வெளியிடப்பட்ட நேரம்: 13-May-2017 , 08:20 AM

கடைசி தொடர்பு: 13-May-2017 , 08:20 AM

கதிர் குறள் -1127

kural1

நேற்றைய குறள்(1126)  கதையின் தொடர்ச்சி:-

எத்தனை வயதானாலும் காதல் கதைகளை கேட்பவர்கள் அதன் முடிவு சுபமாக முடியவே வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அது தங்கள் வீட்டு பிள்ளைகளின் காதலாக இல்லாத வரை அப்படித்தான். அரிதாக சில பெற்றோர் தம் பிள்ளைகளின் காதலும் இணைய வேண்டும் என விரும்புவார்கள். மகேசின் காதல் முதலில் அவன் வீட்டினரால் வெறுக்கப்பட்டாலும், அக்காதலால் அவனுள் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த எண்ணத்தை மாற்றியது. தொழில் துவங்க போகிறேன் என சொல்லிக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன் இன்று பொறுப்பாக ஒரு வேலைக்கு செல்கிறான் என்றால் அந்த காதலால் தானே, இப்படி நல்ல வழி காட்டும் காதலை எதற்கு வெறுக்க வேண்டும்? இத்தனைக்கும் மது ஒன்றும் அவர்களுக்கு புதியவள் கிடையாதே. ஏற்கனவே அறிமுகமானவள்தான் என்பதுடன் மகேஷ் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடித்தவள் தான்.

மது வீட்டில் அப்படியே வேறு நிலைமை. முதலில் விஷயம் தெரிந்தவுடன் அவசரப்பட்டாலோ, கோபப்பட்டாலோ இக்கால இளைஞர்கள் விபரீதமாக முடிவு எடுப்பார்கள். ஒன்று ஓடிப் போவார்கள். இல்லை திருமணம் ஏற்பாடு செய்தால் தற்கொலை முயற்சி அது, இது என்று அவமானத்திற்கு வழி வகுப்பார்கள் என்பதையெல்லாம் யோசித்து தான் மதுவின் அம்மா, பதறாமல் அவள் தந்தையிடம் கூட சொல்லாமல் விட்டு பிடிக்க எண்ணினார்.

பெரும்பாலான காதல் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அது உண்மைதான். நேரில் சந்திப்பதோ, தொலைபேசியில் உரையாடுவதோ, குறைந்த பட்சம், கடித தொடர்பு இல்லையென்றால் கூட காதல் அதே அளவு இருக்குமா என்பது சந்தேகம் தான். அனைத்து காதல்களையும் குற்றம் சொல்லவில்லை. இதையும் தாண்டி இருப்பது தான் ஆழமான காதல். மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி, நம்மூர் ராஜகோபாலாச்சாரி(ராஜாஜி)யின் மகள் இலட்சுமியை காதலித்த கதை தெரியுமில்லையா? இருவரும் மணம் செய்து கொள்ள கேட்ட பொழுது, காந்தி ஒரு நிபந்தனை வைத்தார். தொடர்ந்து 5 வருடங்கள் எந்த வித தொடர்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளாமல் இருவரும் இருந்து, அதன் பின்னும் இதே அளவு காதலித்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று. அப்படி இருந்து காட்டி தங்கள் காதலை நிருபித்தே இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள். இதே வழியைத்தான் மதுவின் அம்மாவும் முயன்றார். நேரடியாக முடியாது என்றால் முடிவெடுக்கும் உரிமையை அவர்களிடம் இழந்துவிடுவோம் என்பதால் ஒப்புக் கொள்ள இது போல நிபந்தனைகளை விதிப்பது காலம்காலமாக பெற்றோர்கள் செய்வது தான்.

