வெளியிடப்பட்ட நேரம்: 05-Oct-2020 , 10:38 AM

கடைசி தொடர்பு: 05-Oct-2020 , 10:38 AM

கறுப்பி - பாகம் - 9

karuppi

டுத்தடுத்த தினங்களில் வேலையின் காரணமாக மலாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தாலும் அவளைப் ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் மனசுக்குள் சேமித்து வைத்துக் கொண்டான் சிவா.

அன்று வெள்ளிக்கிழமை ஒன்பது மணி வரைக்கும் யாரும் எந்திரிக்கவில்லை. விடுமுறை தினம் என்றால் தூக்கமும் குடியும் பிரியாணியும் என்பது எழுதப்படாத விதியாய் இருந்தது பேச்சிலர் அறைகளில்... இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

நேற்றைய வியாழன் இரவு பனிரெண்டு மணி வரை தண்ணி... பின்னர் ஏனோ தானோ என சாப்பாடு... அதன்பின்னும் விடிய விடிய சீட்டு விளையாட்டு... இடையில் மலையாளிகளுடன் மல்லுக்கட்டு... கத்தி எடுத்தல் என எல்லாம் நடந்தேறியிருந்தது. இதற்கிடையே பக்கத்து அறை மலையாளிகளான அறுபது வயது குரூப்பும் ராஜூவும் அம்மணமாக கட்டி உருள, அவர்களைப் பிடித்து இழுத்து... தனித்தனியாகப் படுக்க வைத்தது எனத் தண்ணியடியும் அதன் பின்னான நிகழ்வுகளும் முடிந்து அறை நண்பர்கள் வந்து படுக்கும் போது ஐந்து மணிக்கு மேல் இருக்கும். இனி பதினோரு மணிக்கு மேல் எழுந்து குளித்து... பிரியாணி செய்ய... தண்ணி அடிக்க... மீண்டும் மலையாளிகளுடன் சீட்டு விளையாட... பின்னர் தூங்க என வெள்ளி ஓடிவிடும்.

சிவா எழுந்து பக்கத்தில் இருக்கும் பார்க்குக்குப் போய் நாலைந்து சுற்று நடந்துவிட்டு ஒரு பெஞ்சில் அமர்ந்து செல்போனில் பிடிஎப்பாய் இருந்த வேள்பாரியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். முருகன் வள்ளியின் காதல் கதை அவனை ஈர்க்க, வாசிப்பில் ஆழ்ந்தான். எதிரே இரண்டு பிலிப்பைனிகள் குதித்துக் குதித்து ஏதோ ஒரு உடற்பயிற்சியைச் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் நடந்தும்... சிலர் ஓடியும் கொண்டிருந்தார்கள்.

மணி பார்த்தான்... 10.30 ஆகியிருந்தது.

சரி போகலாம்... சமையலுக்கு ஏதாவது வெட்டிக் கொடுக்கலாம்... அறையைச் சுத்தம் செய்யலாம் என்ற யோசனையுடன் எழுந்து அறை நோக்கி நடந்தான்.

அறை நண்பன் சுதாகர் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான்.

“என்ன அவசரமாக் கிளம்புறே... பார்ட் டைம்மா...?”

“ஆமா... ஒரு மாசமா ஊருக்குப் போயிருந்தவங்க வந்துட்டாங்க... அதான்... வந்து ரெண்டு நாளாச்சு... அன்னைக்கே கூப்பிட்டாங்க... வேலைக்குப் போயிட்டு வந்து போக நேரமில்லை... காலையிலேயே போன் வர்றியா... வரலையான்னு... மதியம் சாப்பிட வரமாட்டேன்... சொல்லிடு... சிக்கனை எடுத்து தண்ணியில போட்டுட்டேன்... நீ சும்மா இருந்தா வெங்காயம், இஞ்சி பூண்டு, தக்காளி எல்லாம் வெட்டி வையி... சரியா...” என்றபடி கப்போர்டில் எதையோ தேடினான்.

