வெளியிடப்பட்ட நேரம்: 27-Apr-2017 , 06:18 AM

கடைசி தொடர்பு: 27-Apr-2017 , 06:19 AM

கதிர் குறள் - 268

kural1

கடவுள் நம்பிக்கை இருக்கா? மதங்களை இழுக்க வேண்டாம். இறை என்றொரு விஷயம் இருப்பதை நம்புகிறீர்களா? பலர் கோவிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை, ஆனால் கடவுள் மறுப்பாளன் கிடையாது என்று சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.
அவர்களுக்கு மட்டுமல்ல. நாள் தவறாமல் செல்லும் பழக்கமுடையவர்களுக்கு கூட
பதில் தெரியுமாென்று தெரியவில்லை. எதற்கான பதில் என்கிறீகளா?

"எதற்கு கடவுளை வணங்க வேண்டும்? அவர்தான் படைத்தார் என்றே இருக்கட்டும்.
அதை ஏற்றுக் கொள்கிறேன். எதற்கு வணங்க வேண்டும்? எனக்கு அவரது
அற்புதங்களில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அது எனக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். நான் ஏன் வணங்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?"

மன நிம்மதிக்காக என்று பலர் சொல்வார்கள். ஒரு சினிமா பார்த்தாலோ, புத்தகம்
படித்தாலோ, எனக்கு அதே நிம்மதி கிடைக்குமெனில் எனக்கு எதற்கு இறைவன்?
அவரது இருப்பில் எனக்கு கேள்வியில்லை. இருந்துவிட்டே போகட்டும். எந்த
விதத்தில் எனக்கு அவர் உபயோகப்படுகிறார்? இந்த கேள்வி எனக்கு இயல்பாக
தோணவில்லை. ஒரு புத்தகத்தில் பாலகுமாரன் அவராக கேள்வியை கேட்க வைத்து
பதிலும் சொல்லி இருந்தார். முழுமையாக ஞாபகம் இல்லை. கருத்தை சொல்கிறேன்.

இங்கு ஒரு மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உயிரினங்களின்
வீழ்ச்சிக்கும் காரணமாக அமைவது எது? மனிதர்களின் தலைக்கனமும் சுயநலமும்
தான். தனக்காக தன் குடும்பத்திற்காக என்று ஒருவன் செயல்பட
துவங்குகையில்தான் மற்றவர்கள் பாதிப்புக்குள்ளாக துவங்குகிறார்கள்.
மனிதன் தனக்காக வளங்களை சுரண்டுகையில்தானே மற்ற உயிரினங்களும்
பாதிப்படைகிறது. இதற்கு காரணம் அவனுள் இருக்கும் அகங்காரமும் சுயநலமும்.
அதை எப்படி போக்குவது? அதற்கு அவன் ஏதேனும் ஒரு இடத்தில் நிலையாமையை
புரிந்துக் கொண்டு சரணடைய வேண்டும்.

எவ்வளாவு பெரிய ஆளாக இருந்தாலும் கல் தடுக்கி கீழே விழுந்தாலும் மரணம்
ஏற்படும். எதுவும் நிலையானதல்ல. அதை அவன் எங்கே உணர்வான்? தனக்கு மேலே
ஒரு சக்தி இருக்கிறது என ஒத்துக் கொள்ளும் இடத்தில் தான் அது நடக்கும்.
கடவுளை வணங்குகையில் தோழமையாகவா வணங்குகிறார்கள். அங்கு ஒரு பயம்
இருக்கும். என்னிடம் இருக்கும் அனைத்தையும் நீ நினைத்தால் உடனடியாக
பறித்துக் கொள்ள முடியும். அப்படி செய்து விடாதே என்று கெஞ்சுமிடமாக
இறைவன் இருப்பதை தெரிந்துக் கொண்டு அதை வைத்து வளர்ந்தது மதங்கள்.

இதெல்லாம் செய்தால் இறை உன்னை ஒன்றும் செய்யாது. என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளலாம் என இடைத்தரகர்கள் நுழையும் வரை இறை பற்றிய பயமும். அது
தந்த தன்னடக்கமும் மனிதர்களை அடக்கித்தான் வைத்திருந்தது. இங்கு இறை
என்பதை இயற்கை என்றும் வைத்துக் கொள்ளலாம். மின்னலும் நெருப்பையும் போல
மனிதனை பயமுறுத்திய விசயங்கள் சரித்திரத்தில் வேறெதுமில்லை. இயற்கை மீதான பயம் விலகியதும் இறைக்கான தரகர்கள் நுழைந்ததும் தான் மனிதனின்
அகங்காரத்தை அதிகமாக்கிய காரணிகள்.

