வெளியிடப்பட்ட நேரம்: 11-May-2017 , 07:59 AM

கடைசி தொடர்பு: 11-May-2017 , 07:59 AM

கதிர் குறள் - 1125

kural1

"உனக்கென்னடா பிரச்சனை?"


"ஒன்னுமில்லையே"


"அப்புறம் ஏன்டா கொஞ்ச நாளா ஒழுங்கா பேசறதில்லை. ஏதோ விலகி விலகி போற? எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொன்னா தானே தெரியும்?"


"அப்படி எல்லாம் ஏதுமில்லை"


"இல்லை ஏதோ இருக்கு. பிரேம் தானே பிரச்சனை? சொல்லுடா, நான் அவன் கூட பழகறது உனக்கு பிடிக்கலையா?"


"சேச்சே, ஏன் அப்படி கேட்கற?"


"இல்லை அருண், நீ வேணும்னேதான் விலகி போற. பிரேம்தான் பிரச்சனைன்னா சொல்லு"


நான் சொல்லியிருக்க வேண்டும். அவன்தான் பிரச்சனை என சொல்லியிருக்க வேண்டும். எப்படி சொல்வது? இருவரும் காதலிக்க துவங்கிய பின் சொல்லி என்ன ஆகப்போகிறது? இதன்பின் நான் நெருங்கி பழகி அதனால் அவர்களுக்குள் பிரச்சனை வந்துவிடக் கூடும் என்றெல்லாம் எண்ணி விலகவில்லை. எனக்கு அவளை வெறும் தோழியாக பார்ப்பது கூட பிரச்சனையாய் இருந்தது இல்லை. இன்னொருவனின் காதலியாக பார்க்க மனம் ஒப்பவில்லை என்பது தான் உண்மை. நல்லகாலமாக கல்லூரியில் கடைசி வருடத்தில்தான் இது நடந்தது. விரைவாக படிப்பு முடிந்ததும் தலைநகரில் வேலை தேடிக் கொண்டு வந்து விட்டேன். அவளிடமிருந்து ஓடி வந்து விட்டேன் என்றே சொல்லலாம். இந்த 2 வருடங்களில் வேலை, நண்பர்கள் என அனைத்தும் பிடித்தபடி அமைந்தும் அவள் நினைவுகளை தொலைக்க முடியவில்லை. இதோ பாகுபலி படம் பார்த்தால் கூட அவள் நினைவு தான்.


தேவசேனா, அடடா என்ன ஒரு கம்பீரம். அரசவையில் யாருக்கும் பயப்படாமல் தன் கருத்துக்களை எவ்வளவு துணிச்சலாக பேசுகிறாள். எனக்கு படம் பார்க்க துவங்கிய சில நேரத்திலேயே பிரியங்கா நினைவு தான் வந்தது. அவளும் இப்படித்தான் யாருக்கும் எதற்கும் பயப்படமாட்டாள். எனக்கு அப்படியே எதிர் குணம் கொண்டவள். நான் எனக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் மட்டுமல்ல, எனக்கே பிரச்சனை என்றாலும் பேசாமல் வந்து விடும் வகை. எதிர்துருவங்கள்தான் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும் என்பார்களே, அப்படித்தான் எங்கள் இருவருக்கும் நட்பு அமைந்தது.


நான் படித்த கல்லூரியில் முதல் வரிசையில் பெண்கள் அமர்ந்து, அதன் பின் ஆண்கள் அமர்வோம். பெண்கள் வரிசையில் கடைசியாக அவள் அமர்ந்திருப்பாள். ஆண்களில் முதல் வரிசையில் நான் அமர்ந்திருப்பேன். வகுப்பு நடக்கும் போது கூட அருகில் உள்ள பெண்ணிடம் ஏதோ பேசி சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். நான் அதிகம் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருப்பேன். அது எனக்கே அதிகம் தெரியாது. எப்படி இருந்தாலும் நன்கு படித்து விடுவதால் அவளை யாரும் அதிகம் கேள்வி கேட்பதில்லை.


