வெளியிடப்பட்ட நேரம்: 02-Nov-2020 , 08:41 AM

கடைசி தொடர்பு: 02-Nov-2020 , 08:41 AM

கறுப்பி பாகம் 17

karuppi

லீமா ஊரிலிருந்து வந்து விட்டாள்.

அவள் வந்ததும் வராததுமாக ஹசனுடன் சிவாவுக்கு நிகழ்ந்த பிரச்சினையின் காரணத்தைக் குட்டி மூலம் அறிந்து வைத்திருந்த ரபீக் போட்டுக் கொடுத்துவிட, சிவாவிடம் வந்து “ச்சிவ்வா... அவன் உங்கிட்ட அப்படியா கேட்டான்... அவன் வரட்டும்... வேலை போனாலும் பரவாயில்லை...” என்றாள் கன்னம் சிவந்திருந்தது.

“ஏய் இப்ப என்ன பிரச்சினை... மலையாளிங்க போட்டுக் கொடுக்குறதையும் கூட்டிக் கொடுக்குறதையும் விடமாட்டானுங்க... அவன் கேட்டான்... அதுக்கு நான் நல்ல பதிலாச் சொல்லிட்டேன்... இப்ப நீ என்ன பண்ணப் போறே... அவனுக்கிட்ட பேசாம உன்னோட வேலையைப் பாரு... சும்மா ஊர்ல இருந்து வந்த ரெண்டாவது நாளே சண்டை... அது இதுன்னு... அவன் இப்ப பீல்டுல இருக்கான்.... சும்மா டென்சனாயிக்கிட்டு...”

“அப்ப கேக்க வேண்டாங்கிறியா...?”

“ஆமா... அவனுக்கு நான் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டேன்... அவன் இங்க வந்தாலும் உங்கிட்ட பேச யோசிப்பான்... சரியா...?”
“ம்...” என்றவளின் முகத்தில் மகிழ்ச்சியில்லை.

“ஏய்... என்ன... ஏன் சோகமாயிருக்கே... புள்ளைங்க நினைப்பா...?”

“ப்ச்...ப்ச்... இவங்கள்லாம் ஏன் இப்படி இருக்காங்க... எவ்வளவு கேவலாக் கேட்டிருக்கான்... சாரி ச்சிவ்வா... என்னாலதானே...”

“ஏய் லூசு... உன்னால என்ன... நம்ம நட்பு எப்படிப்பட்டதுன்னு நமக்குத் தெரியும்... மூனாவது மனுசனுக்குச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமில்லை... புரிஞ்சிக்க... சரி அதை விட்டுட்டு வெளியில வா... இந்த வார விடுமுறையில நாம முஸாப போலாமா...?”

“முஸபா..? அங்க எதுக்கு...?”

“மறந்துட்டியா... மலாமா பார்க்கப் போலாம்... வந்திருப்பா... பார்த்துட்டு வரலாம்...”

“ஓ... கறுப்பியா... ஒகே... பட் எனக்கு லாங்க் டிரைவ் போகணும் ச்சிவ்வா... குடும்ப நினைவு... இவங்க பேச்செல்லாம் மறக்கணும்... நீ எங்கூட வரணும் ப்ளீஸ்... மாட்டேன்னு சொல்லாதே...”

“போவோம்... நீ வெகேசன் போனப்போ நிறைய இடம் போனேன்... மில்க்கிவே பார்க்க அல் குவாங்கிற கிராமத்துப் பக்கம் பாலைவனத்துக்குள்ள போனோம்... அருமையான அனுபவம் தெரியுமா... அடுத்த தடவை போகலாம்ன்னு சொன்னாங்கன்னா நாம போறோம்... சரியா...”

“இங்க மில்க்கிவேயா..?”

“ஆமா... ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள்... இந்தா பாரு போட்டோஸ்...” மொபைலைக் கொடுத்தான்.

வாங்கிப் போட்டோசைப் பார்த்து ‘வாவ்...’, ‘கிரேட்...’ எனக் கத்தினாள்...

“இப்படி இடம் இந்தப் பாலைவனத்துலயா... உன்னோட பிரண்ட்ஸ்கிட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணச் சொல்லு... நாம போறோம்... எல்லாருக்கும் நைட் சாப்பாடு நான் அரேஞ்ச் பண்ணுறேன்...” என்றாள் குதூகலமாக.

அவளின் முகத்தில் எப்போதும் இருக்கும் குழந்தைத்தனம் குடியேறியிருந்தது. சிவா மனசுக்குள் சந்தோஷப்பட்டான். அவனுக்கு ஏனோ அவளைச் சோகமாகப் பார்க்கப் பிடிப்பதில்லை.

