப்பான பழக்கமெல்லாம் இல்லை… இதை அன்னைக்கே நீ கேட்டிருக்கலாம்… இல்ல பாத்தவன் நேர எங்கிட்ட வந்திருக்கலாம்… ஒரு வாரத்துக்கு அப்புறம் சொல்றே…”

“அப்ப தப்பாத் தோணலை… கேட்கலை…”

“அப்ப இப்ப தப்பாத் தோணுதோ… உன்னோட தப்பைச் சுட்டிக் காட்டியதும் தோணுது போல… என்னோட ஆபீஸ் பிரண்ட்… ராமனுக்குத் தெரியும் … லீமா… எல்லா விசயமும் எங்கிட்ட பேசுவா… அதுக்காக அவளுக்கும் எனக்கும் தப்பான தொடர்பா… நம்ம எல்லையை நாம வகுத்துக்கணும்… அது எந்த இடத்திலும் வளைந்து போகாத எல்லையா இருக்கணும்… அதுதான் நான்… இந்த நாட்டுக்கு வந்துட்டு ரெண்டு பெண்களுக்கிட்ட கிஸ் வாங்கியிருக்கேன்… ஒருத்தி கொடுத்தது அன்புக் காணிக்கை… இன்னொருத்தி கொடுத்தது வேதனைக்கான தீர்வாய் சகோதரான்னு கொடுத்தது. இதுல எனக்கு எந்தவிதமான காம எண்ணமும் வரலை… என் மனைவிக்கிட்ட கூட சொல்லியிருக்கேன்… ஆனா பாபி கூட்டியாந்து வச்சிருக்கிற பொண்ணோட அழகு உன்னைய பாடப்படுத்துது… நமக்குக் கிடைக்கலையேன்னு ஏங்குறே… அந்த ஏக்கம் அவனைத் தூத்தச் சொல்லுது…”

“சிவா விடு…” ராகவன் அதட்டினார்.

அன்பு எதுவும் பேசவில்லை… அமைதியானான்…

சாப்பிட்டார்கள்…

கொஞ்ச நேரம் வேறு வேறு கதை பேசினார்கள்…

மணி பார்த்தார்கள்…

போய் கொஞ்ச நேரம் தூங்கலாம் எனக் கிளம்பினார்கள்.

பாத்திரங்களை எடுத்துக் கொண்டு காருக்குப் போனார்கள்.

அன்பு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சுதாகர் ஒன்றும் பேசாமல் காரில் போய் அமர்ந்தான்.

ராகவன் முன்னிருக்கையில் அமர, ராமன் காரை எடுத்தான்.

“சாரி மச்சான்... கொஞ்சம் கோபமாயிருச்சு... இனி பாபி பற்றிப் பேசமாட்டேன்... அந்தப் பொண்ணு கூட இப்ப அதிகம் போன் பேசுறதில்லை... இனி சுத்தமா விட்டுடுறேன்..” என்றபடி சிகரெட்டைத் தரையில் வீசிவிட்டு சிவாவைக் கட்டிக் கொண்டான் அன்பு.

ஒரு அறைக்குள் எதிரெதிரே படுக்கப் போறவர்களுக்குள் சண்டையும் சமாதானமும் மின்னலெனத் தோன்றி மறையத்தான் செய்யும் இல்லையா...?

காரில் சிவா ஏறியதும் சுதாகர் ஒருபுறமும் அன்பு ஒருபுறமுமாய் இடித்து இறுக்கிச் சிரித்தார்கள்.

கருண் உறவு கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக நின்றான்.

"இந்த இடத்தில் எப்படி... வேணுமின்னா நைட் ரூமுக்கு வரச் சொல்லலாம்... வருவாளுங்க... இங்க இந்த நேரத்துல... ரிஸ்க் கருண்… போலீஸ் வந்தா பிரச்சினை ஆயிரும்... வேண்டாமே..." படபடப்போடு சொன்னான் ராகவ்.

"நோ நைட் நாங்க போகணும்... நீ சும்மா இரு மச்சி... நான் அவளைக் கரெக்ட் பண்ணிக்கிறேன்..." சிரித்தான் கருண்.

கருணின் மடியில் அமர்ந்திருந்தவளின் தொப்புளைச் சுற்றிச் சுற்றி வந்தது அவனின் விரல்கள்…

"சரி வா... என்ன வேணும்ன்னாலும் செஞ்சிக்க… பட் நூற்றம்பது திர்ஹாம் வேணும்... இப்பவே எடு..." என்றாள்.

பணம் கை மாற, கருணும் மலாமாவும் தடுப்புக்குப் பின்னே... சிறிது நேரம் சத்தம் எதுவுமில்லை...

சில நிமிடங்களுக்குப் பிறகு, "ஓகே முடியலைன்னா விட்டுடு..." என வெளியில் வந்தவன், "அவ எல்லாத்துக்கும் ஓகே மச்சி... எல்லாத்தையும் என் கையில் விட்டுட்டா... பட் எனக்குத்தான் பதட்டத்துல... சரி விடு...." எனச் சிரித்தான்.

வாஷ்பேசனில் வாய் கொப்பளித்து டிஷ்யூ பேப்பரால் வாயைத் துடைத்தபடி வந்தவளின் முகம் வெளிறிக் கிடந்தது.