மகேசும் மதுவும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்ததோடு, அவள் வீட்டில் வந்து பெண் கேட்கும் அளவிற்கு ஓரளவிற்கு கௌரவமான வேலைக்கு சென்றது அவன் குறித்து அவன் பெற்றோர்களின் பார்வையை மாற்றியது. தன்னுடைய காதல் திருமணம் குறித்து யோசித்த பொழுதுதான் தன் தங்கை குறித்த சிந்தனையும் அவனுக்கு வந்தது. அவன் மதுவை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டால் அவள் தங்கையை மணக்க வருபவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? தன் பெற்றோர்கள் சம்மதித்து விட்டால் மது வீட்டில் ஒத்துக் கொள்ளாவிட்டால் கூட திருமணத்திற்கு பின், தன் வீட்டில் இருக்கலாம். தங்கையில் திருமணத்தை பிரச்சனையின்றி நடத்தலாம் என யோசித்தான். இந்த பிரச்சனைகளுக்கு பிறகு தன் மகன் நடத்தையில் புதிதாக வந்திருக்கும் பொறுப்புணர்ச்சியை அவன் பெற்றோர் கவனிக்காமலா இருந்திருப்பார்கள்? அவர்களுக்கு முழு சம்மதம்.

மகேசிற்கு வேலை நிரந்தரமாகி, சம்பள உயர்வு கிடைப்பதற்கும், மதுவின் படிப்பு முடிவதற்கும் சரியாக இருந்தது. பறக்க நினைப்பவர்கள் முதலில் சொந்தக் காலில் நின்று பழக வேண்டும். நிற்க துவங்கி விட்டால் கிடைக்கும் தன்னம்பிக்கை நம்மை எதற்கும் தயார்படுத்தும். வேலைக்கு சென்ற பின் மகேசிற்கு உள்ளுக்குள் இருந்த பயங்கள் விலகி விட்டன. நேரடியாக சென்று மதுவை பெண் கேட்கவும் இப்போது அவன் தயார். ஆனால் முறைப்படி செய்ய விரும்பினான். முதலில் தன் தங்கை மூலம் தன் அம்மாவிடம் பேசி அப்பாவின் எண்ணம் குறித்து தெரிந்து கொண்டான். அவர் அவன் பக்கம் நிற்கிறார் என்றதுமே யானை பலம் வந்தது போல் இருந்தது.

நம்பிக்கையுடன் இறங்குபவர்கள் என்றுமே தோற்பதில்லை. மகேஸ் சொன்ன நிலைக்கு வந்த பின், மதுவே தன் தாயிடம் பேசினாள். தற்போது மறுப்பதற்கு எந்த காரணத்தையும் சொல்ல முடியாத நிலை, என்ன செய்ய? இப்போதைக்கு சொல்வதென்றால் சொத்து பத்தில் நம்மை விட குறைந்தவர்கள் என்றுதான் சொல்ல முடியும், அதை முதலிலேயே சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. இனி சொல்ல முடியாது. சமயம் வரும் பொழுது அவள் அப்பாவுடன் பேசுவதாக சொன்னார். ஒருநாள் சாவகாசமாக அவள் தந்தை அமர்ந்திருந்த நிலையில் மகள் திருமண பேச்சினை எடுக்க, அவர் இருக்கும் ஒரு பெண்ணை வெளியூரில் எல்லாம் கட்டி கொடுக்க முடியாது, உள்ளூரில் நல்ல பையனாக பார்த்து கட்டி வைத்து, தனக்கு பின் தன் தொழிலையும் கவனித்துக் கொள்ளும் படி செய்யும் எண்ணத்தினை கூறினார். அதற்கு ஏற்றார்போல் அவள் அம்மாவும் அப்படியென்றால் நம்மை விட சிறிய இடமாகத்தான் பார்க்க வேண்டும் என சொல்ல அவரும் அந்த எண்ணத்தில் தான் இருப்பதாக சொன்னார்.

தனக்கு சாதகமான பதிலை கணவர் சொல்லவும் உள்ளுர மகிழ்ந்த மதுவின் அம்மா, "மகேசை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நல்ல குடும்பம், தொழில் செய்யலாம் என ஊரை சுற்றியவன், குடும்பத்திற்காக பொறுப்பாக வேலைக்கு செல்வதாக கேள்விப்பட்டேன், உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று கொக்கியை போட்டார். மனைவிகளுக்கு தெரியாத கணவனிடம் எப்படி கேட்டால் என்ன பதில் வரும் என்று. "அப்படியா, நான் எதுக்கும் விசாரிக்கிறேன். நல்லபடியா சொன்னாங்கன்னா பேசலாம். பக்கத்துல தான், அப்பப்ப நம்ம பொண்ணையும் பார்க்கலாம்தான்.ம்.பார்ப்போம்" என்றார்.