சிறிது நேரத்துக்குப் பின் “யமுனாவைப் பார்த்தேன்...” என்றான் மெல்ல.

“யாரு... லிப்டூலிப் கிஸ் பார்ட்டியா... அடுத்த முத்தம் வாங்கி புதுப்பிச்சிக்கிட்டியா..?” கண்ணடித்தாள்.

“ஏய்... நீ எனக்கு எப்படியோ அப்படித்தான் அவளும்... அந்தச் சாக்கடையில இருந்து வெளிய வந்துட்டா... இப்ப ஒரு வீட்டுல சமையல் வேலை பார்க்குறா... நல்லாயிருக்கா... ஆளு கொஞ்சம் குண்டாயிருக்கா... சிவப்பா இருக்கா...”

“ம்... பரவாயில்லை... அல்லா அவளுக்குக் கருணை காட்டியிருக்கான்... பாவம் அவளைப் போல எத்தனை பெண்கள்...” வருத்தப்பட்டாள்.

“ம்... மாற்றம் கிடைச்சிருக்கு... பட் அங்கயும் அப்பனையும் மகன்களையும் சந்தோசப்படுத்தணும்...”

“அப்பனும் மகனுங்களுமா... அதெப்படி ஒருத்திக்கிட்ட... கருமம்...”

“அதெல்லாம் சகஜம் லீமா... இங்கயின்னு இல்லை... எல்லா இடத்திலும் மருமகள் கூட மாமனார்... மாமியா கூட மாப்பிள்ளைன்னு நிறைய இருக்கு... நான் உங்கிட்ட சொன்னேனே... ஆத்தா... மூத்தமக.... அதுபோக சின்ன மகளையும் கேட்ட கதை... அதுவும் இது மாதிரித்தான்...”

“ஆமா... சொன்னே....இருந்தாலும் கருமம்... அப்பனும் மகனும் எப்படி... சை...”

“சரி விடு... அதெல்லாம் யோசிக்காம.... மொத்தத்துல அந்தக் கஷ்டத்துக்கு இது பரவாயில்லைன்னு சொல்றா... மகிழ்ச்சியா இருக்காதானே... அது போதும்...”

“ம்...”

“அவளுக்கு சேலை நான்தான் செலக்ட் பண்ணித் தரணும்ன்னு நின்னா... அப்புறம் ஒரு வெள்ளிக்கிழமை தெரிஞ்ச சிங்கப்பூர் கடைக்கு கூட்டிப் போய் வாங்கிக் கொடுத்தா... கடைக்காரன் ஒரு மாதிரி சிரிக்கிறான்... என்ன தலைவரே இங்க குடும்பம் நடத்த ஒண்ணு மாட்டிருச்சு போல... எஞ்சாய் பண்ணுங்கன்னு அவளுக்குத் தெரியாம எங்கிட்டச் சொல்லுறான்... இது இனி ராமனுக்கு வந்து ஊருக்குப் போயிரும்... சும்மாவே ரூம்மெட் ஒருத்தி கூட கை பிடிச்சிக்கிட்டு நின்னான்னு சொல்லி வச்சிருக்கான்... என்ன சொல்ல... பொண்ணுங்க கூட நட்புன்னா உடனே பார்வை தப்பாயிருதுல்ல...” என்றபடி யமுனாவின் போட்டோவைக் காட்டி, “இந்தச் சேலைதான்” என்றான்.

“செம செலக்சன்... பட் எனக்கு சேலை கட்டத் தெரியாது... அதான் உங்கிட்ட உள்ளாடை கலர் செலக்ட் பண்ணச் சொல்றேன்...” சிரித்தாள்.

“அடி வாங்கப் போறே... சரி வெள்ளி மாலை முஸாபா... மறந்துடாதே...”

“அப்படியே லாங்க் டிரைவ்... அதை நீ மறந்துடாதே... ஓகேயா...”

“ஓகே...”

“தப்பிச்சித் தப்பிச்சிப் போனியல்ல... இந்த வாரம் உன்னோட குடல் குந்தாணியெல்லாம் உருவி எடுத்துடுறேன்....” சிரித்தாள்.
சிவாவைப் பார்த்ததும் உயரமானவள் சிரித்தாள்.

சம்பத் கேட்ட, ஓனரின் மனைவியும் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

லெபனான் பெண்ணுடன் போனது அவளை யோசிக்க வைத்திருக்கிறது என்பது அவளின் விழிகளிலும் நெற்றிச் சுருக்கத்திலும் தெரிந்தது.

கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

“மலாமா...” மெல்ல இழுத்தான் சிவா.

“மலாமாவா... அவளை எதுக்குப் பார்க்கணும்...” ஓனர் அம்மணிதான் கேட்டாள்.

“இல்ல சும்மாதான்... ப்ரண்ட்லியா பார்க்கணும்... எனக்கு அவங்களைத் தெரியும்... அதான்...”

“ச்சிவ்வா... இவ செமத்தியா இருக்கா ச்சிவ்வா... அதான் அன்னைக்கு உன்னோட பிரண்ட் இவளைக் கேட்டிருக்கான்...” காதுக்குள் சொன்னாள் லீமா.

“ஏய்... சும்மா இரு...” என அவளின் கையில் கிள்ளினான்.

“அவ இங்க இல்லை...” என்றாள் உயரமானவள் வேகமாய்... வார்த்தைகள் பதட்டமாய் வந்ததை உணர முடிந்தது.

“இல்லையா... ஊருக்குப் போயிருந்தவ வந்திருப்பாள்ன்னு நெனச்சி வந்தேன்...”

“வரலை... வந்தாலும் வேற கடைக்குத்தான் அனுப்புவாங்க... இங்கயே திரும்ப அனுப்ப மாட்டாங்க... அது போக அவ இனி வரலைன்னு சொல்லிட்டா...”

“ம்... வராததுக்கு காரணம்...?” கேட்டது லீமா.

“காரணம்ன்னா... அவளுக்கு உட்கா ஊத்திக் கொடுக்கிறது பிடிக்கலை... மதத்தின் மீது தீவிர நம்பிக்கை... யாராவது கடவுளைப் பற்றி தப்பாப் பேசினா... பேசினா என்ன... இங்க வர்றவங்க பாதிப்பேர் போதையிலயும் பெண்கள் மேல உள்ள ஆசையிலயும் பக் காட்... பக் காட்...ன்னு சொல்லுவாங்க... சண்டைக்குப் போயிடுறா... அவ இருக்கும் வரைக்கும் கூட்டம் அதிகமிருந்ததுதான்... ஆனா கோபக்காரி... வரலைன்னு சொல்லிட்டா பின்ன நம்ம என்ன செய்ய முடியும்...” ஓனர்தான் பேசினாள்.

“நானும் பார்த்திருக்கிறேன்... அதென்ன செக்ஸ்க்கு மட்டும் ஓ காட்... பக் காட்... அப்படின்னு சாமியை இழுக்கிறாங்க...” என்றாள் லீமா.

“இதுக்கு உனக்கு அப்புறம் விளக்கம் சொல்றேன்... இப்ப வாயை மூடு...”
“அவ இங்க இல்லை... அதிக நேரம் நிக்காதீங்க... என்னோட கணவர் இப்ப வருவார்... வந்தா உங்களுக்குப் பிரச்சினை...”

“எங்களுக்கு என்ன பிரச்சினை... வரட்டும்... இப்பவே போன் பண்ணி வரச்சொல்லு...” கோபமானாள் லீமா.

“ஏய் லீமா... சும்மா இரு...”

“அவ இங்க இல்லைங்க... நாங்க பொய் சொல்லலை... அவ வரலைன்னுட்டா...” என்றாள் உயரமானவள்.

“ம்... உட்கா ஊத்திக் கொடுக்க முடியாமலோ... கடவுளைச் சொல்றதாலையோ அவ வரலைன்னு சொல்லலை... வர்றவங்க கொடுக்கிற உடல் வழி இம்சையாலதான் போயிருப்பா... என்னதான் வேலையின்னாலும் திறந்தவெளியில ஒரு பொண்ணு... பாவம் அவ உடம்புல கை வைக்காத இடமே இல்லைன்னு சொல்லலாம்... ஒரே நேரத்துல ஏழெட்டுப் பேர் உட்கார்ந்துக்கிட்டு தொடை தடவ, மார்பைத் தடவ, அந்தரங்க இடத்துல தொட, முத்தம் கொடுக்கன்னு தினம் தினம் ஏகப்பட்ட இம்சைகள்... ஒரு பொண்ணா அவளோட மனசுக்குள்ள எத்தனை வேதனையைச் சுமந்திருப்பா... பாவமில்லையா... யமுனாவைப் போல இவளும் மகிழ்ச்சியா இருக்கட்டுமே” என்றான் சிவா.

உயரமானவளின் கண்கள் கலங்கியிருந்தது.