இந்த வாழ்க்கையின் மீதான வெறுப்பு அவள் கண்ணில் தெரிந்த்து.

கருணோ… சம்பத்தோ மட்டுமில்லை… இன்னும் எத்தனை விதமான இதைவிட மோசமான ஆண்களைப் பாரத்திருப்பாள்.

வெளிய அத்தனை பேர் அமர்ந்திருக்க, சின்னதொரு தடுப்புக்குள் அவளால் எப்படி உணர்ச்சியைக் கொண்டு வரமுடியும்.

அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் உட்கா பைப்பையே பிடித்து ஆட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

திடீரென சம்பத்தையே உற்றுப் பார்த்தாள்.

"என்ன..." என்றான் சம்பத்.

"நூறு திர்ஹாம் கொடுத்தே... ஒண்ணும் செய்யல... அவ கூட மறுபடியும் போ..." என உயரமானவளைக் காட்டினாள்.

அவளும் எழுந்து வாவெனக் கை நீட்டினாள்.

"வேண்டாம்... அவளைப் பார்த்தா எனக்குத் தோணலை... என்னமோ உலக அழகி மாதிரி மார்ல கைவைக்காதே... மசுருல கை வைக்காதேன்னு தொட விடமாட்டேங்கிறா... அங்க தொடாதே... இங்க தொடாதேன்னு... காசு வாங்கிட்டு என்ன கட்டுப்பாடு...." சம்பத் கோபமாகப் பேசினான்.

"ஓகே... வா... நாஞ்செய்யிறேன்... பட் எனக்கு நூறு திர்ஹாம் தனியா வேணும்..." என்றாள்.

இதற்கு மேல் இங்கு இருப்பது சரியல்ல என முத்துவும் சிவாவும் வெளியில் போய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்... ஒரு சேச்சி தன் குழந்தையை சைக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டு போனாள். கடை முன் இவர்கள் நிற்பதை ஒரு மாதிரிப் பார்த்தாள். அவள் நினைவில் என்ன ஓடியிருக்கும் என சிவா யோசித்தான்.

சம்பத் அவள் பின்னே போனான்.... இப்போது அவனின் கை அவளின் தோளில்... அவள் ஒண்ணும் சொல்லவில்லை... உயரமானவள் மட்டும் தன்னைப் பார்த்தால் ஒண்ணுமே தோணலைன்னு சொன்ன சம்பத்தை முறைத்துக் கொண்டே நின்றாள்… கணேஷின் கை அவளை இழுத்து அணைத்து மடியில் அமர்த்திக் கொண்டது.

கருண் தனக்கான வேலை முடிந்துவிட்டதாக உட்காவை இழுத்துக் கொண்டிருந்தான்...

ராகவ் எழுந்து கணேஷின் மடியில் அமர்ந்திருந்த உயரமானவளின் கழுத்தில் இருக்கும் ரோமங்களை எண்ணிக் கொண்டிருந்தான்...

சற்று நேரத்தில் மலாமா அழுது கொண்டே வெளியில் வந்தாள்... உள்ளிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும் முன்னரே அவள் அவர்களைத் தாண்டிக் கொண்டு வெளியில் வந்தாள்.

நேராக சிவாவிடம் வந்து "அவனென்ன மனுசனா... கடிக்கிறான்... அதுவும் என் மார்பில் கடிக்கிறான்… பொண்டாட்டிய இப்படித்தான் கடிப்பானா... மனுசனா... மாடா... நானும் பெண்தானே... எனக்கு உணர்வுகள் இல்லையா... சொன்னதெல்லாம் செஞ்சேன்... நல்லாக் கடிச்சிட்டான்... எல்லா இடத்திலும் கடிக்கணுங்கிறான்... அடிக்கிறான்... எங்க வாழ்க்கை... குடும்பச் சூழல்... அறைக்குள்ள செய்ய வேண்டியத எல்லார் முன்னாலயும் செய்யுறோம்... இந்த மாதிரி இடத்துல எந்தப் பொம்பள செய்வா... ப்ளீஸ் பிரதர்... அவனைக் கூட்டிக்கிட்டு இங்க இருந்து போயிருங்க... இல்லேன்னா நான் போலீசுக்குப் போன் பண்ணிடுவேன்... அப்புறம் உங்களுக்குத்தான் பிரச்சினை... அவனோட இந்தச் செயலால ஒண்ணுமே பண்ணாத நீங்களும் மாட்டணும்... என்னோட சகோதரன் மாதிரி இருக்க உங்களுக்காகத்தான் சொல்றேன்... ப்ளீஸ்... என்னோட தொழில் இது... அதுக்காக... நானும் பெண்தானே... உங்க வீட்டுப் பெண்ணுக்கிட்ட இப்படித்தான் நடந்துப்பீங்களா... பணம் வாங்கினா எல்லாத்தையும் பொறுத்துக்கணுமா..." வெள்ளை விழிகள் வெள்ளமென நிற்கக் கும்பிட்டாள்.

அவளின் கண்ணீர்த் துளி தரையில் விழுந்தது. அது சிவாவையும் முத்துவையும் என்னவோ செய்தது.

- பரிவை சே. குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்க சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-15-by-parivai-se-kumar&i=10775

Related Articles