வெளியிடப்பட்ட நேரம்: 26-Apr-2017 , 04:59 AM

கடைசி தொடர்பு: 26-Apr-2017 , 04:59 AM

கதிர் குறள் - 267

kural1

"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான். ஆனா கை விட்ருவான்" நல்ல வசனம் இல்லையா? பாலகுமாரன் எழுதியது பாட்ஷா படத்திற்காக. உண்மையா இது? உண்மைதான். வெறுமனே நல்லவர்களுக்கு சிரமப்படாமல் கொடுத்தால் அதற்கு மதிப்பிருக்காது. சோதனையும் சிரமங்களும் உழைப்பும் தான் மிகப்பெரிய அடையாளமாகும். சென்ற தலைமுறையில் திருபாய் அம்பானி மிகவும் புத்திசாலித்தனமாக உழைத்து அடைந்த இடத்தை அதற்கு முன்பு கைவசம் வைத்திருந்த டாட்டாவின் வாரிசுகள் கஷ்டபட்டா அந்த இடத்திற்கு வந்தார்கள்? இப்போது அந்த இடத்தை அடைய அதானி போராடி உழைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முதலிடத்தில் இருக்கும் அம்பானி சகோதரர்கள் உழைப்பது அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக என்றாலும், இந்த இடத்தை பெறுவது அவர்களுக்கு கடினமாகவா இருந்தது? ஏற்கனவே அவரது தந்தை திருபாய் ஏற்படுத்தி வைத்திருந்த அரியாசனம் தானே அது.


என்ன சொல்கிறேன் என்றால் ஒரு விசயம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியை தருவதல்ல. இப்போது மோடி பிரதமர் ஆனதும், ராஜிவ் காந்தி பிரதமர் ஆனதும் ஒன்றா? ஒருவருக்கு எளிதாக கிடைத்த விசயம், மற்றவர் கடுமையாக உழைத்து பெற்றதாக இருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ள இருவரும் சமமாக உழைத்தாக வேண்டும் என்றாலும் அந்த வாய்ப்பு சமமானதா? இதற்கு நடிகர்கள் அஜித், விஜய்யை சொல்லலாம். இருவரும் சம உச்சத்தில் இருக்கிறார்கள். அதற்காக சம அளவு உழைக்கிறார்கள். ஆனால் வாய்ப்பு இருவருக்குமே எளிதாகவா கிடைத்தது?


வீட்டில் டம்ளரில் தண்ணீர் இருக்கும். அதில் முழுமையாக இல்லாமல் யாரோ குடித்து விட்டு வைத்தது போல் இருந்தால் குடித்த திருப்தியே இருக்காது. முழுமையாக வேண்டும் என மனம் எதிர்பார்க்கும். அதனால் புதிதாக மொண்டு குடிக்க தோன்றும். இதே தண்ணீர் குறித்த எண்ணம் ஒரே மாதிரி இருக்குமா என்றால் கிடையாது. மேட்டூர் அருகே பாலமலை என்றொரு மலை இருக்கிறது. கொல்லிமலை போல சிவபக்தர்கள் இரவு முழுக்க ஏறி அடுத்த நாள் தரிசித்துவிட்டு இறங்கும் மலை. பல மைல் ஏற வேண்டும். அப்படி ஏறுவதே கடினமாக இருக்கும் பொழுது, சுமைகளுடன் ஏற முடியுமா? தண்ணீர் பாட்டில்கள் எத்தனை எடுத்து சென்றாலும் ஏறுவதற்குள்ளாகவே காலியாகிவிடும். இறங்கும் பொழுது நீங்கள் எடுத்து சென்ற தண்ணீர் இருக்காது. என்ன செய்ய? அங்கங்கு சுணை நீர் குட்டை போல் இருக்கும். அதைத்தான் குடிக்க வேண்டும். பாசி மூடிய நீர் என்று தவிர்க்க முடியாது. தேவை அப்படி நெருக்கடி தரும்.