ஓனர் தலைகுனிந்து நின்றாள்.

உள்ளே இங்க வா... இப்படி உட்கார் எனச் சத்தம் கேட்டது. மலாமா இடத்தில் வேறொரு பெண் இருக்கக் கூடும். கருண், சம்பத் போல் யாரேனும் போதையுடனும் பணமிருக்கு என்ற திமிருடனும் காமத் தேடலுக்கு வந்திருக்கலாம்.

“ஓகே... நன்றிங்க... போன் பண்ணினா உன்னையத் தேடியும் ரெண்டு பேர் வந்தாங்கன்னு சொல்லுங்க...” எனக் கும்பிட்டு விட்டு லீமாவுடன் காரில் ஏறினான்.

“இங்க இருந்த இத்தனை வருசத்துல மலாமா மேல எத்தனை கைகள் காமத்தோட விளையாடியிருக்கும்... அப்படித்தானே உள்ளே இருக்கும் பெண்... உயரமானவள்... இப்போது ஓனராய் இருப்பவள்... இன்னும் இந்தத் தொழிலில் சிக்கிச் சீரழியும் பெண்கள் எல்லார் மீதும்... காமத்துக்கு வடிகாலாய் பிஞ்சுகளையும் வறுமையில் வாழ்பவர்களையும் குறிவைப்பது உலகெங்கும் நடக்கத்தான் செய்கிறது... காலங்காலமாக நடக்கிறது... நடந்து கொண்டுதான் இருக்கிறது... இன்னும் நடக்கும்... இப்பச் சோசியல் மீடியாவுல எது நடந்தாலும் ஒரு வாரத்துக்குப் பொங்கோ பொங்குன்னு பொங்குறோம்... அப்புறம் அடுத்த செய்தி... அடுத்த பொங்கல்... ஆனா முழுவதும் தெரிந்து எந்தப் பொங்கலும் வைப்பதில்லை... இந்தப் பொங்கல் வைப்பதில் எங்காளுங்கதான் முன்னோடி.” புலம்பினான் சிவா.
“ம்... ரொம்ப வருத்தமா இருக்கு சிவா...”

“எங்க தமிழ்நாட்டுல பொள்ளாச்சிங்கிற ஊர்ல ஆயிரக்கணக்கான பெண்களை மிரட்டி, பணிய வச்சி, கெடுத்து, அதை வீடியோ எடுத்துச் சம்பாரிச்சிருக்கானுங்க... ரொம்ப நாளா நடந்ததை ஒரு பொண்ணு தைரியமா வெளியில சொன்னா... ஆனா இந்த விஷயத்துல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உள்ளூர் பிரமுகர், காவல்துறை, நீதித்துறைன்னு எல்லாமே கூட்டுக் களவாணிங்க... சோசியல் மீடிய பொங்கல் ரெண்டு வாரம்... இப்ப எல்லாத்தையும் மறந்தாச்சு... அந்தப் பொண்ணுங்க வாழ்க்கை என்னாச்சு... இதுல எங்க மதத்துப் பொண்ணுங்க இல்லை... உங்க மதத்துப் பொண்ணுங்களுக்கு அரிப்புன்னு மதப் பெரியவாள்ஸ்... ஊசி இடங் கொடுக்காம நூல் நுழையுமான்னு மெத்தப் படித்தவாள்ஸ்... சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பொங்குற, சினிமாவுல கற்பழிக்கிற சீனுக்குப் பொங்குற மாதர் சங்கம் பொத்திக்கிட்டு இருந்துச்சு... எல்லா இடத்திலும் பெண்களை அனுபவிக்கணும்ன்னு நினைக்கிறவன்தான் அதிகம்... இங்க கூட மேல துப்பட்டா இல்லாம... சரியான உடையில்லாம மார்பு குலுங்கப் போற பொண்ணுங்கதான் அதிகம்... அப்படி எதிர்ல வரும்போது என்ன பொண்ணுடா... இவ கிடைச்சா போதும்ன்னு எல்லாரும் நினைக்கிறான்... ஏன் எனக்குக் கூடத் தோணும்... அது இயற்கை...”

“என்னையப் பார்த்த உனக்கு அப்படித்தான் தோணுமோ...” அவனின் கோபத்தை மாற்ற லீமா இப்படிக் கேட்டாள்.

