வெளியிடப்பட்ட நேரம்: 12-May-2017 , 06:37 AM

கடைசி தொடர்பு: 12-May-2017 , 06:38 AM

கதிர் குறள் - 1126

kural1

"கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, அதுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும்"


தன் கன்னத்தை பிடித்து சொல்லியவளை மகேஷ் உற்றுப் பார்த்தான். எங்கே ஆற்றாமையில் கண்கள் கலங்கி விடுமோ என பார்வையை வேறு பக்கம் திருப்பினான். இந்த முகத்தை பார்க்காமல் எப்படி வாழ்வது? கொஞ்ச நாட்கள்தான் என சொல்கிறாள். எத்தனை நாட்கள் என யாருக்கு தெரியும்? எப்படியும் இவளுக்கு இன்னும் 6 மாதத்தில் படிப்பு முடிந்து விடும். அதற்குள் நிச்சயம் ஒருவேளை அமைந்து விடும். ஆனால் அவள் வீட்டை சம்மதிக்க வைக்குமளவிற்கான வேலையாய் அது இருக்குமா என்பதுதான் இங்கு கேள்வியே...!Inline image 1இவளைக் கண்டதும் காதலிக்க துவங்கியதில் இருந்தே இதைப் பற்றியெல்லாம் யோசித்திருந்து முயன்றிருந்தால் இந்நேரம் ஒரு நல்ல வேலை அமைந்திருக்கும். எங்கு? அது பற்றியெல்லாம் ஒருமுறை கூட யோசித்ததாய் ஞாபகம் இல்லை. சரி, காதல் எப்போதும் இன்பத்தை மட்டும் தருவதாய் இருக்காது என்பது உண்மை தான். அனைத்திற்கும் தயாராய் இருக்க வேண்டும். அது தான் அவளை கடைசியாய் பார்த்தது. செல்போனில் இருக்கும் படத்தை பார்த்துத்தான் ஏக்கத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறான் இந்த 3 மாதங்களாக.


வீட்டில் பெற்றவர்கள் செருப்பால் அடித்த பொழுது கூட பிடிக்காத வேலைக்கு செல்ல முடியாது என சொல்லும் இளைஞர்களை வேலையின் பின்னால் ஓடவைப்பதில் பெரும்பங்காற்றவது காதல் தான். சில விஷயங்களுக்காக எதையும் செய்யலாம் என தோன்றும். அதில் முதல் விஷயம் காதல். மகேசும் அப்படித்தான். படித்துவிட்டு வேலைக்கு செல்லும் எண்ணமில்லாமல் சொந்தமாக நண்பர்களுடன் தொழில் துவங்க திட்டமிட்டுக் கொண்டு வீட்டோடு இருந்தான். அவன் திட்டமெல்லாம் டீக்கடையோடு முடிந்து விடும். முதலீடு இல்லாமல் எங்கே தொழில் துவங்குவது? அனுபவம் இல்லாதவர்களை நம்பி யார் முதலீடு செய்வார்கள்?


அத்தகைய நாட்களில் ஒருநாள் வீட்டில் மாடியில் இருந்து இறங்க படிக்கட்டு வளைவில் திரும்பும் பொழுது யாரோ வேகமாக இடித்து விட்டு மேலே ஏறினார்கள். கவனிப்பதற்குள் கடந்துவிட, பின்னே வந்த தங்கையிடம் "யாரந்த பிசாசு?" என்று கேட்டான். "என் ஃப்ரெண்ட் மது" என்று சொல்லி விட்டு சென்றவள், போய் நேராக அவளிடம் "எங்கண்ணன் உன்னை பிசாசுன்னு சொல்றான்" எனச் சொல்ல அந்த அழகு பிசாசு, மாடியில் இருந்து அழைத்து "பிசாசுன்னு சொன்னீங்களா?" என கேட்டுவிட்டு முகத்தை பழிப்பு காட்டுவது போல் வைத்துவிட்டு "வெவ்வெவ்வெ" என்று சொல்லிவிட்டு போகும் பொழுதே இவன் விழுந்திருந்தான்.


மதுவிற்கு முக அமைப்பே அப்படித்தான். பாதி குழந்தை சாயல், மீதி குமரி சாயல். இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம் கொண்டவள். அவளுடன் பழக துவங்கிய பின் அவனுள் நிகழந்த மாற்ற்ங்களை கவனித்து அலசி இருந்தால் ஒரு டாக்டர் பட்டமே கிடைத்திருக்கும். அவ்வளவு இரசாயன மாற்றங்கள் அவனுள். அவளுடன் பழகி, பேசி, நெருங்கி, காதலை சொல்லி, காதலிக்க வைக்கவே 6 மாதத்திற்கு மேல் ஆகி இருந்தது. அதன் பின் வந்த நாட்கள் அனைத்தும் அவன் சாகும் வரை நினைத்து நினைத்து மகிழும் சம்பவங்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். குறும்புத்தனம் கொண்ட பெண்ணை காதலியுங்கள். வாழ்க்கை எவ்வளவு சுகமானது என்பது புரியும்.


https://www.filmibeat.com/fanimg/athulya-photos-images-55828.jpg


நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. விஷயம் அவள் வீட்டிற்கு தெரிய வரும் வரை. மிகவும் கவனமாகத்தான் இருந்தார்கள். இத்தனைக்கும் இருவரும் அதிகம் வெளியேக் கூட சுற்றியதில்லை. எங்கே சென்றாலும் தங்கையையும் மற்ற தோழிகளையும் உடன் வைத்துக் கொண்டு தான் செல்வார்கள், யாரும் சந்தேகப்படக் கூடாதென்பதற்காக. ஆனாலும் ஒருமுறை இருவரும் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருந்தது மதுவின் அம்மா பார்த்து விட இரகசியம் அம்பலமானது. ஒரே ஒரு நல்ல விஷயம். அவள் அம்மா இதனை அவள் தந்தையிடம் சொல்லாதது தான். சொன்னால் உடனடியாக நல்ல மாப்பிள்ளை பார்த்து மதுவை கட்டிக் கொடுத்து விடுவார்கள்.