“என்ன தேடுறே...?” என்றான் சிவா.

“இல்ல... இதுக்குள்ளதான் வச்சிருந்தேன்... எங்கிட்டுப் போச்சுன்னு தெரியலை... நீ எதுவும் எனக்குத் தெரியாம எடுத்தியா...?” என்றான்.

“ஆளும் மொகறையும் பாரு... நல்லாத் தேடிப்பாரு... ரெண்டு நாளு முன்னாடி ராமன் எதோ தேடும்போது மொத்தமா கீழ விழுந்துச்சு... நான் நிக்கவும் அதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை... வாங்கியாந்து வைக்கிற மூதேவிக ஒழுங்கா வைக்கக் கூடாதான்னு திட்டிக்கிட்டே அள்ளி வச்சிச்சி... எங்கிட்டு வச்சிச்சோ... அதுகிட்ட கேளு....”

“அது அன்னைக்கே என்னைய திட்டுச்சு... இங்கதான் அள்ளி வச்சிருக்கேன்னு சொன்னுச்சு...” எனத் தேடி ஒரு வழியாக எடுத்து இரண்டு மூன்றை அள்ளி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

அது காண்டம்.

“ஓ ஊருக்குப் போயிட்டு வந்தது அவதானா... அது சரி... என்னடா காலையிலயே வெள்ளையும் சொள்ளையுமாக் கிளம்பிட்டேன்னு பார்த்தேன். இனி இங்க தங்க மாட்டே... ஊர்ல உன்னையே நம்பி ஒருத்தி இருக்கா... மறந்துடாதே...”

“சேச்சே... இங்க இருக்க வரைக்கும்தான் இதெல்லாம்... ஊருக்குப் போயிட்டா பொண்டாட்டிக்கு அடங்குன புருஷன்... சரி சரி வர்றேன்... போன் அடிச்சிக்கிட்டே இருக்கா...”

“ஊர்ல புருஷன் கூட இருந்துட்டுத்தானே வந்திருப்பா...”

“டேய்... அப்பா... சாமி... விடுடா...” எனக் கும்பிட்டபடி கிளம்பினான் சுதாகர்.

ஆண்கள் மட்டும் தவறு செய்யவில்லை... பெண்களும்தான் செய்கிறார்கள் என லீமா அன்று சொன்னாளே அவ்வகைப் பெண் இவள்.

திருமணமானவள்... சிவா ஒருமுறை அவளை அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வைத்துப் பார்த்திருக்கிறான். சுதாகர்தான் அறிமுகம் செய்து வைத்தான்... ஊட்டிக்காரி... நல்ல அழகி... அமலாபாலுக்கு அக்கா போல் இருந்தாள்... நல்ல வேலையில் இருக்கிறாள்... கம்பெனி கொடுத்த தனி வீடு... கணவனுக்கு ஊரில் அரசாங்க உத்தியோகம் என்பதால் இங்கு வரவில்லை... எப்போதேனும் விசிட்டில் வந்து தங்குவான்... மகன் ஐந்தாவது படிக்கிறான்... இப்பவே வேலம்மாள் பள்ளி ஹாஸ்டலில்.

இங்கு தனியாக இருப்பவளின் வீட்டைக் கிளீன் பண்ணப் போனவன்தான் சுதாகர். போன இடத்தில்... இப்ப விடுமுறை தினங்கள் மட்டுமல்ல வார நாட்களில் கூட அவனில்லாமல் அவளிருப்பதில்லை. இருபத்தி நாலு மணி நேரமும் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதாது என்று சொல்வாள் என ஒரு முறை சொல்லியிருக்கிறான். சில விடுமுறை நாட்களில் சக்கையாய்த்தான் வந்து சேருவான். அதுவும் அவள் ஊருக்குப் போயிட்டு திரும்பிய தினங்களில் விடுமுறை நாளில் வீட்டுக்கே அவன் வருவதில்லை... அவளும் விடுவதில்லை...