எங்கள் கல்லூரியில் கூட எந்த பையன்களும் அவளை கிண்டல் செய்ய பயப்படுவார்கள். பெரிய பின்புலம் எல்லாம் கிடையாது. அவள் குணம் அனைவருக்குமே தெரியும். கல்லூரி முதல் வருடத்திலேயே விடுதியில் உணவு சரியில்லை என்று அனைத்து மாணவிகளையும் திரட்டி விடுதிக்கு வெளியே நின்று போராட்டம் செய்த பொழுதே அவள் கல்லூரி முழுவதும் பிரபலம். கல்லூரி நிர்வாகமே அதன் பின் ஏதாவது மாணவர்களிடம் பேச வேண்டுமென்றால் இவளை பிரதிநிதியாக்கித்தான் பேசுவார்கள்.


அப்படிப்பட்டவள் எனக்கு தோழியானது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு அவளை பார்த்ததில் இருந்தே பிடித்திருந்தது. கருப்பான களையான முகம். பெரிய, பேசும் கண்கள். அவளிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்கையில் காதுகளை அடைத்துக் கொண்டு அவள் கண்களை பார்த்தே பேசலாம். அவ்வளவு தெளிவாக புரியும். நிஜமாகத்தான் சொல்கிறேன். அது சிரிக்கும், முறைக்கும், எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும். அவளுடன் நேரத்தை செலவளிப்பதே என் வாழ்வின் இலட்சியம் என நினைத்து மகிழ்ந்திருந்தேன்.


பிரியங்கா ஒரு விளையாட்டு வீராங்கனை. பெண்கள் கிரிக்கெட் பிரிவில் பல்கலைகழகத்திற்காக விளையாடுபவள். அதனால் என்னுடன் இல்லையென்றால் அவள் அதிக நேரம் மைதானத்தில் தான் இருப்பாள் என அனைவருக்குமே தெரியும். அங்கு தான் அவன் வந்தான். பிரேம். அவனும் கிரிக்கெட் விளையாடுபவன் தான். இருவருக்கும் அறிமுகமாகி வெறும் நட்பாகத்தான் பழகுகிறார்கள் என நம்பி இருந்தது என் தவறு தான். அவன் என்னைப் போல் மனதில் இருப்பதை சொல்ல தயங்காமல் காதலிப்பதாக சொல்லிவிட, இவளும் பொறுமையாக யோசித்து ஏற்றுக் கொண்டிருக்கிறாள். என்னிடம் விவாதித்து விட்டுத்தான் சொன்னாள். எனக்கு அப்போதே ஏதாவது காரணம் சொல்லி மறுக்க தோணவில்லை.


அது ஒரு விரக்தியான தருணம். அவனுடனான காதல் குறித்து பேச துவங்கும் போதே என் நாக்கு வறண்டு விட்டது. பிறகெங்கு பேசுவது? குடும்பத்திற்காக என்று சொல்லிக் கூட காதலை மறுக்க சொல்லி இருக்கலாம். எல்லாம் அவளை விட்டு வந்த பின்பு தான் தோன்றியது. வாழ்வில் நீங்கள் ஏமாந்த, தோல்வியுற்ற தருணங்கள் உங்களுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அக்கணங்களில் எப்படி செயல்பட்டிருந்தால் அதை தவிர்த்திருக்கலாம் என மனம் கற்பனை செய்துக் கொண்டேதான் இருக்கும். நானும் அப்படித்தான், அவள் நினைவு வரும்போதெல்லாம் இப்படி செய்திருந்தால் அவள் கிடைத்திருப்பாளா? இப்படி பேசியிருந்தால் கிடைத்திருப்பாளா? என கற்பனை செய்து கொள்வதுண்டு.


மனம் முழுக்க அவள் நிரம்பியதாலோ என்னவோ, வேறு பெண் மீது சிறப்பாக ஏதும் தோன்றாமலே இருந்து விட்டது. கல்லூரியில் அவளைத் தவிர அதிகம் யாருடனும் நெருங்கி பழகாததால் எளிதாக அனைவரிடமும் இருந்து விலகி இருக்க முடிந்தது. யாரிடமும் என் தொடர்பு எண்ணும் இல்லை. அப்படியே இருந்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கலாம் என நினைத்திருந்தேன். விதி விடவில்லை. அவளை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. என் அலுவலக நண்பரின் திருமணத்தில். மணப்பெண் அவளுடன் பள்ளியில் படித்தவள். மண்டபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.


