வெளியிடப்பட்ட நேரம்: 17-May-2017 , 06:58 AM

கடைசி தொடர்பு: 17-May-2017 , 06:58 AM

கதிர் குறள் - 1130

kural1

"எல்லாம் நீ இடம் கொடுத்து தான் இவ்வளவு தூரத்துக்கு வந்துருக்கு. பார்த்தியா?"

"அப்படிலாம் இல்லை"

"என்ன இல்லை? முன்னலாம் எப்படி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்?"

"அவன் எங்கே சுத்துனான்? ஆரம்பத்துல இருந்தே அவன் நம்ம ஃப்ரெண்ட்தானே?"

"ஃப்ரெண்ட்தான். ஆனா தினம் இங்கே உன்னை விட்டு தனியா எங்கேயாவது போயிருக்கானா? போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான். நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க. ஆனா இப்ப பார்த்தியா?"

"இப்ப மட்டும் என்ன? போனை எடுக்காமயா இருக்கான்?"

"எடுக்குறான். எடுத்து அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வச்சுடறானே. ஏன்டி இப்படி இருக்க? அவனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி. யாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்"

"உனக்கென்ன ஆச்சு சுகா? ஏன் அவனை கரிச்சு கொட்டற? லவ்வர்ஸ்க்குள்ள சண்டை வரது சகஜம் தானே?"

"நீ ஏன் இப்படி இருக்க? உனக்கு அவன் செய்யறதைல்லாம் பார்த்து கோபமே வரலையா?"

"அதெப்படி வராம இருக்கும்? அவன் மேல இருக்க கோபத்தை உன் மேல காட்ட சொல்றியா? அவன் வரப்ப பேசிப்பேன்"

"எனக்கு அவன் வருவான்னு தோணலை"

".........."

எதுவும் பதில் சொல்லாமல் சிரித்த தாரணியை பார்த்து சுகந்திக்கு வித்தியாசமாக இருந்தது. இவள் என்ன இப்படி இருக்கிறாள்? ஒவ்வொருத்தியும் காதலர்களை மட்டுமா? நண்பர்களையே விரல் நுனி அசைவுக்கேற்றவாறு ஆட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவள் என்னடாவென்றால்? அந்த செந்திலிடம் அப்படி என்ன இருக்கிறது? இவள் இப்படி அவனுக்காக காத்திருக்கிறாள்? அதுவும் கொஞ்சம் கூட கோபப்படாமல் எப்படி இவளால் இருக்க முடிகிறது?

தாரணிக்கு சுகந்தியை பார்த்தால் சிரிப்பு தான் வந்தது. என்ன பெண் இவள்? காதல் என்றால் என்னவென்று கூட தெரியாமல் இருக்கிறாள்? காதல் என்பதென்ன? ஒருவரை ஒருவர் பிடித்தாற்போல் மாற்றிக் கொள்வதா? அது வேறு வித மாயம் இல்லையா? பிறந்ததில் இருந்து யாரிடமும் தோணாத, கிடைக்காத பலவற்றை அவனிடம் இருந்து பெறுகிறேனே அதற்கெல்லாம் என்ன நன்றியா சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அவன் மீது கொண்ட உரிமையில் தானே அப்படி எல்லாம் நடந்துக் கொள்கிறேன்.

ஆமாம், முன்பெல்லாம் அவன் என்னை விட்டு பிரியவே மாட்டான். என் அருகாமையே அவனுக்கு போதுமாய் இருந்தது. அவனுக்கு மட்டுமா? எனக்கும் தான் அவன் அருகாமை தேவைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே அவன் சுகா சொல்வது போல் என்னை திட்டம் போட்டெல்லாம் காதலிக்கவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். பார்த்ததில் இருந்தே ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது. உடனே காதல் என்று நினைக்கும் அளவுக்கு இருவருக்கும் பக்குவம் இல்லாமல் இல்லை.

இந்த பார்த்தவுடன் பிடிப்பது காதலில் மட்டும் தான் நடக்கிறதா என்ன? நம்மை விட மூத்தவர்களை, இளையவர்களை, ஏன் நம் பாலினத்திலேயே கூடத்தான் சிலரை பார்த்ததுமே பிடிக்கும். அதையெல்லாம் என்ன காதல் என்றா சொல்கிறோம்? நம் மனதிற்கு என சில பிடித்த மாதிரியான வரையரைகள் இருக்கும். அதை பூர்த்தி செய்வது போல் தோற்றமும் நடத்தையும் கொண்டவர்களை பார்த்தவுடன் பிடிக்கத்தான் செய்யும். இதில் சிறப்பு என்னவென்றால் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது தான். அதனால் தான் விரைவாக நண்பர்களானோம்.

அதன் பின்னர்தான் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்ள முடிந்தது. அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்து காத்திருந்த நாட்கள்தான் எவ்வளவு சுவாரசியமானவை? அடுத்து யாருக்கும் தெரியாமல் காதலிக்க துவங்கிய நாட்கள், ம், அந்த திருட்டுத்தனத்திற்கு இணையான சுவை வேறேதும் உண்டா? நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஞாபகம் வைத்திருப்பான். எனக்கு பிடித்த அத்தனையும் தெரிந்து வைத்திருப்பான்.