நல்ல மனிதர்தான். ஆனால் பெயர் கெடுவதனை விரும்பாத குணம். காதலில் பெரிதாக நம்பிக்கை இல்லை. மதிவின் அம்மா ஒருநாள் அவளிடம் தனியாக விரிவாக பேசினார்கள். இந்த காதல் எல்லாம் அனைவர் வாழ்விலும் வரும் விசயம் தான். காதலிக்கும் அனைவரும் சேர்ந்து தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இருவரது வாழ்வும் பிரிந்தால் தான் நன்றாக இருக்கும் எனும் நிலை வந்தால் பிரிவது குற்றமில்லை. எத்தனையோ அப்படித்தான் இருக்கிறார்கள் என என்னென்னவோ சொல்லி அவள் மனதை மாற்ற முயற்சித்தார்கள். சிறுவயதில் இருந்தே எதை விரும்பினாலும் விருப்பத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ளாத குணம் கொண்ட மதுவிடம் இது எதுவுமே பலிக்கவில்லை. அவள் தந்தையிடம் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமென்றால் என சில நிபந்தனைகளை விதித்தார். அதில் முதல் நிபந்தனையே இனி இருவரும் சந்தித்துக் கொள்ள கூடாது என்பது தான்.


வேறு வழியில்லாமல் மது ஏற்றுக் கொண்டாள். மகேஷ் எப்படியாவது ஒரு நல்ல வேலையில் அமர்ந்து விட்டால் தைரியமாக வீட்டில் காதல் குறித்து பேசலாம் என மதுதான் யோசனை கூறினாள். அவளை நினைத்துக் கொண்டு வெட்டியாக அலைவதற்கு இது தான் ஆக்கப்பூர்வமாக அவளுக்கு பட்டது. அவனுக்கும் அது தான் சரியாக பட்டது. எப்படியும் படிப்பு முடிந்ததும் மதுவிற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கி விடுவார்கள். யாருக்கு தெரியும்? இப்போதே பார்த்து கூட வைத்திருக்கலாம் என்ற நினைப்பு வருகையில் உலகமே காலடியில் இருந்து நழுவுவது போல் இருந்தது.


நண்பர்கள் உதவியால் பெங்களூரில் ஒரள்விற்கு நல்ல வேலையில் சேர்ந்து விட்டான். இன்னும் நிரந்தரமாகவில்லை. அதன்பின் தான் சம்பளம் உயரும். அதன்பின் தான் எல்லாமே என்று இருவரும் முடிவெடுத்திருந்தார்கள். மதுவிற்கு அவனைக் குறித்த தகவல்களை சொல்வதற்காகவே அவன் தங்கை அவள் வீட்டிற்கு செல்வாள். கடைசி செமஸ்டர் புராஜெக்ட் தான் என்பதால் அவளை அதிகம் வீட்டை விட்டு வெளியே அனுப்பாத அவள் தாய், அவன் தங்கை வருவதற்கு எதுவும் தடை விதிக்கவில்லை. அவளிடம் மட்டும் தான் தற்சமயம் மதுவால் தன் மனதில் இருப்பதை பேச முடியும்.


"நிஜமா உனக்கு முழுசா நம்பிக்கை இருக்கா மது?"


"முழுசான்னு சொல்ல முடியாது, நல்லபடியா முடியும்னு ஆசைப்படறேன்"


"உங்கப்பா ஒத்துக்கலைன்னா?"


"ஒத்துக்க வைப்பேன்னு நம்பிக்கை இருக்கு. அப்படி ஒத்துக்கலைன்னா அவரால மட்டுமில்லை, யாராலயும் மகேஷ் கூட என் கல்யாணம் நடக்கப் போறதை தடுக்க முடியாது"


"எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?"


"உங்கண்ணனை என்ன கோழைன்னு நினைச்சியா? எனக்காக எதையும் செய்வான். எனக்கு அவன் மேல முழுசா நம்பிக்கை இருக்கு"


"அதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அவனா இப்படி, இவ்வளவு தூரம் செய்யறான்னு என்னால நம்பவே முடியலை"


"...." ஒரு மார்க்கமாக சிரித்தாள்.


"சரி, இவ்வளவு காதலிக்கறவங்க எப்படிப்பா இவ்வளவு நாள் பார்த்துக்காம இருக்கிங்க?"


"உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு எனக்கு தெரியலை. அவன் என் கண்லதான் இருக்கான். அவனை நினைச்சாலே போதும். வந்துருவான். நேர்ல பார்க்கனும்னு அவசியம் இல்லை. எப்படியும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் சேர்ந்து தானே இருக்க போறோம். இப்ப பார்க்காம கூட இருந்துக்கலாம்"


"உனக்கு சரி. அவனுக்கு?"


"அவனுக்கும் என் மனசு புரியும். வருத்தப்பட மாட்டான்"


அதிகாரம்: காதற்சிறப்பு உரைத்தல்   குறள் எண்:1126


கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்


உரை: எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.


-கதிர் ராத்

Related Articles