இரண்டு வருடங்களில் நிறைய மாறி இருந்தாள். அவளிடம் இருக்கும் குழந்தைத்தனம் நிறைய குறைந்திருந்தது. என்னை பார்த்ததும் பெரிதாக மகிழ்ச்சியடையவில்லை. அதற்கு என் மீதிருந்த கோபம் தான் காரணமாய் இருக்கக் கூடும் என்பது எனக்கு புரிந்தது. இருந்தும் இருவரும் தனியே அமர்ந்து நலம் விசாரித்துக் கொண்டு பேசினோம். பட்டும் படாமல் தான் பேசிக் கொண்டிருந்தேன். அவள் வாழ்வில் இருந்து பிரேம் போய்விட்டான் என தெரியும் வரை.


தெரிந்ததும் ஆர்வமாக அது குறித்து விசாரித்தேன். நட்பாக பழகி காதலர்கள் ஆனதும் ஆண்கள் செய்யும் தவறினைத்தான் அவனும் செய்திருக்கிறான். அவனுக்கு பிடித்தது போல் அவளை மாற்ற முயற்சித்திருக்கிறான். இது எந்த பெண்ணுக்குமே பிடிக்காது. அதுவும் பிரியங்காவை பற்றி சொல்லவா வேண்டும் "பிடித்திருந்தால் காதலி, பிடித்தது போல் மாற்றிக் கொள்ளலாம் என்றால் அதற்கு வேறு பெண்ணை பார்த்துக் கொள்" என சொல்லி விட்டு வந்து விட்டாள். நான் வந்த 6 மாதங்களில் இது நடந்திருக்கிறது. அவள் என்னைப் போல் வேலைக்கு செல்லாமல் மேற்கொண்டு படிக்கிறாளாம். நிறைய பேசினோம். தொலைத்த பொருள் பல வருடங்களுக்கு பின் கிடைத்தது போல் இருந்தது.


அவள் பேசும் போது நான் விட்டு சென்றதை குத்திக் காட்டிக் கொண்டே பேசிக் கொண்டே வந்தாள். நான் சிரித்து மழுப்பிக் கொண்டிருந்தேன். "என் ஞாபகமெல்லாம் எப்பவாவது வருமா?" என சிரித்துக் கொண்டே கேட்டாள். நான் சிரிப்பை நிறுத்தி விட்டு


"உன்னை மறந்தாதானே நினைக்கறதுக்கு, உன்னை மறந்தாலும் இந்த கண்ணை மறக்க முடியுமா? சாகற வரை என்னால முடியாது"


********************************************************************************************************************
அதிகாரம்: காதற்சிறப்பு உரைத்தல்    குறள் எண்:1125


உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்


உரை: போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால், ஒருபோதும் மறந்ததில்லையே!


********************************************************************************************************************


நான் திடீரென தொனி மாற்றி பேசவும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. குழம்புகிறாள் என்பது அவள் கண்கள் காட்டி கொடுத்தது. உரிமையாக அவள் கைகளை பிடித்து


"உன்னை விட்டுட்டு போனது தப்பு தான். என்னை மன்னிச்சிடு. இனி எப்பவும் கடைசி வரைக்கும் உன் கூட இருப்பேன். இருக்கனும்னு ஆசைப்படறேன். யோசிச்சு சொல்லு"


அவளுக்கு புரிந்தது.


"டேய் என்னடா சொல்ற?"


"உனக்கு புரிஞ்சுருச்சு. எத்தனை நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ, யோசிச்சு சொல்லு"


"என்னடா திடீர்னு?"


"திடீர்னெல்லாம் இல்லை. ரொம்ப வருசமா. அதை எல்லாம் அப்புறம் சொல்றேன். நீ யோசிச்சு சொல்லு"


"எவ்வளவு நாள் வேணும்னாலும் எடுத்துக்கலாமா யோசிக்க?" குறும்பாக கேட்டாள்.


"2வது குழந்தை பிறக்கறதுக்கு முன்ன சொன்னா போதும்"


உரிமையாக என் மண்டையில் கொட்டினாள்.


-கதிர் ராத்

Related Articles