வெளியிடப்பட்ட நேரம்: 16-May-2017 , 07:31 AM

கடைசி தொடர்பு: 16-May-2017 , 07:32 AM

கதிர் குறள் - 1129

kural1

"அவசரம் இல்லை. யோசிச்சு பொறுமையா சொல்லு. நீ என்ன சொன்னாலும் சரி, திரும்ப வற்புறுத்த மாட்டேன்"


நான் எந்த பதிலும் சொல்வதற்கு முன்பாகவே அனிதா என்னை இழுத்து வந்து விட்டாள். அவள் இல்லை என்றால் சரி என்று சொல்லி இருப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் என் முகம் காட்டி கொடுத்து விடும். என் முகவெட்டு அப்படி. கோபப்பட்டாலோ, சோகத்தை உள்ளே வைக்க முயற்சிக்கையிலோ உடனடியாக காட்டி கொடுத்து விடும். இது போன்ற உணர்ச்சிகளை மட்டும் அல்ல, ஒருவர் மீதான உணர்வுகளையும் என் முகம் காட்ட துவங்கி விட்டது போல. இல்லையென்றால் எந்த தைரியத்தில் என்னிடம் வந்து அப்படி சொல்லிருப்பான்.


சற்று தூரம் வந்த பின் தான் கவனித்தேன் அனிதா அவனை திட்டிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறாள்.


"எல்லா பசங்களும் ஒரே மாதிரி தான் இருக்காங்க. பார்த்தியா? நான் சொன்னேன் இல்லை. நீ தான் கேட்கலை?"


"விடுடி"


"விடறதா? நான் ஜெனிஃபர் மேம் கிட்ட அவனை கம்ப்ளய்ன் பண்ணலாம்னு இருக்கேன்"


"ஹேய் லூசு, காலேஜ் லைஃப்ல இதெல்லாம் சகஜம். அவன் என்ன டார்ச்சரா பன்றான்? கம்ப்ளய்ன்ட் பன்ற அளவுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை ஃபிரியா விடு"


"இப்படி நீ ரொம்ப இடம் கொடுக்கறதால தான் இப்படிலாம் வந்து சொல்றானுங்க, சும்மா சும்மா அவனை பார்க்காதன்னு சொன்னா கேட்டாதானே"


"ஸ்ஸ்ஸ்ஸப்பா, நீ திரும்ப ஆரம்பிச்சுடாதம்மா. என் செல்லம்ல, இந்த பிரச்சனையை இதோட விடு, நான் நாளைக்கு அவன்கிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசிக்கறேன்"


"என்ன பேசப்போற?"


"உன்கிட்ட தான் அதை பத்தி விவாதிக்கலாம்னு இருக்கேன். உனக்கு தான் இதுல நிறைய அனுபவம் இருக்கே"


"ஹேய், என்ன கிண்டலா? என்கிட்டலாம் யாரும் இப்படி வந்து சொன்னதில்லைப்பா"


"அப்படி இல்லை, உனக்குதான் பசங்களை எப்படி டீல் செய்யனும்னு நல்லா தெரியுமே, அதான் சொன்னேன்"


"என்னை கேட்டா இதெல்லாம் இப்பவே ஸ்டாஃப்கிட்ட கொண்டு போயிடனும், அவங்க கூப்டு வார்ண் பண்ணிடுவாங்க, பிரச்சனை முடிஞ்சுரும்"


"சரி வா ஹாஸ்டல்ல பேசிக்கலாம்"


அப்போதைக்கு அனிதாவின் வாயை அடைத்தேன். இவளுக்கு ஏன் சதிசை பிடிக்கவில்லை என்றே தெரியவில்லை. அதுசரி முதலில் இவளிடம் எனக்கு அவனை பிடித்திருக்கிறது என்று நான் சொன்னதே இல்லையே. எனக்கு மட்டுமல்ல, என் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் அவனை பிடிக்கும். வகுப்பெடுக்க வரும் ஆசிரியர்களுக்கும் அவனை பிடிக்கும். களையான முகம் என்பதை விட ஒருமாதிரி நளினம் கலந்த குழந்தை முகம் அவனுக்கு. உண்மை தான். குழந்தை முகம், அவனுக்கு சரியாய் இன்னும் மீசை தாடி கூட முளைக்கவில்லை. நான் கவனித்திருக்கிறேன்.


