வெளியிடப்பட்ட நேரம்: 02-May-2017 , 07:05 AM

கடைசி தொடர்பு: 02-May-2017 , 07:06 AM

கதிர் குறள் - 270

kural1

ரஜினிகாந்த் 'சிவாஜி' படத்தில் ஒரு இடத்தில் சொல்வார் தெரியுமா? "Rich get richer, Poor get poorer. பணக்காரன் மேலும் பணக்காரனாகுறான். ஏழை இன்னும் ஏழையாகுறான்" கருப்பு பணத்தோட தீங்கு குறித்து பேசும் போது இந்த வசனம் வரும். இந்த படம் வரை சங்கர் படத்துக்கு வசனம் சுஜாதாவா தான் இருந்தது. ஆனால் மேற்சொன்ன rich get richer வாத்தியாரோட சொந்த சரக்கு கிடையாது. காரல்மார்க்ஸ் புத்தகங்கள்ல உபயோகப்படுத்துனது. இப்ப பிரச்சனை அது இல்லை. அதுல சொல்லபடற விஷயங்கள்தான்.

எந்த ஒரு நாடாக இருந்தாலும் ஏழை, பணக்காரன் என இரண்டு வர்க்கம் இருக்கும். அதில் ஏழைகளுக்கு தேவையானதை செய்து கொடுக்க அரசாங்கம் பணம் சம்பாதிப்பவர்களிடம் வரி வசூலிக்கும். அதிலேயும் இந்தியா சுதந்திரம் வாங்கயதில் இருந்து நடைமுறைபடுத்திய, திட்டமிட்ட ஐந்தாண்டு திட்டங்களோட நோக்கம் என்னவென எடுத்து பாருங்கள், கட்டாயம் அதில் ஒவ்வொரு முறையும் "வறுமை ஒழிப்பு" என்பது இல்லாமல் இருக்காது. பின் ஏன் அரை நூற்றாண்டு ஆகியும் வறுமை ஒழியாமல் இருக்கிறது? அதிலும் நாளுக்கு நாள் இங்கு பணம் சம்பாதித்து மேலே செல்கிறவர்களை விட பல மடங்கு மக்கள் வறுமையை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பரவாயில்லை. முன்பெல்லாம் உணவு பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், பட்டினி கிடந்து மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்த அளவு இல்லை. வறுமையை ஒழிக்கவே முடியாதா? முதலில் உழைக்கும் வர்க்கத்தினரிடம் இருக்க வேண்டிய வசதிகள், உழைக்காத ஒரு கூட்டத்திடம் மட்டும் எப்படி சென்று சேர்கிறது என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். அது குறித்து பல பொருளாதார அறிஞர்கள் புத்தகம் எழுதி இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வேண்டும்.

இந்த நேரத்தில் நண்பர் ஒருவருடன் விவாதித்தது நினைவிற்கு வருகிறது. எங்கோ ஆரம்பித்த பேச்சு உயர்கல்வி படிப்பவர்களை பற்றி வந்தது. வருடாவருடம் இத்தனை பேர் படித்து விட்டு வெளிவருகிறார்களே? இவர்களெல்லாம் வேலைக்கு என்ன செய்வார்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் வருடத்திற்கு அண்ணா பல்கலைகழகத்தில் எத்தனை பேர் பிஹெச்டி முடித்து வெளிவருகிறார்கள் தெரியுமா? என கேட்டார். எனக்கு தெரியாது என்றேன்.

தொழில்நுட்ப படிப்புகளில் பிஹெச்டி செய்பவர்கள் அனைவராலும் அவர்களது ரிசர்ச்சை வைத்து தொழில் துவங்க முடியும் தெரியுமா? என்றார். ஆம், கண்டிப்பாக அப்படி ஒரு கேள்வி வைவா விலேயே கேட்பார்கள். "இதனை கமர்சியலாக செய்ய முடியுமா?" என்று என்றேன்.