எப்படியெல்லாம் என்னை திக்குமுக்காட வைப்பான்? உண்மையில் சில விஷயங்களின் அவன் மோசம் தான். திரையரங்கில் படம் முடிந்து கிளம்பும் போது அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் கன்னத்தில் முத்தமிடுவான். எனக்கு பிடிக்காது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். திருமணத்திற்கு பிறகும் இப்படி தரவேண்டும் என்றுதான் சொல்வேன். என் செந்தில், என்னை முத்தமிடுவதற்கு நான் எதற்கு கூச்சப்படுவேன்? மொத்த கூட்டமும் எங்களைத்தான் பார்க்கும். முதல்முறை தான் அவனை திட்டி, அடிக்க, அவன் பதறாமல் அப்படியே என்னை அணைத்தபடி அழைத்து செல்வான்.

இவனுடன் சேர்ந்த பின்தான் நானும் இப்படி யோசிக்க துவங்கினேன்? வெட்கப்பட்டு எதை சம்பாதிக்க போகிறேன்? ஊட்டிக்கு பைக்கிலேயே அழைத்து சென்ற பொழுது பல ஜோடிகளை காட்டினான். அவர்களெல்லாம் என்ன கூச்சப்பட்டுக் கொண்டா இருக்கிறார்கள்? இவன் எனக்கானவள், இவள் எனக்கானவள் என்றான பின் எதற்கு சம்பிரதாயத்திற்கெல்லாம் காத்திருக்க வேண்டும்? மனம் கேட்பதை செய்து விட்டு போக வேண்டியதுதானே? திருமணம் என்ற அறிவிப்பு நிகழ்ச்சிக்காகவெல்லாம் எதையும் நாங்கள் தள்ளிப்போடவில்லை. எல்லாம் நன்றாகத்தான் போனது.

Image result for kadhal kan kattudhe

அவ்வபோது சிறுசிறு சண்டை வருவது இயல்பு தான். இம்முறை கொஞ்சம் பெரிதாகி விட்டது. என் பள்ளி நண்பன் ஒருவனுடன் போனில் பேசிக் கொண்டிருக்கையில் இவன் கால் செய்து வெயிட்டிங்கில் போவதை பார்த்து விட்டு, யாரென கேட்க நான் வெறொரு தோழி பேரை சொன்னவள், கால் ஹிஸ்டரியை அழிக்காமல் விட்டு விட்டேன். அவனுக்கு நான் துரோகமெல்லாம் செய்யவில்லை. என்னவோ அவனுக்கு என்னை ஒருதலையாக காதலித்தவர்களிடம் பேச பிடிக்காது என்பதால் மறைக்க நினைத்தேன். அது பிழையாகி, அவனிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன்.

கேள்வி கேட்டான். திட்டினான். புலம்பினான். மெலிதாக அழுதான். நான் சமாதானப்படுத்தினேன். மன்னிப்பு கேட்டேன். அவனுக்கு என் நடத்தை மீது முழு நம்பிக்கை இருந்தது. நான் பொய் சொன்னதுதான் அவனுக்கு வருத்தம். இனி உன்னிடம் பேச மாட்டேன் என்றெல்லாம் சொல்லி விட்டு போகவில்லை. கொஞ்சம் என்னை எதிர்கொள்ள வருந்துகிறான். அவ்வளவு தான். நான் எப்படி இவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறேன் என கேட்கிறீர்களா?

என்னதான் இருவருக்கும் சண்டை என்றாலும் காலையில் அவன் தான் முதலில் போன் செய்து எழுப்புகிறான். இரவு படுக்கும் பொழுது குட்நைட் சொல்லாமல் தூங்குவதில்லை. கொஞ்சம் கோபத்தில் தான் இருக்கிறான். என் செல்லக்குட்டியை எப்படி சமாதானப்படுத்த வேண்டும் எனக்கு தெரியாதா? இதையெல்லாம் எதற்கு நான் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க போகிறேன். சுகந்தி அவனைப் பற்றி என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளட்டும்.

எனக்கு அவனை பற்றி தெரியும். அவனுக்கு என்னை பற்றி தெரியும். ஒரு வாரமாக ஏன் பேசாமல் இருக்கிறோம் என்ற காரணத்தை அவன் நிச்சயம் யாரிடமும் சொல்லமாட்டான். அவன் எங்கேயும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை. பலருக்கு இந்த விசயம் புரிவதில்லை. உடல் இணைவதை விட மனம் இணைவது தான் பெரிது. வெறுமனே உடற்பசி தீர்ந்ததும் போய்விட்டான் என புரியாமல் பேசுகிறார்கள். எனக்கு தெரியாதா? மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமல்லை. அவனது காதல் உண்மையில்லை என்று மற்றவர்கள் சொன்னால் சொல்லிக் கொள்ளட்டும்.

அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல்   குறள் எண்:1130

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்

உரை: காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார்; ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார்,`அன்பில்லாதவர்' என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

Related Articles