அதன்பின் நடந்தவை அனைத்தும் மகேஷ் - மதுவின் காதலுக்கு சாதகமாகத்தான் இருந்தது. விசாரித்ததில் கடந்த ஒரு வருடமாக அவன் மிகவும் பொறுப்பாக இருப்பதாகவே தகவல் வந்தது. அவன் குடும்பத்தை பற்றி ஏற்கனவே தெரிந்தது தான். ஆக பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் மகேசின் அப்பாவும் எதுவும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல், கௌரவமாக பேசினார். மிகவும் மெதுவாக அவர்களது திருமணத்தை நோக்கி ஏற்பாடுகள் நகர்ந்தன. பேச்சுவார்த்தை துவங்கியதுமே மகேசுக்காகட்டும் மதுவுக்காகட்டும் நம்பவே முடியவில்லை. இவ்வளவு சுமுகமாக தங்கள் திருமண ஏற்பாடுகள் நடக்கும் என அவர்கள் எப்போதும் நினைக்கவில்லை. மது அவள் தந்தையை இப்போதுதான் மிகவும் நேசித்தாள். தாயையும் தான். மகள் மகிழ்ச்சியாக இருப்பதை விட பெற்றவர்களுக்கு வேறென்ன வேண்டும்?

athulya

திருமண நாள் குறித்த பின், மகேசும் மதுவும் சந்தித்துக் கொள்ள எந்த தடையும் இல்லை. விரும்பினால் வெளியே கூட அழைத்து செல்ல அனுமதி இருந்தது. இருந்தும் இருவரும் அதிகம் போனில் பேசிக் கொண்டார்களே தவிர, நேரில் சந்திக்க விரும்பவில்லை. கொஞ்ச நாள் பிரிந்திருந்ததே இவ்வளவு பெரிய மகிழ்ச்சியை தருகிற பொழுது எதற்கு ஓயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்? பார்க்காமலே இருந்து ஏங்கி திருமணம் செய்து கொண்டால்தானே சுவையாக இருக்கும். ஓடிக் களைத்து குடிக்கும் நீரினை போல இனிக்கும். ஆனால் மதுவினை பார்க்க அடிக்கடி அவள் வீட்டிற்கு இப்போதும் வருவது மகேசின் தங்கை தான்.

"அண்ணி, என்ன இப்படி இருக்கிங்க?"

"ஹேய் எத்தனை தடவை சொல்லிருக்கேன், ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிடுடி"

"அப்படி இல்லை மது, இப்படி கூப்பிட முடியாமலே போயிருமோன்னு எவ்வளவு பயந்துருக்கேன் தெரியுமா? சரி நீ ஏன் இப்படி இருக்க?"

"எப்படி?"

"கல்யாண நாள் நெருங்க நெருங்க எல்லாருக்கும் முகத்துல மெருகேறும்னு சொல்லுவாங்க"

"ஏன், என் முகம் நல்லா இல்லையா?"

"அது நல்லாருக்கு, நீ ஏன் எதுவும் பண்ணிக்காம இருக்க? எனக்குலாம் நிச்சயமாச்சுனா தினம் தினம் ஃபேஸ் மாஸ்க் போட்டு ஃப்ரெஸ்ஸா வச்சுப்பேன்பா"

"எனக்கு இதுவே போதும்"

"சிம்பிளா கண்ணுக்கு காஜலாவது போட்டுக்கடி"

"வேண்டாம்"

"ஏன்?"

"ஏற்கனவே சொல்லிருக்கன் இல்லை, என் கண்ணுக்குள்ளதான் உங்கண்ணன் இருக்கான்னு, காஜல் போட்டா அவனுக்கு டிஸ்டர்ப் ஆகாதா?"

"இதெல்லாம் ரொம்ப ஓவர்"

அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல்   குறள் எண்:1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

உரை: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால், மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!

-கதிர் ராத்

Related Articles