எத்தனை பேர் தொழில் துவங்குகிறார்கள்? என்றார். என்னிடம் பதில் இல்லை. அதற்கு அவர் சொன்னார் "நீ நினைப்பது போல் ஒரு வகுப்பில் படிக்கும் அனைவரும் முதல் மதிப்பெண் பெற முடியாது. 100 பேர் இருந்தால் 20 பேருக்கு ஓட பிடிக்கும். 30 பேருக்கு நடக்க பிடிக்கும். 30 பேருக்கு வேடிக்கை பார்க்க பிடிக்கும். மிச்சமிருப்போருக்கு எதுவும் செய்யாமல் தூங்க பிடிக்கும். இது தான் இயற்கையில் நியதி. அதன் சிறப்பும் அது தான். படைக்கப்பட்ட அனைவருக்குள்ளும் வித்தியாசங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கும். அனைவரும் ஓடுவதும் தவறு. அனைவரும் உறங்குவதும் தவறு. நீ நினைப்பது போல் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்காது. சிலர் தேவைகளுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். சிலருக்கு உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தும் கிடைக்கும். யார் அந்த சிலர் என்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே இருக்கிறது" என்றார்.

எனக்கு அன்று அவர் சொன்னது தெளிவாக புரியவில்லை. ஆனால் ஒரு நாட்டில் இத்தனை சதவீத மக்கள் இப்படி இருக்க வேண்டும். மற்றவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்று கணக்கு இருக்கிறது போல என நினைத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட இயற்கை உயிர்சமநிலை என்போமே. காட்டில் புலி இருந்தால்தான் மானின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும். மான் இருந்தால் தான் புற்களின் வளர்ச்சி கட்டுக்குள் இருக்கும். இப்படியே போய் மறுபடியும் புலியில் வந்து முடியும். அந்த சமநிலை இப்போது சிதைந்துக் கொண்டு இருக்கிறது என்பது வேறு விஷயம். ஏன், நாட்டிலேயே இத்தனை சதவீதம் காடாகவும், விளைநிலங்களாகவும், தரிசாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு சமநிலை இருக்கிறது. அதை இருக்க விடுகிறோமா?

இப்போது பலதரப்பட்ட அறிவியல் வளர்ச்சிகளுக்கு பிறகு, மக்கள்தொகை, அவர்களது அன்றாட வருமானமெல்லாம் கணக்கெடுத்து, வறுமையை ஒழிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் இது குறித்து பேசியிருக்கிறார். இதில் சோகம் என்னவென்றால் அவர் காலத்திலேயே இல்லாதவர்களின் எண்ணிக்கை, இருப்பவர்களை விட நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்று இருக்கிறது.

அதற்கு காரணமாக அவர் கூறுவது தவத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைவது தான் என்கிறார். ஆம், ஒரு விதத்தில் அது உண்மை தான். மனிதனுக்கு அனைத்து விசயங்களிலும் ஆசை ஒரு கட்டத்தில் தீர வேண்டும். பால்யத்தை தாண்டும் பொழுது விளையாட்டு ஆசை தீர்ந்திருக்க வேண்டும். பின் வாலிபத்தை தாண்டும் போது மற்ற ஆசைகளைெ எல்லாம் அனுபவித்து முடித்து, வயோதிகத்தை நெருங்கும் பொழுது, அனைத்து ஆசைகளும் தீர்ந்து, உடல் ஆரோக்கியத்தின் மீதும் உலக நன்மைகளின் மீதும் அக்கறை ஏற்பட வேண்டும்.

ஆசை ஓய்ந்து தவத்தில் ஈடுபடுவோர்கள், சக மனிதர்கள் வறுமையில் வாடுவதை தாங்கமாட்டார்கள். அவர்களது செல்வத்தை ஊருக்கு பொதுவாக தந்து இல்லாத மக்கள் மேலேற வழி செய்வார்கள். கேள்விப்பட்டு இருப்பீர்களே? ராஜராஜசோழன் காலத்தில் கோவிலுக்கு எண்ணெய் போட தந்த நிலத்தையும் ஆட்டையும் வைத்து பல குடும்பங்கள் பிழைத்த கதையை. அது போலத்தான்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நாட்டில் இத்தனை பேருக்கு ஆசை இருக்க வேண்டும். இத்தனை பேருக்கு இருக்க கூடாது. அப்படி இருந்தால் தான் நாட்டில் வறுமை கட்டுக்குள் இருக்கும். தவத்தில் ஈடுபடுவோருக்கு ஆசைகள் இருக்காது. அதன்படி பார்த்தால் தவத்தில் ஈடுபடுவோர் அதிகரித்தால் வறுமை குறையும். குறைந்தால் வறுமை பெருகும் என்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்:தவம்    குறள் எண்:270

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

உரை: இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

Related Articles