மலாமாவைப் போல் வறுமைக்காக சிலர்... இவளைப் போல் வாழ்றதுக்காக சிலர்...

இங்கே எல்லாம் நடக்கும்... ஆனால் எதுவும் நடக்காதது போலவே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.

பிரியாணிக்கு எல்லாம் தயார் பண்ணி வைத்தான்… ராமன் எழுந்ததும் அடுப்பில் போட்டு இறக்கினான். சிக்கனைப் பொறித்து அள்ளி வைத்துக் கொண்டு தண்ணி அடிக்க ஆரம்பித்தார்கள். மெல்ல ஆரம்பித்த அரசியல் பேச்சு காரசாரமாகப் பயணித்தது.

நேற்றிரவு ராமனுடன் மல்லுக்கட்டிய மலையாளி இலியாசு ‘மச்சான்… எனக்கொரு பெக்…’ என கிளாசோடு வந்தான். ராமன் ஊத்திக் கொடுக்க, ‘என்னோட பொன்னு மச்சான்னு’ கட்டிக் கொண்டு அருகில் அமர்ந்தான். அவர்களின் சண்டையெல்லாம் சின்னப் பிள்ளைங்க வீடு கட்டி விளையாண்ட சண்டை மாதிரித்தான்… குடி போதை இறங்கியதும் காணாமல் போய்விடும்.

மீண்டும் சீட்டுப் போட ஆரம்பித்தார்கள்.

சிவா கணிப்பொறியைத் தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தான்.

குரூப்பும் ராஜூவும் ஒரு சிகரெட்டை இருவரும் பிடித்தபடி, தண்ணி அடித்துக் கொண்டு ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நேற்றிரவு அம்மணமாய் அடித்துக் கொண்டு இவர்கள்தான் உருண்டார்கள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

அன்பு நேற்றிரவு டான்ஸ் பாருக்குப் போய்விட்டு வந்த கதையை மலையாளியான மானுவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவனது பேச்சில் மலையாளி… செமக்குட்டி… என்ன கம்பெனிங்கிறே… என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

இடையே சிவாவைப் பார்த்து ‘சிவா என்ன படம் பார்க்கிறே..?’ எனக் கேட்டான் அன்பு.

“பழைய படம்தான் சிப்பிக்குள் முத்து… எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்… அதான்…” என்றபடி படத்தில் ஆழ்ந்தான் சிவா.

மூன்று மணிக்குத்தான் சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டதும் எல்லாரும் தூங்க…

சென்ற வார நிகழ்வும் சிவா மனசுக்குள் மீண்டும் எழ…

ஏனோ யமுனா மனசுக்குள் வந்தாள்.

“உண்மையிலேயே அது எதுக்குப் பயன்படுதுன்னா….” பேச்சை நிறுத்தி சிவாவைப் பார்த்தாள்.

சிவா புரியாது விழிக்க, “கத்தியெல்லாம் சொல்ல முடியாது… இங்க வா…” என அருகே கூப்பிட்டாள்.

சிவா அவளருகே தன் சேரை வேகமாகத் தள்ள, “ஏய் அப்புடியே கட்டிப் புடிக்கலாம்ன்னு திட்டமா… களவாணி ராஸ்கல்… கொன்னுடுவேன்… மெல்ல சேரை நகர்த்திக்கிட்டு வா” என்றாள்.

அருகே சென்றவன் “ம்… இப்பச் சொல்லு… எனக்கு ஊதோட முழு விவரமும் வேணும்…” என்றான்.

“ஏன் டாக்டரேட் பண்ணப் போறியா…?” எனச் சிரித்தாள்.

“என்ன பண்ணப் போறேன்னு அப்புறம் சொல்லுறேன்… சீக்கிரம் சொல்லு… இகாப் வந்துருவான்…” என்றான்.