“ஜோக்ஸ் அபார்ட் லீமா... இன்னைக்கு நிலமை இதுதான்... ஆண்களை மட்டும் குறை சொல்லலை... எங்க ஊர்ல எல்லாம் நிறையப் பெண்கள் புருஷன் வெளிநாட்டுல இருக்க ஊர்க்குள்ள உள்ளவங்க கூட... அது வறுமையில்லை... அது வேற... சரி விடு... வறுமையும் வாழ்க்கையும் குடும்ப சூழலும் ஒருத்தியை என்ன வேலை வேணுமின்னாலும் பார்க்கிறேன்னு ப்ளைட் ஏற வைக்குது... ஆனா தினம் தினம் எத்தனை ரணம்... எவ்வளவு நாள்தான் பொறுப்பா.... பாவம் மலாமா... இந்த நகரத்துல இருந்து வெளியாயிட்டா... நல்லா இருக்கட்டும்... நான் கும்பிடுற, நீ கும்பிடுற தெய்வங்கள் அவளுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கட்டும்...” என்ற சிவா கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

“ஏய் ச்சிவ்வா... என்னப்பா இது... நீ அழுது நான் இப்பத்தான் பார்க்கிறேன்... எல்லாருக்கும் தைரியம் சொல்லுவே... அவ நல்லாயிருப்பா... நான் அல்லாக்கிட்ட அவளுக்காக வேண்டிக்கிறேன்...” என்றாள்.

“முடியல லீமா... அவளைப் பார்த்திடலாம்... ஆறுதலாக் கொஞ்சம் பேசலாம்ன்னு பார்த்தேன்... நடக்கலை... பட்... அவ இங்கயிருந்து பொயிட்டாதானே... சந்தோஷம்... நல்லாயிருந்தாப் போதும்...” என்றான்.

“நீ மூட் அவுட்ல இருக்கே... சோ லாங்க் டிரைவ் வேண்டாம்... இன்னொரு நாள் போலாம்...”

“நோ லீமா... ப்ளீஸ் எங்கயாச்சும் ஓட்டு... கொஞ்சம் ஆசுவாசமாக் காற்றைச் சுவாசிக்கணும்... மனுசங்க இல்லாத பாதையில நாம மட்டும் பயணிக்கலாம்....”

“ஓகே...” என்றவளின் கார் வேகமெடுத்தது.

அதிக வண்டிகள் போகாத சாலையில் பயணித்து... பாலைவனத்துக்குள் கிராமத்துப் பெண்ணின் வகிடாய் நீண்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தது...

இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு மணல்... மணல்... மணல்....

ஏசியை நிறுத்தி கண்ணாடியை இறக்கி விட்டாள்.

காற்று லேசாக இருந்தது...

அரபி இசை காருக்குள் வழிந்து சன்னல் வழி பாலைக்குள் பயணித்தது.

சிவாவின் மனசு இலேசுவானது.

தேவதையாய் மணல் வெளியில் ஓடிக் கொண்டிருந்தாள் மலாமா.

அவள் பின்னே... அவளைத் துரத்தியபடி... யமுனாவும் ஓடினாள்.

ஓடுவோமா... வேண்டாமா என்ற யோசனையோடு... நின்று கொண்டிருந்தாள் உயரமானவள்.

சிவாவின் மனைவியும் குழந்தைகளும் மண்ணில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்....

அவர்களுடன் லீமாவின் குடும்பமும்...

லீமாவும் சிவாவும் அதை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

“ச்சிவ்வா...” என கத்திக் கொண்டே இன்னும் வேகம் கூட்டினாள் லீமா மகிழ்வாய்..

அவள் முஸ்லீமோ இவன் இந்துவோ அல்ல....

அவர்கள் நட்பை... மனிதர்களை... நேசிக்கும் நல்ல நண்பர்கள்...

ஹசனைப் போல்... அன்பைப் போல் மனிதர்கள் இந்த நட்பைக் கொச்சைப் படுத்தலாம்.

பாலை மண்ணுக்குத் தெரியும் இந்த நட்பின் வீரியம்...

அந்த மண்ணும் இவர்களை ரசிக்க ஆரம்பித்தது....

இவர்களின் அன்பை அந்த மண்ணும் காதலித்தது.

காரின் வேகம் இருநூறைத் தொட்டிருந்தது...

காற்றும் மணலும் காதலுடன் குழாவ ஆரம்பித்திருந்தன...

சூரியனைப் பாலை மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.

அவர்களின் பயணம் எங்கே என்பது தெரியாது... ஆனால் பறந்து கொண்டிருக்கிறார்கள்... வாழ்வை ரசித்தபடி.

-பரிவை சே.குமார்.

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-16-by-parivai-se-kumar&i=10778

Related Articles