வெளியிடப்பட்ட நேரம்: 15-May-2017 , 03:16 AM

கடைசி தொடர்பு: 15-May-2017 , 03:16 AM

கதிர் குறள் - 1128

kural1

சென்ற குறள்கதையின்(குறள் எண் 1127) தொடர்ச்சி:-


"எனக்கு விருப்பமே இல்லை, ஏன் நான் இங்கே இருந்தா என்ன?"


"எனக்கு நீ இருக்கறது பிரச்சனைன்னா உன்னை கொண்டு போய் உங்க வீட்ல விடறேன். எல்லோரும் பேசறதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த?"


"ம் போடா, யாருமே என் பேச்சை கேட்க மாட்டேங்கறீங்க?"


"லூசு, நீ தான் இங்க இருக்கறதலயே சின்னவ, நாங்க உன் பேச்சை கேட்கனுமா?"


"....."


முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட மதுவினை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று மகேசிற்கு தெரியவில்லை. சாதாரணாமாகவே அவளை காயப்படுத்தும்படி எதையும் பேசவோ, செய்ய மாட்டான். எவ்வளவு ஏங்கி பிரிந்து தவித்த பின் மிகவும் சுலபமாக நடந்த திருமணத்தின் மூலம் கிடைத்தவள். மனம் விரும்பிய காதலியே மனைவியை வரும் பாக்கியம் இங்கு அனைவருக்குமா கிடைக்கிறது? அத்துடன் வரும் போது அவள் மட்டும் தனியாகவா வந்தாள்? அத்தனை அதிர்ஷ்டத்தையும் அழைத்துக் கொண்டல்லவா வந்தாள்.


மதுவின் அப்பா, திருமண பேச்சு பேசும் பொழுதே, வரப்போகும் மருமகன் தனக்கு பின் தன் தொழில்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துத்தான் பேசவே துவங்கினார். எடுத்தவுடன் முதலாளி நாற்காலியில் அமர சொல்லுமளவு யதார்த்தம் புரியாதவரும் அல்ல. முதலில் சில வருடங்களுக்கு தனக்கு கீழ் சம்பளத்திற்கு வேலை பார்க்க வேண்டும். வேலை என்றால் அனைத்து பொறுப்புகளையும் தன் மேற்பார்வையில் கற்றுக் கொள்வது தான். ஏற்கனவே தொழில் செய்வதில் ஆர்வம் இருந்த மகேசிற்கு கரும்பு தின்ன கூலி தந்தாற் போல் இருந்தது. அவன் குடும்பமும் ஏற்றுக் கொண்டது ஒரு நிபந்தனையுடன். அது என்னவென்றால் வீட்டோடு மாப்பிள்ளையாக வர சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பது தான் அது.


ஒருவரை ஒருவர் கௌரவமாக நடத்தும் பொழுது ஏன் சச்சரவு வரப் போகிறது? எந்த குழப்பமும் இல்லாமல் மது - மகேசின் திருமணம் நடந்தது. வசதியான வீட்டுப் பெண் என்றெல்லாம் ஒதுங்கி இருக்காமல், ஏற்கனவே பழகிய குடும்பம் என்பதால் மிகவும் நெருங்கி பழக மதுவால் முடிந்தது. அதிலும் மகேசின் தங்கை அவளின் நெருங்கிய தோழி வேறு.


திருமணம் முடிந்த முதல் மூன்று மாதங்கள் போல் தம்பதிகளுக்கு கிடைக்கும் கவனிப்பு போல் வேறு யாருக்கு கிடைக்கும்? ஒவ்வொரு உறவினர் வீட்டிலும் விருந்துண்பதும், ஜோடியாக பிடித்த இடங்களுக்கு சுற்றுவதும், உள்ளுக்குள் சேர்த்து வைத்திருந்த காதலை அனைத்து வழிகளிலும் தீர்த்துக் கொள்வது மட்டும் தான் வேலை. அப்போது கிடைக்கும் பூரிப்பிலேயே உடல் ஒரு சுற்று பெருப்பதுடன், முகமும் பொலிவாகும். மதுவின் அப்பாவும் முதல் மூன்று மாதங்களுக்கு மருமகனுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை.