தான் இருக்கும் இடம் என்றும் நிரந்தரம் என நம்பிக்கை வந்து விட்டால் அதன்
பின் அவனுக்கு கீழ் இருப்பவர்களை மிதிக்காமலா இருப்பான்? எப்போது
வேண்டுமானாலும் கீழே விழுவாய் என ஞாபகப்படுத்தும் விஷயமாகத்தான் ஒரு பொது
தலைமையாகத்தான் அனைவரும் சமமாக மண்டியிடும் இடமாகத்தான் இறை என்னும்
விஷயம் துவங்கியது. இப்போது சொல்ல தேவையில்லை. விஐபிக்களுக்கு தனிவரிசை
போட்ட பொழுதே புரிந்திருக்கும் இப்போது அப்படி இல்லை என்று.

உண்மை தான். மொத்த படைப்பில் மனிதனுக்கான இடம் எவ்வளவு சிறியது என
தெரிந்தால் அவன் ஆடுவனா? சக மனிதனை மிதிப்பானா? சக உயிர்களின்
வாழ்வாதாரத்தை திமிரெடுத்து அழிப்பானா? சரிதான். அதற்கு முதலில்
படைப்பினை புரிந்துக் கொள்ள வேண்டுமே? எப்படி தெரிந்துக் கொள்வது.
விவேகானந்தர் இரண்டு வழிகள் சொல்கிறார். ஒன்று படைப்பின் பெரிய விசயத்தை
ஆராய்தல். இப்போது தான் நாம் நமது அண்டவெளியை ஆராய துவங்கி இருக்கிறோம்.
பக்கத்து விண்மீன்கூட்டங்களை எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளோம்.

இன்னொரு வழியாக அவர் கூறுவது படைப்பின் மிக நுண்ணிய விசயத்தை ஆராய்வதன் மூலம் படைப்பை புரிந்துக் கொள்ளலாம். நுண்ணியது என்றது அணு, எலக்ட்ரான், புரோட்டான் என போக வேண்டாம். அவை அளவில்தான் சிறியவை. அதை விட நுண்ணிய விசயங்கள் இருக்கிறது. உதாரணாத்திற்கு நம் எண்ணங்கள். அவைகளை நியுட்ரான் அலைகள் என்று சொல்கிறார்கள். அதனை குறித்த ஆராய்ச்சி இப்போது உச்சத்தை எட்டிவிட்டது.


முகநூல் நிறுவனர் மார்க் சமீபத்தில் எந்த உபகரணமும் இல்லாமல் மனதில் தோன்றுவதை கணிணியில் எழுதுவதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு விட்டது என அறிவித்திருக்கார்.

நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதைத்தான் தட்டச்சு செய்யும், நினைப்பதை எல்லாம் அம்மென்பொருளால் அறிந்துக் கொள்ள முடியாது என்று எதிர்ப்பாளர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார். விவேகானந்தர் சொன்னது போல் அவரவர்கள் தத்தம் எண்ணங்களை புரிந்துக் கொள்ள தியானம் ஒன்றே சரியான வழி.


இந்த எண்ணங்கள், அதன் அலைகளை வோரா என்பார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் சிந்தனை உண்டு. தன் சந்ததியை வளர்க்க பலம் கொண்ட மட்டும் விதைகளை பறக்க விடும் தாவரங்களுக்கும் உண்டு. அதை புரிந்துக் கொள்ள தத்தம் சிந்தனைகளை வசப்படுத்த வேண்டும்.

அப்படி மனதை ஒருமுகப்படுத்தி, எண்ணங்களின் ஆழத்தை புரிந்துக் கொள்பவரால்
அனைத்து உயிரினங்களின் எண்ணங்களையும் புரிந்துக் கொள்ள முடியும். அது
தவத்தாலேயே சாத்தியம். அப்படி செய்வோரை அனைத்து உயிரினங்களும் நம்மில்
ஒருவன் என நினைத்து சுற்றி நின்று வணங்கும் என்கிறார் வள்ளுவர்.

இதற்கு சிறந்த உதாரணமாக நம் அம்மாக்களை சொல்லலாம். வீட்டில் இருக்கும்
நாய், பூனை, கோழிகளுடன் உரையாடுவார்கள். அதுவும் தமிழில். அனைத்தும்
அவர்கள் பேச்சை கேட்கும். கவனித்ததுண்டா?

அதிகாரம்:தவம்     குறள் எண் :268


தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

உரை: தவ வலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.


-கதிர் ராத்

Related Articles