ஒரே தண்ணீருக்கு நாம் தரும் மதிப்பு இடத்திற்கு தக்கவாறு மாறுவது ஏன்? அது கிடைப்பதில் தான் இருக்கிறது வித்தியாசம். எளிதாக கிடைத்தால் ஏது மதிப்பு? இப்போது தங்கத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். எதற்கு அவ்வளவு மதிப்பு? உலகம் முழுக்க அனைத்து பொருள்களுக்கும் விலை மதிப்பிடுகையில் அது கிடைக்க என்னென்ன இடர்பாடுகளை சந்திக்க வேண்டும் என்பதையும் ஒரு காரணியாக வைத்துள்ளார்கள் தெரியுமா? ஒரு பேனாவை தயாரிக்க ஆகும் செலவு, இலாபம், வரி அனைத்தையும் சேர்த்து விலையாக வைப்பார்கள். அதே அந்த பேனாவை தயாரிப்பது ஆபத்தானது, அதை தயாரிக்க உயிரை பணயம் வைத்து வேலை செய்ய வேண்டி இருக்கும் என்றால் அதற்கு குறிப்பிட்ட அளவு பணம் சேர்த்து விலை வைக்க தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு.


அனைத்து விசயங்களிலும் அதை அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், தரும் உழைப்புக்கும் சரியான மதிப்பு தரப்படும். மற்றவர்களிடம் இருந்து கிடைக்கிறதோ இல்லையோ, அடைந்த நாம் தர மாட்டோமா? முதல் மாத சம்பளத்தில் வாங்கிய பொருளை ஏன் பத்திரமாக வைக்கிறோம்? வேறு ஒன்று வாங்க முடியாது என்றா? அதனை வாங்க நாம் பட்ட சிரமத்திற்கு தரும் மரியாதை அது. மற்றவர்களிடம் அதை சொல்கையிலும் எவ்வளவு மதிப்பளித்து சொல்கிறோம் "இது நான் படிக்கும் போது வாங்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட போன், வேலைக்கு போனதும் வாங்குனேன். இப்ப உபயோகிக்கலைன்னாலும் பத்திரமா வச்சுருக்கேன், யார்க்கும் குடுக்க மனசு இல்லை" என்று சொல்வதெல்லாம் எதற்காக? நம் விருப்பத்திற்கு நாம் தந்த உழைப்பிற்கான மரியாதை அது.


மேற்கூறிய அனைத்து விசயங்களும் பொதுவாக நமக்கு சொல்வது ஒன்று தான். நீங்கள் அடைய விரும்புவது என்ன என்பதை விட அதற்காக நீங்கள் தரும் உழைப்பு என்ன என்பதுதான் முக்கியம். அது தான் பேசப்படும். அப்பா பள்ளி ஆசிரியர், மகனும் பள்ள ஆசிரியர் என்றால் என்ன சொல்வார்கள்? ஆசிரியர் வேலை மோசமான ஒன்றல்ல, அதற்கு நடக்கும் போட்டிகள் ஏராளம். ஆனால் இந்த இடத்தில் அதனை சாதாரணமாக பார்க்க காரணம்? அதற்கு பெரிதாக சிரமப்பட்டிருக்க மாட்டார் என மற்றவர்கள் நினைப்பது தான்.


சிறியதோ பெரியதோ ஒரு இலட்சியம் வேண்டும். அதனை அடைய நூறு சதவீத உழைப்பினை தர வேண்டும் ஒரு தவத்தினை போல. அந்த இலட்சியத்தை அடைந்த பின் பெரிய மாற்றம் நிகழாவிடினும் அதற்காக பட்ட சிரமங்கள், அந்த அனுபவம் தரும் மெய்யறிவு என்பது வேறு வித பலனாக இருக்கும். இதுவும் கிட்டத்தட்ட தங்கத்தை நெருப்பில் போட்டு வாட்டி எடுத்து பொருள் செய்வது போலத்தான். சாதரணமாக கிடைக்கையில் தங்கத்திற்கு இருக்கும் மதிப்பினை விட, புடம் போட்ட பின் மதிப்பு கூடுவதற்கு காரணம் அது பட்ட சிரமம் தானே என்கிறார் வள்ளுவர்.


அதிகாரம்:தவம்    குறள் எண்:267


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடக்சுட நோற்கிற் பவர்க்கு.


உரை: புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.


-கதிர் ராத்

Related Articles