அதல் பின் தான் அவரது தொழில்களை கவனிக்க மகேஸ் வேலைக்கு சென்றான். உள்ளூர் என்பதால் அவன் வேலைக்கு சென்று விட்டு வந்த பின் மதுவை அவள் வீட்டிற்கு அழைத்து செல்வான். இந்த திருமணத்தால் யாரும் எதையும் இழக்காமல் அனைவரும் மகிழ்ச்சியாய் இருப்பதை உணர்ந்தார்கள். பின் பிள்ளைகள் மகிழ்ச்சியாய் இருந்தால் அதை விட வேறென்ன வேண்டும் பெற்றவர்களுக்கு? ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. அடுத்த சில நாட்களிலேயே புதிதாய் ஒரு ஜீவன் வருகையை எதிர்பார்க்க துவங்கினார்கள். அதற்காக நச்சரிக்கவெல்லாம் இல்லை. உள்ளுக்குள் ஆசைப்பட்டார்கள்.


திருமணம் முடிந்த 4வது மாதத்தில் மதுவிற்கு நாட்கள் தள்ளிப் போனது. 10 நாட்களுக்கு பிறகு தான் உறுதி செய்து கொண்டார்கள். பெரிதாய் எந்த வேலையும் கொடுக்க போவதில்லை என்றாலும் இரண்டாவது மாதத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அந்த நேரத்தில் ஒரு பெண்ணை அவள் தாயை விட பத்திரமாய் வேறு யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் மதுவை ஒரு மாதத்திற்கு அவள் வீட்டில் கொண்டு விட அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள். இதில் மதுவிற்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. மகேசையும் உடன் வந்து தங்க சொன்னாள். ஆனால் அவன் உடன் இருந்தால் அவனை கவனித்துக் கொள்ள மிகவும் பிரயத்தனபடுவாள் என்பதால் மறுத்தார்கள்.


மது மட்டும் ஒரு மாதம் அவள் அம்மா வீட்டில் தங்குவது, மகேஸ் அவ்வபோது அவளை சென்று பார்த்து வருவது என முடிவானது. மதுவிற்கு ஒரு சதவீதம் கூட இதில் விருப்பமில்லை. சில மாதங்கள் தான் என்றாலும் மகேசுடன் மிகவும் நெருங்கி இருந்தாள். அவன் சாப்பிட்டு முடித்த பின் இவள் சாப்பிட்டாலும் அவனுக்கு இரண்டு வாய் ஊட்டி விட்டு சாப்பிட்டால் தான் இவளுக்கு வயிறு நிறையும். முழுக்க முழுக்க அவனை கவனித்துக் கொள்வதன் மூலம் தன் தீராக்காதலை தீர்த்துக் கொள்ள முயல்வாள். அவன் அம்மா கூட சொல்வார்கள் "என்னை விட அதிகமா செல்லம் கொடுக்கற, எல்லாத்தையும் இவனுக்கே கொடுத்துட்டா எப்படி? குழந்தைங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வை" என்பார்கள்.


Image result for athulya ravi romance


அப்படி இருப்பவளால் அவனை விட்டு இருக்க முடியுமா? ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. இரண்டு தெரு தள்ளி தான். நடந்தே வந்து பார்க்கலாம் தான். இருந்தாலும் மனம் ஒப்பவில்லையே! முகத்தினை தூக்கி வைத்துக் கொண்ட மனைவியை முத்தங்களால் சமாதானப்படுத்தி ஒருவழியாக ஒப்புக் கொள்ள செய்து அவள் அம்மா வீட்டில் கூட்டிச் சென்று விட்டு விட்டு இரண்டு நாட்கள் அங்கேயே இருந்து விட்டுத்தான் வந்தான். அவன் வேலைக்கு சென்ற பின் அவளுக்கு துணைக்கு மகேசின் தங்கை சென்று விடுவாள். இருவருக்கும் காஃபி எடுத்து வந்த மதுவின் அம்மா பொதுவாக தர, மது மட்டும் பலமுறை ஆற்றி குடித்தாள்.


"எதுக்குடி இவ்ளோ ஆத்தற? ஜில்லுன்னு ஆகனுமா உனக்கு?"


"நான் சூடா சாப்பிட மாட்டேன்"


"அதான் ஏன்?"


"உனக்கு தெரியாதா? உங்கண்ணன் என் நெஞ்சுலதான் இருக்கார். நான் சூடா குடிச்சு அவருக்கு சுட்டுருச்சுன்னா?"


"அய்யோ, என்னால முடியலைடி"


"இந்த மாதிரி நேரத்துல ரொம்ப சூடா குடிக்க கூடாதும்மா அதான்"


அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல்     குறள் எண்:1128


நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து


உரை: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.


-கதிர் ராத்

Related Articles