“வந்தா வரட்டும்… ஏன் பயந்து சாகுறே…” என்றவள், “ஆக்சுவலா ஊது உடையின் வாசத்துக்குத்தான் போடுறது… அதையும் தாண்டி மாதவிடாய் நாட்கள்ல பெண்ணோட உடம்புல இருந்து வெளிவர்ற கெட்ட ரத்தத்தோட வாசனை ஒரு வித நாற்றத்தைக் கொடுக்கும்… இப்பப் பயன்படுத்துற நாப்கின்கள்ல சில வாசனைகளை போட்டுத்தான் விக்கிறாங்க… பட் அது அதிக நேரம் நிக்காது… அதனால் மாதவிடாய் நாட்கள்ல நாங்க இந்த ஊதை எங்களோட கால்களுக்கு இடையில் வைத்து இருபது முப்பது நிமிடம் நிற்போம்… அப்ப அதோட வாசனைப் புகை எங்களோட உடம்பில் குறிப்பா ஜட்டி, அக்குள் என எல்லா இடத்திலும் பரவிடும்… அந்த வாசனை மாதவிடாய் ரத்த வாசனையை வெளியில் விடாது… அதுக்குத்தான் முக்கியமாப் பயன்படுத்துறோம்… செக்ஸ் ரெண்டாம்பட்சம்தான்… பட் செக்ஸ்க்கு முன்னால கண்டிப்பா ஊது போடச் சொல்வாங்க…. அப்ப உடம்புல புர்க்கா தவிர வேறெதுவும் இருக்காது… ஆம்பளை அணைக்கும் போது ஊது வாசம் அவனைக் கிறங்கடிக்கும்…” என்றாள் கண்ணடித்து.

“உண்மையாவா… இதுதான் காரணமா…?” நம்பாமல் கேட்டான் சிவா.

“லூசு சில சமயம் இங்கேயே நான் ஊது போட்டு காலுக்கு அடியில வச்சிப்பேனே… அப்பல்லாம் பாத்துட்டு பேசாம இருப்பே… அப்பவே எங்கிட்ட கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்ல…” என்றாள்.

“ம்… இதை எப்படி உங்கிட்டேன்னு யோசிச்சேன்… சரி… சரி… மொறைக்காதே… அதான் இப்பச் சொல்லிட்டியே…”

எப்பவாச்சும் லீமா அப்படிப் போடுவதுண்டு… அந்த நேரத்தில் அந்த வாசனையால் இவனுக்கு தொண்டைக்குள் கரகரப்பு வருவதுண்டு

“சரி இப்பச் சந்தேகம் தீர்ந்த்தா…?” என்றாள் லீமா.

“ம்… இந்த விஷயத்தைக் கூட எங்கிட்ட எப்படி விரிவாச் சொல்றே…?”

“ஏய்… இதிலென்ன இருக்கு… என்னோட பிரண்ட் நீ… உங்கிட்ட சொல்றதுல என்ன தப்பு… உன்னோட பொண்டாட்டி, மகளெல்லாம் அந்த ரத்தவாடையுடந்தானே உன்னுடன் இருப்பார்கள்… உனக்கு மாதவிடாய் பற்றிய அறிவு இருக்காதா என்ன… அதென்ன மறைக்க வேண்டிய விசயமா… முன்னாடி நாப்கினை மறைச்சி மறைச்சி வித்தாங்க… இப்ப சூப்பர் மார்க்கெட்டுல விதவிதமா அடுக்கி வச்சிருக்கான்… எது வேணுமோ அதை எடுத்துக்கிட்டு வரலாம்… இப்ப அதையெல்லாம் வித்தியாசமாப் பாக்குறதே இல்லை…. உங்க ஊர்ல எப்படின்னு தெரியலை… எங்க ஊர்ல… ஏன் இங்ககூட காண்டமெல்லாம் அடுக்கி வச்சித்தான் விக்கிறாங்க… பெண்களே எடுத்துக்கிட்டுப் போகலையா என்ன… அதுல இந்தப் பிளேவர் புதுசா இருக்கு… யூஸ் பண்ணிப் பாக்கலாமேன்னு புருஷனுக்கிட்ட சொல்லுதுங்க… உங்கிட்ட நான் விவரமாச் சொன்னா என்னங்கிறேன்…” என்றாள்.