இதை எதற்கு நான் கவனித்தேன் என்று கேட்கறீர்களா? எனக்கு வகுப்பு பிடிக்கவில்லை என்றால் அவனைத்தான் பார்த்து கொண்டிருப்பேன். அவன் பாட்டுக்கு ஏதாவது சேட்டை செய்து கொண்டு, விளையாடி கொண்டிருப்பான். என்னுடன் இரண்டு வருடம் படிக்கிறான் என்றாலும் அவனை சென்ற ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவில் இருந்து தான் கவனிக்க துவங்கினேன். ஏன் என்று கேட்கறீர்களா? அன்று தான் அவன் பெண் வேடமிட்டு ஆண்களுடன் சேர்ந்து நடனமாடினான். அந்த நடனம் எல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் அன்று தான் யார் இவன் என கவனித்தேன். பின் அவன் செய்கைகளை என்னை அறியாமல் கவனிக்க துவங்கினேன்.


குழந்தைகள் விளையாடுவதற்கு எப்போதும் துணை தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள் தெரியுமா? அவர்கள் பாட்டுக்கு ஏதாவது ஒன்றினை பாடிக் கொண்டு ஆடிக் கொண்டு குதித்துக் கொண்டு இருப்பார்கள் பார்த்ததுண்டா? சதிஸ் அப்படிப்பட்டவன் தான் தெரியுமா? அரிதாகத்தான் அமைதியாக நடப்பான். மற்ற நேரங்களில் அவன் பாட்டுக்கு மெதுவாக எதையோ முணுமுணுத்துக் கொண்டு ஆடிக் கொண்டு செல்வான். நண்பர்களுடன் இருப்பதை விட, தனியாய் இருக்கையில் தான் அவனை ரசிக்க பிடிக்கும். கையில் எதையாவது வைத்து விளையாடிக் கொண்டிருப்பான். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது இரகசியமாக இரண்டு பேனாவை வைத்து வண்டி ஓட்டி மோத விட்டுக் கொண்டிருப்பான். பொறியியல் படிக்கும் மாணவனிடம் இதையெல்லாம் நீங்கள் கவனித்ததுண்டா? எனக்கே முதலில் புதிதாக இருந்தது. பின்னர் பிடிக்க துவங்கியது.


யாரும் பார்க்கவில்லை என்றால் காலை தரையில் டைல்ஸ் கோடுகளில் "டுர்ர்ர்ர்" என்று தேய்த்துக் கொண்டு மெதுவாக நடப்பான். அவன் சோகமாக இருந்து நான் பார்த்ததே கிடையாது. இத்தனை வருடங்களில் தன்னுள் இருக்கும் குழந்தைதனத்தை எந்த சோகமும்,கோபமும் சிதைக்காமல் பத்திரமாக வைத்திருப்பவனை எப்படி இரசிக்காமல் இருக்க முடியும்? அவன் என்னை கவனித்தால் புன்னகைப்பேன். அவனும் அதைத்தான் செய்வான். அதற்கு மேல் எந்த தொந்தரவும் இதுவரை செய்ததில்லை.


இன்று அதிசயமாக வந்தவன் "ரஞ்சிதா, உனக்கு கேரளா புடவை செமயா இருக்கு" என்றான். நானும் நன்றி சொல்லி சிரித்தேன். "எல்லா டிரஸ்லயும் நீ அழகாதான் இருக்க. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்" என்றவனை குழப்பமாக நிமிர்ந்து பார்த்தேன்.


Related image


என்ன சொல்ல வருகிறான் என்று குழப்பத்தில் இருக்கையில் தான் "அவசரம் இல்லை, யோசிச்சு பொறுமையா சொல்லு. நீ என்ன சொன்னாலும் சரி, வற்புறுத்த மாட்டேன்" என்றான். என்னை கொஞ்ச நேரம் அங்கே இருக்க விட்டிருந்தால் நான் பொறுமையா யோசித்து ஒரு பதில் சொல்லி இருப்பேன். அவனுக்கும் அறிவில்லை. தனியாக இருக்கையில் சொல்லி இருக்கலாம். இந்த அனிதா இருக்கும் போதா சொல்வான்.


நிச்சயமாக பதிலுக்கு எனக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்க மாட்டேன். என்னை ஏன் பிடித்திருக்கிறது என்று விவரமாக கேட்டிருப்பேன். ஒரு நல்ல நட்பாக கட்டாயம் மாற்றி இருப்பேன். ஏன் காதலிக்க கூடாதா என்கிறிர்களா? அவன் அதை பற்றி கேட்கட்டும். பிறகு பார்க்கலாம். வெறுமனே பிடித்திருக்கிறது என்று தானே சொல்லி இருக்கிறான். நாளை பேசிக் கொள்கிறேன் அவனை. அய்யய்யோ மனம் முழுக்க அவன் நினைவுகளாகவே இருக்கிறதே. கொஞ்ச நேரமாவது அவனை தவிர்த்து வேறு விசயங்களில் மனதை ஈடுபடுத்த வேண்டும். அப்போது தான் தெளிவாக யோசிக்க முடியும்.