“எங்க ஊர்ல எல்லாம் இன்னமும் காண்டம் வாங்க யோசிச்சித்தான் மெடிக்கல் ஸ்டோர் ஏறணும்… அவனும் என்னவோ நாம தப்பான காரியம் பண்ணப் போற மாதிரி பாத்துக்கிட்டே கவர்ல எடுத்து வச்சி மறைச்சித்தான் கொடுப்பான்… சில இடங்கள்ல சூப்பர் மார்க்கெட்ல கிடைக்கிற நாப்கின், பல இடங்கள்ல மெடிக்கல் ஸ்டோர்லதான் கிடைக்கும். கேட்டதும் ஏதோ தப்பான பொருளைக் கொடுக்கிற மாதிரி கருப்புக் கவர்ல வச்சி, அதுவும் இல்லைன்னா நியூஸ் பேப்பர்ல சுத்தித்தான் கொடுப்பானுங்க… நாங்கள்லாம் இன்னும் முன்னேறனும் லீமா…” எனச் சிரித்தான்.

“சரி வேலையைப் பாரு... இவ ஊது போட்டா அது எங்க எங்கேயெல்லாம் பரவும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடாதே... படுவா கொன்னுடுவேன்...”

“ச்சீ... போடி லூசு...”

“லூசாவெல்லாம் இல்லை... டைட்டாத்தான் இருக்கு.... லூசாக்குற ஆளு இங்க இல்லை... கூட்டிக்கிட்டு வந்துதான் லூசாக்கணும்... இப்ப நீ வேணும்ன்னா வா..”

“கொல்லப் போறேன் பாரு...” எனக் கையை ஓங்க... அவள் சிரித்தாள்.

லீமாவிடம் வரும் அதே போன்றதொரு வாசனை அறையெங்கும் வியாபித்திருந்தது. ரம்மியமான மணம்... மனதுக்கு இதமாய்... ஏனோ லீமாவின் சிரிப்பு கண்ணில் தோன்றி மறைந்தது. என்ன ஓட்டத்தில் இருந்து வெளியே வந்தான்.

"கதவைச் சாத்து மச்சி..." என்ற சம்பத்தின் கத்தல் திடுக்கிட வைத்தது.

“இவன் ஏன் இப்படிக் கத்துறான்..?” தனக்குள்ளே கேட்டுக் கொண்டான் சிவா.

ராகவ் கதவை அடைக்க முயல "நோ... அடைக்காதே... கொஞ்சம் திறந்திருக்கட்டும்.... போலீஸ் பிராப்ளம் உண்டு..." என்றாள் அந்தக் கறுப்பழகி.

கதவு அடைத்திருந்தால் உள்ளே போலீஸ் வரக்கூடும் என்பதாலான முன்னெச்சரிக்கையே கதவைத் திறந்து வைத்திருப்பதற்கான காரணம்... இதற்குள் இல்லீகலான விஷயம் நடக்கலாம் என்பதே அதற்குக் காரணம்... என்பதால் அப்படியே வைத்து திரைச்சீலையை மட்டும் நன்றாக இழுத்து மூடினான்.

அந்தக் கருப்பு அழகியை மற்றவர்கள் போதையுடன் பார்க்க சிவா ரசனையாய்ப் பார்க்க ஆரம்பித்தான்.

-பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-8-by-parivai-se-kumar&i=10751

Related Articles