வேண்டுமென்றே விடுதியில் தோழிகளுடன் அரட்டை அடித்தேன். உண்மையில் அவனை மறப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. ஏன் இன்று வந்து சொன்னான்? நான் கேரளா சேரி கட்டியது போன வாரம். அதை ஏன் இன்று சொன்னான்? எல்லா டிரஸ்லயும் என்றால் தினமும் என்னை பார்க்கிறானா? பார்ப்பான் என்று தெரியும், என்னை தனியாக கவனிக்கிறான் என்பதை கவனிக்காமல் இருந்து விட்டேனே! தினமும் என்றால் எப்போதில் இருந்து? எனக்கு முன்பேவா? அடடா, ஒரு விதமாக புதிவித குழப்பமாக இருக்கிறதே? கொஞ்சம் கூட அலுப்பினை தராத குழப்பம்?


இரவு 10 மணிக்கு மேல் விடுதியில் கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அடங்க துவங்கியது. அனைவரும் உறங்க துவங்கினார்கள். எனக்கு உறக்கம் வரவில்லை. விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவர் முகமும் என் கண்களில் மறைந்த பின், மனம் அவன் முகத்தை பார்க்க விழைந்தது. எங்கே போவேன்? என் மொபைலில் எடுத்து தேடினேன். ஏதேனும் ஒரு குருப் போட்டோவில் இருப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. உண்மையில் அவ்வபோது போட்டோக்களை அழிக்கையில் அவன் இருக்கும் படங்களை மட்டும் அழிக்காமல் வைத்திருந்தேன். அப்படியே முகநூலில் அவன் கணக்கிற்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.


நான் உறங்காமல் இருப்பதை கவனித்த அனிதா "ஏன்டி, இன்னும் தூங்கலை?" எனக் கேட்டாள். நான் பொதுவாக "தூக்கம் வரலை" என சொல்லி வைத்தேன். "அதையே நினைச்சுட்டுருக்கியா? என்று அவள் சொன்னது தான் தாமதம், உறங்கிக் கொண்டிருந்ததாக நினைத்த மற்ற தோழிகள் "எதைடி சொல்ற? ஒழுங்கா சொல்லிடுங்க 2 பேரும்" என எழுந்து கேட்டார்கள். அனிதா என்னிடம் அனுமதி வாங்கி ஆரம்பத்தில் இருந்து கதையை சொல்ல துவங்கினாள். எப்படி MGR நடித்த சினிமாக் கதையை சொல்லும் அவரது ரசிகர்கள் அடிக்கடி நம்பியாரை திட்டிக் கொண்டே சொல்வார்களோ, அதே போல் வார்த்தை வார்த்தை சதிசை திட்டினாள். என்னவோ அதிசியமாக மற்றவர்களும் அனிதாவுடன் சேர்ந்துக் கொண்டு, அவனால் தான் மனக்குழப்பத்தில் பயந்துக் கொண்டு நான் தூங்காமல் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவனைத் திட்டினார்கள். என் மனதிற்குத்தானே தெரியும், அவன் வந்தது பேசியது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியான விசயம் என்று.


அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல்   குறள் எண்:1129


இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்


உரை: தலைவன் மீது கொண்ட காதலால் தூங்காமல் தவிக்கிறாள் தலைவி. ஆனால் அவளது உறக்கமின்மையை ஊர் எப்படிப் பார்க்கிறது? 'எவனோ ஒருவன் இவளைத் தூங்கவிடாமல் செய்துவிட்டுப் போய்விட்டான். பாவம் இந்தப் பெண்' எனச் சொல்கிறது.
இது கேள்விப்பட்ட தலைவி ஊர்மக்கள் மீது மனக்குறை உண்டாகி இவ்விதம் கூறுகிறாள்: 'நான் கண் இமைத்தால் கண்ணுள்ளிருக்கும் காதலர் மறைந்துவிடுவார் என்பதால் இமைக்க மாட்டேன்; அதற்கே அவரை அன்பிலா அயலார் என்று சொல்கிறார்களே இவ்வூர் மக்கள்'.


அவனுக்காக அவள் தூக்கத்தைத் தொலைத்ததும் அவளுக்குத் துன்பமாகத் தெரியவில்லை. அதனால்தான் 'இதற்குப் போய் அவரைத் திட்டுகிறார்களே' என்கிறாள். காதலனுக்குப் பழி வருதல் கூடாது என்பதனையும் தலைவி கருத்தில் கொள்கிறாள். தன் உறக்கமின்மைக்குத் தலைவன் காரணமில்லை; அவன்மீது தான் கொண்ட தீராத காதல்தான் தூக்கம் இழந்ததற்குக் காரணம் எனச் சொல்ல வருகிறாள்.


-கதிர் ராத்

Related Articles